கி.
நாச்சிமுத்து
நகுலன் என்ற இலக்கியச் சித்தர் மறைந்துவிட்டார், நினைவுப் பாதையைத் திரும்பிப்
பார்க்கிறபோது அவருடனான நாற்பதாண்டு காலத் தொடர்பு என் வாழ்வின் பொருள் நிறைந்த
பாகங்களில் ஒன்று என இப்போது தோன்றுகிறது. வாழ்வில் இலக்கியத்தோடு எள்ளளவும் தொடர்பு
இல்லாத அறிவு ஏழ்மை நிறைந்த பெரும்பான்மையானவர்கள் இடையே இலக்கியமே வாழ்க்கையாக
வாழ்ந்தவர் அவர். இலக்கியம் சிலருக்கு ஊறுகாயளவே இருக்கும். இவருக்கு அதுதான்
தின்னும் சோறும் வெற்றிலையும். அதனால் அதுவே அவருக்கு இரத்தம். எனவே, இலக்கியம்
படைப்பவர்கள், பேச வந்தவர்கள் எல்லோரையும் இரத்த உறவாகக் கருதுகிற நெருக்கத்தை
அவருக்குத் தந்தது. இதனால், தான் சார்ந்த சநாதன சமூகம் தந்த பார்வைகளைக் கடந்த
விரிந்த பார்வையைக் கைவரித்துக்கொள்ள இவரால் முடிந்தது. இலக்கியம் பற்றிப்
பேசுபவர்கள் எல்லாம் அவருக்குக் கூட்டாளிகள்; அப்படிப்பட்ட கூட்டாளிகளில் இருவர்தான்
நானும் காலம் சென்ற கவிஞர் சத்தியமூர்த்தியும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து 1967இல் என் ஈழத்து நண்பர் முனைவர் சி. சத்திய
மூர்த்தியுடன் திருவனந்தபுரம் வந்தபோது ஏற்பட்டது எங்கள் உறவு. சிதம்பரத்தில்
மௌனியோடு உறவாடிவிட்டு வந்த எங்களுக்கு நகுலன் இங்கு இன்னொரு 'மௌனி' ஆனார். அவரைப்
பலமுறை சந்தித்து இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தியுள்ளோம். நான் அன்று கிறுக்கிய சில
புதுக்கவிதைகளைப் படித்துப் பாராட்டி அக்கால நடை, கசடதபற போன்ற பத்திரிகைகளுக்கு
அனுப்பி வெளியிடச் செய்தது என் போன்ற இளைஞருக்கு அன்று எத்தகைய ஊக்கத்தையும்
உணர்ச்சியையும் அளித்திருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம். இலக்கியத்தைப்
பழையது புதியது என்ற வேறுபாடின்றி நுட்பமாகப் பார்க்கிற ஆரோக்கியப் பார்வை,
வளர்வதன் பாத்தியுள் நீர்ப்பாய்ச்சிப் பெரிதுவக்கிற ஆக்கப்பூர்வமான தாய்மை உள்ளம்,
இலக்கியத்தில் பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு பாராத தோழமை உணர்வு இவையே இவரிடம்
எங்களை ஈர்த்த நற்பண்புகள். தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து சற்று விலகி இருக்கும்
திருவனந்தபுரத்தில் தமிழ்ப் புத்தகங்களைப் பத்திரிகைகளைத் தருவிப்பது, படிப்பது,
நண்பர் வட்டத்தை உருவாக்கி அவற்றை விவாதிப்பது என்று இங்கு ஒரு தமிழ் இலக்கிய
உலகைப் படைத்துக் கொண்டிருந்த எழுத்தாளச் சிற்பி, நகுலன் போன்ற வர்களிடம் தமிழ்
மாணவர்கள் ஈடுபாடு கொள்வது இயற்கைதானே.
கல்வி முறை இலக்கியப் படிப்பிற்கு இணையாக அதில் இல்லாத கூறுகளை நிறைவு செய்வதற்கு
நகுலன் போன்றவர்களோடு ஏற்பட்ட உயிரோட்டமான இலக்கியத் தொடர்பு இலக்கிய மாணவர்களான
எங்கள் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்தது.
