கு. அழகிரிசாமி
20.11.02 புதன்
அன்புள்ள ரவிக்குமார்,
வணக்கம். உங்கள் கடிதத்திலோ கட்டுரையிலோ என்னைச் சங்கடப்படுத்தும் வரிகள்
எதுவுமில்லை. சொல்லாத ஒன்றைச் சொன்னதாகக் கூறும் தவறை நீங்கள் இழைக்கவுமில்லை.
(அந்தச் சாமர்த்தியத்தின் மொத்தக் குத்தகையை மற்றொருவர் முழுமையாகக்
கைவசப்படுத்திக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு நீங்கள் அதில் பங்கு பெறவும்
முடியாது.)
எனக்கு மறுப்பு எழுதும்போது உங்களுக்குப் பதற்றம் ஏற்பட்டால் அது எனக்கு அவமானம்.
உணர்ச்சிவசப்படுவதையும் செயற்கையாக நீங்கள் கட்டுப்படுத்தவேண்டும் என்பதில்லை.
எழுத்தில் உணர்ச்சிக்கு முக்கியப் பங்கு உண்டு. அது வசையுடன் சம்பந்தப்பட்டது அல்ல.
அது தம் கருத்துகளின் மீது ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு என்பது என் எண்ணம்.
அன்புடன்,
சு.ரா.
குறிப்பு:
'தீராநதி' நவம்பர் 2002 இதழில் வெளிவந்த சு.ரா.வின் கேள்வி பதிலுக்கு ரவிக்குமாரின்
எதிர்வினை டிசம்பர் இதழில் வெளிவந்தது. அதன் நகலை சு.ரா.வுக்கு அனுப்பி
எழுதியிருந்த கடிதத்திற்கு சு.ரா. எழுதிய பதில் இது. இவ்விவாதம் 'வாழ்க
சந்தேகங்கள்' (2004) நூலில் இடம்பெற்றுள்ளது.
- ஆசிரியர்
17.02.03 திங்கள்
அன்புள்ள ரவிக்குமார்,
வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
காலச்சுவடுக்குக் கவிதைகளைக் கேட்டு எழுதியிருந்த கடிதமும் 10.02.03 தேதியிட்டு
இப்போது எழுதியிருந்த கடிதமும் கிடைத்தன.
'இதம் தரும் வரிகள்' பற்றிய உங்கள் அபிப்பிராயம் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது.
கடிதங்களை நாங்கள் பரிமாறிக்கொண்டிருந்த காலத்தில் அவர்* என்னுடைய படைப்புகளைப்
பாராட்டி எழுதியிருந்த வரிகள் எப்போதும் எனக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும்
கூச்சத்தையும் ஏற்படுத்தின. அதன்பின் இந்த நீண்ட காலத்தில் என் செயல்பாடுகள் நான்
அவருடன் உணர்ந்த மிகையைச் சற்று மட்டுப்படுத்தியிருக்கலாம்.
எஸ்.வி. சகஸ்ரநாமத்தைச் சந்தித்தேன். கு.அ.தான் அவர் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு
போனார். அதைத் தொடர்ந்து நானும் அவரும் மிக நெருக்கமான நண்பர்களானோம்.
ஒரே ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டுமென்றும் அந்தப் படம் வழியாகவே நான்
உலகத்தரத்தைச் சேர்ந்த சிறந்த நடிகன் என்பது உறுதியாகிவிடும் என்றும் அவர் பல தடவை
சொல்லியிருக்கிறார். சினிமாத் துறையில் உள்ளவர்களைத் தெருப் பொறுக்கிகள் மாதிரிப்
பார்த்து 'அந்தப் பய இந்தப் பய' என்று பேசும் கு. அழகிரிசாமியும் ஒரு படத்தில்
நடிப்பதில் பாதகம் இல்லை என்றார். எஸ்.வி.எஸ். நான் கெட்டுப்போகாமல் எப்படியோ
என்னைப் பாதுகாத்துக்கொள்வார் என்ற எண்ணம் கு. அழகிரிசாமிக்கு இருந்தது.
க.நா.சு.விடம் ஆலோசித்தேன். நீ நடிகனாகவோ பாகவதராகவோ நாட்டியக்காரனாகவோ போவது
உன்னுடைய இஷ்டம். ஆனால், நீ வேறு எந்தக் கலைத் துறையை இணைத்துக்கொண்டாலும் எழுத்து
உன்னை விட்டுப் போய்விடும் என்றார். சரஸ்வதி எங்கள் வீட்டு முற்றத்தில் நின்று
கத்திவிட்டு ஒரே பாய்ச்சலாக வெளியேறி ஓடுவதுபோல் ஒரு படிமம் என் மனத்தில் வந்தது.
அதன் பின் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை.
