கண்ணன்
2004 ஜனவரி சென்னைப் புத்தகச் சந்தையில், பொங்கலை ஒட்டிய ஒரு நாள் மாலை, வாசகரைச்
சந்திக்க, நூல்களில் கையெழுத்திடக் காலச்சுவடு அரங்கிற்கு சு.ரா. வந்திருந்தார்.
சென்னைப் புத்தகச்சந்தைக்கு அவருடைய முதல் வருகை அது. அதுவே கடைசி வருகையாகவும்
அமைந்துவிட்டது. அன்று புத்தகச் சந்தையில் வாசகர் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.
அரங்கிலும் வாசகர்கள் குமிய மூச்சுத்திணறியது. இந்நிகழ்வைப் பதிவுசெய்யக் 'குங்குமம்'
பத்திரிகையாளரும் புகைப்படக்காரரும் வந்திருந்தனர். அரவிந்தனும் கனிமொழியும்
சு.ரா.வைச் சந்திக்க வந்திருந்தனர். சு.ரா.விடம் கனிமொழி கையெழுத்து வாங்குவதை 'குங்குமம்'
புகைப்படக்காரர் படம்பிடிக்க முயன்றபோது, கனிமொழி, 'எதுக்கு எடுக்கறீங்க? எப்படியும்
போடமாட்டீங்கல்ல?' என்றார். புகைப்படக்காரர் 'கண்டிப்பாகப் போடுவோங்க' என்று
சொல்லிவிட்டுப்போனார். வேலைக்குப் புதியவராக இருந்திருப்பார். செய்திக் கட்டுரை வேறு
புகைப்படங்களுடன் வெளிவந்தது. முன்னர் கலைஞரின் நள்ளிரவுக் கைதினை அடுத்து வெளிவந்த
சன் டிவி செய்திப்படங்களில் கனிமொழி இடம் பெற்ற காட்சிகள் கவனமாக நீக்கப்பட்டு
வந்ததைப் பிற சேனல்களின் காட்சிகளோடு ஒப்பிட்டு 'காலச்சுவ'டில் குறிப்பிட்டிருந்தோம்.
சில மாதங்களுக்கு முன்னர் சென்னை சென்றிருந்த போது கனிமொழியின் புகைப்படத்தோடு 'குங்குமம்'
போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. அந்த வார 'குங்குமம்' முன்னட்டையில்
கனிமொழி. உள்ளே விரிவான நேர்காணல். 'சோழியன் குடுமி சும்மா ஆடாதே' என்று
நினைத்துக்கொண்ட போதிலும், அதன் உள்நோக்கம் அப்போது பிடிபடவில்லை. கனிமொழி
அரசியலுக்கு வர இருப்பதாக நிலவிய வதந்திகளுடன் உளவுத்துறையும் ஊடகங்களில்
செய்திகளைப் பதித்துக்கொண்டிருந்தது. தமிழக அரசியலின் உள்ளோட்டங்களை அறிய
Intelligent Journalism (கூர்மையான இதழியல்) பதிவுகளைப் படிப்பது போதுமானதல்ல.
Intelligence Journalism (உளவுத்துறை இதழியல்) உருவாக்கும் செய்திகள்
அதிமுக்கியமானவை. உலகின் பிற பகுதிகள் பற்றித் தெரியவில்லை. ஆனால், தமிழக மீடியா
கல்விப் பாடத்திட்டத்தில் உளவுத்துறை இதழியல் தனிப் பாடமாக இடம்பெற வேண்டும். இந்த
உளவுத்துறை இதழியல் நேற்று இன்று பிறந்தது அல்ல. எந்த ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்கு
உரியதும் அல்ல. பத்திரிகையாளர்-உளவுத் துறையினர் தொடர்பு என்பது நீண்ட காலத்து உறவு.
