Google   www kalachuvadu.com

 

கட்டுரை

குமரி மாவட்ட மீனவர்கள்: தொடரும் துயரம்

வறீதையா கான்ஸ்தந்தின்

நிலத்தின் நிலைத்த தன்மை பெருங்கடலில் துளிக்கூட இல்லை என்பது நிதர்சனம். அசைந்துகொண்டிருக்கும் நீலக் கடற்பரப்பு எப்போது தனது தன்மையை மாற்றிக்கொள்ளும் என்பதைக் கடலன்னை தவிர வேறுயாரும் கணிக்க இயலாது. நாள்தோறும் அலையையும் காற்றையும் மழையையும் எதிகொள்ளும் தொழிற்முறையினால் துணிச்சலும் முரட்டுத்தனமும் மீனவனுக்குள் இயல்பாகவே ஊறிக்கிடக்கின்றன. அடுத்த நாள் உணவுக்கு உத்தரவாதமில்லாத நிச்சயமற்ற வாழ்வு முறைக்குப் பழகிப்போனவனுக்கு மரணங்கள் புதிதன்று. மரணத்தைத் தனது தொழிலின் கூறாகவே பார்த்துப் பழகிப்போனவன் அவன்.

இயற்கையின் சீற்றங்களை இயன்றவரை எதிர்த்து நிற்பதற்கும் இல்லையெனில் அதற்கடங்கிப்போவதற்கும் தன்னைப் பழக்கிக்கொண்ட காரணத்தால் மரணங்கள் அவனைப் பெருமளவில் பாதிப்பதில்லை. அவனைப் பதற்றம்கொள்ளச் செய்வதெல்லாம் மனிதர்களால் ஏற்படும் துன்பங்கள்தாம்.

மீனவர்களின் வாழ்வியல் சிக்கல்களை உற்றுக் கவனித்துப் பதிவு செய்வது என்பது வெகுமக்கள் ஊடகங்களுக்கு இன்றுவரை கைகூடவில்லை. மீனவர்களும் கடற்கரையும் திரைப்படங்கள் கட்டியெழுப்பியிருக்கும் மாயப் பிம்பங்களாகவே வெகுமக்களால் பார்க்கப்படுகின்றன. மீனவர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்பதான முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரியக் கடலோர மீனவர்களின் துயரம் நிறைந்த வாழ்க்கையானது பொதுப்பரப்பில் போதிய அளவு கவனப்படுத்தப்படுவதில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை விசை மீன்பிடிப் படகில் ஆழ்கடலுக்குச் சென்றிருந்தவர்களில் ஒரு மீனவர், அடையாளம் தெரியாத நபர்களால் சித்திரவதைச் செய்யப்பட்டுக் கால்கள் கட்டப்பட்ட நிலையில் நடுக்கடலில் தூக்கியெறியப்பட்டார்.

மார்ச் 23, 2007இல் ஒன்பது மீனவர்களுடன் ஆழ் கடலுக்குப் புறப்பட்டுப்போன குமரி மாவட்ட சின்னத்துறையைச் சார்ந்த விசை மீன்பிடிப் படகு, அடையாளம் தெரியாத நபர்களால் கண்மண் தெரியாமல் சுடப்பட, குண்டுபட்டும் நீரில் தவறி விழுந்தும் ஐவர் மரணம் எய்தினர். இம்மீனவப் படுகொலையை நிகழ்த்தியதாகக் கருதப்படும் 'மரியா' என்னும் சிங்களவர் படகை இந்தியக் கடலோரக் காவல் படை கைதுசெய்து கியூ பிராஞ்சிடம் ஒப்படைத்தது. விசாரணையில் கொலைக்கும் படகுக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்ததாக கியூ பிராஞ்ச் சொன்னது.

மீனவர் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கக் குமரி மாவட்டக் கடலோர மீனவக் கிராமங்கள் 2007 ஏப்ரல் 2 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னே பெருந்திரளாகக் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தின. ஏப்ரல் 3இல் ஆளுங்கட்சிக் கூட்டணியினர் நடத்திய 'பந்த்' முழு வெற்றிபெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானபோதும் இந்த 'பந்த்' வெறும் அரசியல் நாடகம் என்ற புரிதலே மீனவர்களிடையே நிலவுகிறது.

