Google   www kalachuvadu.com

 

பத்தி

எருக்கு

ஆ. சிவசுப்பிரமணியன்

வளமற்ற நிலங்களிலும் பராமரிக்கப்படாத தோட்டங்களிலும் சுடுகாடு மற்றும் சாலையோரங்களிலும் வளரும் குறுஞ்செடி எருக்கு. மருத்துவ குணம் உடைய இதை நச்சுத்தன்மை கொண்ட செடியாக கருதுவதால் இதை வீடுகளில் வளர்ப்பதில்லை. இதன் தாவரவியல் பெயர் Calotropis. இச்செடியின் சாறு பால் போன்று காட்சியளிக்கும். இதன் அடிப்படையிலேயே 'எருக்கம் பால்' என்று மக்கள் இதைக் குறிப்பிடுவர். இதன் இலை தடிப்பாகவும் மலர் கத்திரிப்பூவின் வண்ணத்திலும் இருக்கும். இலை பழுத்து மிக எளிதில் உதிர்ந்துவிடும். திருமங்கை ஆழ்வார் தம் பெரிய திருமொழியில்,

'எருக்கிலைக் காக எறிமழு
வோச்சல் என்செய்வ தெந்தை
பிரானே!'

என்று பாடியுள்ளார். கிராமப்புறங்களில் காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால் அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவுவர். இதனால் வலி குறைவதுடன் முள் குத்திய இடம் விரைவில் பழுத்துச் சீழ் வெளியே வரும். அத்துடன் முள்ளும் வந்துவிடும். குதிகாலில் வலி வந்தால், செங்கல்லைச் சூடாக்கி அதன்மீது பழுத்த எருக்கிலையை வைத்து அதன்மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும். உடம்பில் கட்டிகள் தோன்றி உடையாமல் வேதனை கொடுத்தால் எருக்கு இலையை நெருப்பில் வாட்டி, தாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும். எருக்கஞ் செடியின் குச்சியை, கருப்பைக்குள் செலுத்துவது கொடூரமான கருச்சிதைவு முறைகளில் ஒன்றாக உள்ளது.

நெற்பயிருக்குத் தழை உரமாக எருக்கஞ் செடியைப் பயன்படுத்தும் பழக்கம் நெல்லை மாவட்டத்தில் உண்டு.

தான் காதலித்த பெண்ணை அடையவிரும்பி மடல் ஏறும் தலைவன் எருக்கம் பூவினால் ஆன தலை மாலையை அணிந்துகொள்வானென்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தஞ்சை மராத்தியர்கள் ஆட்சியிலும் ஆர்க்காடு நவாபின் ஆட்சியிலும் எருக்கம்பூ மாலையை அணிவித்து, தெருவில் ஊர்வலமாக அழைத்துச் செல்லுவது தண்டனை முறைகளில் ஒன்றாக இருந்தது.

எருக்கில் வெள்ளெருக்கு என்னும் ஒரு வகையுண்டு. இச்செடியின் மலரைச் சிவன் அணிவான் என்று மக்கள் நம்பினர் என்பதை 'வெள்ளெருக்கஞ்சடை முடியான்' என்ற கம்பரின் கூற்றால் அறிய முடிகிறது. வெள்ளெருக்கஞ் செடியின் தூர்ப்பகுதிக் கட்டையால், பிள்ளையார் உருவம் செய்து வழிபடுவது சிறப்பானது என்னும் நம்பிக்கை இன்றும் மக்களிடையே உள்ளது.

மக்கள் அதிகமாகக் கண்டு கொள்ளாத இச்செடியின் பயன்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. இந்தியாவின் பயன்மிகு தாவரங்கள் (The useful plants of India 1986) என்ற தலைப்பில் வெளியான ஆங்கில நூல், எருக்கின் பயன்பாடுகளைப் பின்வருமாறு பட்டியலிடுகிறது.

எருக்கஞ்செடியின் பட்டையிலிருந்து உரித்தெடுத்த நார்வலுவானதாகவும் நீண்ட காலம் உழைக்கும் தன்மையுடையதாகவும் விளங்கக்கூடியது. இதனால் மீன் வலை பின்னவும் வில்லில் பயன்படுத்தும் நாண் செய்யவும் முறுக்கு நூல் உருவாக்கவும் இது பயன்படுகிறது. இதன் விதையிலிருந்து எண்ணெய் எடுக்க முடியும். விதையிலுள்ள பஞ்சு போன்ற பகுதியை மெத்தை, தலையணை ஆகியவற்றிற்கு இலவம் பஞ்சைப் போன்று பயன்படுத்தலாம். யானைகளுக்கு வரும் ஒரு வகையான தோல் நோய்க்கு இதன் இலைகளைத் தேய்த்துச் சிகிச்சையளிப்பர்.

குப்பைச் செடியாக நாம் கருதும் எருக்கு, மருத்துவ ரீதியில் மிகவும் பயனுடைய ஒரு செடி.

உள்ளடக்கம்

Google Ads.....

Google