ஆனால், இதழியலின் ஒரு பிரிவாகப் பேசத்தக்க இன்றைய நிலை 'புலனாய்வு' இதழ்களின்
வருகைக்குப் பின்னர் ஏற்பட்டது. புலனாய்வு இதழ் களின் கவனம் அரசின் ஊழல்கள்,
குற்றங்களை நோக்கித் திரும்பாத வண்ணம் மசாலாச் செய்திகளை எடுத்துக் கொடுப்பது
உளவுத்துறையின் அரிய பணிகளில் ஒன்று. அப்போதைய ஆளும் வர்க்கத்திற்குத் துதிபாடும்
பதிவுகளையும் எதிரிகளைச் சிறுமைப்படுத்தும் செய்திக்கட்டுரைகளையும் ஊடகங்களில்
வரச்செய்வது மற்றொரு அரியபணி. உளவுத்துறை இதழியலைத் துல்லியமாக அடையாளம் காட்டுவது
கடினம். ஆனால், படிக்கும் போது உணர்ந்துகொள்வது எளிது. லெதர் பூட்சும் ஆட்டுக்கடா
மீசையும் விறைப்பான உடல் மொழியும் கொண்டு மஃப்டியில் வரும் போலீசாரைப் போல அது
இருக்கும்.
ஸ்டாலின் மற்றும் அழகிரியுடன் கனிமொழி நல்லுறவு வளர்த்துக்கொண்டிருப்பதாகவும்
குடும்ப அரசியலில் அவர் அண்ணன்கள் இருவருக்கும் இடையில் புரிதலை ஏற்படுத்தும்
பாலமாகச் செயல்படுவார் என்றும் உளவுத்துறை இதழியல் பதிவுகள் தெரிவித்துவந்தன. (ஸ்டாலினும்
அழகிரியும் ஒற்றுமையாகத் தமிழகத்தை ஆளும் தொடர்காட்சிகள் மனத்தில்
ஓடிக்கொண்டிருக்கின்றன.) அரசியலில் ஸ்டாலின் கிழித்த கோட்டைக் கனிமொழி தாண்ட
மாட்டார் என்பது போன்ற உத்தரவாதங்களையும் அவை பரப்பிக்கொண்டிருந்தன. கலைஞர்
குடும்பத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சொத்துப் பங்கீட்டில் மாறன் குடும்பத்தால் தாம்
ஏமாற்றப்பட்டு விட்டதான உணர்வு கலைஞரின் வாரிசுகளுக்கு ஏற்பட்டு, கலைஞர் குடும்பம்
vs மாறன் குடும்பம் என்னும் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வைக் கைப்பற்றும் திட்டத்தோடு இருந்த மாறன்களுக்கு
மேற்படி செய்திகள் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் ஒரு வெளிப்பாடுதான்
கனிமொழியின் 'குங்குமம்' பேட்டி என்பது பின்னர் பிடிபட்டது. இப்பேட்டியை அடுத்துக்
கனிமொழியைத் தம் பக்கம் இழுக்க மாறன் கள் முயன்றதாகக் கூறப்படுகிறது. இப்பதற்றத்தின்
அடுத்தகட்ட வெளிப்பாடாக 'தினகரன்' கருத்துக் கணிப்பு வெளிவந்தது.
அழகிரியை நிதானம் தவறவைக்கும் கண்ணிவெடிகளுடன் வெளிவந்த 'தினகரன்' கருத்துக்
கணிப்பு எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்தி, மாறன்களையே நிதானம் தவறவைத்து,
பதவிப் பறிப்புக்கு இட்டுச்சென்றது. சதித் திட்டங்கள் பல சமயங்களில்
உயிர்கொண்டெழுந்து தமக்கான பாதையைத் தாமே தீர்மானித்துவிடுகின்றன.
மதுரை வந்த கலாநிதி மாறன் 'தினகரன்'மீதான தாக்குதல், மீடியா சுதந்திரத்தின் மீது
தொடரப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டார். 'மீடியா சுதந்திரம்' என்னும்
கோட்பாட்டை வாழ்வில் முதல்முறையாக யோசித்து உச்சரிக்க வேண்டிவந்ததாலோ அல்லது
சூழலின் பதற்றம் காரணமாகவோ, 'மீடியா சுதந்திரம்' என்று சொல்லும்போது வாய் குழறியது.
