'காலச்சுவடு' ஜூன் இதழ் படித்து மகிழ்ந்தேன். மாயாவதியின் வெற்றியின் ஆழத்தை
ரவிக்குமார் நன்கு பரிசீலித்துள்ளார். குழந்தைகள்மீதான வன் கொடுமை பற்றிய ஆய்வுகள்
விரிவாக அலசப்பட்டுள்ளன. வசந்தி தேவியின் கட்டுரையும் டாக்டர் யமுனாவின் நேர்காணலும்
சிறப்பாக உள்ளன. 'காகங்கள்' தொடரில் மணாவின் இதழியல் அனுபவங்கள் சிறந்ததொரு பதிவு.
நகுலனுக்கு ராஜமார்த்தாண்டனின் அஞ்சலி, அம்முதுபெரும் படைப்பாளியின் பன்முகத்
தன்மையை அறியப் பெரிதும் உதவுகிறது.
எஸ். பழனிசாமி (பழமன்)
கோவை - 35
'நிஜத் துப்பாக்கியுடன் போலி நாயகர்கள்' தலையங்கம், அநீதியைத் தட்டிக்கேட்கும்
போராளியின் குரலாய் ஒலித்திருந்தது. மகாத்மா பிறந்த மண்ணில் நரேந்திர மோடி, அவர்
கையாள்களான போலீசார் போன்ற மாபாவிகள் அராஜக ஆட்சி நடத்துவது கொடுமை. மானம்
இருந்திருந்தால் குஜராத் கலவர பூமியானபோதே தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா
செய்திருப்பார் மோடி. அதெல்லாம் அவரிடம் கொஞ்சமும் இல்லை. இந்த அநீதி யாளரை
மக்கள்தான் தங்கள் வாக்கால் விரட்டியடிக்க வேண்டும்.
ப. ராமகிருஷ்ணன்
காயக்காடு - 614 624
ஜூன் இதழ் ஏமாற்றத்தைத் தந்தது. மதுரையில் நடந்த பத்திரிகையாளர் படுகொலை பற்றி
விரிவான அலசலோடும் பலதரப்பட்டவர்களின் கடும் கண்டனங்களோடும் இதழ் வருமென
எதிர்பார்த்தேன். ஹிந்து தலையங்கம், பத்திரிகையாளர் தீர்மானம், கண்டன அறிக்கையோடு
உங்கள் கடமையினை முடித்துக்கொண்டீர்கள்.
இவ்வளவு பெரிய அக்கிரமம், அதுவும் ஒரு ஜனநாயக நாட்டில், பத்திரிகைமீதே கொடூரத்
தாக்குதல் நடத்திப் படுகொலையில் முடித்திருக்கிறார்கள். இதை இன்னும் ஆழமாகவும்
உத்வேகத்தோடும் விவரமாய் எழுச்சியோடு எழுதி வாசகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தைக் 'காலச்சுவடு'
ஏற்படுத்தியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பத்திரிகை நிர்வாகமே மௌனமாகிப் போனது,
நீங்களும் நீர்த்துப்போனதற்கு ஒரு காரணமாய் அமைந்திருக்கலாம். மொத்தத்தில் வேதனையும்
வெறுப்பும்தான் மிஞ்சுகிறது.
சேரன் செல்லதுரை
சேயூர் - 641 655
சு.ரா. நம் இதயத்தைவிட்டு என்றும் அகல மாட்டார். சு.ராவின் 'ஒரு புளியமரத்தின்
கதை'யும் 'ஜே.ஜே: சில குறிப்புக'ளும் தமிழ் இலக்கியத்தில் அழியா முத்திரை
பதித்திருக்கின்றன. தமிழ் இதழியலில் புகுந்த ஆபாசம், வக்கிரம், சுயநலத்திற்காக
அரசியல் சார்பு போன்ற எதுவும் இல்லாமல் தொடரும் காலச்சுவடு இதழுக்குப் பாராட்டு.
உ.பி. தேர்தல் முடிவு குறித்த ரவிக்குமார் கட்டுரையின் மூலம் உ.பி. மக்களின் நாடித்
துடிப்பை அறிய முடிந்தது. தேசிய காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட்
போன்றவை குறிப்பிட்ட லட்சியத்திற்காகப் போராடவோ வாதாடவோ மக்களிடம் செல்லவில்லை.
