Google   www kalachuvadu.com

 

கண்ணோட்டம்

தலித்துகளைக் காப்பாற்றும் பொறுப்பு

கண்ணன்

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பெரும் பான்மை ஆட்சி, தலித்-உயர்சாதிச் சமூகக் கூட்டணியால் ஏற்பட்டுள்ள பின்னணியில் 'அவுட்லுக்' ஜூன் 24, 2007 இதழ், தெற்கில் மேற்படி நிகழ்வு ஏற்படுத்தியுள்ள எதிர்வினைகளைச் செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையில் கவிஞர் குட்டி ரேவதி மேற்கோள்காட்டப்பட்டுள்ளார். அவரது கருத்து இது:

பிராமணர்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் தலித்துகளை விழுங்கிவிடுவார்கள் . . . இது பற்றி கருத்துக் கூறும் நேரம் வரவில்லை.

குட்டி ரேவதி அவர்களிடம் கருத்துக் கேட்கப் பட்டபோது, மாயாவதி ஆட்சிக்கு வந்து பத்து தினங்கள்கூடக் கடந்திருக்காது என்றே நினைக்கிறேன். அங்கு ஏற்பட்டுள்ள சமூகக் கூட்டணி பற்றிய முதல் கருத்தைக் கூறும் கால அவகாசம்கூட இன்னும் ஏற்படவில்லை. அது கவிஞருக்கும் தெரிந்திருக்கிறது. இருப்பினும் உடனடி எதிர்வினையாகச் சாபம் விடுவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. தலித் மற்றும் தலித் ஆதரவு அறிவுஜீவிகள் இங்குப் பல ஆண்டுகளாகப் பேசிவரும் 'தலித் தலைமையின் கீழ் சமூகக் கூட்டணி' அங்கு ஏற்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பிராமணர்கள் தலித் தலைமையை ஏற்றிருப்பதன் - அதன் வெற்றி தோல்வியைத் தாண்டிய -வரலாற்று முக்கியத்துவத்தை வரவேற்க நமது அறிவு ஜீவிகளால் முடியவில்லை.

மேற்படி மேற்கோளில் தலித் ஆதரவுக் குரல்போல ஒலிக்கும் குட்டி ரேவதியின் சொற்கள் அடிப்படையில் தலித்துகள் பற்றிய இழிவான கருத்தை உட்கிடையாகக் கொண்டுள்ளன: 'தலித்துகள் அப்பாவிகள், முட்டாள்கள். அவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம்!' அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு குட்டி ரேவதி அவர்களிடமும் உள்ளது; இன்னும் பற்பல தமிழ் அறிவு ஜீவிகளிடமும் இருக்கிறது. இத்தகைய ஒரு பொறுப்பைத் தம் சார்பாகச் சுமந்துகொண்டிருக்கும் ஒரு திரள் தமிழகத்திலிருப்பதை உத்தரப் பிரதேசத் தலித்துகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய ஒரு பொறுப்பு மிக்க கூட்டம் தமிழகம் நீங்கலாக இந்தியாவில் வேறெங்கும் காணக் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

உத்தரப் பிரதேசச் சமூகக் கூட்டணி, தலித்துகளின் தேசியத் தலைவராக உருவாகிவரும் மாயாவதியின் முன்முயற்சியால் ஏற்பட்டது. இக்கூட்டணியின் தன்னிகரில்லாத் தலைவராக இன்று அவர் மட்டுமே உள்ளார். பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சிகளின் தலைமை அரசியல்வாதிகள் போட்ட எல்லாக் கணக்குகளையும் கலைத்துப்போடும் அரசியல் சாதுர்யம் கொண்டவராக அவர் வெளிப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசப் பிராமணர்களைப் பற்றிய ஆழமான புரிதல் அவருக்கு இருக்கும் என்பதிலும் ஐயத்திற்கு இடமில்லை.

இருப்பினும், சென்னையிலிருக்கும் நமது கவிஞருக்குத் தெரிந்திருப்பது அவருக்குத் தெரியவில்லை பாருங்கள். 'தலித் என்றால் அப்படித்தான்! தலைவியே இப்படி எளிதில் ஏமாந்துபோவார் என்றால் தலித் மக்களைப் பற்றி என்ன சொல்ல.' கவிஞருக்கு ஏற்படும் பதற்றத்தை இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு தனிநபரின் பதற்றம் அல்ல. தமிழக 'முற்போக்கு' அறிவு ஜீவிகளின் பிரதிநிதித்துவப் பதற்றம் இது.

தலித்துகளை அப்பாவி ஆட்டு மந்தைகளாகப் பார்ப்பதிலிருந்து நமது 'முற்போக்கு' அறிவுஜீவிகளால் விடுதலை பெற முடியவில்லை. சாதி அரசியல் பேசுபவர்கள் தமக்குள் பதுங்கிக் கிடக்கும் சாதியத்தையும் ஆழ்ந்து நோக்கத் துணிய வேண்டும்.

காங்கிரஸின் பிராமணர்களோடு கூட்டுச்சேர்ந்து காமராஜர் வெற்றி பெற முடியுமெனில் அது மாயாவதிக்கும் சாத்தியப்படக்கூடும். காங்கிரசின் மேல்சாதி மற்றும் பெரும்பான்மைச் சாதி இந்துக்களின் சதியை முறியடிக்கக் காமராஜருக்குத் திராணி உண்டென்றால் அதில் மாயாவதி மட்டும் ஏன் தோல்வி அடைய வேண்டும்?

உத்தரப் பிரதேச முயற்சி வெற்றி பெறலாம். படுதோல்வி அடையலாம். மாயாவதிக்கு உரிய கால அவகாசம் கொடுத்து, அங்குள்ள பிராமணர்களுக்கு விவேகத்தின் வரம் வேண்டிப் பிரார்த்தித்து, தம்மையும் தமது நலன்களையும் பாதுகாத்துக்கொள்ளத் தலித்துகளுக்கு இருக்கும் திறனை ஏற்றுக்கொண்டு, நம்பிக்கையோடு காத்திருப்போம்.

உள்ளடக்கம்

Google Ads.....

Google