கொலையுண்ட ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்க அழகிரிக்கு எதிராக இறுதிவரை போராடுவதாக
அவர் சூளுரைத்த வாக்கை 48 மணிநேரம்கூடக் காப்பாற்ற முடியவில்லை.
மறுநாள் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
('நக்கீரன்' கோபால் கைதுசெய்யப்பட்டபோதும் பின்னர் 'தி ஹிந்து' இதழ்மீது ஜெயலலிதா
அரசு தாக்குதல் தொடுத்த போதும் நடந்த கண்டனக் கூட்டங்களிலும் கலந்து
கொண்டிருக்கிறேன்.) இச்சந்திப்பில் பேசிய என்.ராம் 'தினகரன்' மீதான தாக்குதலைப்
பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும்
அதன் பிற பரிமாணங்களை விவாதிப்பது கூடாது என்றும் குறிப்பிட்டு, அழகிரியைக்
கடுமையாகத் தாக்கிப் பேசினார். சன் குழுமத்தின் கடந்த காலச் செயல்பாடுகளும் மீடியா
ஆதிக்கமும் விவாதத்திற்கு வந்துவிடக் கூடாது என்னும் அக்கறையுடன் ஒற்றைப்
பரிமாணத்தை மட்டுமே அழுத்திப் பேசிய அவரது உரையில், பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய
கரிசனங்களுடன் கலாநிதியுடன் 'த ஹிண்டு' குடும்பம் கொண்டிருக்கும் சம்பந்தி உறவும்
நிழலாடியதாகத் தோன்றியது.
'தினகரன்' தாக்குதலில் பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது
விவாதத்திற்குரியது. சன் குழுமத்தினர் ஊடகச் சுதந்திரத்தையோ கருத்துச் சுதந்திரத்
தையோ எந்நிலையிலும் ஆதரித்தவர்கள் அல்ல. சன் ஊடகர்களின் இருப்பும் செயல்பாடும்
மேற்படிச் சுதந்திரங்களை வலியுறுத்தியதோ வலுப்படுத்தியதோ இல்லை. கருத்துச்
சுதந்திரம் என்பது விஷமத்தனமான கருத்துகளைப் பரப்புவதற்கான சுதந்திரத்தையும்
உள்ளடக்கியது என்ற அளவில் இத்தாக்குதலால் கருத்துச் சுதந்திரம்
பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம்.
ஊடகச் சுதந்திரம் என்னும் நோக்கில் 'தினகரன்' தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும்
பின்விளைவுகள் இவை:
1. மாறன் குடும்பத்தின் ஊடக மேலாண்மையோடு இணைக்கப்பட்டிருந்த அரசியல் அதிகாரம், ஒரு
முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
2. சன் குழுமத்தின் ஆபத்தான வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
3. தமது ஊடக-அரசியல் ஆதிக்கம் என்னும், உலகில் இன்று எந்தக் குடும்பத்திடமும்
இல்லாத இரட்டை அதிகாரத்தின் வழி, தமிழகத்திலும் இன்னும் சில மாநிலங்களிலும் பல
மீடியாக் குழுமங்களின் நாளிதழ்களை, தொலைக்காட்சிகளை, வார இதழ்களை, வானொலிகளை,
விநியோக வலைகளை ஒழித்துக்கட்டும் போக்கில் இருந்த மாறன்களின் நாணயமற்ற முறைமைகள்
கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன.
எனவே, 'தினகரன்' மீதான தாக்குதலைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்படும் அழகிரி, ஊடகச்
சுதந்திரம் என்ற நோக்கில் பார்க்கும்போது, ஊடகச் சுதந்திரத்தின் நாயகன்போல - அவரது
நோக்கங்களுக்கும் அப்பால் - காட்சியளிக்கிறார்!
மேலும், இப்போது தமிழகத்தின் அதிசக்தி வாய்ந்த ஊடகக் குழுமம் ஒன்று அரசியல்
சார்பற்றுச் சுதந்திரமாக இயக்குவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.
