Google   www kalachuvadu.com

 

கட்டுரை

வே. கோபாலையர்
சில நினைவுக் குறிப்புகள்

கோவைவாணன்

சரபோசி மன்னன் திருவையாறு காவிரியாற்றங்கரையில் கட்டிய அரண்மனைதான் அரசர் கல்லூரி நடக்கும் இடம். வாய்ப்பாட்டு, வீணை, வயலின், சமற்கிருதம் முதலிய வகுப்புகள் அரண்மனைக் கட்டடத்திற்குள் நடக்கும். தமிழ் வகுப்புகள் மட்டும் அரண்மனைக்கு வெளியே உள்ள அறைகளில் நடக்கும். 'புலவர்' வகுப்பு நான்கு ஆண்டுகள். இரண்டு அறைகள்தான் வெளியே கட்டப்பட்டிருந்தன. அவற்றில் இரண்டு வகுப்புகள் நடைபெறும். கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தடியில் ஓர் ஓலைக்கொட்டகையில் ஒரு வகுப்பு நடைபெறும். மீதி உள்ள ஒரு வகுப்பு வேப்பமரத்தடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும். தமிழ்க் கல்வியை அரசர் கல்லூரி நடத்திய இலட்சணம் இதுதான்!

1974முதல் 1978வரை திருவையாறு அரசர் கல்லூரியில் 'புலவர்' பட்டத்திற்காக நான் படித்தபொழுது, கோபாலையர் அங்குப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நான்கு ஆண்டுகள் அவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. வேப்பமரத்தடியில் நடைபெறும் வகுப்புகளில் அதிகம் கோபாலையரின் வகுப்புகள்தான். காலில் செருப்புக்கூட இல்லாமல் துணிக்கடை மஞசள் பையோடு வருவார். பைக்குள் வெற்றிலை பாக்கு இருக்கும். மரத்தடியில் போடப்பட்ட நாற்காலியின் கைப்பிடியில் மஞ்சள் பையை மாட்டிவிட்டுச் சம்மணம் போட்டு நாற்காலியில் அமர்ந்துகொள்வார். பிறகு நடத்த வேண்டிய பாடப்பகுதியை வினவுவார். பகுதியைக் குறிப்பிட்டால் உடனே ஆரம்பித்துவிடுவார். மூலமும் உரையும் மனப்பாடம். எந்தப் பக்கத்தில் எத்தனாவது பத்தியில் எத்தனாவது வரியில் என்ன பிழை உள்ளது என்று எங்கள் கையில் உள்ள பாடநூல்களில் உள்ள பிழைகளையும் சுட்டிக்காட்டிக்கொண்டே நடத்துவார்.

பாடம் நடத்துகின்றபொழுது பல்வேறு நூல்களிலிருந்தும் பாடல் வரிகளை ஒப்பிட்டுச் சொல்லிக்கொண்டே வருவார். சான்றாகக் கம்பராமாயணத்திலிருந்து ஒரு பாடலைச் சொல்லச் சிந்திப்பார். பாடல் நினைவுக்கு வராது. நினைவுக்கு வரவில்லை என்று அப்பாடலை விட்டுவிடமாட்டார். உடனே ஒரு மாணவனை அழைத்து, 'நூலகத்திற்கு ஓடிக் கம்பராமாயணம் பாலகாண்டம் எடுத்துட்டு வா' என்று அவசரப்படுத்துவார். மாணவர் ஓடிக்கொண்டிருப்பார். மொழுமொழு என்றிருக்கும் தன் தலையைத் தடவியவாறே முணுமுணுப்பார். 'ஆ! வந்திருச்சு, கூப்புடு! கூப்புடு!' என்று சொல்லிவிட்டுப் பாடலை உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். இசையோடுதான் பாடல்களைச் சொல்வார்.

