அ.
முத்துலிங்கம்
இந்த முறை புதுவருடம் பிறந்தபோது எனக்கு மூன்றே மூன்று வாழ்த்துகள் வந்தன. என்
வாழ்நாள் முழுக்கச் சேர்த்த நண்பர்களின் தொகை இப்பொழுது மூன்றிலே வந்து நின்றது. ஒரு
நண்பர் மின்னஞ்சலில் வாழ்த்து அனுப்பியிருந்தார். அது சுற்றுநிருபம்போல மேலும்
முப்பது பேருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அடுத்த நண்பர் அதுகூடச் செய்யவில்லை. ஒரு
கொழுவியை (link) அனுப்பியிருந்தார். நான் அதைச் சொடுக்கினால் என் வாழ்த்து அட்டை 'கிணிங்'
என்னும் சத்தத்துடன் திறந்து வாழ்த்துச் சொல்லுமாம். நான் அதற்குள் போகாமல் வெளியே
நின்று அதை நீக்கினேன். மூன்றாவது வாழ்த்து மின்னஞ்சல் வெங்கட் சாமிநாதனிடமிருந்து
வந்தது. எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து என்னை நினைத்து வாழ்த்து
அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்துடன் ஒரு கேள்வியும் கேட்டிருந்தார். 'நீங்கள்
ஈழத்தில் புதுவருடம் கொண்டாடுவீர்களா?'
நான் சிறுவனாய் இருந்தபோது எனக்குப் பிடித்த கொண்டாட்டம் பொங்கல்தான். அன்றுதான்
பொங்கிப் படைத்து உண்டு மகிழ்வோம். சிறுவர்களுக்குச் சீனவெடி, வாணம், பூந்திரி
என்று வகைவகையாகக் கிடைக்கும். தீபாவளியில் நாங்கள் வெடிப்பது இல்லை; புது
உடுப்போடு சரி. புதுவருடம் எங்களுக்குப் பிடித்ததற்கான காரணம் அதிகாலை முழுகிப்
புத்தாடை அணிந்த பிறகு கிடைக்கும் 'கைவியளம்.' வருடத்தில் ஒருமுறை சிறுவர்களாகிய
நாங்கள் காசு பார்ப்பதென்றால் அது அன்றுதான்.
பகல் வேளையாயிருந்தாலும் ஒரு நல்ல நேரம் பார்த்து ஐயா குத்து விளக்கைக்
கொளுத்திவைத்து அமர்ந்திருப்பார். ஒரு தாம்பாளத்தில் காசு தாளாகவும் சில்லறையாகவும்
அடுக்கிப் பக்கத்தில் ஒரு கட்டு வெற்றிலை, பூக்கள், நெல், தானியம் என்று
பரப்பியிருக்கும். ஐயா வெற்றிலையில் காசு, பூ, நெல் வைத்து மடித்துக் கொடுப்பார்.
ஒவ்வொரு வரும் வந்து வாங்கிச் செல்வார்கள். ஐயாவின் 'கைவியளம்' நல்ல அதிர்ஷ்டத்தை
வருடம் முழுக்கத் தரும் என்று நம்பினார்கள். எல்லோருக்கும் கொடுத்து முடிந்த பிறகு
எங்கள் முறை. எனக்கு 25 காசு கிடைக்கும்; என் தம்பிக்கும் 25 காசு. வருடா வருடம்
எங்கள் உயரத்திலும் வயதிலும் எடையிலும் மாற்றமிருந்தாலும் காசில் மாற்றமிருக்காது.
வருடப் பிறப்பில் இன்னொரு விசேடம் போர்த் தேங்காய் அடிப்பது. மாதக் கணக்காகக்
கிணற்று நீரில் ஊறவைத்து வலுவூட்டப்பட்ட தேங்காய்கள் எல்லாம் அன்று வெளியே வரும்.
எங்கள் வீட்டு வீதியில்தான் போர் நடக்கும். நாணயத் தேர்வு ஒன்றும் கிடையாது.
முதலில் ஒருவர் போர்த் தேங்காயை நெட்டுக் குத்தாக வைக்க, மற்றவர் அதை அடிப்பார்.
அடுத்து மற்றவர் நிறுத்த முதலாமவர் அடிப்பார். யாருடைய தேங்காய் முதலில் உடைகிறதோ
அவர் தோற்றுப்போனவர் ஆவார்.
