Google   www kalachuvadu.com

 

பதிவு: மீண்டும் காகங்கள், 02.04.1007, நாகர்கோவில்

எனது நாடக அனுபவங்கள்

அ.கா. பெருமாள்

'மீண்டும் காகங்கள்' கூட்டத்தின் ஆறாம் சந்திப்பு நாகர்கோவில் சுந்தரவிலாஸ் மாடியில், ஏப்ரல் இரண்டாம் சனிக்கிழமை நடந்தது. தில்லி தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற சண்முகராஜா 'எனது நாடக அனுபவங்கள்' என்னும் பொருளில் உரையாற்றினார். அவரை ராஜமார்த்தாண்டன் அறிமுகப்படுத்தினார்.

சண்முகராஜாவின் உரையிலிருந்து:

'எனது நாடக அனுபவங்கள்' குறித்து சுந்தர ராமசாமியின் வீட்டில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வீட்டிற்கு வரவேண்டும் என்ற என் ஆசை இதன் மூலம் நிறைவேறிவிட்டது. என்னை இளம் வயதில் மிகவும் பாதித்தவர் சு.ரா.

நான் மதுரையில் பயின்றபோது சாமுவேல் சுதானந்தா என்ற பேராசிரியர் தயாரித்த பாடத்திட்டம் எனக்குப் புதிய உலகத்திற்கு வழிகாட்டியது. ஜெயகாந்தன் சு.ரா., கி.ரா., ஞானக்கூத்தன், தருமு, சுத்தானந்த பாரதியார் போன்றவரது படைப்புகளைப் பயில எனக்குக் கிடைத்த வாய்ப்பால் இலக்கியப் பண்பாட்டுச் சூழலின் அஸ்திவாரம் ஆழமாக, தரமாக இருந்தது. இது என் பிற்கால நாடக வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.

மதுரையில் நான் இருந்தபோது தீவிர இலக்கியவாதிகளின் தொடர்புகிடைத்தது. குறிப்பாகக் குறிஞ்சி இலக்கிய அமைப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஜெயகாந்தன், சு.ரா. போன்ற பல எழுத்தாளர்களைச் சந்திக்கும் தளத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

மூன்றாம் ஆண்டு படித்தபோது அமெரிக்கன் கல்லூரியில் நடந்த நாடகப் பயிலரங்கில் ராமானுஜம், மு. ராமசாமி ஆகிய இருவரும் பயிற்சி கொடுத்தார்கள். முக்கியமாகக் குரல் பயிற்சி, உடல் பயிற்சி இரண்டின் அடிப்படைத் தேவையை அப்போதுதான் அறிந்துகொண்டேன். 1996இல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.படிப்பு சேர்ந்தபோது அங்கே பேராசிரியர் முத்தையா மூலம் நாட்டுப்புற வழக்காற்றியல் பற்றி அறிந்தேன். தீவிரச் சிறுபத்திரிகைகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

சுந்தர்காளி என்ற நண்பர் நாடகத்தைப் பற்றிய உந்துதலுக்குக் காரணமாக இருந்தார். அவர் திருச்சி அழகியல் பண்பாட்டு மையத்திற்கு என்னை அறிமுகப்படுத்தினார். அங்கு ராமானுஜம், ராஜு, எம்.பி. ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரையும் சந்தித்தேன். ராமானுஜத்திடம் குரல் பயிற்சி, உடல் பயிற்சி என்று நான் பெற்ற நாடக அனுபவம் எனக்குப் புதிதாக இருந்தது. அப்போதெல்லாம் சென்னைக்குப் பத்து நாள் பயிலரங்குக்குப் போவதுண்டு. அங்கேதான் ந. முத்துசாமி, மங்கை போன்றோரின் தொடர்பு கிடைத்தது. அவர்களின் அணுகுமுறையில் இளைஞர்களை அவர்கள் வடிவமைத்த விதமும் எனக்கு உத்வேகத்தை அளித்தது.

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் வீதி நாடக இயக்கம் (பாதல் சர்க்காரால் பயிற்சி அளிக்கப்பட்டது),

சங்கீத நாடக அக்காதமி (இதில் இளம் இயக்குநர்களின் நவீன நாடகப் பயிற்சி நடந்தது) கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகள், தலித் கலை நிகழ்ச்சிகள் ஆகிய மூன்றும் என்னை வளப்படுத்தின.