எஸ்.வி.எஸ். தெற்கே வரும்போதெல்லாம் நாகர்கோவிலுக்கும் வருவது வழக்கமாக இருந்தது.
ஒருமுறை அவருடன் காரில் நான் திருவனந்தபுரம் போனேன்.
சகஸ்ரநாமத்துடன்தான் முதலாவதாகக் கோமலைப் பார்த்தேன். முதலில் அவரை எஸ்.வி.எஸ்.ஸின்
எடுபிடி ஆள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் எஸ்.வி.எஸ். முன்னால் உட்காராமல்
இருந்தது ஒரு முக்கியமான காரணம். அந்தக் காலத்தில் பி.எஸ். ராமையா, கு. அழகிரிசாமி,
தி. ஜானகிராமன் ஆகியோர் எழுத்துகள்மீது எஸ்.வி.எஸ்.ஸுக்கு மிகுந்த ஈடுபாடு
இருந்தது. குறைவாகப் படித்தாலும் சற்று ஆழ்ந்து படிக்கக்கூடியவர் அவர். தி.ஜா.
பெயரில் அவருக்கு ஒரு மயக்கமே உண்டு. (யாருக்குத்தான் இல்லை?)
சி.சு. செல்லப்பாவையும் ஜெயகாந்தனையும் அவருக்குப் பிடிக்காது. சி.சு.செ.யைப்
பற்றிப் பேசும்போது 'வறட்சி' என்ற சொல்லை முகத்தைச் சுழித்தபடி சொல்வார். அவர்
அந்தச் சொல்லைச் சொல்கிற விதம் காலம் காலமாகக் கடுமையாக வெயில் காய்ந்ததில் பாளம்
பாளமாக விண்டு கிடக்கும் சதுப்பு நிலம்தான் நம் நினைவுக்கு வரும். ஜெயகாந்தனுடையவை
கதைகள் அல்ல, சதைகள் என்று சொல்வார். தி.ஜா.வுடையதும் கொஞ்சம் சதைதானே என்று நான்
கேட்டிருக்கிறேன். 'அதில் எவ்வளவு அற்புதம்! என்ன இங்கிதம்!' என்பார். அவருடைய
மறைவுக்குப் பின்தான் எனக்கும் கோமலுக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது. எதோ
ஒருவிதத்தில் அவர் அதைத் தடுத்துக்கொண்டிருந்தார் என்று ஓர் உணர்வு.
ஓட்ஸ் டின் பத்திரமாக வந்தது நினைவிருக்கிறது.
ஐந்து கவிதைகள் பற்றி மறந்துவிட்டேன். (தமிழுக்கு நஷ்டம்தான்.)
படைப்பதற்கான அறிகுறியே இல்லாதவர் நீங்கள் என்று நான் நினைத்ததில்லை.
'கண்காணிப்பின் அரசிய'லிலேயே கலையின் ஈரம் கொஞ்சம் இருக்கிறது. இப்போது நீங்கள்
மொழிபெயர்த்துள்ள (கிறிஸ்டினா பெரி ரோஸ்) கதையில் உங்கள் மொழி வெளிப்படுத்தும் சில
கவித்துவ குணங்களும் அவற்றை உறுதிப்படுத்துவது போன்ற உங்கள் பின்குறிப்பும்
(கட்டிலில் கிடக்கும் மரணம்) படித்தபோது நாவல் எழுதும்படி உங்களைக்
கேட்டுக்கொள்ளலாம் என்று தோன்றிற்று. 'தலித்' இதழில் நீங்கள் வெளியிட்டிருந்த
கவிதைகளின் தேர்வுகள் என் மனத்தில் உருவாக்கியிருந்த மதிப்பீட்டை இப்போதைய கதையின்
மொழிபெயர்ப்பும் பின்னுரையும் உறுதிசெய்தன என்றும் சொல்லலாம். படைப்புக்கு ஆதாரம்
கவித்துவம்தான் என்பது என் எண்ணம். நீங்கள் எழுதிப் பார்க்க வேண்டும். விஷயம்,
அனுபவம் போன்ற தளங்கள் உங்களிடம் செழுமையாக இருப்பவை.
உங்கள் மொழிபெயர்ப்புக் கதைகள் கிடைத்தன. மிக்க நன்றி. அம்மொழிபெயர்ப்புக் கதைகளை
இன்னும் நான் படிக்கவில்லை.
இம்மாதம் இருபதாம் தேதி நானும் என் மனைவியும் குஜராத் போகிறோம். என் நெருக்கமான
நண்பர் ஒருவர் எங்களை அவர்களுடன் வந்து தங்கும்படி அழைத்திருக்கிறார். ஒரு வாரம்
தங்கிவிட்டு ஊர் திரும்பலாம் என்றிருக்கிறோம்.
அன்புடன்,
சு.ரா.
உள்ளடக்கம்