நகுலன் அந்தக் காலத்தில் சண்முக சுப்பையா என்ற புதுக் கவிஞருடன் இடைவிடாமல்
காணப்படுவார். மலையாளப் பேரகராதித் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த சண்முக
சுப்பையாவுடன் இலக்கிய உரையாடல் நிகழ்த்தத் தினமும் வருவது வழக்கம். அது மாலை ஏழு
மணிவரை நிகழும். பக்கத்தில் மலையாளப் பேரகராதியின் ஆசிரியர் பேராசிரியர் சூரநாட்டு
குஞ்ஞன் பிள்ளை இன்னொரு அறையில் வேலை செய்துகொண்டிருப்பார். பேராசிரியர் ச.வே.
சுப்பிரமணியன், பேராசிரியர் வ.ஐ. சுப்பிரமணியம் என்று எல்லாரும் தங்கள்
ஆராய்ச்சிகளில் இரவு 9 மணிவரை மூழ்கியிருப்பார்கள். எங்கள் அறைகளில் முனைவர் பா.ரா.
சுப்பிரமணியன் (க்ரியா தற்காலத் தமிழ் அகராதி ஆசிரியர்), முனைவர் இரா. இளவரசு,
முனைவர் இரா. பன்னீர் செல்வம் என்று மூத்த ஆய்வாளர்கள் அமர்ந்திருந்த ஆய்வுச்
சூழலில் இருந்து நழுவிச் சென்று நகுலன், சுப்பையாவுடன் இலக்கிய விவாதங்களில்
ஈடுபடுவது எங்கள் வாடிக்கை.
விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருமாறு அழைப்பார். அங்கே அவரும் வயதான தாயும்
தந்தையும் மனநிலை பிறழ்ந்த ஒரு தம்பியும் இருப்பார்கள். அவரது தாய்
எங்களுக்கெல்லாம் சிற்றுண்டி தயாரித்துப் பல முறை உபசரித்திருக்கிறார். பிராமண
சநாதனம் துளிகூடத் தலைகாட்டாத திறந்த உபசரிப்பை அந்த மூதாட்டியிடம் நாங்கள் கண்டு
பல முறை வியந்தது உண்டு. நகுலன் அவற்றையெல்லாம் தாண்டியவர். முன்னே சொன்னபடி
அவருக்குத் தமிழ் இலக்கியம் படைப்பவர்கள் எல்லாம் சொந்தக்காரர்கள் என்ற எண்ணம்.
இலக்கியக் கர்த்தாக்களின் வருகைக்கு அவர் ஏங்குவது போன்று இருக்கும். அவர் வீடு
இலக்கிய ஆசிரியர்கள் வருகையால் நிரம்பி வழியும். சுப்பையா, நீல. பத்மநாபன், ஆ.
மாதவன், ஜேசுதாசன், மா. இளைய பெருமாள், மா. தட்சிணாமூர்த்தி என்று உள்ளூர்த் தமிழ்
இலக்கிய ஆசிரியர்கள்; அய்யப்பப் பணிக்கர் போன்ற மலையாள இலக்கிய ஆசிரியர்கள்;
க.நா.சு., தருமு சிவராமு, சி.சு. செல்லப்பா, சுந்தர ராமசாமி என்று தமிழ் இலக்கியப்
பெரியவர்கள்; அன்று புதிதாக எழுதிக்கொண்டிருந்தவர்கள். ஆங்கிலத்தில் இலக்கியம்
படைத்துக்கொண்டிருந்த பல படைப்பாளிகள்; என்று திருவனந்தபுரம் வந்த தமிழ், ஆங்கிலம்
போன்ற பிற மொழி இலக்கியப் படைப்பாளிகள் இவரைச் சந்திப்பதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக
வைத்திருந்தார்கள்.