'தினகரன்'மீதான தாக்குதல் அழகிரியை ஒரு தளத்தில் ஒரு சமூக நாயகனாக
மாற்றியிருக்கிறது. திமுக தொண்டர்களிடையே இன்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால்
அழகிரியின் ஆதரவு வேகமாக உயர்ந்து வருவதை அது வெளிப்படுத்தும் என்பது என் துணிபு.
அழகிரி துணிச்சலானவர், உடனடியாக முடிவெடுத்துச் செயல்படுபவர், அடித்தள மக்களுக்கு
ஆதரவானவர், கட்சித் தொண்டர்கள்மீது கரிசனம் கொண்டவர், குறிப்பாக-நம்பியவர்களைக்
கைவிடாதவர் எனப் பலவிதமாகத் தொண்டர்களால் புகழப்படுகிறார். 'அன்பான மனுஷ'ராகவும்
பார்க்கப்படுகிறார் அவர்.1 முக்கியமாக, ஜெயலலிதாவை எதிர்கொள்ள சரியான நபர்
அழகிரிதான் என்னும் கருத்தும் தி.மு.க.வில் உருவாகிவருகிறது.
'தினகரன்' தாக்குதலில் மூவர் படுகொலைசெய்யப் பட்டனர் என்று பார்க்கும்போது, தமிழ்ச்
சமூகத்தின் எதிர்வினை பொதுவாக மிகப் பலவீனமானதாகவே இருக்கிறது. தமிழ் நாளிதழ்கள் பல
இச்செய்தியை முதல் பக்கத்தில்கூட வெளியிடவில்லை. செய்தி இதழ்கள் மேற்படி
தாக்குதலுக்கான பொறுப்பிலிருந்து அழகிரியை விடுவிப்பதில் ஆர்வம் காட்டின.
பத்திரிகையாளர்கள் நடத்திய சென்னைக் கண்டனக் கூட்டத்தில் முன்னர் 'நக்கீரன்' கோபால்
கைதுசெய்யப்பட்டபோதும், 'த ஹிண்டு' தாக்கப்பட்டபோதும் காணப்பட்ட வேகம் இல்லை.
எதிர்கட்சிகள்கூடப் போதிய வேகத்துடன் எதிர்வினையாற்றவில்லை. தயாநிதி
அமைச்சரவையிலிருந்து ஒதுக்கப்பட்டதற்குத் திமுக தொண்டர்களின் முழு ஆதரவு
கிடைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ம.க.வுடனான
திமுகவின் உறவு மேம்பட்டுள்ளது. விதிவிலக்குகளாக சி.பி.எம். மிகத் தெளிவான
எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது (அவர்களுக்கு ஒரு லால் சலாம்!). ஹென்றி திபேன்,
பேரா. கல்யாணி போன்றோரின் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
'தினகர'னைத் தாக்கியவர்கள் பற்பல தரப்பினரின் ஆழ்மன விருப்பத்தை
நிறைவேற்றியுள்ளார்கள். தமது மேட்டுக்குடித்தனமான அரசியலின் வழி மாறன்கள்
புண்படுத்திய திமுக தொண்டர்கள், கடும் பாதிப்புக்கு உள்ளாகிவந்த மீடியா
நிறுவனங்கள், நசுக்கப்பட்டுவந்த கேபிள் சேவைத்துறையினர், அவமானப்படுத்தப்பட்ட சக
அமைச்சர்கள், அச்சுறுத்தலுக்கு ஆளாகிவந்த தொழிலதிபர்கள், சொத்துப் பங்கீட்டில்
ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த கலைஞரின் வாரிசுகள், சன் குழுமத்தால் இருட்டடிப்பு
செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் எனப் பற்பல குழுவினரின் மானசீகமான செயல் கரமாகவே
ரௌடிகள் செயல்பட்டுள்ளார்கள். அப்பாவி ஊழியர்களின் படுகொலையை யாரும் வேண்டவில்லை
என்றாலும், தினகரன் அலுவலகம் உயிர்ச் சேதமின்றித்தாக்கப்பட்டிருக்கும்பட்சத்தில்,
ஆதரவுகூடக் கிடைத்திருக்கும் என்பதே யதார்த்த நிலை.