நச்சினார்க்கினியரின் உரையை மெச்சிப் பேசுவார். மறந்தும் 'நச்சினார்க்கினியர்' என்ற பெயரைக் கூறமாட்டார். 'பிரபு இதுக்கு உரை எழுதியிருக்கிறான் பார்ரா!' என்றுதான் கூறுவார். நச்சரைப் 'பிரபு' என்றுதான் எப்போதும் குறிப்பிடுவார். தமிழ் இலக்கண இலக்கியங்களை மனப்பாடமாக வைத்துக்கொள்ளளும் மரபு தமிழில் இருந்து வந்துள்ளது. ஏட்டுச் சுவடிக் காலத்தில் இது எவ்வளவு முக்கியமானது என்பதை இப்போது நம்மால் உணர முடிகிறது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ரா. ராகவையங்கார், நா.மு. வேங்கடசாமி நாட்டார் முதலியோர் இது போன்று தமிழை மனனமாக இந்த நூற்றாண்டில் வைத்திருந்தவர்கள். கோபாலையர் இந்த மரபின் இறுதிக் கண்ணி என்று துணிந்து கூறலாம்.

எழுபதுகளில் அவரிடம் நான் படித்துக்கொண்டிருந்த பொழுதே, அவரது பதிப்பாகப் பல நூல்கள் வெளிவந்துவிட்டன. இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து (6 பாகங்கள்), பிரயோக விவேகம் முதலிய இலக்கண நூல்கள் இவரது விரிவான குறிப்புரைகளுடன் சரசுவதி மகால் நூல் நிலைய வெளியீடுகளாக வெளிவந்துவிட்டன. (இவ்வளவு உழைப்பிற்கும் அவர் ஒரு காசுகூட வாங்கிக்கொள்ளவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.) ஆனால், என்றைக்கும் வகுப்பறையில் தனது பதிப்புகளாக இன்னின்ன நூல்கள் வெளியாகி உள்ளன என்று சொல்லிக்கொண்டதே கிடையாது.

ஒன்றை மட்டும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுக்கொள்வார். தான் 'வித்துவான்' படித்தபொழுது கல்வெட்டுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்ததாகச் சொல்வார். ஆனால், 'அந்த ஆண்டு மாநிலத்திலேயே கல்வெட்டுத் தேர்வு எழுதிய மாணவர் ஒரே ஒருவர்தான். அது நான்தான்' என்று மாணவர்கள் சிரிக்கும்படி சொல்லிக்கொள்வார்.

1974க்கு முன்பு கல்லூரியில் அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் சிறிது காலம் வீட்டில் இருக்க வேண்டிய நிலை வந்ததாகவும் கேள்விப்பட்டேன். அந்த நிலையில்கூட மனத்தளர்ச்சி கொள்ளாமல் பல பதிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார் என அறிந்தேன். 'பள்ளி அக்கிரகாரம் நீ. கந்தசாமிப் பிள்ளை' அவர்கள்தான் சரசுவதி மகால் நூல் நிலைய வெளியீடுகளாகக் கோபாலையரின் பதிப்பு நூல்கள் அந்த வேளையில் வெளிவரக் காரணமாய் இருந்துள்ளார் என்பதும் நினைவுகூர வேண்டிய ஒன்று.

எழுபதுகளில் அரசர் கல்லூரி மாணவர்களிடையே மிகுந்த அரசியல் விழிப்புணர்வு இருந்தது. வெளியில் இயங்கிவந்த சமூக இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், இலக்கிய இயக்கங்கள் அனைத்தின் கிளைகளும் கல்லூரியிலும் செயல்பட்டு வந்தன. குறிப்பாக உலகத் தமிழ்க்கழகம் (பெருஞ்சித்திரனார்), தமிழியக்கம் (இரா. இளவரசு), திராவிடர் கழகம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் முதலிய அமைப்புகளில் மாணவர்கள் சிறப்பாகப் பங்குபெற்ற காலம்.

மனிதன், சிகரம், நோக்கு, செம்மலர், தாமரை, தென்மொழி முதலிய இதழ்கள் மாணவர்களின் கைகளில் தவழ்ந்தகாலமது. தொடக்கத்தில் நானும் பெரியாரியத்தில் ஈடுபாடுகொண்டு பெரியாரின் நூல்களைத் தேடிப்படித்துக்கொண்டிருந்தேன். 'இராமாயணக் கதாபாத்திரங்கள்' என்றொரு நூலை அந்நேரம் படித்திருந்தேன்.