எங்கள் வீதி சாதனைக்காரன் தங்கராசா. ஒரு முறை தங்கராசா எல்லாத் தேங்காய்களையும்
அடித்து நொறுக்கிவிட்டு இனி வெல்வதற்குத் தேங்காய் இல்லாமல் நின்றான். அப்பொழுது
பார்த்து வழியில் தேவசகாயம் போனான். அவன் கிறிஸ்தவப் பையன். எங்கள் பள்ளியில்
படித்துப் பிறகு படிப்பைப் பாதியில் விட்டவன். ஓர் இறுக்கமான கால்சட்டையும் இனிமேல்
கிழிவதற்கு இடமில்லாத ஒரு சேர்ட்டும் அணிந்திருந்தான். 'உன்னிடம் தேங்காயிருக்கா?'
என்றான் தங்கராசா. அவன் கால்சட்டைப் பைக்குள் கையைவிட்டு ஒரு சின்னத் தேங்காயை
வெளியே எடுத்துக்காட்டினான். ஆனால், விளையாடச் சம்மதிக்கவில்லை. காசுக்கு
விளையாடுவதற்கு உடனேயே ஓம்பட்டான். தங்கராசாவிடம் கைவியளக் காசு ஐம்பதுசதம்
இருந்தது. தேவசகாயமும் தன் காசைக் காட்டினான்.
முதலில் தேவசகாயம் தேங்காய் வைக்க, தங்கராசா அடித்தான். அது சறுக்கிக்கொண்டு போனது.
இப்பொழுது தேவசகாயத்தின் முறை. தேங்காயை நல்ல வளம் பார்த்து ஒரு கோணத்தில்
நிறுத்தினான். இரண்டு கால்களையும் அகட்டிக்கொண்டு, தன் தேங்காயின் அடிப்பக்கம்
இறங்குவதுபோலக் கண நேரம் கோணம் சரி பார்த்தான். கண்மூடித் திறப்பதற்குள் இடிபோல ஓர்
அடி. தங்கராசாவின் காய் சிதறியது. தேவசகாயம் 50 காசை வாங்கிக்கொண்டு வந்தவழியே
போனான். அன்றுதான் முதல் பாடம் படித்தேன். போர்த் தேங்காயில் வெல்வது என்பது
முற்றிலும் தேங்காயில் இல்லை, அடிப்பவனின் சாமர்த்தியத்தைப் பொறுத்தே இருக்கிறது.
பிறகுதான் கேள்விப்பட்டோ ம், அன்று தேவசகாயம் ஒரு சின்னத் தேங்காயை வைத்துக்கொண்டு
நல்ல காசு உழைத்தான் என்று.
அதற்கு முதல் வருடமோ அடுத்த வருடமோ ஞாபகமில்லை. நாங்கள் ஒழுங்கையில் போர்த்
தேங்காய் அடித்து விளையாடிக்கொண்டிருந்தபோது, பத்மா என்பவள் ஒரு தேங்காயை
நெஞ்சுக்கு மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்தாள். அவள் எங்கள் வீட்டுக்கு
முன்வீட்டில் வசிப்பவள். அந்த வீட்டில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பெண்கள். இவள்
கடைக்குட்டி. இவள் சிறுமியல்ல; முழுப் பெண்ணும் அல்ல. ஆகவே, இரண்டு பருவத்துக்கான
அனுகூலமும் அவளுக்கு உண்டு. அவளுடைய உடம்பு நாடியிலே ஆரம்பித்து இடுப்பிலே
முடிந்ததால் அனைத்துக் கண்களும் அங்கேயே சுழன்றன. அவள் கொண்டுவந்த தேங்காய் வயிறு
பெருத்து உருண்டையாகக் காணப்பட்டது. அது போர்த் தேங்காய் வம்சமே அல்ல.
சமைப்பதற்குக்கூடக் கத்தியால் உடைக்கத் தேவையில்லை. 'இதை உடைக்கட்டாம்' என்று
நுங்கு குடிப்பதுபோல உறிஞ்சி உறிஞ்சிச் சொன்னாள். இரண்டு கைகளையும் முன்னால்
கோர்த்துக்கொண்டு வகுப்பிலே வாய்ப்பாடு ஒப்பிப்பதற்கு நிற்பதுபோல நின்றாள்.