மாறன்களின் அரசியல்-மீடியா ஆதிக்கம் ஒரு கட்டத்தில் நேரடி வன்முறைக்கு இட்டுச்
செல்லும் என்பது அறியப்படாத ஒன்றல்ல. கடந்த ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில் சன்
குழுமம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:
ஒரு கட்சி சார்ந்த ஊடகங்களுக்கு ஒரு தேசத்தில் அல்லது மாநிலத்தில் இத்தகைய ஆதிக்கம்
இருப்பதைப் பிற அரசியல் கட்சிகள் சகித்துக் கொள்வது சாத்தியமல்ல.2
இருப்பினும் அநீதியான, ஆபத்தான, மாறன்களின் அரசியல்-ஊடக ஆதிக்க வளர்ச்சியைக்
கட்டுப்படுத்தும் முகமாக அரசு அமைப்புகளும் சக ஊடகங்களும் சிவில் சமூகமும்
செயல்படத் தவறிய இடைவெளியில் ரௌடிகளின் அதிரடிச் செயல்பாடு நிகழ்ந்துள்ளது. நீதித்
துறையின் போதாமைகளினால் கட்டைப் பஞ்சாயத்து உருவாவது போன்ற விஷயம் இது.
சன் குழுமத்தின் ஆதிக்கத்தைக் கடந்த ஆட்சியில் கட்டுப்படுத்த அ.தி.மு.க. அரசு
முயன்றபோது, தி.மு.க. தலைமை அவர்களுக்கு அரணாக நின்றது. இன்று தி.மு.க.வினர்
மட்டுமல்ல, கலைஞர் குடும்பத்தினரே சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு சன் குழுமம்
ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதன் மீடியா எதேச்சாதிகாரம் உள்ளிருந்தே தூண்டப்பட்ட
அராஜகத்தால் எதிர்கொள்ளப்பட்டுள்ளது.
மனித சரித்திரத்தில் பட்டம், பதவி, அதிகாரம் இவற்றிலிருந்து பிரிக்க முடியாததாகவே
கயமையும் துரோகமும் வெறியும் கலந்திருக்கின்றன. அரச பரம்பரைகளின் குருதி தோய்ந்த
வரலாற்றில் துரோகம் என்பதும் பதவி வெறி என்பதும் சதி என்பதும் ஒன்றறக் கலந்த ஒன்று.
மகன் தந்தையைக் கொல்வதும் சகோதரர்கள் சகோதரர்களைக் கொல்வதும் ஒரு குடும்பத்தையோ ஒரு
பரம்பரையையோ கூண்டோடு வேரறுப்பதும் சரித்திரத்தின் தீராத பக்கங்களாகத் தொடர்ந்து
வந்துகொண்டிருக்கின்றன. அதிகார வர்க்கத்தின் அலமாரிகளில் ஒளிந்திருக்கும்
எலும்புக்கூடுகள் எண்ணில்
அடங்காதவை.3
- கனிமொழி
மதுரை 'தினகரன்' தாக்குதலின் கரிசனத்திற்குரிய அம்சங்கள் (அ) மூன்று ஊழியர்களின்
பலி, (ஆ) அழகிரியின் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரம்.
