Google   www kalachuvadu.com

 

பதிவு:
சிங்கப்பூர் மலேசிய இலக்கியக் கருத்தரங்கு, சிங்கப்பூர் 09.06.07

நேற்று இன்று நாளை

ஜெயந்தி சங்கர்

சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் 'நேற்று இன்று நாளை' என்ற கருத்தரங்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சனிக்கிழமை (09.06.07) மாலை ஆறு மணியளவில் நடந்தேறியது. தேசிய நூலகவாரியம் மற்றும் சிங்கைத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் பாலு மீடியா மேனேஜ்மென்ட் ஒழுங்குசெய்திருந்த இந்நிகழ்வினைக் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ நெறிப்படுத்தினார்.

தமிழ் மொழியைப் போற்றும் ஒரு பாடலைப் பாடித் தனது உரையைத்துவங்கிய சே.பா. பன்னீர்செல்வம், 1990 வரையிலான சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்துப் பேசினார். தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வு நூல்கள் மலேசியாவில் இருக்கும் அளவில் சிங்கப்பூரில் இல்லை என்பது முக்கிய ஆதங்கமாக அவரிடம் வெளிப்பட்டது.

மலேசியாவின் நேற்றைய இலக்கியத்தைச் சொல்லும்போது சிங்கப்பூரை ஒதுக்கிவிட முடியாது என்றும், மலேசியத் தமிழிலக்கிய வரலாறு எழுதப்பட வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி, அக்காலகட்டத்தில் வெளியான பத்திரிகைகள் இப்பணிக்குச் சிறப்பாக உதவும் என்றும் சொன்னார்.

அடுத்ததாகப் பேசிய முனைவர் சீதாலட்சுமி, படைப்பிலக்கியம் இடைவெளியில்லாமல் தொடர்ந்து செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தற்பொழுது இளைஞர்கள் எழுதுவது குறைவாகவே இருப்பது ஒரு குறைதான் என்றார்.

'மலேசியாவின் இன்றைய தமிழ் இலக்கியம்' பற்றிப் பேசிய டாக்டர் கிருஷ்ணன் மணியம், காத்திரம் நிறைந்த ஆக்கங்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளும் கோட்பாட்டு ரீதியிலான செய்திகளும் விளிம்பு நிலை மாந்தரைக் குறித்துப் பேசும் படைப்புகள் மார்க்ஸிய சிந்தனை தாங்கியவையாகத் தோன்றுகின்றன என்றார். 'காட்டாறு' எனும் மாஜிக்கல் ரியலிஸ ஆக்கமும் தமிழனுக்கு நாடே இல்லை எனும் கூற்றை மறைமுகமாகச் சொன்ன 'குயில் கூவுகிறது' எனும் பின் நவீனத்துவமும் மலேசிய இலக்கியத்தின் முக்கியப் பங்களிப்புகள் என்றார். 'Fire' திரைப்படம் வெளியாகும் முன்னரே பெண்களிடையேயான ஒருபால் உறவு குறித்துப் பேசிய 'பெண் குதிரை' எனும் நாவலை சை. பீர்முகம் மது அவர்கள் எழுதிவிட்டதாகக் குறிப்பிட்டார். ரெ. கார்த்திகேசு போன்றோரின் பங்களிப்பால், நாவல் வளர்ச்சி மெதுவாகவே இருந்தாலும் சீராக இருப்பதாகச் சொன்னார்.

வளமான தமிழிலக்கியத்தின் உருவாக்கத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பிருக்கிறது. அந்தப் பொறுப்பை யாரும் யாரிடமும் திணிக்க இயலாது, அவரவரின் ஆத்மார்த்தமான அக்கறையால் மட்டுமே அது சாத்தியம். பொறுப்பை உணர்ந்த அவரவர் சுய-விசாரணையே படைப்பிலக்கியத்துக்குப் பலமாகவும் உரமாகவும் அமையும். 'மலேசியத் தமிழ் இலக்கியம் நாளை, என்னும் தலைப்பில் பேச வந்த வித்யாசாகர். அழகியலும் வாழ்க்கையும் அறிந்திராத ஒருவரால் எழுத முடியாது என்றும் மலேசியாவில் இளைஞர்கள் எழுதாததால் வயதான மூத்த தலைமுறை எழுத்தாளர்களே இப்போதும் காலத்துக்கேற்றாற்போல் எழுதவேண்டியுள்ளது என்றார்.

இழப்புகளும் இம்சைகளும் அடையாள இழப்புகளும் இருக்கும் நிலையில் இளையதலைமுறைக்கு இலக்கியத்தில் ஈடுபட ஏது நேரம் என்று ஆதங்கப்பட்டார். வெகுகாலமாக எழுதும் எழுத்தாளர்களிடையே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு அனுசரித்து ஒற்றுமை பாராட்டும் பெருந்தன்மையும் இல்லையாதலால் இவ்விளைஞர்களுக்கு முன்னுதாரணமும் இல்லை என்று வருத்தப்பட்டார்.

'அச்சு இதழ்கள் தேவையா?', 'எழுதுபவர்களே குறைவாக இருக்கும்போது இஸங்கள் தேவையா?', 'எழுத்தாளர்கள் சட்டாம்பிள்ளைகளா?', 'தனிமனிதத்துதி தேவையா? இலக்கியம் நவீனத்தை நோக்கிப்போக இவ்வகைப் போக்குகள் உதவுமா?', 'படைப்பு யாரைத் திருப்திப்படுத்த வேண்டும்- படைப்பாளியையா, வாசகனையா, விமரிசகரையா, திறனாய்வாளரையா?' போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சிங்கப்பூர் சித்தார்த்தன் ஒருங்கிணைப்பில் ஆறு பேச்சாளர்களும் பதிலளித்தனர்.

மிகவும் ஈடுபாட்டுடன் ஒன்றிப்போயிருந்த பார்வையாளர்களிடையே இது 'ஒருநாள் கருத்தரங்காக இருந்திருக்க வேண்டும்' என்ற ஒருமித்தகருத்து நிலவியது.

உள்ளடக்கம்

Google Ads.....

Google