உயிரிழந்த சின்னத்துறை மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம், உறவினர்களுக்கு வேலை என்ற அரசின் அறிவிப்புகளில்கூட முழு நேர்மையைக் காண இயலாமல்போகிறது. குமரி மீனவர்கள்மீது அரசு காட்டியிருக்கும் அக்கறையைத் தினமும் ஜீவமரணப் போராட்டம் நடத்தும் இராமேஸ்வரம் மீனவர்கள்மீது காட்டாதது குறித்த கேள்வி எழவே செய்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க, மார்ச் 6இல் கோடிமுனையைச் சார்ந்த பத்துப் பேர் மற்றும் பன்னிரெண்டு மீனவர்களுடன் கேரள சக்திகுளங்கரையிலிருந்து புறப்பட்டுப் போன விசை மீன்பிடிப் படகு ஏப்ரல் 11இல் தலைமன்னாரில் சிறைபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.

கோடிமுனை மீனவர்கள் கிளம்பிச் சென்ற சில நாள்களுக்குப் பின்னர் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வராத காரணத்தால், அவர்கள் கதி என்னவாயிற்று என்றறியாத பொது மக்களும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களும் குமரி மீனவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம், புலிகளுக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்களையும் இந்திய அரசையும் திருப்பிவிட இலங்கைக் கடற்படைச் சதி செய்திருக்கலாம், இந்திய-இலங்கை நல்லுறவைத் தவிர்க்கப் புலிகள் இவ்வேலை செய்திருக்கலாம் என்பன போன்ற ஊகங்களை உலவவிட்டன.

நடுக்கடலில் ஐந்து பேர் மரணமடைந்தும் கடலுக்குப் போன பன்னிரெண்டு மீனவர்கள் கதி என்னவாயிற்று என்று தெரியாத சூழலிலும்கூடத் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கடற்கரைப்பக்கம் வரவில்லை. மீன் வளத்துறை அமைச்சகம் எதையுமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. கடற்கரை உளவியலைக் கரைத்துக்குடித்த அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மீனவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கடல்போல் பொங்கியெழுந்தாலும் மறுகணம் காயல்போல் அமைதியாகிவிடுவார்கள் என்பதை உணர்ந்தவாறு வாக்கு வங்கிக்குச் சேதாரமில்லாமல் நடந்துகொண்டனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் இராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழகக் கடற்கரை மாவட்ட மீனவர்களுக்கு நடுக்கடலில் நேர்ந்த மரணங்கள், வன்கொடுமைக் கொள்ளைகள், காணாமல்போன நிகழ்வுகள் இலங்கைப் படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை நடத்திய கைதுகள் என்று எல்லாமுமாகச் சேர்ந்து முந்நூறை மிஞ்சக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

ஏறக்குறைய இந்தியத் தீபகற்பத்துக்கும் இலங்கைத் தீவுக்கும் இடையே பன்னிரெண்டு கடல்மைல் இடைவெளி இருக்கிறது. குமரி மாவட்டக் கடலோரக் கிராமங்களைச் சார்ந்த 36,000 பேர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபட்டிருப்பதால் தொழில்நெரிசல், மீன்வளப் பற்றாக்குறை காரணமாக இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் இடம் பெயர்ந்து மீன் பிடிக்கின்றனர். பல்வகை அதிநவீன மீன்பிடி நுட்பங்களைக் கையாளும் இவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலில் ஈடுபடுவது தவிர்க்க இயலாதது என்பதால் பன்னாட்டுக் கடற்சட்ட முறைமைகளின்படி ஏறக்குறைய ஆறு கடல்மைல் அளவிலிருக்கும் கடல் எல்லைகளை இந்திய மீனவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தாண்டிவிடுகின்றனர். மேலும், ஆழ்கடலில் விசைப்படகு பழுதுபட்டாலோ எரிபொருள் தீர்ந்துவிட்டாலோ நீரோட்டங்களின் திசையில் படகுகள் அடித்துச் செல்லப்படுவதும் அண்டைநாட்டுக் கடற்கரைகளில் ஒதுங்குவதும் இயல்பு. இந்திய மீனவர்கள்போல் இலங்கை மீனவர்களும் எல்லைதாண்டும் நிகழ்வுகள் உண்டு என்றபோதும் இலங்கைப் படையினர் இந்திய மீனவர்களுக்கு இழைக்கும் வதைகள் இலங்கை மீனவர்களுக்கு இந்தியப் படையால் இழைக்கப்பட்டதாக எந்தச் செய்தியும் இதுவரை வெளியானதில்லை. இந்திய-இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் இருவேறு விதங்களில் கையாளப்படுகிறார்கள் என்றால் எங்கேயோ தவறு நிகழ்வதை உணர முடிகிறது.