மக்கள் விரோதச் செயல்களில் இந்தத் தேசியக் கட்சிகளுடைய தொடர்பை மக்கள் உணர்ந்து
விட்டதையே உ.பி. தேர்தல் முடிவு காட்டுகிறது.
கே. கணேசன்
கோயம்புத்தூர் - 27
ஜூன் இதழில் ஹியூபர்ட் சதீஷ் எழுதிய "சு.ரா. அழகிய மனமும் சிந்தனையும்" கட்டுரை
படித்தேன். சுந்தர ராமசாமி, சதீஷ் இருவருக்குமான நட்பு புரிந்தது.
"வாழ்க்கை என்பது ஒரு பயணம். அந்தப் பயணத்தில் நாம் எங்கும் தேங்கி
உறைந்துபோய்விடக் கூடாது" என்பது உண்மையே. சு.ரா.வின் மனம் "ஒரு மரம்
வெட்டப்படுவதைக்கூடக்காண இயலாத இளகிய மனதல்லவா உங்கள் உள்ளம்" என்பது எத்தனை உண்மை.
"ஐரோப்பிய நாடுகள் என்றால் இன்னும் நல்லது. பல கலாச்சாரங்களைப் பார்க்கவும்
சுதந்திரமாகச் செயல்படவும் ஏற்ற சூழல். இங்கே அது பெருமளவில் இல்லை" என்ற எண்ணம்
சு.ரா. ஐரோப்பிய நாடுகள் மீது கொண்ட நல்ல நம்பிக்கையைக்காண்பிக்கிறது.
என்.எஸ். கிருஷ்ணன்மீது உயர்வான நம்பிக்கை. ஜே.ஜே.யில் உள்ள நீர்க்குமிழிகள்
எல்லாம் உங்களுக்கு எளிதாக மேற்பரப்பிலே தெரியும். அதே குமிழிகள் ஆழத்தில்
நிகழ்ந்தால் தெரிவதில்லை. இப்படிப் பல்வேறு எண்ணவோட்டங்களுடன் கூடிய கட்டுரை மிகச்
சிறப்பாக இருந்தது.
காலச்சுவடு இதழ் சு.ராவின் இலக்கியப் படைப்புகளை மிகச் சிறந்த தீபம்போல்
வெளிச்சமிட்டுக் காண்பித்தது. பல படைப்பாளர்கள், தென் மாவட்ட எழுத்தாளர்கள் அவருடன்
பழக வாய்ப்புகள் ஏற்பட்டன. வடமாவட்ட எழுத்தாளர்கள் அவருடைய 'ஒரு புளியமரத்தின் கதை'
நாவலோடு அவரை எண்ணிப் பார்க்கச் செய்தது.
விருத்தாசலம் பெண்கள் இலக்கியச் சந்திப்பு குறித்த சுகிர்தராணியின் கட்டுரையையும்
படித்தேன்.
"எனது பிறப்புறுப்பிலும் யாரும் கம்பைச் செருகியதில்லை" என்ற வரிகளைப் படித்து
வியந்தேன்; அதிர்ந்தேன். எழுத்திலும் பேச்சிலும் நாகரிகம் வேண்டும் என்பர். அது
இன்றைய பெண் கவிஞர்களிடையே இருக்கிறதா என்பது ஐயமாகவே உள்ளது. 'சமூக
மறுமலர்ச்சியில் பெண்கள்' என்னும் நூலெழுதிய எனக்கு இன்றைய பெண் படைப்பாளர்கள்
சிலரின் படைப்புகள், பேச்சுகள் ஏனோ சற்று வித்தியாசமாகவே தெரிகின்றன.
புதிய உத்வேகம் அவர்களிடையே இருப்பதாக எண்ணி இலக்கிய உலகைப் பாழடிக்கிறார்கள் என்றே
எண்ணத்தோன்றுகிறது.
குலசேகரன்
வேலூர்
என்கவுன்டர்கள் எல்லாமே போலியாக நடத்தப்படுபவைதான். என் கவுன்டரின்போது காயமடைந்த
ஒரு போலீஸ்காரரையாவது பார்த்திருக்கிறோமா? ஒருவிதத்தில் இவை அரசு செய்யும்
படுகொலைகள்.
