கவிதா
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த நன்கு படித்த, விசாலமான பார்வையுள்ள ஒரு பெண்ணைத்தான்
பார்க்கப்போகிறேன் என்பது தெரிந்திருந்தாலும் நரிக்குறவர்கள் பற்றிப் பொதுப்
புத்தியில் பதிவாகியிருந்த பிம்பத்திலிருந்து என்னை மீட்டுக் கொள்வதென்பது அவரை
நேருக்குநேர் சந்திக்கும்வரை சாத்தியப்படவில்லை.
இந்திராவுடனான தொடர்பு ஒரு பத்திரிகை நண்பரின் வற்புறுத்தலின் பேரில் தொலைபேசியில்
தான் முதலில் தொடங்கியது. நண்பரும் பத்திரிகைச செய்திக்காக அவரை
அறிமுகப்படுத்தவில்லை. நரிக்குறவர்கள் உள்படச் சமுதாயத்தின் விளிம்புநிலை
மனிதர்கள்மீது ஊடகங்கள் காட்டும் அக்கறை எத்தகையது என்பது பரவலாகத் தெரிந்த விஷயம்.
இந்திரா எம்.ஏ. படித்தவர்; அரசுப் பணியில் இருக்கிறார். கலப்புத் திருமணம் காரணமாகச்
சொந்த வாழ்க்கையில் சொல்ல முடியாத பிரச்சினைகள்; இவற்றைத் தாண்டி இன்னும்
கற்காலத்திலேயே வாழும் தன் இன மக்களின் சமூக முன்னேற்றத்துக்காக எதாவது செய்ய
வேண்டும் என்னும் நோக்கத் தோடு சங்கம் ஒன்று அமைத்து உழைத்துவருகிறார். சமூகத்தின்
சற்றே மேம்பட்ட நிலையில் இருக்கும் நான், அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி
செய்யக்கூடும் என்பதுதான் நண்பரின் நோக்கம். உண்மையிலேயே இந்திராவைச் சந்தித்த பிறகு
அவர்தான் எனக்கு உதவியாக இருந்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. இந்திராவுடனான
சந்திப்பு, வாழ்வு குறித்த என் புரிதல்களை ஆழப்படுத்தியிருக்கிறது.
சிலபல தொலைபேசி உரையாடல்களுக்குப் பிறகு எதிர்பாராத ஒரு தினத்தில் இந்திராவைச்
சந்திக்க முடிந்தது. செங்கல்பட்டில் பணியாற்றும் அவர் அன்று தனது இனத்தைச் சேர்ந்த
பெண் ஒருவரின் பிரச்சினையை முன்னிட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு
வந்திருந்தார். அதனாலேயே அந்தச் சந்திப்பு சாத்தியப்பட்டது. இந்திராவுடன்
வந்திருந்தவர்களிடம் அவர்களது இனத்தின் அடையாளங்கள் கொஞ்சம் இருந்தாலும்
இந்திராவிடம் அது இல்லை. 'அப்படி இருந்தால் எங்களை எங்கேயும் மதிக்கமாட்டாங்க'
என்கிறார்.