ஆடியபாதம் தேங்காயை அடிப்பதற்குச் செய்த ஆயத்தங்களைப் பார்த்து நாங்கள்
திகைத்துவிட்டோ ம். முதலில் சேர்ட்டைக் கழற்றிக் கிளுவையில் தொங்கவிட்டான். அவன்
கேசம் குளிர் காலத்தில் கட்டிப்பதமாகும் தேங்காய் எண்ணெய் பூசி வாரப்பட்டிருந்தது.
சீப்பு கிழித்த கோடுகளைப் பத்தடி தூரத்தில் இருந்துகூட யாரும் எண்ணிவிடலாம்.
அவனுடையகையும் திரண்ட புஜமும் இந்தப் போருக்கு அவசியமானதாகவே தெரியவில்லை.
கொடுப்புப் பல் தெரியச் சிரித்துக்கொண்டு, கறுத்து மினுங்கும் தேங்காயின் கூர்ப்
பாகத்தால் ஓங்கி அடித்ததும் பத்மாவின் தேங்காய் காத்திருந்ததுபோலப் பிளந்தது.
அந்தப் பெண் ஆரோ உயிரை எடுத்ததுபோல அழுதுகொண்டு உள்ளே ஓடியது. ஆடியபாதம்
ஓநாயொன்றின் ஊளைபோலப் பெரிதாகச் சத்தம்போட்டுச் சிரித்தான்.
சிறிது நேரம் கழித்துப் பத்மா தாழ்த்திய கண்களுடன் வெளியே வந்து 'அம்மா உடைந்த
தேங்காயைக் கொண்டரட்டாம்' என்றபோது நாங்கள் சிரட்டையைத் தவிர மற்ற எல்லாத்தையும்
சாப்பிட்டு விட்டிருந்தோம். ரோட்டுச் சண்டைக்கும் வசைக்கும் பேர்போனவர் அந்தத்
தாய். அவர் வெளியே வந்து வசைபாட ஆரம்பித்தால் பள்ளிக்கூடத்தில் பத்து இலக்கிய
வகுப்புகளில் கற்றுக்கொள்ள முடியாத கற்பனை எல்லைகளை ஒரே நிமிடத்தில்
கற்றுக்கொண்டுவிடலாம். ஆடியபாதம் என்ற பெயரில் இருந்து ஆரம்பித்தார் அந்த அம்மா.
'பாதம்' என்பதை நீக்கிவிட்டு இன்னும் பொருத்தமான ஓர் உடலுறுப்பைச் சேர்த்துவைத்துப்
பேசினார். பிறகு அவனுடைய தாயையும் தகப்பனையும் திட்டித் தீர்த்தார். இறுதியில்
'உன்ரை கொப்பனிட்டைப் போய்ச் சொல்லடா. உன்ரை இளங்கொடியைத் தாட்ட இடத்தில் கிண்டிப்
பார்க்கச் சொல்லு. உன்ரை மூளையில் பாதி அதோடை போட்டுது' என்றார்.
அழுதுகொண்டு உள்ளே ஓடிய அதே பத்மா சரியாக ஐந்து வருடம் கழித்து ஆடியபாதத்துடன்
ஓடிப்போனாள். அப்பொழுது அவளுடைய இரண்டு அக்காமாருக்கும் மணமாகியிருக்கவில்லை.
பத்மாவின் காதல் போர்த் தேங்காயில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும் என்று பலரும்
ஊகித்தார்கள். அவனுடைய தோள் அழகைக் கண்டு மயங்கினாளா அல்லது ஓநாய்ச் சிரிப்பைக்
கேட்டு மயங்கினாளா என்பதும் தெரியவில்லை. ஒருவேளை அவளுடைய தாயாரின் அசாதாரணமான உவமை
அவளை அவன்பால் ஈர்த்திருக்கலாம்.
அதற்கு அடுத்து வந்த புதுவருடமும் நல்ல ஞாபகமிருக்கிறது. அது மறக்க முடியாதது.
ஏனென்றால் எப்படி யோசித்துப் பார்த்தாலும் அதற்குப் பிறகு வந்த ஒரு
புதுவருடத்தையும் என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அதுவே இன்றும் என்
ஞாபகத்தில் இருக்கும் கடைசிப் புதுவருடம்.
எனக்கும் என் தம்பிக்கும் ஒரு வருட வித்தியாசம்தான். அவன் படிப்பில் கெட்டிக்காரன்.