கலைஞரின் நேரடி வாரிசுகளுக்கும் மாறனின் வாரிசுகளுக்கும் இடையிலான குடும்பப்
போராட்டத்தில் தற்போது நேரடி வாரிசுகள் வெற்றிவாகை சூடியுள்ளனர். குடும்பத்தின்
அசையாச் சொத்துப் பங்கீட்டில் கலைஞர் வாரிசுகள் ஏமாற்றப்பட்டிருந்தாலும்கூட
அசையும் குடும்பச் சொத்தான தி.மு.க. கட்சியை - தொண்டர்களை முழுமையாகக் கைப்
பற்றுவதில் அவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். மாறன்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் மூன்று 'தினகரன்' ஊழியர்கள் பலியாகியுள்ளனர். அவர்கள்
பத்திரிகையாளர்கள் அல்ல. பத்திரிகைச் சுதந்திரத்தை முன்னிட்டு அவர்கள்
மரணமடையவில்லை என்பதால் அவர்களைத் தியாகிகளாகப் பார்ப்பதிலும் சிக்கல் இருக்கிறது.
இருப்பினும் இது அவர்களது உயிரின் மதிப்பை எந்தவிதத்திலும் குறைத்துவிடவில்லை.
அவர்கள் இழப்பு அவர்களது உற்றாருக்கும் சுற்றத்தாருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்று.
மேலும், அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்கள் உயிரை வாங்க யாருக்கும் உரிமையில்லை.
அவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட வில்லை. ஆனால், சில உயிர்கள் பலியாவதைப் பற்றி
அவர்களைத் தாக்கியவர்கள் கவலைப்படவில்லை. அவர்களது பலி ஏற்படுத்திய கவனமும்
நெருக்கடியுமே தற்போது ஏற்பட்டுள்ள பல அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன.
இவ்வாறு மக்களின் உயிரைப் பலி வாங்கிக் காய்நகர்த்துவதும் நமது அரசியல்
வர்க்கத்திற்குப் பழகி மரத்துப்போன ஒரு நடைமுறை. தமிழ்ச் சமூகத்தில் உயிர்வாழும்
உரிமைகூட நம்முடையதாக இல்லை. அது நமது அரசியல் வர்க்கத்தின் பெருந்தன்மையால் நமக்கு
அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் பல அதிகாரங்கள் 'கொலையில்
பிறந்த சிருஷ்டிகள்' என்பது நமது அரசியல் வரலாற்றின் யதார்த்தம்.
மேற்படி கொலைகளின் முதல் குற்றவாளியாகப் பாதிக்கப்பட்டவர்களால்,
பத்திரிகையாளர்களால் குற்றஞ்சாட்டப்படுபவர் மு.க.அழகிரி. கிரிமினல்
குற்றச்சாட்டுகளிலும் கொலைக் குற்றங்களிலும் பல முறை புழங்கியுள்ள பெயர் அவருடையது.
'தினகரன்' தாக்குதலுக்கு அவர் உத்தரவிடவில்லை என்றும் அந்நேரத்தில் அவர் ஒரு
காதுகுத்தும் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்ததாகவும் அவருக்கு இத்தாக்குதல் பற்றித்
தெரியாது என்றும் இதழியல் செய்திகள் தெரிவித்தன ('காதுகுத்தும் நிகழ்ச்சி' என்பதை
ரொம்பவே ரசித்துப் படித்தேன்).
கவிஞர் கனிமொழி, அண்ணன் அழகிரி நிரபராதி - அவருக்கும் 'தினகரன்' தாக்குதலுக்கும்
எந்தத் தொடர்பும் இல்லை - என்று நினைப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.4 அழகிரியை அவ்வளவு எளிதில் நிரபராதி ஆக்கிவிட முடியும் எனத் தோன்றவில்லை.
இத்தாக்குதலில் அவருக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கொண்டால்
தயாநிதி மாறனுக்கு சன் டி.வி.யோடு தொடர்பில்லை என்பதையும் ஏற்க வேண்டும்.
