Google   www kalachuvadu.com

 

மதிப்புரை

இறக்கை முளைத்த விதி
(உலகச் சிறுகதைகள்)

தமிழாக்கம்: வ. கீதா - எஸ்.வி. ராஜதுரை

வெளியீடு:
அடையாளம்
1205/1, கருப்பூர் சாலை
புத்தாநத்தம் 621 310.
முதல் பதிப்பு: 2007
பக். 135; ரூ. 70

பெ. குணசேகரன்

அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'இறக்கை முளைத்த விதி' சிறுகதைத் தொகுப்பில், மொழிபெயர்க்கப்பட்ட எட்டு உலகச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகள் பல்வேறு சூழல்களின் அரசியல஢ நிகழ்வுகளையும் மனித வாழ்வின் அவலங்களையும் சித்தரிப்பனவாய் அமைந்துள்ளன.

இக்கதைகளை மொழிபெயர்த்திருக்கும் வ. கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும் எழுதியுள்ள (மொழியாக்கம் எதன் பொருட்டு) முன்னுரையில் கதைகளின் சிறப்பம்சங்களையும் கதைகளில் பயன் படுத்தப்பட்டிருக்கும் பல குறியீடுகளையும் கதை எழுந்த அரசியல் பின் புலத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

சீன எழுத்தாளரான வென் யுஹோங் எழுதிய 'வெறி நகரம்' கதை, நாய்களைக் கொலைசெய்யும் வேலையைத் தொழிலாகக் கொண்டிருக்கும் சகோதரர்களின் கதை. நாய்களைக் கொல்வதற்கான உரிமத்தை வைத்துக்கொண்டு கொலைகள் புரியும் இவர்களது செய்கைகளைப் பார்த்த நகரவாசிகள் மிருகக் கொலைகள் செய்யத்தொடங்குகின்றனர். நகரே கொலை வெறியின் கொடுமைக்கு ஆட்படுகிறது. சிறிது காலத்தில் போலீசாரால் நாய்களைக் கொல்வதற்கான உரிமம் திரும்பப் பெறப்பட்ட பிறகு சகோதரர்களைக் காணாமல் கேட்கும் ஒருவரிடம், 'அச்சகோதரர்கள் ரகசியமாக போலீசில் சேர்ந்து வெகுநாட்கள் ஆகின்றன' என்று கூறும் போலீஸ் இளைஞனின் பதில் ஆதிக்கச்சக்திகள் எப்படி மாற்று வேடம் பூண்டு வருகின்றன என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.

மராட்டிய தலித் எழுத்தாளரான அன்னா பாவ் சாத்தே எழுதியுள்ள கதை 'மயானத் தங்கம்'. இக்கதையில் இடம்பெற்றிருக்கும் பீமா கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. கல் உடைக்கும் தொழிலை இழந்த பின்பு சுடுகாட்டுச் சாம்பலில் கிடைக்கும் தங்கத்தைத் தேடி அலைகிறான் பீமா. வறுமையின் காரணமாக இரவெல்லாம் சுடுகாட்டில் திரியும் பீமாவின் விரல்கள் ஒரு நாள் ஒரு பிணத்தின் வாயில் அகப்பட்டுச் சேதமுற்று, இறுதியில் விரல்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. கல் உடைக்கும் தொழிலுக்கும் வழியின்றித் தவிக்கிறான் பீமா.

புத்தக வாசிப்பின் காரணமாக ஏற்படும் மாற்றங்களைக் கூறும் சிறந்த கதை 'நூலகத்தில் ஒரு தளபதி'. இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ எழுதியுள்ள இக்கதையில், இராணுவம் தொடர்பாகத் தவறான செய்திகளை உள்ளடக்கிய புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்க நூலகம் செல்லும் விசாரணைக் குழுவினர் புத்தகங்களை வாசிப்பதால் எப்படிப் பண்பட்டு மாறிவிடுகின்றனர் என்பது நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது.

பாலஸ்தீனக் கதையான 'அடிமையின் கோட்டை'யை காஸ்ஸன் கனாஃபானி எழுதியுள்ளார். இது கடலின் அருகில் வசிக்கும் கிழவனை மையமாகக் கொண்டு வாழ்வின் தத்துவார்த்தங்களை ஆராயும் பாலஸ் தீனர்களின் வாழ்வைக் குறியீடுகளால் சித்தரிக்கும் கதை.

'குடியரசுத் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஜுனத்' என்னும் கதையை எழுதியுள்ளவர் பெண்ணிய எழுத்தாளரான சல்வா பக்கர். ஆவலோடு குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் ஜுனத், நேரில் குடியரசுத் தலைவரைப் பார்க்க ஆசைப்பட்டு அதனால் காவலர்களின் பூட்ஸ் கால்களால் மிதிபடுகிறாள். குடியரசுத் தலைவர் இறந்து இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு சவப்பெட்டிக்கு அருகே செல்லும்போது கடுமையாகத் தாக்கப்படுகிறாள்.

இறுதியாக இடம்பெற்றிருக்கும் கதை மாக்ஸிம் கார்க்கியின் 'புயற் பறவையின் கீதம்'. இக்கதையில் புயற் பறவை குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடலுக்கும் மேகத்திரள்களுக்கும் இடையில் போராடும் சிறிய பறவையின் துணிச்சலைச் சொல்கிறது கதை. போராடும், போராடத் துடிக்கும் இளைஞர்களுக்கு உத்வேகத்தைத் தரும் கதை 'புயற்பறவையின் கீதம்'.

இத்தொகுப்பில் உள்ள எட்டுக் கதைகளையும் வாசித்த பின்பு நல்ல கதைகளை வாசித்த அனுபவம் கிடைத்திருப்பதை உணர முடிகிறது. சிறப்பான வடிவமைப்புடன் வந்திருக்கும் 'இறக்கை முளைத்த விதி' தேர்ந்த கதைகளின் தொகுப்பு.

உள்ளடக்கம்

Google Ads.....

Google