நகுலனுக்கு இலக்கியப் படைப்பாக்கம் ஒரு தவம் போல. சித்தன் போக்கு சிவன் போக்கு
என்பது போன்று மனம்போன போக்கில் செல்லும் இலக்கியப் படைப்பில் அவர் வாழ்ந்த உண்மை
உலகுக்கும் படைப்புலகிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நினைவுப் பாதை அவர்
வாழ்ந்ததைப் போன்ற நனவும் கனவும் கலந்த மயக்க உலகத்திற்கு இட்டுச் செல்வது. எனவே,
அவர் எழுத்தில் காணப்படும் உண்மைத் தன்மை நம்மை மலைக்கவைக்கும்.
இவர்
ஒரு தட்டில்
அரிசியைத்
தனது சிதறின
சித்தத்தைப் போல்
சிமென்ட் தளத்தில்
இரைக்கிறார்.
என்று ஒரு கவிதையில் எழுதியதைப் போன்றதுதான் இவர் எழுத்து.
நனவு, கனவு மயங்கும் இவர் புதின உலகில் நடமாடும் பாத்திரங்கள் - பூனை அணில் உள்பட
அனைவரும் உண்மையானவர்கள்; அசல்கள். அதாவது அவர்கள் எல்லாம் நகுபோலிகள்
(caricature) அல்ல. ஒருவேளை பிற்காலத்தில் இந்த உத்தியை அதிகமாகக்
கையாண்ட நீல. பத்மநாபன் போன்றோர்க்கு இவர் முன்னோடியோ எனத் தோன்றுகிறது.
எழுதி முடித்ததை வெளியிட நகுலன் எடுத்துக் கொண்ட அக்கறை குறிப்பிடத்தக்கது.
சிற்றிதழ்களில் அவர் படைப்புகள் தவறாமல் வரும். வராமல்போனால் அது பற்றிய ஆதங்கத்தை
வெளிப்படுத்திவிடுவார். நாவல், தொகுப்பு இவற்றை வெளியிட பணம் செலவழிப்பதில் தயக்கம்
காட்டாதவர். இவர் படைப்புகள் பலவும் சொந்தச் செலவில் வந்தவை தாம். இவர் எழுத்தை
வைத்துச் சம்பாதிக்கவில்லை; சம்பாதித்ததை எழுத்தில் செலவழித்தார் என்று சொல்வதே
பொருத்தம். எனவே, தமிழ் இலக்கியத்தை எழுத்தால் மட்டுமல்ல; வெளியீட்டாலும்
வளப்படுத்தியவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய இவர், தமிழில் படைத்த படைப்புகளின் பட்டியல், ஏழு
நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள்,
இன்னும் ஒரு பதிப்புத் தொகுப்பு (குருக்ஷேத்திரம்), மொழிபெயர்ப்புகள் (பாரதி
கவிதைகள் மொழிபெயர்ப்பு
(Selections from Bharathi - That Little Sparrow), அய்யப்பப் பணிக்கரின் குருக்ஷேத்திரம்
தமிழ், மலையாள மொழிபெயர்ப்பு என நீள்கிறது. ஆங்கிலத்திலும் 5க்கும் மேற்பட்ட
கவிதைத் தொகுப்புகள், பல கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பலவற்றைப் படைத்துப்
பெரும்பாலானவற்றை அவரே வெளியிட்டுள்ளார். பின்பு இவருடைய தமிழ்ச் சிறுகதைகளையும்
கவிதைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து நகுலன் சிறுகதைகள் (1998), கவிதைகள் (2001),
நகுலன் கட்டுரைகள் (2002), நகுலன் நாவல்கள் (2004) என்னும் நான்கு நூல்களைக் காவ்யா
வெளியிட்டுள்ளது. அதுவே நகுலன் இலக்கியத் தடம் (2006), என்ற திறனாய்வுக் கட்டுரைத்
தொகுப்பையும் கண்ணாடியாகும் கண்கள் (2007) என்னும் படத் தொகுப்பையும்
வெளியிட்டுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் நினைவுப் பாதையைத் தனது செவ்விலக்கிய
வரிசையிலே வெளியிட இருக்கிறது.