கோடிமுனை மீனவர்கள் காணாமல்போன செய்திகிடைத்தபின் மத்திய அரசு இலங்கை அரசைத் தொடர்புகொண்டபோது, மீனவர்கள் கைதுசெய்யப்படவில்லை என்ற தகவலே கிடைத்தது. இலங்கையில் சிறைபடும் இந்திய மீனவர்கள் குறித்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களே எப்போதும் இலங்கை அரசால் தரப்படுவதாக மீனவர் தரப்பில் கூறப்படுகின்றது. மேலும், கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கைக் கடற்படை குறைந்தபட்சம் 150 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கும் எனவும் 50க்கு மேற்பட்ட இழுவலை விசைப் படகுகளை மூழ்கடித்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்திய மீனவர்கள் பாகிஸ்தான், இலங்கை எல்லைப் பகுதிகளில் வதைபடுவது போன்றே இந்தியக் கடலோரக் காவல் படையினராலும் வதைக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நடுக்கடல் படுகொலைகளும் கொள்ளையிடுதலும் சித்திரவதையும் சிறை பிடிப்பும் மட்டுமல்ல மீனவர் துயரங்கள்.

சேதுக் கால்வாய்த் திட்டத்தால், ஐநூறுக்கும் மேற்பட்ட மீனினங்கள், 3,600க்கும் மேற்பட்ட அரிய கடல் தாவர, விலங்கினங்கள் வாழும் 10,500 சதுர கிலோ மீட்டர் மன்னார் வளைகுடாப் பரப்பிலுள்ள அரிய பவளப் பாறைகள், கடற்கோரைகள், 21 சிறு தீவுகள் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது. மேலும், இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் தென் மாவட்ட மீனவர்களுக்கு மாற்றுத் தொழிலாகத் தமிழக அரசு கூறும் பன்னாட்டு நிறுவனமான பெப்சியின் கடற்பாசி வளர்க்கும் திட்டத்தின் கப்பாஃபெகஸ் அல்வாரெஸ் எனும் பாசியினம் பார்த்தீனியம் நச்சுச் செடி போன்று கடலோரத்திலும் சூழலியல் சேதத்தை ஏற்படுத்தும் என்னும் ஐயம் நிலவுகிறது. கல்பாக்கம் அணுவுலைப் பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை; அணுவுலைக் கொதிகலன்களிலிருந்து வெளியேறும் கொதிநீரில் செத்த மீன்களைச் சேகரித்து வாழ்வைக் கழிக்கின்றனர். ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான கண்டனக் குரல்கள் அமுக்கப்பட்ட சூழலில், அந்நிறுவனம் சுற்றுச்சூழல் பேணலுக்காகவும் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் விருதுகளை வாங்கிக்குவிக்கும் செய்தி மீனவ நெஞ்சங்களைத் துயரப்படுத்துகிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் வருடத்தில் 90 நாள்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்தச் சொற்ப நாள்களில் நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள் முறைவைத்துக் கடலுக்குப் போகின்றனர்.