அழகிரிக்கும் இந்நிகழ்ச்சிக்குமான தொடர்பு, அன்று காலை 'தினகர'னைப் படித்துவிட்டு
அவர் அடியாள்களைக் கூப்பிட்டு, 'போய் அடித்து நொறுக்கிவிட்டு வாங்கடா' என
உத்தரவிட்டாரா என்பதில் அடங்குவதல்ல. அழகிரிக்கு எந்தக் குந்தகம் வந்தாலும்
வன்முறையில் ஈடுபட ஒரு கூட்டம் மதுரையில் எப்போதும் தயாராக இருப்பதற்கு யார்
பொறுப்பு? உத்தரவிடாமலேயேகூட மனதறிந்து செயல்படும் அடியாள் படையை உருவாக்கிவிட்டால்
அவர்களின் செயல்பாட்டில் தலைமைக்குப் பொறுப்பில்லை என்று ஆகிவிடுமா? மதுரை போலீசாரை
வன்முறைக் களத்தில் பார்வையாளராக மாற்றிய சக்தி எது? உடனடி நடவடிக்கை மூலம்
வன்முறையைக் கட்டுப்படுத்திப் படுகொலையையும் தவிர்த்திருக்கக் கூடிய, மதுரையைப்
பெரும் கனவோடு நிர்வகித்துவந்த ஆட்சியர் உதயச்சந்திரனை இடம் மாற்றிய சக்தி எது?
இன்று மதுரையில் நேர்மையோடும் நிர்வாகத்திறனோடும் யாரும் பணியாற்ற முடியாத நிலை
ஏற்பட்டிருப்பதற்கு யார் பொறுப்பு? கவிஞரின் புரிதலுக்கு அப்பாற்பட்ட கேள்விகள்
அல்ல இவை. வன்முறை பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கனிமொழி இவ்வாறு எழுதுகிறார்:
வன்முறை நமது சமூகத்தில் காட்டுச்செடி போலப் பரவிவிட்டது. வன்முறை என்பது
வன்முறையாளர்களின் குற்றம் மட்டுமே என்று கூறிவிட முடியாது. தன்மீது
அவிழ்த்துவிடப்படும் வன்முறையை அமைதியாக ஏற்றுக் கொள்ளும் எல்லோருக்கும் இந்தக்
குற்றத்தில் பங்கு உண்டு.5
ஒரு சமூகத்தின் ஆன்மாவாகக் கருதப்படுபவர்கள் எழுத்தாளர்கள். இன்று அரசியலில்
இருக்கும் ரவிக்குமாருக்கும் சல்மாவுக்கும் மதுரை நிகழ்வுகளைப் பற்றிப்பலத்த
மௌனத்தை மட்டுமே வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. எழுத்தாளர்கள் அரசியலுக்குப்
பங்களிப்பதைவிடத் தாம் இழப்பதே அதிகமாகத் தெரிகிறது. மனித உரிமைப் போராளியாக,
பி.யு.சி.எல். தலைவராக இருந்த ரவிக்குமாருக்கு மதுரைப் படுகொலைகளைப் பற்றி
மட்டுமல்ல, தான் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டது பற்றிக்கூட அதிகம் சொல்ல
முடியாத நிலை. இந்நிலை ஒரு கூட்டணி (அ)தர்மம். தான் தாக்கப்பட்டதற்காக ஆளும்
குடும்பத்திடம் முறையிட்டும் ஆறுதல் பெற்றும் அவர் அமைதி அடைய வேண்டியிருக்கிறது.
அவரைத் தாக்கிய போலீசார்யாரும் இடைநீக்கம்கூடச் செய்யப்படவில்லை. மாறாக போலீசால்
தாக்கப்பட்டுப் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் போலீசாரைத்
தாக்கியதாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுக் கைதுக்கான வாரண்டும்
பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குபவர்களுக்கு அரச மரியாதை அளிக்கும் அரசு
தாக்கப்படுபவர்களைக் குற்றவாளிகள் ஆக்குவதில் வியப்பேதுமில்லை. முதலமைச்சரின்
பெருந்தன்மையால் அவர் இன்று சமூகத்தில் நடமாடிக்கொண்டிருக்கிறார். கலைஞருக்கு நமது
நன்றி உரித்தாகிறது.