எண்பத்தாறு வயதில் இலக்கியமே வாழ்க்கையாக, வாழ்க்கையே இலக்கியமாக வாழ்ந்து வந்த
இவர் நகுலன் நாயர் என்னும் புனைபெயரிலும் எழுதியதுண்டு. இவரை முக்கியமாகப்
பாதித்தவர்கள் வள்ளுவரும் க.நா.சு.வும்.
இவர் கவிதையிலே எளிமையும் உண்டு; இருண்மையும் உண்டு. அது சித்தர் மரபிலிருந்து
வந்தது. ஒன்றைப்பார்ப்போம்:
சின்னஞ்சிறு
சிட்டொன்று
சென்று திரிந்து
'விர்' ரென்று பறந்து வந்து
அது திரிந்து பறந்ததும்
வந்து இருந்ததும்
மனதில் மறைய
இலையசையும்
கிளையொன்றில்
வந்து அமரக்கண்டு வியப்பெய்தி
கண் தவற
கருத்து உயர
கண்டு நின்ற
என்னைக் கண்டு
"இதுவா கவிதை?
கவிதை இதுவா?"
என்று சிரித்தது
ஒரு பூதம்.
அவருடைய பரந்த இலக்கியப் பயிற்சியின் விளைவாக எழும் எதிரொலிக் கவிதைகள்
லிமரிக்குகளைப் போன்றவை. அவற்றைப் புரிந்துகொள்ளத் தமிழ், ஆங்கில இலக்கியத்தைப்
பிரதியாகக் கொண்ட அவர் இலக்கியப் புரிந்துலகிற்குள் நுழைய வேண்டும்.
நூல்களை விலைக்கு வாங்கிப் படித்து மதிப்புரை எழுதுவது அவர் வழக்கம். அது
சிற்றிதழ்களைச் சார்ந்திருந்தது.
நகுலன் தமிழை முறையாகக் கற்றவர். அத்துடன் ஆங்கில இலக்கியத்தையும் கற்றவர்;
கற்பித்தவர். மலையாள இலக்கியத்திலும் அறிமுகம் உடையவர். எழுதுவது தமிழிலும்
ஆங்கிலத்திலும் எனினும் அவருடைய இலக்கிய விமரிசன உலகம் தமிழ் இலக்கியமாகவே
இருந்தது. அவருக்கு இலக்கியத்திலே பழையது, புதியது என்ற வேறுபாடற்ற ஆரோக்கியமான
பொதுநோக்கு இருந்தது. விமரிசன உலகத்தில் அன்று தீவிரமாக இருந்த பல விமரிசகர்களை
எதிர்கொள்ளும் முகமாக அவர் விமரிசனக் கருத்துகளை உதிர்ப்பது உண்டு. இலக்கியம்
பற்றிய பரந்த அறிவு, பரந்த மனநிலை, பழமைக்கும் புதுமைக்கும் இடையே உள்ள ஒப்புமையைத்
தேடும் முயற்சி முதலியவற்றை அவரது கட்டுரையில் பார்க்கலாம்.
தற்கால எழுத்தாளர்களுக்கு இல்லாத ஆரோக்கியமான பார்வையையும் பயிற்சியையும் மரபுவழிப்
படிப்பு அவருக்குக் கொடுத்துள்ளதை இக்கட்டுரைகளில் பார்க்கலாம். வள்ளுவருடைய
குறளில் இவருக்கு அசைக்க முடியாத இலக்கிய ஈடுபாடு உள்ளதைக் குறளைப் பற்றிய தனிக்
கட்டுரையில், ஏனைய இடங்களில் வழங்கும் அரிய குறிப்புகள் மூலமாக உணரலாம். திருமூலர்
பற்றியும் அவர் உயர்ந்த மதிப்புக் கொண்டிருந்தார். அவர் கட்டுரைகளில் ஆரம்பத்தில்
இருந்த ஒரு கட்டமைப்பு பிற்காலக் கட்டுரைகளில் காணப்படாது. எல்லாம் உதிரி
அபிப்பிராயங்களாக இருக்கும். ஆடு தழை தின்றுவிட்டுச் செல்வதுபோலக் காணப்படும்.