அதே சமயம் இவற்றின் இன்னொரு பக்கமும் உண்டு. இவை போன்ற என்கவுன்டர்கள் தவறு எனத்
தெரிந்தும் பொதுமக்கள் வரவேற்கவே செய்கின்றனர். இவை போன்ற சாவுகள் ஏன் பொதுமக்களின்
மனசாட்சியைத் தட்டி எழுப்பவில்லை?
நமது சட்டமும் நீதி மன்றங்களும் சிறைச்சாலைகளும் குற்றவாளிகளின் மனத்தில் எவ்வித
மாற்றத்தையும் உண்டுபண்ணவில்லையோ என ஒரு சந்தேகம் எல்லோர் மனத்திலும் பரவலாக
இருக்கிறது.
குற்ற வாழ்வின் ருசிபழகிப்போனவர்களைச் சட்டமோ கோர்ட்டோ எதுவும் செய்வதில்லை.
சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தித்தப்புவதே இவர்களின் நிரந்தர வாழ்வாக
இருக்கிறது. அதே சமயம் இவர்களால் காவல் துறையினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு
ஆளாகின்றனர். நிரந்தரமான குற்றச்செயலின் முடிவு, ஓர் உயிரின் விடுதலையாகச்
சுருக்கப்படுகிறது.
இதன் காரணமாக என்கவுன்டர்களை நான் ஆதரிப்பதாகப் பொருள் கொள்ள வேண்டாம். ஓர் உயிரைப்
போக்க யாருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது. பயங்கரக் குற்றவாளிகளை அந்தமான்
தீவுகளில் உள்ள தனிமைச்சிறையில் வாழ்நாள் முழுவதும் அடைத்துவிடலாம். வருடம் ஒருமுறை
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வந்து பார்த்துச் செல்ல அனுமதிக்கலாம். நிச்சயம்
இது மரணதண்டனையைவிடக் கொடியது. காவல் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படாது; பொது
மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும். அரசு இதனைப் பரிசீலிக்க வேண்டும்.
கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம் - 628 204
'கல்வி நிலையங்களில் கயமை இருள்' என்னும் வசந்தி தேவியின் கட்டுரை பல சம்பவங்களை
நினைவூட்டுகிறது.
குழந்தைகளுக்கு நல்ல நோக்கோடு தொடுதல் (good touch), தீயநோக்கோடு தொடுதல் பற்றி
யார் கற்றுக்கொடுப்பது? இன்றைய சூழலில் பெற்றோர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையில்
பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.
குழந்தைகளுக்கு ஏதேனும் தேவைப் பட்டால் அம்மாவிடம் கேட்க ஆயாதேவைப்படுகிறாள்
என்னும் நிலை இன்று உள்ளது. ஒரு சில குடும்பங்களில் குழந்தை, பெற்றோர் என்னும் உறவு
நெருக்கமாக இருக்கும். பெரும்பான்மையான பெற்றோர்களுக்குக் குழந்தைகளைப் பார்க்கவோ
பேசவோ அவர்களுடன் விளையாடவோ நேரமில்லை.
குழந்தைகளுக்காகத் தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தைப் பெற்றோர்கள் ஒதுக்கி
அக்கறைகாட்ட வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களைத் தம் பிள்ளைகள் என்று எண்ண
வேண்டும்.
கை. சிவக்குமார்
கோவை - 46.
இதழ் 85இல் வெளியான எனது கட்டுரை குறித்த பிரசன்னா ராமஸ்வாமியின் 'எதிர்வினை'யைப்
படித்தவுடன் முதலில் சிறிது அதிர்ச்சியாக இருந்தது.
நான் எழுதிய விமர்சனம் ஊக்கபூர்வ அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது.
அவ்விமர்சனத்தில் படத்தின் நல்ல அம்சங்களோடு குறைபாடுகள் சிலவற்றையும் மிக
மென்மையான பார்வையுடன் சுட்டிக்காட்டியிருந்தேன்.
