|
பத்தி
சொற்களுக்கு எல்லை இல்லை
திவாகர்
ரங்கநாதன்
உலகெங்கும் வெளிவரும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களில் 50 சதவீதம் ஆங்கிலத்திலிருந்து
பிற மொழிகளுக்குச் செல்கின்றன. ஆனால் 6 சதவீதப் புத்தகங்களே பிறமொழிகளிலிருந்து
ஆங்கிலத்திற்குச் செல்கின்றன. Words Without Borders வலையிதழ் (www.wordswithoutborders.org)
தன்னைப் பற்றிய குறிப்பில் தரும் தகவல் இது.
உலக இலக்கியத்தை மேட்டுக்குடியினருக்குரிய ஒரு விஷயமாக அல்லாமல் உலகைத்
தெரிந்துகொள்வதற்கான வாசலாகப் பொது வாசகர்களுக்குத் தருவதே இந்த வலையகத்தின்
நோக்கம். றிணிழி அமெரிக்க மையமும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இலக்கிய
மொழிபெயர்ப்பு மையமும் இணைந்து நடத்தும் இந்த மாத இதழின் மிகப் பெரிய ஆலோசனைக்
குழுவில் நைஜீரிய எழுத்தாளர் சினுவா அச்செபெயும் இருக்கிறார்.
தரமான படைப்புகளைத் தேர்ந்த, தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களைக்கொண்டு மொழிபெயர்த்து
வெளியிடுகிறது இவ்வலையிதழ். இதில் வெளிவரும் சிறுகதைகள், நாவல் பகுதிகள்,
நாடகங்கள், சித்திர நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் ஆகியவை மூலம்
தற்கால உலக இலக்கியம் மட்டுமின்றிப் பிற இந்திய மொழி இலக்கியங்களைப் பற்றியும்
தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள் பகுதியும் உண்டு.
அமெரிக்கக் கண்டங்கள், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு என்று ஐந்து
பிரிவுகளில் படைப்புகள் தரப்பட்டுள்ளன. ஆசிய எழுத்தாளர்களில் புத்ததேவ் போஸ், சாதத்
ஹசன் மான்டோ , விஜய் தான் தேத்தா ஆகியோர் ஓரளவு தெரிந்த பெயர்கள். ஐரோப்பியப்
பிரிவில் காஃப்கா, இக்னாஸியோ சிலோன், டபிள்யூ,.ஜி. செபால்ட், இஸ்மாயில் கடாரே,
பசோலினி போன்ற பரிச்சயமான பெயர்களைப் பார்க்கலாம். பழைய ஐரோப்பிய எழுத்தாளர்களின்
படைப்புகள் புதிதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்க, ஐரோப்பியப் பிரிவுகளில் மற்ற பிரிவுகளைவிட அதிக உள்ளடக்கம் இருக்கிறது.
இந்த வலையிதழ் மேலும் பரவலாகத் தொடங்கும்போது நிலைமை மாறும் என எதிர்பார்க்கலாம்.
உள்ளடக்கம் |