Google   www kalachuvadu.com

 

மதிப்புரை

கங்கணம்
(நாவல்)

பெருமாள்முருகன்

வெளியீடு:
அடையாளம்
1205/1, கருப்பூர் சாலை
புத்தாநத்தம் 621 310.
முதல் பதிப்பு: 2007.
பக். 422. ரூ. 235

பி.ஏ. கிருஷ்ணன்

தற்காலத் தமிழர்களின் அழகியல் சார்ந்த அளவீடுகள் வினோதமானவை. 'தன் புகழ் கேட்டார்போல் தலை சாய்ந்து மரம் துஞ்ச' என்று சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது. இன்று தன் புகழ் கேட்பதையே ஒரு தனிக்கலையாக ஆக்கிக்கொண்டவர்கள் தமிழ் இலக்கிய உலகில் கோலோச்சுவதால் மக்களிடம் தரமான இலக்கியத்தைக் கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனாலும் தமிழகத்தில் பலர் - உண்மையான இலக்கியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் - மக்களிடம் தரமான இலக்கியத்தை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவர் பெருமாள் முருகன்.

பெருமாள்முருகனது நாவல் எடுத்துக் கொண்ட பிரச்சினை இதுவரை தமிழில் யாரும் கையாள முற்படாதது என்று எண்ணுகிறேன். திருமணமாகாத, ஆனால் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் தணியாத தாகம் கொண்ட ஒரு பேரிளைஞரைப் பற்றிய நாவல் இது. கதை அவன் கல்யாணம் செய்துகொள்வதில் எவ்வாறு வெற்றி அடைகிறான் என்பது பற்றியது. இப்படிக் கதையின் சாரத்தை ஒருவரியில் சொல்வது மகாபாரதம் பங்காளிச் சண்டையைப் பற்றியது என்று சொல்வதுபோல. Vikram Seth எழுதிய The Suitable Boy ஒரு பெண் எவ்வாறு மணம் செய்துகொள்கிறாள் என்பதைப் பற்றிப் பேசும் நாவல். ஆனால் அது இயங்கும் தளம் வேறு.

மாரிமுத்து போன்ற பேரிளைஞர்கள் பலரை எனக்குத் தெரியும். தமிழ் இளைஞர்களில் பலர், பெண்கள் நம்மைத் திருமணம் செய்ய வரிசையில் நிற்பார்கள் என்று கனவு காண்கிறார்கள். உண்மை வேறுவிதமானது. இந்தியாவையும் சீனாவையும் பொறுத்த அளவில் ஆண்கள் அதிகம்; பெண்கள் குறைவு. இதனாலேயே பல ஆண்களுக்குத் திருமணம் நடப்பது கடினமாக இருக்கிறது. பெருமாள் முருகனின் மாரிமுத்து இத்தகைய ஆண்களில் ஒருவர்.

கல்யாணம் செய்துகொள்ளாத ஆணின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை 17ஆம் நூற்றாண்டில் எழுதிய பிரான்ஸிஸ் பேகன்,

"He that hath wife and children hath given hostages to fortune; for they are impediments to great enterprises, either of virtue or mischief. Certainly the best works, and of greatest merit for the public, have proceeded from the unmarried or childless men; which both in affection and means have married and endowed the public" என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்று உண்மையன்று. டிக்கன்ஸ் வீடு முழுவதும் குழந்தைகள். யான் வெர்மீர் என்ற மகத்தான ஓவியன் தனது நாற்பது வயது வாழ்க்கையில் பத்துக்கும் மேல் குழந்தைகளைப் பெற்றான். எல்லாவற்றிற்கும் மேலாக கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் -அவர்கள் மேதைகளாக இருந்தாலும் -அமைதியான, சீராக நடக்கக்கூடிய மணவாழ்வையே விரும்புகிறார்கள். பேகனே பின்னால் கூறுகிறார்: As was said of Ulysses, vetulam suam prętulit immortalitati (he preferred his old wife to immortality).

பெருமாள்முருகனின் மாரிமுத்து யுலிஸஸ் போன்ற வீரன் அல்ல. உங்களையும் என்னையும் போன்றவன். அவனது மனைவி தேடல் நம்மால் புரிந்துகொள்ளக்கூடியது. இன விருத்தி செய்ய வேண்டும் என்ற ஆசை நமது அடிப்படை ஆசைகளில் மிக முக்கியமானது. மனித குலம் நிலைத்து நிற்பதன் ஆணி வேர் அது. இந்த ஆசை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்களிடம் இருந்து பல வகைகளில் வௌதப்படுகிறது.

திருநெல்வேலியில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். என்னைவிடப் பல வருடங்கள் பெரியவன். நாற்பது வயதில்தான் அவனுக்குக் கல்யாணம் நடந்தது. அவன் பிரம்மச்சாரியாக எங்களுடன் சுற்றிக்கொண்டிருந்த போது அவனிடம் பெண் பார்க்கும் அனுபவங்களைப் பற்றிக் கேட்போம். அவன் சொல்வான்: அதை ஏன் கேட்கற. பெண்ணப் பெத்த எல்லாத் தோப்பனாரும் அவர் பெண்ணை என்னைத் தான் பாக்கச் சொல்லுவா. ஒரே ஒரு தீட்டு பாக்கி இருக்கற பெண்ணுக்குக்கூட நான் பொண்ணு பாத்தா கல்யாணம் ஆயிடும் இன்னோத்தனோட.