சல்மாவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு எழுத்தாளருக்கு உரிய எந்தச் செயல்பாட்டையும்
காணமுடியவில்லை. ஒரு எழுத்தாளருக்கு உரிய கரிசனங்களாக ஒரு சொல்லும் செயலும் பொது
வாழ்க்கையில் அவரிடமிருந்து வெளிப்படுவதில்லை. இன்றைய அரசியல் குட்டையில் ஊறிய ஒரு
மட்டையாகவே அவர் காட்சியளிக்கிறார். அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் அவரை
ஒழித்துக்கட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இன்னும் எத்தனை காலம் அவர்
எதிர்கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
மனித உரிமைகள் மீறப்படும்போது பெரும் துக்கத்தோடு கனிமொழி எதிர்வினையாற்றியதைக்
கேட்டிருக்கிறேன். 2002இல் குஜராத் கலவரத்தை எதிர்த்து 'காலச்சுவடு' நடத்திய
பொதுக்கூட்டத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் என்னைக் கண்கலங்கவைத்துள்ளன.
கொடுங்குற்றவாளிகளைக்கூடத் தூக்கிலிடும் உரிமை அரசுக்கு இல்லை என மரண தண்டனைக்கு
எதிராக வாதாடிய கனிமொழி, மதுரையில் அப்பாவிகளின் படுகொலைக்கு ஆற்றியுள்ள எதிர்வினை,
அவர்மீது மரியாதை கொண்டவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கும்.
நேற்றுவரை இந்திய அரசு அமைப்புகள் பற்றிய விமர்சனப் பார்வையோடு இருந்த கனிமொழி
தற்போது சி.பி.ஐ.யின் மீது முழு நம்பிக்கை கொண்ட குடிமகளாக மாறியிருக்கிறார்6. கலைஞரின் விருப்பத்தையும் மீறிக் 'கருத்து' அமைப்பைத் தொடங்கி, குஷ்பு
பிரச்சினையில் ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுத்த கனிமொழியின் கருத்துச் சுதந்திரம்
இன்று குடும்ப அரசியலில் சிக்கித்தவிக்கிறது. அரசியலில் உயர்ந்த செயல்திட்டங்கள்
அவருக்கு இருக்கின்றன என்றே நம்புகிறேன். ஆனால், லட்சியத்தின் மலர்ச்சியை
வழிமுறைகளின் அறத்திலிருந்து பிரிக்க முடியாது.
ஒரு படுகொலைக்கு அரசு மறைமுக உடந்தையாக மாறும்போது, மக்களுக்கு நீதி வழங்கும் எந்த
உயரிய அமைப்பும் இன்று நம்மிடம் இல்லை. ஓர் அநீதிக்கு எதிராக அரசிடம் முன்வைக்க
எந்தக் கோரிக்கையும் இன்று சிவில் சமூகத்திடம் இல்லை. இருப்பினும் 'விசாரணைக்
கமிஷன் அமைக்க வேண்டும்', 'சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' போன்ற
கோரிக்கைகள் பழக்கதோஷத்தில் முன்வைக்கப்படுகின்றன. சி.பி.ஐ. விசாரணையின் வழி மதுரை
வன்முறையின் குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என ஆத்மார்த்தமாக
நம்பும் ஒருவரும் இன்று தமிழகத்தில் இல்லை. சி.பி.ஐ. விசாரணை இங்கு நீதியின் செயல்
கரமாக அல்ல, அரசின் அம்மணத்தை மறைக்கும் அரச இலையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம், ஒரு சாதுர்யமான அரசியல்வாதி என்பதை,
நிரூபணங்களே இனித் தேவையற்ற ஒரு தனிச்சிறப்பை, கலைஞர் மீண்டும்
நிரூபித்திருக்கிறார். தமிழ்ச் சமூகம் மீண்டும் மீண்டும் தன் தோல்வியை
நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
"கை தூக்கிக் கும்பிடுவதற்கு ஒன்றுமில்லையே, நித்ய சூன்யமாக இருக்கிறதே"7 என்ற
புதுமைப்பித்தனின் அலறல் பெரும் சோகத்தோடு இன்று நம்மீது படிகின்றது.
பிறக்குமா ஒரு புது அழகு?8
n
சான்றுக் குறிப்புகள்