இந்திராவின் சரளமான பேச்சில் அங்கங்கே வந்து விழுந்த சில ஆங்கில வார்த்தைகளைப்
பார்த்தே நான் பிரமித்துப்போனது பற்றி இப்போது வெட்கமாக இருக்கிறது. உண்மையிலேயே
அவரிடம் பிரமிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
அவர்கள் இன வழக்கப்படி இந்திராவுக்கு அவரது 47 வயதுத் தாய்மாமனோடு ஏழு வயதிலேயே
திருமணம் நிச்சயமாகிவிட்டது. அதுவும் நான்காம் தாரமாக. திருமணத்துக்கு ஒரு சில
மாதங்களே இருந்த நிலையில் அரசுப் பள்ளிக்கூடத்துக்குப் பால்வாடி உணவு வாங்கச் சென்ற
இந்திராவுக்குப் படிக்க வேண்டும் என்று நிரம்பவே ஆசை. 'பிச்சை புகினும் கற்கை
நன்றே' என்று மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர், இந்திராவுக்குத் திருமணம்
நிச்சயமானதைக் காரணம் காட்டி அவரது படிப்பு ஆசையை நிராகரித்துவிட்டார். ஆனால்,
திருமணம் நடக்கச் சில மாதங்கள் இருப்பதால் அதுவரை படிப்பதாகச் சொல்லி இந்திரா
எப்படியோ அனுமதி வாங்கிவிட்டார். உலகத்தின் கதவுகள் இந்திராவுக்காகத் திறந்தாலும்
அவரது பயணத்தில் பல தடைகள் இருந்தன. திருமணத் தேதி நெருங்கிய நிலையில் இந்திராவின்
இன மக்கள் அவரைத் தேடிப் பள்ளிக்கூடத்துக்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து
தப்பிப்பதற்காக ஓடினார். அவர்கள் விடாமல் துரத்த, இந்திரா அடைக்கலம் புகுந்த இடம்
ஒரு சுடுகாடு. அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் கூட்டம் கொஞ்சம் தடுமாறிய நேரத்தில்
மீண்டும் ஓடத் தொடங்கினார். அவரைக் காவல் நிலையத்தில் சேர்க்க உதவுவதாகச் சொன்ன ஒரு
பெரிய மனிதர் அவரைப் பலாத்காரம் செய்ய முயல, அவரிடமிருந்துத் தப்பிக்க இன்னொரு
ஓட்டம். ஒருவழியாகக் காவல் நிலையத்தைக் கண்டடைந்தார் இந்திரா. பிறகு காவல்
நிலையத்தின் உதவியோடு தடையின்றிப் படிக்கத் தொடங்கினார்.
கல்வியே இவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தபோது பிற விஷயங்களைப் பற்றிக் கேட்கவே
வேண்டாம். இயல்பாகவே வனங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் கொண்ட இந்திரா தனக்கிருந்த
அனுப வத்தையும் கல்வியையும் அடிப்படையாகக் கொண்டு 1980களின் ஆரம்பத்தில் வனத்
துறையில் வேலை வேண்டி விண்ணப்பிக்க, அவர் பெண் என்பதால் நிராகரிக்கப்பட்டார்.
கிட்டத்தட்டப் பத்து வருடப் போராட்டத்திற்குப் பிறகு, அ.தி.மு.க ஆட்சியிலிருந்த
போது குறைகேட்கும் நாளொன்றில் அவரது மனு முதல்வர் கைக்குப் போய்ச் சேர்ந்தது.
சும்மா இல்லை, கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் தடியெடுக்க, அதில்
காலில் அடிபட்டு வலியில் அலறிய போதுதான் அரசின் காதுகளில் இந்திராவின் பத்துவருடக்
குரல் விழுந்திருக்கிறது.
வனத் துறையில் வேலைக்கு அமர்ந்த பிறகு அவருடன் பணிபுரிந்த வேறு இனத்தைச் சேர்ந்த
ஒருவர் இந்திராவைக் காதலித்திருக்கிறார். பெரியாரின் புரட்சிப் பெண் என்று
புகழ்ந்து இந்திராவுக்கு எல்லாவிதங்களிலும் உதவியாக இருப்பதாக
வாக்களித்திருக்கிறார். ஆரம்பத்தில் காதலை நிராகரித்த இந்திரா, ஏழு வருடங்களுக்குப்
பிறகு ஏற்றுக்கொண்டிருக்கிறார். யாருமறியாமல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்
பிறகு இந்திராவின் கணவருடைய பெற்றோர்களுக்கு விஷயம் தெரியவர, 'ஒரு பறப்பெண்ணைக்
கட்டிக்கிட்டாக்கூடப் பரவாயில்லையே, குருவிக்காரிச்சியைக் கட்டிக்கிட்டு
வந்திருக்கியே' என்று புலம்பியிருக்கிறார்கள். 'அவர் வக்கீல். ஆனாலும், கூட
இருப்பவர்கள் எங்கள் இனத்தவர்களை எங்கேயாவது பார்த்தால், பாருடா உங்க ஆளுங்க என்று
சொல்லிக் கிண்டலடிப்பார்களாம். எல்லாம் சேர்ந்து என் மேல் வெறுப்பு வந்துவிட்டது'
என்கிறார் இந்திரா.