வகுப்பில் முதல் ஐந்துக்குள் வந்துகொண்டிருந்தவன் கடைசி இரண்டு தவணைகளும் கீழே
இறங்கியிருந்தான். என் விசயம் என்றுமே நல்லாய்ப் போனதில்லை. சோதனை முடிவுகள்
இறங்குமுகமாக இருந்தன. ஐயா தீர்மானமாகச் சொல்லிவிட்டார், இந்தத் தடவை சோதனையில்
நல்லாய்ச் செய்தால்தான் கைவியளம் என்று. ஐயாவின் அகராதிப்படி முதல் ஐந்துக்குள்
வந்தால் போதும். நானும் தம்பியும் விழுந்துவிழுந்து படித்தோம். சில நாள்கள் காலை
நாலு மணிக்கு எழும்பிக் கைவிளக்கைக் கொளுத்திவைத்துப் படித்தோம்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து விதி எனக்கு எதிராகத்தான் வேலைசெய்திருக்கிறது.
அன்றைக்குத்தான் விதி சாதகமாகவும் வேலைசெய்யும் என்பது எனக்குத் தெரியவந்தது. என்
தம்பி வகுப்பில் இரண்டாவதாக வந்திருந்தான். நானும் அந்தத் தவணையில் அதிசயமாக
இரண்டாவதாக வந்திருந்தேன். வாம தேவனை முதல்முறையாக முறியடித்திருந்தேன்.
கைவியளம் நாள் அன்று, ஐயா வெற்றிலையில் பூ, நெல் தானியம், காசு என்று
சுருட்டிவைத்து வழங்கிக் கொண்டிருந்தார். எங்கள் முறை வந்தது. ஐயா வெற்றிலைச்
சுருளை மடித்துக்கொடுத்தார். பிரித்துப் பார்த்தபோது என் கண்களை நம்ப முடியவில்லை.
என் தம்பிக்கு ஒரு ரூபாய்க் குற்றி. எனக்கும் ஒரு ரூபாய்க் குற்றி. அவ்வளவு பெரிய
செல்வத்தை வைத்து நான் என்ன செய்வது? திட்டம்போடத் தொடங்கினேன்.
என் தம்பி எனக்கு நேர் எதிராக இருப்பான். அவன் திட்டமெல்லாம் போடுவதில்லை. கையில்
காசு கிடைத்தால் அதைச் சாப்பாடாக மாற்ற வேண்டும். அதுவே அவன் லட்சியம். அன்று அவன்
நேராகக் கடைக்கு ஓடிப்போய் அவனுக்கு வேண்டிய தின்பண்டங்கள் அத்தனையையும்
வாங்கினான். தும்புமிட்டாய், ஐஸ்பழம், இனிப்புக் கடலை. ஒரு வாரத்தில் அவ்வளவு
காசுக்கும் தின்று முடித்துவிட்டான்.
திட்டம்போட்டு முடிவதற்கே எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. எங்கள் கிராமத்தில்
நவரத்தினம் கடைதான் பல்பொருள் அங்காடி. அங்கே பலசரக்கு விற்பார்கள்; பள்ளிக்கூடப்
பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் கிடைக்கும். உள்ளங்கையில் வைக்கக்கூடிய
ஒரு மஞ்சள் நிறக் கோழிப் பொம்மை அங்கே இருந்தது. அதைப் பிடித்து அமத்தினால் அது
செட்டை விரித்து முட்டை இடும். அமத்த அமத்த அடுக்கடுக்காக ஐந்து முட்டைகள் போடும்.
மறுபடியும் முட்டைகளைக் கோழியின் முதுகில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே தள்ள வேண்டும்.
ஓர் அட்சயப் பாத்திரம் போல முட்டைகள் வெளியே வந்துகொண்டேயிருக்கும். அதன் விலை
சரியாக ஒரு ரூபாய். நீல நிறத்திலும் ஒரு கோழி இருந்தது. நான் பல ஆலோசனைகளுக்குப்
பின்பு மஞ்சள் நிறக் கோழியை வாங்குவதென்று முடிவுசெய்தேன்.
அடுத்த நாள் ஒரு முழு ரூபாயை எடுத்துக்கொண்டு போய்க் கடைக்காரரிடம் நீட்டினேன்.