அரசுகளின் பாராமுகத்தால் கடற்கரை நிலம் சார்ந்த பிரச்சினைகளும் தீவிரமாகிக்கொண்டே வருகின்றன. மீனவப் பெண்கள் கடற்பாசிகளைச் சேகரித்து உலர வைத்துச் சொற்ப விலைக்கு விற்றுக் காலம் தள்ளுவதே பல மீனவக் குடும்பங்களின் நடப்பு நிலையாக உள்ளது. உலகமயமாதலின் ஆக்டபஸ் கரங்களைத் தமிழ்நாட்டுக் கடற்கரையில் தெளிவாகக் காணமுடிகிறது. வளர்ச்சித்திட்டங்கள், பண்ணை விடுதிகள், பெருந்தொழில் சுற்றுலா என்ற பெயரில் மீனவர்கள் பல நூறு ஆண்டுகளாகச் சொந்தம் கொண்டாடிப் பேணிக் காத்து வந்த நிலங்களிலிருந்து இடம்பெயர்க்கப்படுகிறார்கள். எண்ணூரில் அனல்மின் நிலையத்தினால் நெருக்குண்ட மீனவக் குடியிருப்புகள் துறைமுக விரிவாக்கத்தினால் மேலும் நெருக்கடிக்கு ஆளாகின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால், கடல்சார் சமூகங்களின் வாழ்வாதாரமும் வாழிடங்களும் பல வழிகளில் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் கடலிலும் கழிமுகங்களிலும் 2.6 லட்சம் பேர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மீனவச் சமூகங்களில் அரசியல் ஒன்றுதிரட்டல் என்பது சாத்தியப்படாமலே இருக்கிறது. அரசியல் ஒன்றுதிரட்டலை முக்கியமாகக் கொண்டே தமிழகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியும் வளர்ச்சியும் கடந்த சில ஆண்டுகளில் சாத்தியமாகியிருக்கின்றன. அரசியல் ஒன்றுதிரட்டலால் ஆட்சியாளர்கள்மீது ஏற்படுத்தப்படும் அரசியல் நிர்ப்பந்தங்கள் மட்டுமே மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்வு நோக்கி முடுக்கும் என மீனவ ஆர்வலர்கள் நம்புகின்றனர். நிலம்சார்ந்த புரிதல்கள் மட்டுமே கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இந்தப் பிரச்சினைகளின் முழுப் பரிமாணமும் புரிவது கடினமே.

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் போவது, கரைதிரும்புவது குறித்த தகவல்களைத் தொடர்புடைய மீன்துறை அதிகாரிகளிடம் முறையாகப் பதிவுசெய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை மீனவர்கள் தரப்பில் இன்னும் முழுமையாகக் கடைபிடிக்கப்படவில்லை. காணாமல்போகும் மீனவர்களைத் தேடுவதில் இது ஒரு சிக்கல். இது களையப்பட வேண்டும். ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையில், 50 மீட்டர் ஆழத்திற்கு அப்பாலிருக்கும் மீன்வளத்தை அறுவடை செய்வதற்கு இந்திய விசை மீன்பிடிப் படகுகளுக்கு வழிகாட்டவும் பாதுகாப்பு தரவும் தாய்க் கப்பல்களை இந்தியா அனுப்ப வேண்டும் என்ற இந்திய மீன் அளவைதள ஆய்வறிக்கைக்கு மத்திய அரசு வகுத்துள்ள மீன்பிடிக் கொள்கைகள் உதவிகரமாக இல்லை; இக் கொள்கை மாற்றப்படவேண்டும்.

இந்தியாவின் கடலோர மாநிலங்கள் தனித்தனியாகக் கடல் மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டம் (Marine Fishing Regulation Act) இயற்றி அமல்படுத்திவருகின்றன. இவை 12 கடல்மைல் எல்லைக்குள் மட்டுமே செல்லு படியாகும். பன்னிரண்டு கடல்மைல்களுக்கு உட்பட்ட, அப்பாற்பட்ட பகுதிகள் என்பதான மத்திய அரசின் இரட்டை அணுகுமுறையும் மாநிலந்தோறும் நிலவும் மாறுபட்ட கடல்மீன்பிடிச் சட்டங்களும் மீனவர்களுக்குப் பிரச்சினையாகவே இருக்கின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு கடல் சட்டம் (Central Marine Law) இதற்கு ஓரளவு தீர்வு தரமுடியும். கடல் எல்லைகளைக் கண்டறியும் விதமாக, இந்தியக் கடல் எல்லைகளில் ஒளிரும் மிதவைகளை (Light Buoys) நிறுவ வேண்டும். மீனவர்கள் கடலோரக் காவல் படையினர் அல்லது அண்டைநாட்டுப் படையினரால் சிறைபிடிக்கப்படும் வேளையில் எப்படி நடந்துகொள்வது, நடுக்கடலில் எதிர்பாராமல் பேரிடரில் சிக்கிக்கொள்ளும்போது படகு பழுதுபட்டு நீரோட்டத்தின்வாக்கில் அடித்துச் செல்லப்படுகையில் செய்ய வேண்டிய அவசரகாலத் துரிதத் தகவல் தொடர்பு முறைமைகள் என்னென்ன என்பவை பற்றிய கடற்கல்வி மீனவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மார்ச் 29 (2007) படுகொலை இந்தியக் கடல் எல்லைக்குள் நிகழ்ந்திருக்கிறது என்பது மத்திய, மாநில அரசுகளின் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இப்படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். கடந்த ஆண்டுகளில் தென்மாவட்ட மீனவர்களுக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்களை ஆய்ந்தறிந்து உண்மைகளை வெளியே கொண்டுவரும் பணியைப் பன்னாட்டுக் கடல் நீதிமன்றம், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், தேசிய மனித உரிமை ஆணையம் போன்ற முகவங்களிடம் ஒப்படைக்கலாம்.