மாரிமுத்து கதையும் கிட்டத்தட்ட இதைப் போலத்தான். அவன் பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது. அவனது தவிப்பைமிகத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார் பெருமாள்முருகன்.

மாரிமுத்து தனது தந்தைவழிப் பாட்டியுடன் வாழ்கிறான். பாட்டி வலுத்த பாட்டி. உழைப்பதே வாழ்வது என்ற நம்பிக்கை கொண்டவள். அவளைப் பற்றிய பதிவுகள் மிக அருமையாக அமைந்திருக்கின்றன.

மாரிமுத்து பெண்களைப் பற்றிக் கனவுகள் காண்பவன். பெண்ணின் ஸ்பரிசம் அறியாதவன். அவன் தொட்டது ஒரே ஒரு பெண்ணை, விடலைப் பருவத்தில்.

மாரிமுத்துவின் தந்தை கையாலாகாதவர். தாய் மனித குணங்களின் நளினங்கள் எதையும் அறியாதவள். தாய்-மகன் உறவு தமிழ் நாவல்களில் பெரும்பாலும் உக்கிரமாக இருக்காது. இந்த நாவலில் தாய்-மகன் உறவு சிறிது வித்தியாசமானது. மகனின் தாபங்களைக் கொச்சைப்படுத்துவதிலேயே தாய் குறியாக இருக்கிறாள். கடைசியில் மாரிமுத்து தூக்கில் தொங்கமுயலும்போதுதான் அவள் தாய் ஆகிறாள்.

நாவலின் மற்றொரு கனத்த அம்சம் அதில் வரும் கவுண்டர் - சக்கிலியர் சாதி உறவுகள்தான். எங்கள் பக்கத்தில் சக்கிலியர்கள் உழவர்கள் அல்லர். இங்கு அவர்கள் வயலில் வேலைசெய்பவர்கள். நாவலின் முதல் பக்கங்களில் இந்த உறவுகளின் சிக்கல்களையே நாவல் பேசப்போகிறது என்ற ஒரு பிரமை தோன்றுகிறது. ஆனால், நாவலில் சமன்பாட்டோ டு இருப்பவர்கள் அவர்கள் மட்டும்தான். இந்த நாவலின் சக்கிலியர்கள், கவுண்டர்களின் நெளிவு சுளிவுகள் (idiosyncrasies) பற்றித்தெரிந்தவர்கள். இது சில தருணங்களில் மிக அழகாக வெளிப்படுகிறது.

இந்த நாவலில் வரும் பெண்கள் அனேகமாக எல்லோரும் (கடைசியில் வரும் ராசாமணியையும் மாரிமுத்துவின் நினைவில் வருபவர்களையும் தவிர) பெண் என்கிற அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டிருப்பவர்கள்.

நாவல் முழுவதும் வளர்ச்சி எவ்வாறு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பேசப்படுகிறது. ஆனாலும், விவசாயி தன்னுடைய அடிப்படைக் கலாச்சார அடையாளங்களை விட்டுவிடப் பிடிவாதமாக மறுக்கிறான். அதைப் பற்றி அவனுக்கு அதிகம் தெரியாது.

தனக்கு நேரும் பெரும்துக்கங்களுக்கெல்லாம் இப்படி அனாந்தரக் காட்டில் தனி வீட்டில் வசிப்பதுதான் காரணமாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது.

இந்த நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோதே Time வார இதழைப் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார்கள்; மனிதனின் பயங்களில் பிரதானமானவை எவை என்று; அதில் முதலாவதாக வருவது பறப்பதற்குப் பயம் (fear of flying). இரண்டாவது, தனிமை. இந்தப் பயம்தான் நமது மாரிமுத்துவுடன் நாவல் முழுவதும் தொடர்ந்து வருகிறது. அவன் கூடவே வரும் மற்றொரு பயம் உறவின் இறுக்கம். உறவின் இறுக்கத்தை விரும்பாமல்தான் அவன் தனியாக இருக்கிறான். Time நடத்திய கருத்துக் கணிப்பில் intimacy இருக்கிறது, ஒன்பதாவது இடத்தில். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மனித மனங்களின் ஆசைகளும், அதிர்வுகளும் பயங்களும் உலகம் முழுவதும் ஒன்றுதான். இந்த ஒற்றுமையின் ஒரு மின்னலைப் பெருமாள்முருகனின் நாவல் கைவசப்படுத்தியிருக்கிறது. இதுவே இந்த நாவலின் பெரிய வெற்றி என்று எனக்குத் தோன்றுகிறது.

உள்ளடக்கம்

Google Ads.....

Google