அவர் காசை வாங்கிச் சுண்டிப் பார்த்தார். பிறகு மேசையிலே போட்டு அதன் சத்தத்தைக்
கவனித்துக் கேட்டார். பல்லினாலே கடித்துப் பார்த்தார். அவருடைய முகம் ஏனோ
சம்மதமாகவில்லை. காசு செல்லாதென்று திருப்பித்தந்துவிட்டார். அதை வாங்கிக்கொண்டு
ஐயாவிடம் ஓடினேன். அவரும் காசைச் சுண்டிப் பார்த்தார்; கடித்துப் பார்த்தார்.
'அப்படியா கடைக்காரன் சொன்னான். நான் அவனுடன் பேசுறன்' என்று சொல்லியபடியே காசை
மடியிலே செருகிக்கொண்டார்.
அன்றிலிருந்து நான் ஐயாவுக்குக் கரைச்சல் கொடுக்கத் தொடங்கினேன். 'சரி, நாளைக்குப்
பார்க்கலாம்' என்பார். ஒவ்வொரு நாளாகக் கழிந்துகொண்டிருந்தது. எனக்கு மனம் பதறியது;
ஐயாவோ கண்டுகொள்ளவில்லை. என்னுடைய காசு திரும்புமா என்ற சந்தேகம் வேறு பிடித்தது.
செல்லாக் காசை எடுத்துக்கொண்டு நல்ல காசைத் தருவதில் என்ன பிரச்சினை. என்னுடைய
தம்பி ஒரு முழு ரூபாய்க்குத் தின்று தீர்த்துவிட்டானே.
ஒரு நாள் கடையில் மஞ்சள் கோழியை விற்றுவிட்டார்கள். எனக்கு நெஞ்சு படக்கென்றது.
கடைக்காரரிடம் நீலக் கோழியை வேறு ஒருவருக்கும் விற்கவேண்டாம் என்று கெஞ்சிக்
கேட்டுக்கொண்டேன். அவரும் வாக்குறுதி தந்தார். அவர்மேல் நான் வைத்த நம்பிக்கை என்
சொந்த ஐயாமேல் எனக்கு உண்டாகவில்லை. அன்று ஐயாவிடம் காசு கேட்டபோது அவர் 'என்ன
காசு?' என்றார். எனக்கு வயிறுவரைக்கும் பகீர் என்றது. நான் எனது விருத்தாந்தத்தை
ஆதியோடந்தமாக ஐயாவுக்கு இன்னொரு முறை சொல்ல வேண்டிநேர்ந்தது.
ஒரு வாரம் போய், இரண்டு வாரம் போய் ஒரு மாதமும் கழிந்தது. ஐயாவிடம் காசு பெயரும்
வழியைக் காணவில்லை. ஐயாவின் பதில் 'இப்ப இல்லை', 'நாளைக்குப் பாப்பம்', 'எவ்வளவு
காசு' என்று பல தினுசில் இருந்தது. ஒரு நாளாவது அவருடைய இரண்டு தொங்கும் கைகளுக்கு
நடுவில் இருக்கும் மடியைப் பிரித்து என்னுடைய காசை எடுத்து விட்டெறியலாம் என்பது
அவருக்குத் தோன்றவில்லை.
திருவீழிமிழலை ஸ்தலத்துக்குத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சேர்ந்தே
போனார்கள். சேர்ந்தே பதிகம் பாடினார்கள். மறுநாள் காலை நாவுக்கரசருக்கு ஒரு
படிக்காசு கிடைத்தது. சம்பந்தருக்கும் ஒரு படிக் காசு கிடைத்தது. நாவுக்கரசருக்குக்
கிடைத்தது நல்ல காசு. சம்பந்தருக்குக் கிடைத்தது செல்லாக் காசு. கடவுள் ஏமாற்றியதை
என்னால் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், என்னுடைய ஐயா ஏமாற்றியதை மட்டும்
என்னால் நம்பவே முடியவில்லை.
வெங்கட் சாமிநாதனுடைய மின்னஞ்சல் கிடைத்தபோது, எனக்கு அந்தப் புதுவருடமே
ஞாபகத்துக்கு வந்தது. அதற்கு அடுத்து வந்தவை ஞாபகத்திலிருந்து அழிந்துவிட்டன. அந்த
வருடத்தையும் அந்த ரூபாயையும் என்னால் மறக்க முடியவில்லை. அடுத்த புதுவருடம்
வந்தது. அதற்கு அடுத்ததும். அடுத்ததும். என்னுடைய ஒரு ரூபாய் திரும்பக்
கிடைக்கவில்லை. என்றென்றைக்குமாக.
உள்ளடக்கம்