மீனவர்கள் கடல் உணவு ஏற்றுமதி மூலமாக நாட்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி ஈட்டியும் மதிப்புமிக்க புரத உணவை உள்ளுர்ச் சந்தைகளுக்கு வழங்கியும்வருகின்றனர். காலம் காலமாக மீனவர்கள் ஊதியம் பெறாத கடல் எல்லைக் காவலர்களாக இருந்துவருகிறார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க முயல வேண்டும். அரசியல்வாதிகளால் மீனவர்கள் தவறான திசையில் தூண்டப்படுகிறார்கள். வறுமையும் வன்முறையும் தீவிரவாதத்தைத் தூண்டும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டியது அவசியம். மீனவர்களின் தொழிலுக்கும் கடலோரக் குடியிருப்புகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் கொள்கை அணுகுமுறைதான் அவர்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு தரும்.

தொகுப்பு: செல்லப்பா

கோடிக்கரை மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்த தமிழக அரசியல்வாதிகளின் கருத்துகள் மீனவர்களைக் குழப்புவதாக உள்ளது.

விடுதலைப் புலிகள் ஆதரவுத் தலைவர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் புலிகளுக்கு மீனவர் கடத்தலில் தொடர்பில்லை என்று கூறியிருக்கும் அதே தருணத்தில் அரசுத்தரப்பின் விளக்கம் வேறு மாதிரி உள்ளது.

மரியா (மார்ச் 29 அன்றைய மீனவத் தாக்குதலில் தொடர்புள்ளதாகப் பின்னர் கண்டறியப்பட்டது) என்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தவித்த ஆறு விடுதலைப் புலிகளின் வாக்குமூலத்தின்படி, மீனவக் கடத்தலில், படுகொலையில் (மார்ச் 29, 2007) விடுதலைப் புலிகளின் தொடர்பு அம்பலமாகியுள்ளது என அரசுத் தரப்பு கூறுகிறது.

கடத்தலில் தொடர்பு உடையவர்கள் யாராக இருப்பினும், மீனவர்கள் எந்தவிதப் பாதிப்புமின்றித் திரும்ப வேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு.

ஆதாரம்: The New Indian Express, 20.5.2007

 

பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்:

தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்காகக் கூட்டு ரோந்து மேற்கொள்ளும் இலங்கையின் யோசனையை இந்தியா ஏற்கக் கூடாது.

கிழக்குக் கடலோரப் பாதுகாப்புப் படைத் தலைமையின் கீழ், மன்னார் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் ரோந்து செல்வதற்காகத் தூத்துக்குடியில் ஹெலிகாப்டர் வசதியுடன்கூடிய ரோந்துக் கப்பலை நிறுத்திவைக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் அதிவிரைவு படகுகளுடன்கூடிய கடலோரக் காவல்படை நிலையம் அமைக்க வேண்டும்.

கடல்பகுதியில் மீனவர்களுடன் தொடர்புகொள்வதற்காக மாநில மீன்வளத் துறை கொண்டுவரும் திட்டத்துக்கு 55 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கைவிடும்படி இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

நன்றி: தினத்தந்தி 04.04.07

உள்ளடக்கம்

Google Ads.....

Google