கோபாலையரைப் பொறுத்தவரையில் வகுப்பில் சுதந்திரமாகக் கேள்விகள் கேட்கலாம். தோழமை உணர்வோடு சிரித்துக்கொண்டே கிண்டலாகப் பதில் சொல்வார். ஒரு நாள் 'இராமாயணப் பாத்திரங்கள்' படித்ததாக்கத்தில் இராமாயணத்திலிருந்து ஒரு கேள்வி கேட்டேன். உடனே அதற்கு, 'இங்க பாரு! காலணா அரையணா புத்தகத்தையெல்லாம் படித்துக்கொண்டு கேள்வி கேட்கக்கூடாது. இராமாயணம் உனக்கு மட்டும் அல்ல; உன் பரம்பரைக்கே தெரியாது!' என்று கொஞ்சம் கோபமாகச் சொன்னார். காலணா, அரையணா புத்தகங்கள் என்று அவர் சுட்டியது சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளை. அப்பொழுது எனக்கு அவரது கூற்று சரியாக விளங்கவில்லை. இப்பொழுதுதான் அவர் கூறியதன் பொருள் விளக்கமாகிறது. வடமொழியில் எழுதப்பட்ட வான்மீகி இராமாயணத்தை எந்தத் திராவிடன் படித்துள்ளான்? எந்தத் திராவிடன் வடமொழி படித்துத் தெரிந்து மூல நூலைப் படித்தான்? ஆனால், வான்மீகி இராமாயணம் வடமொழியிலிருந்து நேரடி மொழிப்பெயர்ப்பாக சி. ஆர். சீனிவாச அய்யங்கார் மூலம் வெளிவந்துள்ளது. பெரியார் ஈ.வே.ரா. நம்பகத் தன்மை கொண்ட இந்த மொழிபெயர்ப்பு நூலை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் இராமாயண ஆராய்ச்சி செய்தார் என்பதையும் நாம் நினைவில்கொள்ளவேண்டியுள்ளது.

பழந்தமிழ் நூல்களில் அவருக்கு இருந்த புலமை வெளிப்படையானது. நவீன நூல்களை அவர் படித்துப் பார்த்திருப்பாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. குறிப்பாகத் திராவிட இயக்கம் சார்ந்த இலக்கியங்களை அவர் படித்துப் பார்ப்பாரா என்று அறிய விரும்பினேன். ஒரு நாள் வகுப்பில், 'ஐயா, இராவண காவியம் படித்திருக்கிறீர்களா? எப்படி உள்ளது?' என்று கேட்டேன். உடனே, 'ஜிலுஜிலுஜிலுன்னு போகுதடா' என்றார். கோபாலையருக்குக் காவிய ரசனைதான் முக்கியம் என்பதை அப்பொழுது உணர்ந்து கொண்டேன்.

பிராமண எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, தனித் தமிழ் ஈடுபாடு மாணவர்களிடம் மேலோங்கி இருந்த காலத்தில் கோபாலையர் அரசர் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். மேற்குறித்த உணர்வுகள் உள்ள மாணவர்கள் யார் யார் என்பது கோபாலையருக்குப் பளிச்சென்று தெரியும். ஆனால், அவர்களிடம் துளியும் வெறுப்புக் காட்டியதில்லை. சொல்லப்போனால் அத்தகைய உணர்வுள்ள மாணவர்கள்தான் அவருடைய செல்லப்பிள்ளைகளாக அவரது இறுதிக்காலம் வரையில் இருந்தார்கள். உதாரணம்: முனைவர் மு. இளமுருகன்.

திராவிட இயக்கத்தில் தீவிரமாக இருந்த மாணவர்கள் கோபாலையரிடம் மிகுந்த நேசத்துடன் பழகுவார்கள். உதாரணம்: செந்தலை ந. கவுதமன்.

n

(கட்டுரையாளர் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியின்
தமிழ்த்துறைத் தலைவர்.
கோபாலையரின் மாணவர்.)

உள்ளடக்கம்

Google Ads.....

Google