அய்யப்பப் பணிக்கரின் குருக்ஷேத்திரம் என்னும் மலையாளக் கவிதையின் மொழிபெயர்ப்பு
தமிழ் இலக்கிய மரபின் சாயலோடு வந்திருக்கிறது என்பது என் கணிப்பு.
மிகச் சுறுசுறுப்பாக இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருந்த நகுலனது இலக்கியப் பணிகள்
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நின்றுவிட்டன என்பது அடிக்கடி அவரைக் காணும்
எங்களைப் போன்றவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக ஆகிவிட்டிருந்தது. அவரைச் சந்திப்பது
என்பது ஒரு சம்பிரதாய நலம் விசாரிப்பு என்னும் அளவில் சுருங்கிப்போய்விட்டிருந்தது
பெரும் சோகம். கடைசியாக அவருக்கு உள்ளூர் பரமேஷ்வரய்யர் விருதைத் திருவனந்தபுரம்
தமிழ்ச்சங்கம் அளித்தபோது ஒரு கடமையைத் தவறவிட்ட குற்றத்திலிருந்து தப்பித்த
மனநிலை.
நகுலனின் இலக்கிய ஆளுமையை நன்கறிந்த எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தமிழ் இலக்கிய
உலகில் நல்ல கவனிப்புக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விருதுகள் கிடைத்ததும் மனநிறைவைத் தருகிறது.
நகுலனைப் பற்றிப் பேசுவது தம் இலக்கிய மேதமையின் அடையாளம் என்று இன்று தமிழ்
இலக்கிய உலகம் போற்றுகிறது. ஆனால், அது நகுலனைப் பொறுத்தவரை எந்த விளைவையும்
தரவில்லை. ஏனெனில் அவர் ஒரு கவிதையில் சொல்வது போல,
மிகச் சிறிய
துவாரத்தினூடு
கர்ப்பச் சிறையில்
ஒடுங்கிய
ஒரு யோகி
ஒரு புது நகரைக் காண
தான் தனியாகத்தான் வருவான்
என்பதுபோலத் தனியாக வந்தார். தனியாகப் போய்விட்டார். அவர் தாய்க்குப் பிறகு அவரைக்
கவனித்துக் கொண்ட புருத்தை என்ற மலையாள மாதுதான் அவருக்குத் துணையாக இருந்தார்.
அவரைப் பார்த்துக் கொண்டதைப் போலவே மழையில் நனைந்து கரையான் அரித்த புத்தகங்களையும்
கையெழுத்துப் பிரதிகளையும் தட்டி எடுத்துக்கொண்டிருந்ததைக் கையறுநிலையோடு
பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிந்தது என்பது அவலம்.
நகுலனின் தங்கை காலஞ்சென்ற திரிசடையும் நல்ல கவிஞர். நகுலனின் இலக்கிய வாரிசுபோல
அவர் செயல்பட்டுக்கொண்டிருந்தார். தமிழ் உணர்வில் தன் தமையனைப் போலவே வாழ்ந்தவர்.
இருவரும் தமிழாக வாழ்ந்தார்கள். தமிழுக்காகக் கைம்மாறு கருதாமல்
ஆர்ப்பாட்டமில்லாமல் பணியாற்றினார்கள். கவிஞர் திரிசடை பெயரில் (சாந்தாதேவி
சாமிநாதன்) அமெரிக்காவில் உள்ள அவர் கணவர் சாமிநாதன் அவர்கள் கேரளப்
பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கும்
அறக்கட்டளையை ஏற்படுத்தித் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். அதுபோலவே
நகுலன் பெயரிலும் அத்தகைய அறக்கட்டளை ஒன்று நிறுவப்பெற வேண்டும் என்பது என் அவா.
உள்ளடக்கம்