அசோகமித்திரன்
இது வெளிவரும்போது நகுலன் மறைந்து ஒன்றரை மாதங்கள் ஆகியிருக்கும். உணர்ச்சியைப்
பிரதானமாகக் கொண்ட இரங்கல் கட்டுரைகள் நிறையப் பிரசுரமாகிவிட்டன. நகுலனுடைய சில
நாவல்கள், சில கவிதைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும் விமர்சனபூர்வமாக அதிகம்
எழுதப்பட்டதாகக் கூற முடியாது.
ஜி. நாகராஜன் மறைந்தபோதும் ஏறக்குறைய இதே மாதிரியான சூழ்நிலை நிலவியது. அவ்வளவு
உணர்ச்சி பூர்வமாக இரங்கல் தெரிவிக்கப்பட்டாலும் பின்னர் வேறுயாராவது ஒரு கட்டத்தில்
அவரைப் பற்றி இலக்கியப்பூர்வமாக மேற்கோள் எடுத்துக்காட்டப் பட்டதாக எனக்கு
எட்டவில்லை. நகுலன் பற்றியும் அப்படி நேர்ந்தால் வியப்பதற்கு இல்லை.
ஜி. நாகராஜனும் நகுலனும் எழுத்தாளர் என்ற அடையாளத்தையே விரும்பியிருப்பார்கள். தனி
அனுபந்தம்போல அவர்களுக்கு இரங்கல் கட்டுரைகள் வெளியிட்ட பத்திரிகைகளில் சில அல்லது
அவற்றின் ஆசிரியர்கள், அந்த எழுத்தாளர்கள் உயிருடன் இருந்த நாட்களிலும்
இயங்கிக்கொண்டிருந்தார்கள். இப்பத்திரிகைகளும் ஆசிரியர்களும் நாகராஜன் அல்லது நகுலன்
ஆகியோருடைய எவ்வளவு நூல்களுக்கு மதிப்புரைகள் வழங்கி யிருக்கின்றனர். விரிவான
மதிப்புரைகள் வேண்டாம். குறிப்புகளாவது எப்போதாவது வெளிவந்ததா?
இப்போது எப்படித் திடீரென்று துக்கம் தோன்றுகிறது? குறைந்தபட்சம் அந்த
எழுத்தாளர்களை அவர்கள் உயிருடன் இருந்த போது சந்தித்து அவர்களைப் பற்றி
நான்குவரிகள் எழுதியிருக்கலாம். இப்போது ஏன் பக்கம் பக்கமாக இரங்கல்?
நகுலனை நான் 1966 அளவில் முதன் முதலாகச் சந்தித்தேன். அப்போதே அவர் நடந்துகொண்ட
விதம் பிரபலமான எழுத்தாளர் போன்று இருந்தது. அதன் ஒரு காரணம் இன்று தெரிகிறது.
எழுத்து, இலக்கிய வட்டம் இரண்டுமே குறுகிய வட்டத்தில் வெளி உலகைப் பற்றிய சிந்தனை
வருவதே தரக்குறைவு என்ற மனப்பான்மையை வளர்த்தன. குறிப்பாக எழுத்து அப்பத்திரிகை
வட்டத்தில் இல்லாத எழுத்தாளர்கள், அந்த எழுத்தாளர்கள் பெயர் அவ்வப்போது தென்படும்
பத்திரிகைகள் எல்லாம் ஏளனத்துக்குரியவை என்பதை ஓர் இலக்கியப் போக்காகச்
செய்துவிட்டது.
நகுலனிடம் இந்த ஏளனப் போக்கு நிறையவே இருந்தது. ஒரு நல்ல கதை எழுதிவிட்டால் போதுமா?
ஒரு சிறுநாவல் முறையாக எழுதிவிட்டால் போதுமா? பிறரைப் பார்த்து எள்ளிநகைக்கும்போது
'நீ என்ன பெரிதாகச் செய்துவிட்டாய்?' என்ற கேள்வி எழாதா?