சென்னையில் தேசிய நாடகப் பயிற்சிப் பள்ளியின் நான்கு நாள் பயிலரங்கு நடந்தது. இந்தப் பயிலரங்கில்தான் பெங்களூர் தேசிய நாடகப் பள்ளி அறிமுகமானது.

பாண்டிச்சேரி ராஜுவின் 'நந்தன் கதை' என்ற நாடகத்தில் நடிப்பதற்குத் தில்லி செல்ல வேண்டிவந்தது. அங்கு முதன்முதலாகத் தேசிய நாடகப் பள்ளியைப் பார்த்தேன். நாடகம் பயிலும் ஆர்வம் காரணமாகத் தேசிய நாடகப் பள்ளியில் சேர விண்ணப்பித்தேன். அந்த ஆண்டு தேர்வுபெற்ற இருபது பேரில் நானும் ஒருவன்.

நான் தில்லியில் நாடகப் பள்ளியில் பயின்றபோது மூன்றாண்டுகளில் பல்வேறு வகைப்பட்ட இலக்கியப் பண் பாட்டுத் தளங்களை அறியும் வாய்ப்புப் பெற்றேன். அமெரிக்கன் கல்லூரியில் எனக்குக் கிடைத்த அனுபவமும் தில்லி நாடகப் பள்ளிக்கு வெளியே கிடைத்த அனுபவமும் என் நாடக முயற்சிக்கு வேறு பரிமாணத்தைக் கொடுத்தன.

நான் தில்லியில் மண்டிகஸ் பகுதியில் இருந்தபோது பல கலாச்சார நிகழ்வுகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது. நாடகம், நாட்டார் நிகழ்த்து கலைகள், தரமான திரைப்படங்கள் எனப் பார்ப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருந்தன.

நான் உத்தேசமாக ஐநூறு நாடகங்களைப் பார்த்திருப்பேன். பிருதிவிராஜ் போன்ற கதக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளையும் நிறைய பார்த்தேன்.

பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற இடங்களிலிருந்து வந்த கலைஞர்கள் தில்லியில் நடத்திய நாடகங்களை ஒரு விழாவில் பார்த்தேன். ஷேக்ஸ்பியரின் 'மிட்ஸம்மர் நைட்ஸ் டிரீம்' நாடகம் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது அப்போதுதான்.

அப்போது என்னைப் பாதித்தது பீட்டர் ரைட்டின் ஒரு நாடகம். இதைப் பின்பற்றியே நண்பர்களுடன் இணைந்து நான் இந்தியில் ஒரு நாடகத்தைத் தயாரித்தேன். பீட்டர் ரைட் ரஷ்ய வீழ்ச்சி பற்றி ஓராண்டு கள ஆய்வு செய்து ஒரு நாடகத்தைத் தயாரித்துள்ளார். ரஷ்யாவில் வாழ்ந்த ஜாண் பரால் மராத் என்னும் புரட்சியாளர் பற்றியதே அந்த நாடகம். இவர் கார்ல் மார்க்ஸுக்கு முன்பே அரசியல் பற்றிச் சிந்தித்தவர்.

நான் சிறுவயதில் காத்தவராயன் கழுவேற்றக் கூத்து, பொன்னர் - சங்கர் கூத்து, வன்னிக்காட்டுப் பகுதியில் நடந்த உடுக்குப்பாட்டு எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். சமணர்கழுவேற்றம் குறித்த சடங்கை ஏழாயிரம் பண்ணைக் கிராமத்தில் பார்த்தேன். இந்தப் பின்னணியின் அடிப்படையை பாடத்திட்ட நாடகத்தில் பயன்படுத்தியது மிகுந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. நான் அதிக நாடகங்களை இயக்கவில்லை. ஆனால் என் நாடகத்தை அதிகப் பார்வையாளர்களிடம் கொண்டு சென்றிருக்கிறேன்.

n

சண்முகராஜாவின் பேச்சைத் தொடர்ந்து பார்வையாளர்கள் கேள்விகள் கேட்டனர். சண்முகராஜா தன் உரையாடலைப் போலவே விரிவான விளக்கம் தந்தார்.

உள்ளடக்கம்

Google Ads.....

Google