இவ்வளவு வெறுப்பு இருந்தாலும் அவர் இந்திராவின் சொத்துகளை அபகரிக்க
முயன்றிருக்கிறார். மணல் திருட்டுக்கு எதிராக இந்திரா போராடிய சமயத்தில் அவரது மகன்
மர்மமான முறையில் குளத்தில் விழுந்து இறந்திருக்கிறான். அவரை நேரடியாக எதிர்
கொள்ளமுடியாமல்தான் மணல் கொள்ளையர்கள் இதைச் செய்திருக்கிறார்கள் என்று இந்திரா
நம்ப, அவரது கணவரோ இந்திராவின் மீதே புகார் கொடுத்தார்.
இவை எல்லாவற்றுக்கும் பிறகு கணவரை இந்திரா விவாகரத்துச் செய்துவிட்டாலும் அவர்
இன்னமும் இந்திராவின் வீட்டில் இருந்து அதிகாரம் செய்து கொண்டிருப்பதுதான் கொடுமை.
இந்தப் பிரச்சினைகளை ஒரு பக்கம் சமாளித்துக்கொண்டு இன்னொரு பக்கம் தன் இன
மக்களுக்குக் கல்வியின் அவசியம் பற்றி எடுத்துரைப்பது, அவர்களுக்கு எதாவது
பிரச்சினை என்றால் நீதிமன்றம் போவது என்று பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.
'படிக்காமல் இருப்பது, குளிக்காமல் இருப்பது, அழுக்குத் துணிகளை உடுத்துவது
போன்றவற்றையெல்லாம் தமது இனக்கௌரவம் என்று இன்னமும் நினைக்கிறார்கள். நான் என்ன
செய்வேன்?' என்று கேட்கிறார். இவை தவிர இரவில் வீட்டில் தங்காத பெண்களின் கைகளில்
பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கொடுத்து அவர்கள் கற்புடன் இருக்கிறார்களா என்று
சோதிப்பதும் இவர்களது இனப் பழக்கம். கை வெந்துவிட்டது என்றால் போச்சு. அவர்கள்
கற்பு கெட்டவர்கள். 'இது போன்ற மூட வழக்கங்களை எதிர்த்துப் போராடுவேனா? மலைவாழ்
மக்களான எங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோ ர் பட்டியலில் சேர்த்திருக்கும் அரசை
எதிர்த்துப் போராடுவேனா? எங்கள் இனத்துக்கு உதவுவதாகச் சொல்லிக்கொண்டே எங்களைச்
சுரண்டுபவர்களை எதிர்த்துப் போராடுவேனா? ஒவ்வொரு சமயம் ஏன் படித்தோம் என்று
தோன்றுகிறது. ஒவ்வொரு சமயம் சாகவேண்டும் என்று தோன்றுகிறது' என்று சொல்லும் போது
இந்திராவின் குரலில் வாழ்நாளின் துயரம். தன் இனத்திற்குள்ளும் மாற்றங்களைக்
கொண்டுவரவேண்டும்; தம் இன மக்களின் மீது சமூகத்துக்குள்ள அழுக்குப் பார்வையையும்
மாற்ற வேண்டும் என்கிற இருமுனைப் போராட்டங்களை அசாதாரணமான நம்பிக்கையோடு இந்திரா
முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் என்று புரிந்தது.
இதில் அவர் பல சமயங்களில் சோர்ந்துபோனாலும் பின்வாங்குவதாக இல்லை. 'நீங்கள்லாம்
இருக்கீங்க. நம்பிக்கை இருக்கு' என்கிறார்.
'இங்க பாருங்க, நான் உங்கள மாதிரி புடவை கட்டறேன். தங்கம் போட்டிருக்கேன். எங்க
ஊர்ல என்னை, பாருடா குருவிக்காரிச்சி நம்மள மாதிரியே இருக்குன்னு கிண்டலடிப்பாங்க.
நீங்க எங்க மணிய போட்டிருக்கீங்க. கிட்டத்தட்ட நாங்க வச்சிருக்க மாதிரியே பைய
வச்சிருக்கீங்க. அப்போ நீங்க எங்களைச் சேர்ந்தவங்கதானே?' என்கிறார் தடாலடியாக. இதை
எதிர்பார்க்காத நான் கொஞ்சம் தடுமாற, அவர் மேலும் அதட்டலாகச் சொல்கிறார்:
'ஒத்துக்கங்க.' நான் சிரித்துக்கொண்டே ஆமோதிப்பதாய்த் தலையாட்டுகிறேன்.
அது இந்திராவுக்கல்ல, எனக்குத்தான் பெருமை.