நகுலன் எழுதிய முதல் நாவலாகிய 'நிழல்கள்' போல அவருடைய இரண்டாம் குறுநாவலாகிய
'ரோகிகள்' ஒரு தொழில்முறைப் பிரசுரகர்த்தர் மூலம் தான் வெளிவர வேண்டும் என்று
விரும்பினார். நான் அறிந்து அவர் இரு வெளியீட்டாளர்களை அணுகியிருக்கிறார். அந்த
நேரத்தில் அதிகம் பேசப்பட்ட ஓர் எழுத்தாளரின் முன்னுரை இருந்தால் நூல் பிரசுரம்
ஆகிவிடும் என்று நகுலன் நினைத்தார் (இந்த முன்னுரை மயக்கம் இப்போதும் தொடர்கிறது.
எனக்குத் தெரிந்து முன்னுரைக்காக ஒரு பிரதிகூடக் கூடுதலாக விற்பனையாவதில்லை.
முன்னுரை எழுதுபவனையாவது தன் நூலைப் பற்றி அபிப்பிராயம் கூறவைத்துவிட வேண்டும்
என்னும் குரூர எண்ணத்தைக் காரணமாகக் கூறலாம். ஆனால் அப்படிக் கசக்கிப் பிழிந்து
பெற்ற அபிப்பிராயம் செலாவணி ஆவதில்லை). ஓர் எழுத்தாளரே திரும்பத் திரும்ப ஓர்
எழுத்தாளருக்கு முன்னுரை எழுதுவது நகைப்பைத் தான் வரவழைப்பதாக இருக்கும்.
'குருக்ஷேத்திரம்' என்ற தொகுப்பு நூலில் 'ரோகிகள்' ஒரு பகுதி. அந்த நூலை நகுலன்
வேறு எங்காவது அச்சுக்குக் கொடுத்துத் தயாரித்து இருக்கலாம். அவருக்கு விசேஷ
அபிப்பிராயம் இல்லாத நா. பார்த்தசாரதியின் 'தீபம்' அச்சகத்தில் ஏற்பாடு
செய்துகொண்டார். 'தீபம்' அச்சகம் சிறியது. பதினாறு பக்கங்கள் அச்சுக் கோத்தால் உடனே
அச்சிட்டு அந்த அச்சுகளைக் கொண்டுதான் அடுத்த பதினாறு பக்கங்கள் அச்சுக் கோக்க
வேண்டும். 'குருக்ஷேத்திர'த்தில் எல்லாமே நல்லது என்று கூற முடியாது. நகுலனிடம்
நான் கூறிய ஆலோசனை, அவர் எது எழுதினாலும் அதை மறுமுறை படித்துச் சரிசெய்வது
அவசியம். அவருடைய நாவல்களுக்கு நல்ல தொடக்கம் இருக்கும். தொடக்கம்தான் நன்றாக
இருக்கும் என்று சொன்னால்கூடத் தவறில்லை. அவர் என் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.
தன் படைப்புகளில் அதிகம் சிரத்தை காட்டாவிட்டாலும் நகுலன் நல்ல கல்லூரி ஆசிரியராக
இருந்திருக்க வேண்டும். அவர் ஆசிரியராக இருந்தது பற்றிப் பெருமையாகப் பேசின பலரை
நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் மலையாள மொழிக்காரர்கள். நகுலனுடைய
ஆங்கில மொழிப் படைப்புகளில் செய்முறைப் பிழைகள் அதிகம் இராது. பத்திரிகை ஆசிரியர்
சரிசெய்துவிடுவார். 'கும்பகர்ணனின் துயரம்', 'தொழுநோயாளிகள்' முதலிய கவிதைகள்
ஆங்கிலத்தில் நன்றாகவே இருந்தன. தனித்தனியாகப் படித்த அனுபவம் ஒரு தொகுதியாகப்
படித்தபோது கிடைக்கவில்லை. அவருடைய சுயமுனைப்பு ஒரு காரணம். ஒவ்வொருவருக்கும்
அவருடைய உலகம் அவரைச் சுற்றியே இருக்கிறது என்பதில் கருத்து வேற்றுமை கிடையாது.
