Google   www kalachuvadu.com

 

பதிவு: அற்றைத் திங்கள் மே 27, 2007, சென்னை

போராட்டங்களே வாழ்வாக . . .

ந. கவிதா

காலச்சுவடு அறக்கட்டளையுடன் மாபா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ், புக் பாயிண்ட் ஆகியன இணைந்து இந்த அற்றைத்திங்கள் நிகழ்ச்சியை நடத்திவருகின்றது.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை புக் பாயிண்ட் அரங்கில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் 27.05.07 அன்று மாலை மனித உரிமைப் போராளி பேராசிரியர் கல்யாணி கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஒரு பத்திரிகையாளருக்குக் கிடைக்கிற மிகப்பெரிய மகிழ்ச்சி, கல்யாணியைப் போன்ற அரிய மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களது செயல்பாடுகளுக்கு ஏதாவது ஒருவிதத்தில் துணை செய்யக்கூடியதாக அமைகிற வாய்ப்பும்தான் என்று தனது அறிமுக உரையைத் தொடங்கினார் மூத்த பத்திரிகையாளர் டி.என். கோபாலன்.

தற்செயலாகச் செய்தகாரியங்களைப் போலத் தனது செயல்பாடுகளை மதிப்பிட்டுக் கொள்ளும் கல்யாணி எதையும் மிகைப்படுத்திக் கொள்ளாதவர். யாரும் கேட்காத கேள்விகளையும் தீர்த்துவைக்க முயலாத பிரச்சினைகளையும் முன்னெடுத்து, எளியவர்களுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் நல்ல மனிதர் அவர் என்று கூறித் தனது பேச்சை நிறைவு செய்தார் கோபாலன்.

பேசவும் பழகவும் காணவும் எளிமையானவரான கல்யாணி, கிராமத்துப் பள்ளியில் முதல் மாணவனாக இருந்தவர். அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பிற்காகச் சேர அங்கு படிப்பு நேரத்தின் பெரும்பகுதியை விழுங்கிய ஆங்கிலப் பாடம் பயத்தை ஏற்படுத்தியது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்ட கல்யாணி மொழிப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். சனநாயகத் தன்மையில் திராவிட இயக்கத்தின் போக்கு உவப்பானதாக இல்லாததால், அதிலிருந்து வெளியேறியிருக்கிறார். இடதுசாரிகளின் பொதுவுடைமைச் சித்தாந்தங்களிலும் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்டு இயக்கத் தோழர்களிடமும் சனநாயகத் தன்மையை அடையாளம் காண முடிந்தாலும்கூட, தேசிய இனப் பிரச்சினைகளில் அவர்களது நிலைப்பாடுகளில் சில கல்யாணிக்கு முரண்பட்டவையாகத் தெரிந்தன.

புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்த கல்யாணி, கோ. கேசவன், ரவிக்குமார், அ. மார்க்ஸ் போன்றவர்களோடு நட்பும் இயக்கத் தொடர்பும் கொண்டிருந்திருக்கிறார்.

தாய்மொழிக் கல்வியின் அவசியம், கல்வி முறையின் சீர்கேடு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் விதமாக 'மக்கள் கல்வி இயக்க'த்தை ஏற்படுத்திய கல்யாணி, தம் இயக்கத்தோழர்களோடு 'செந்தாரகை' என்னும் பத்திரிகையை நடத்திவந்திருக்கிறார். தனிப்பயிற்சி வகுப்புகளை எதிர்த்து ஒரு மாநாட்டை நடத்தியிருக்கிறது இவ்வமைப்பு.

காவல் துறையைவிடக் கல்வித்துறையில் சீர்கேடுகள் நிரம்பியிருக்கின்றன என்ற கல்யாணி, காவல் துறையால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான அத்தியூர் விஜயாவுக்காக வழக்கும் போராட்டமும் நடத்தப் பழங்குடி இருளர் இனத்தவரை ஒன்று திரட்டும் சாத்தியம் நிகழ்ந்ததையும் அவர்களது நலன்களைப் பாதுகாக்க 'பழங்குடி இருளர் பாதுகாப்பு அமைப்'பை ஏற்படுத்தியதையும் குறிப்பிட்டார். சாதிச் சான்றிதழ் வாங்குதல், வீட்டுமனைப்பட்டா வழங்கல் என்று இந்தப் பழங்குடிச் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.

சிலரது ஒத்துழைப்புடன் பழங்குடி இருளர் அறக்கட்டளையையும் உண்டு உறைவிடப் பள்ளியையும் நிறுவியிருக்கிறார்.

இந்த அறக்கட்டளை வெளிநாட்டவரது நிதி உதவியை மறுத்து, இங்குள்ள சில நட்புள்ளமுடையோரின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

திண்டிவனத்தில் தாய்த் தமிழ்ப் பள்ளியை நடத்திவரும் பேரா. கல்யாணி, கல்லூரிக் கண்காணிப்புக் குழு, உண்மையறியும் குழு போன்றவற்றின் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அங்கதத்தோடு விவரித்தார்.

நுழைவுத் தேர்வு ரத்து மேலோட்டமாக நல்ல விஷயமாகப்பட்டாலும், அது எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தப் போவதில்லை என்றதோடு, ஆந்திர மாநிலத்தின் கல்விக்கொள்கை, தொழில் நுட்பத் துறை வளர்ச்சி, அவர்களது வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் சுட்டிக் காட்டினார். இன்றைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் நியாயமான விளைவை ஏற்படுத்தும் சாத்தியம் குறைவுதான் என்ற கல்யாணி, பார்வையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

வீரப்பனிடம் சென்ற தூதுக்குழுவில் இடம்பெற்றது, வீடு தாக்கப்பட்டது, தாய்மொழிக் கல்வியின் அவசியம், சாதி மறுப்பு என்று பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

வீடு தாக்கப்பட்டது நன்மைக்குத்தானென்றும் அதுதான் பெரும்பாலானவர்களுக்குத் தன்னைப் போன்ற ஒருவரை, இயக்கத்தை அடையாளம் காட்ட உதவியது என்று சிரித்தவாறே கல்யாணி பதிலளித்தார். 'எல்லாக் கேள்விகளுக்கும் தனக்கு விடை தெரியுமென்று நினைத்துக்கொள்ளாதீர்கள்' என்ற கல்யாணி, இத்தனை காரியங்கள் செய்துவிட்ட பெருமிதம் கொண்டவராக நமக்குப் படவில்லை.

இனிச்செய்யவிருக்கும் காரியங்களுக்கான தேடுதல் பயணத்தைத் தொடங்கக் காத்திருப்பவராக நம்மிடமிருந்து விடைபெற்றார் பேரா. கல்யாணி.

இந்நிகழ்ச்சியைக் காலச்சுவடு இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரிந்த அரவிந்தன் தொகுத்து வழங்கினார்.

உள்ளடக்கம்

Google Ads.....

Google