விமர்சனம் என்பது விமர்சனமாகப் பார்க்கப்பட வேண்டும். எனது விமர்சனத்திற்கு, 'உன்
கவிதையை நீ எழுது' எனும் படைப்பாளரின் எதிர்வினை நிராகரிக்கத்தக்க, அசட்டுத்தனமான
பதில். ஒரு கலைப் படைப்பு எத்தகைய பரிசோதனைப் போக்காகவும் மேற்கொள்ளப்படலாம். ஆனால்
இறுதியில் பார்வையாளரது மனப்போக்கில் படைப்பாளர் எதை விட்டுச் செல்கிறார் என்பதும்
முக்கியம். இந்த ஆவணப்படத்தில் சஞ்சயின் குரல் மட்டுமே மிஞ்சுகிறது.
ஆவணப்படம் என்பது விபத்து போன்ற நேரடிப் பதிவுகளை மட்டுமே தந்துவிட்டுத் தன்னை
முழுமையாகப் பாவிக்க யத்தனிப்பது ஏற்கத்தக்கதுதானா? இப்படத்தைப் பார்த்த பல
பார்வையாளர்கள் சஞ்சய்சுப்பிரமணியனின் குரலை மட்டுமே இனம் கண்டவர்களானார்கள்.
சஞ்சயின் இசைக்குள் மலர்ந்திருக்கும் உள்ளார்ந்த ஒளியை இந்தப் படம் தனது கட்டமைப்பு
சார்ந்தும் மூலத் தேவை சார்ந்தும் காட்டத் தவறிவிட்டது என்பதே உண்மை.
எனது கட்டுரைமீதான பிரசன்னா ராமஸ்வாமியின் 'எதிர்வினை'யில் நீரடிமண்ணாக எனக்குத்
தென்பட்டது - பிரசன்னா எனது கட்டுரையின் கூற்றுகளை விமர்சனத்திற்குட்பட்ட
படைப்பாளராக அணுகித் தனது பதிலை முன்வைக்காமல் எனது விமர்சனத்தின் மீது தீர்ப்பு
வழங்கும் சந்தேகக் கண்ணோட்டத்துடனான நடுவராகச் செயல்பட முனைந்திருக்கிறார். தன்
முனைப்பான கருத்துக்களை அவர் முன்வைத்ததும் எனக்கு ஏமாற்றமளித்தது.
எனினும் பிற்பாடு வெளியான வாசகர் மு. பிரசாதின் கடிதத்திற்கு பிரசன்னா ராமஸ்வாமி
தந்திருந்த எதிர் வினையே என்னை இந்த எதிர் வினையை எழுதும்படி நிர்பந்தித்தது.
வாசகர் கடிதம் என்கிற மதிப்பைக்கூட வழங்காமல் கடிதத்தைக் காழ்ப்பு கலந்ததாக
பாவித்திருந்தார் பிரசன்னா. வாசகருக்கு என்ன காழ்ப்பு இருக்கமுடியும்? மேலும்
கடிதம் அயர்வூட்டுவதாகவும் சொல்கிறார். நான் எழுதிய கட்டுரையும் பிரசாதின் கடிதமும்
மட்டுமே இந்த ஆவணப்படத்தை நடு நிலையான தொனியில் விமர்சித்தவை. மற்ற சில அப்படத்தைத்
தோள்தட்டித் தந்தவை மாத்திரமே. ஏதோ நூற்றுக்கணக்கான எதிர்விமர்சனங்களும் எதிர்க்
கடிதங்களும் இடையறாது வந்ததுபோலவும் அதைக்காணச் சகியாமல், எதிர்கொள்ளவியலாமல்
அயர்ச்சியடைந்ததுபோலவும் பிரசன்னா பாவிப்பதைக் காணும்போது எனக்குத்தான் நிஜமாகவே
அயர்வாக இருக்கிறது. தனது படம் புகழப்பட வேண்டும் என்பது அவரது நேரடித்தேவையாக
இருக்கிறது. எனவே வழி பிறழும் விமர்சகரது தலையில் சில கொட்டுக்களை வைத்து அவரை
பின்பெஞ்சிற்குத் தள்ளப் பார்க்கிறார்.
கடிதத்தில், 'மேலதிகமாக, பிரசாதின் கடிதத்திற்குப் பின்னே நான் இருந்திருக்கிறேன்'
என்பதாக என் மீதான அபாண்டமான குற்றச்சாட்டு ஒன்றையும் மறைமுகமாக வைக்கிறார்.
விஸ்வாமித்திரன்
சென்னை
உள்ளடக்கம்