ஆனால், அதில் எந்த அளவு பிற மனிதர்களுக்கும் இடம் இருக்கிறது என்பது ஒரு முக்கிய
அம்சம். நகுலனின் கவிதைகளில் இதர மனிதர்களுக்கு அதிகம் இடம் கிடையாது. இருப்பதும்
ஏளனம் தோன்ற இருக்கும். பிறரை இவ்வளவு ஏளனத்துடன் பார்க்கும் ஒருவர் தன் சாதனைகள்
என்ன என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
நகுலன் 1980 அளவிலேயே இலக்கியம் குறித்து ஒரு மாதிரி அலட்சியம் கொள்ளத்
தொடங்கிவிட்டார். அவருடைய கடைசி படைப்பு 'வாக்குமூலம்'. இந்த நாவலுக்கும் அற்புதமான
தொடக்கம். ஆனால், ஐம்பது பக்கங்களுக்குள் ஒரு சிதைந்துபோன மனத்தைத்தான் காண
முடியும்.
இலக்கியப் பேராசை கடைசிவரை ஜி. நாகராஜனிடம் இருந்தது. அவருடைய கதைகள்
மொழிபெயர்க்கப்பட்டு நியூயார்க்கர் பத்திரிகையில் வெளிவர வேண்டும் என்று அவர்
1974வரை முயன்றார். நான் இன்னும் இரு ஆண்டுகள் கூடுதலாக முயன்றேன்.
அப்பத்திரிகையிலிருந்து கடிதம் வரும், கதை வராது. எங்கள் முயற்சியை நாங்கள் இருபது
ஆண்டுகளுக்குப் பிறகு செய்திருக்க வேண்டும்.
நகுலனுக்கு அந்த மாதிரியெல்லாம் ஆசைகிடையாது. அவர் அறிந்த சில எழுத்தாளர்களை மட்டம்
தட்ட வேண்டும். என் படைப்பு ஒன்றுக்கு அவர் மதிப்புரை எழுதுவதாகச் சொன்னபோது நான்
விவரம் தெரியாமல் சம்மதம் தெரிவித்துவிட்டேன். மதிப்புரையில் என் படைப்பைவிட நான்
அன்று சம்பந்தப்பட்டிருந்த கணையாழி பத்திரிகைக்காக அநேகமாகத் தினம் நேரில்
சந்தித்து வந்த எழுத்தாளரைத் தாக்கி எழுதியிருந்தார். 'நினைவுப்பாதை' நாவலிலிருந்து
தொடங்கி அவர் தன் சமகால எழுத்தாளர்களைப் பெயர் மாற்றி உயர்த்தியும் தாழ்த்தியும்
எழுதினார். என்று ஓர் எழுத்தாளன் எழுத்தாளனைப் பற்றியே எழுத ஆரம்பிக்கிறானோ அன்று
அவனுடைய கற்பனை மங்கத் தொடங்கிவிட்டது என்று கூறுவார்கள்.
ஆனால், இதையெல்லாம் மீறி நகுலன் அவரைச் சுற்றியிருந்த சிலரை எழுதத்
தூண்டியிருக்கிறார். காசியபன், ஷண்முக சுப்பையா, மா. தக்ஷிணாமூர்த்தி போன்றோர்
நகுலனால் உலகுக்குத் தெரியவந்தார்கள் எனலாம். அவர் பத்திரிகை அங்கீகாரம் விரும்பிய
நாட்களில் அவர் விமரிசனக் கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதியிருக்கலாம். அவருடைய
சகோதரர்கள் அவர்மீது அன்பும் பரிவுணர்ச்சியும் கொண்டிருந்ததை நான் நேரில்
கண்டிருக்கிறேன். பிணைப்புகள், இலக்கியப் பிணைப்புகள் உட்பட, பொறுப்புகளும்
கொணரும். தேர்ந்தெடுக்கும் முடிவு நம்முடையது.
அவருடைய தாயாரின் மறைவுக்குப் பின் அவரைத் தாய்போல் கவனித்துக்கொண்டிருந்தவரையும்
நான் சந்தித்திருக்கிறேன். அப்போது ஏதோ ஒரு வகையில் உலகம் சிலரைப் பாதுகாத்துவரும்
அபூர்வ நிகழ்ச்சியைக் கண்டேன். இல்லாதுபோனால் 86 வயதுவரை ஒரு தனி மனிதர்
வாழ்ந்திருப்பது மிகவும் கடினம்.
நகுலனை நினைக்கும்போது நீல. பத்மநாபனைத் தவிர்க்க முடியாது. நீல. பத்மநாபன் தன்
அசௌகரியங்கள், இழப்புகளைப் பொருட்படுத்தாது நகுலனுக்கு எப்போதும் துணைநின்றார்.
இம்முறை நகுலன் உடல்நலம் குன்றியபோது அவருடைய உறவினர்களும் திருவனந்தபுரம்
சென்றிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
நகுலனை ஏறக்குறைய ஒரு வயோதிக அனாதை என்ற தோற்றம் தரும்படி சமீபத்தில் ஒரு
புகைப்படக்காரர் நிறையப் புகைப்படங்கள் எடுத்து அவற்றைக் காட்சிப்
பொருளாக்கியிருக்கிறார். தன்னைப் பாதுகாக்கவியலாத ஒரு முதியவரைப் புகைப்படம்
எடுத்துப் பெயர்பெற நினைப்பது மிகவும் வருந்தத்தக்கது. நெப்போலியன் தன் குதிரைமீது
வீற்றிருப்பது போன்ற தோற்றம்தான் காணக் கிடைக்கும் ஓவியம். கடுமையான, உறுதியான
தோற்றமுள்ள சர்ச்சிலின் புகைப்படம்தான் உலகோர் பார்க்கக் கிடைக்கும்.
டால்ஸ்டாய்க்கும் தாஸ்தயேவ்ஸ்கிக்கும் முறையான படங்கள் உள்ளன. தமிழ் எழுத்தாளரான
நகுலன் மட்டும் அன்னை தெரஸா விடுதியில் சேர இருப்பதுபோல் காட்சி தர வேண்டும்.
இதையெல்லாம் அறியக்கூடிய நிலையில் அவர் இருந்தாரா?
புதுமைப்பித்தன் மறைந்தபோது நான் தமிழகத்திலில்லை. அவருக்கு முன்னரே கு.ப.
ராஜகோபாலனின் மரணம் நேரிட்டது. ஒரே ஒரு இரங்கல் கட்டுரை கு.ப.ரா.வின் இரட்டை என்று
அறியப்பட்ட ந. பிச்சமூர்த்தி எழுதியது. கல்கி இறந்தபோது ராஜாஜி எழுதுவார் என்று
எதிர்பார்த்தார்கள். கல்கிக்கு எஸ்.எஸ். வாசன் இரங்கல் கட்டுரை எழுதினார்.
துக்கத்தைத் தனிமையில் அழுது தீர்த்துக்கொள்ள வேண்டும். கோஷ்டி அழுகை துக்கமாகாது
என்று ராஜாஜி கூறினார். ஜானகிராமன் இறந்தபோதுதான் கொத்துக் கொத்தாக இரங்கல்
கட்டுரைகள் வெளியிடப்பட்டன. காரணம், பத்திரிகைகளின் பெருக்கம், ஆசிரியர்களின் தன்மை
மாற்றம்.
இந்தச் சூழ்நிலை எனக்கு 'ருடாலி' என்ற திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது.