Google   www kalachuvadu.com

 

எதிர்வினை

குற்றவாளிகளுக்கு ஊக்கமளிக்கும் தலையங்கம்

காலச்சுவடு 90 (ஜூன் 2007) இதழ் தலையங்கம் மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளது. காவல் துறையினரின் என் கவுன்டர்கள் எல்லா மாநிலங்களிலும் காலங்காலமாக நிகழ்ந்துவரும் அத்துமீறல். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் காவல் துறையின் தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளிடம் வெளிப்படையாகப் பேசும்போது நேரடியாக அவர்களைக் குற்றஞ்சாட்டியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அவர்கள் அச்செயலைப் பலவாறு நியாயப்படுத்தினாலும் குரலில் இயலாமையும் ஒருவிதக் குற்ற உணர்வும் விரக்தியும் தொனிக்கவே செய்யும்.

பழி பாவத்துக்கு அஞ்சாத கொடிய குற்றவாளி என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகின்ற சந்தர்ப்பங்களில்தான் இப்படி நடக்கிறது. நம் நீதிமன்றங்களோ நேரடி சாட்சியம் இருந்தாலன்றி, குற்றவாளிகளுக்குச் சந்தேகத்தின் பலனை அளித்து அவர்களை விடுவித்துவிடுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன. குற்றங்களை நேரில் பார்த்தவர்கள் தொடக்கத்தில் சாட்சியம் அளிக்க முன்வந்தாலும் பின்னர் தங்கள் சாட்சியத்திற்கு முரணாக, அல்லது முற்றிலும் மாறாக நீதிமன்றத்தில் தகவல் சொல்லிக் காவல் துறையினரைத் தலைகுனிய வைத்துவிடுவார்கள்.

ஒரு குற்றவாளி ஊடகங்களின் முன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தன்னை ஒரு தியாகியைப் போல வர்ணித்துக் கொள்வது சாத்தியம். ஆனால், தனது தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்லச் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுமதியில்லை. நடைமுறையில் உள்ள சட்டங்களின்படியும் செயல்முறையின்படியும் ஒரு குற்றவாளியைக் கூண்டில் ஏற்றி உரிய தண்டனை பெற்றுத் தருவது எளிதல்ல. அதற்காகத் தேவைப்படும் மனித ஆற்றல், கால அவகாசம், பணச் செலவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்தால் தண்டனை விதிக்கப்பட்டாலும் தரப்படுகின்ற தண்டனையின் தன்மை, அளவு, சிறையில் உள்ள வசதிகள் என எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கின்றபோது எல்லாமே ஒரு அபத்த நாடகமாகத்தான் தோன்றும்.

குற்றவாளிகளைப் பிடிப்பதும் பெரும்பாலும் எளிதாக இருப்பதில்லை. அப்படியே ஒரு குற்றவாளியைக் கைது செய்தாலும் அவர்களுக்குச் சாதகமான சட்டவிதிகளும் வழக்கறிஞர்களின் சாதுரியமும் வழக்குப் பதிவைத் தாமதப்படுத்தும். விசாரணையும் நீடிக்கும். இதற்குள் வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவிடும். நீதிபதியையே மிரட்டுகிற அளவுக்குச் செல்வாக்கு மிக்க குற்றவாளிகள் இருக்கையில் காவல் துறை அதிகாரிகள் எம்மாத்திரம்?

சந்தேகத்திற்கு இடமின்றிக் கொடிய குற்றவாளி என்று தெரியவருகிற நபர்களின் விஷயத்தில் என்கவுன்டர் நடத்திச் சுலபமாகப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்கிற சபலமோ தூண்டுதலோ காவல் துறை அதிகாரிகளுக்கு உண்டாவது இம்மாதிரியான சூழலில்தான். ஓர் அதிகாரிமீது என் கவுன்டர் குற்றங்கள் வெளிப்படுவதேகூட உட்பூசல்களால்தான். இவை காவல் துறை உயரதிகாரிகள் வாயிலாக எனக்குக் கிடைத்த தகவல்களே.

நிலைமை இவ்வாறு இருக்கையில், குஜராத் மாநில என்கவுன்டர் விவகாரத்தைப் பேசுகின்ற காலச்சுவடு தலையங்கம் மிகவும் வலிந்து முதலமைச்சர் நரேந்திர மோடியின் பெயரை அதில் ஏன் இழுக்க வேண்டும்? குஜராத் கலவரம் சம்பந்தமான வழக்காக இருந்தாலும் சரி, தற்போதைய என்கவுன்டர் வழக்கானாலும் சரி, முதல்வர் மோடியின் தலையீடு ஏதும் இல்லை என்பதைத்தான் சம்பவங்களின் நகர்வு உறுதிசெய்கிறது. இதற்காக அவரைப் பாராட்டாவிடினும், தூற்றாமலாவது இருக்கலாம் அல்லவா?

நரேந்திர மோடி மிகவும் பிற்பட்ட, வனவாசி என்றே கூறத்தக்க வகுப்பைச் சேர்ந்தவர். நிர்வாகத்தில் வெளியார் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். இதனால் அவரது கட்சியிலேயேகூட ஒரு சாரார் அவரைப் பதவியிலிருந்து அகற்றத் தலைகீழாக நின்று தவமே இயற்றிவருகிறார்கள் எனலாம். அப்படிப்பட்டோ ருக்கு ஊக்கமளிப்பதுபோலத்தான் காலச்சுவடின் தலையங்கம் உள்ளது. மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த, லஞ்சம், சலுகை, ஊழல் போன்ற எவ்விதக் குற்றச்சாட்டிற்கும் ஆளாகாத ஒருவர் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு, மக்கள் ஆதரவுடன் நல்லாட்சி வழங்கிவரும் காட்சியைத்தான் குஜராத்தில் காணலாம். பிற ஊடகங்களினூடாகக் குஜராத்தையும் அதன் முதல்வர் மோடியையும் காண்பதற்குப் பதிலாகத் தனது சொந்தப் பார்வையின் தீட்சண்யத்தைப் பயன்படுத்துமாறு காலச்சுவடு இதழைக் கேட்டுக்கொள்கிறேன்.

மலர்மன்னன்
சென்னை

சாதியும் வர்க்கமும்

காலச்சுவடு ஜூன் 2007 இதழில் 'வெளிகளைக் கடக்கும் விளையாட்டு' என்னும் கட்டுரையில் அ. ராமசாமி, தமது நண்பர் கூறியதாக, "தமிழக முதலாளிகள் இதற்கு (முதலாளித்துவக் கொள்கைகளுக்கு) எதிரானவர்கள். சுரண்டுவதில்கூடச் சொந்த சாதிப்பாசத்தைக் காட்டுவார்கள். சொந்த சாதி ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வேலையில் அமர்த்திக்கொள்பவர்கள்" என்றும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, முதலாளியும் தொழிலாளியும் சாதிச் சமூகத்தில் ஒன்றாக இருப்பதால் தொழிற்சங்கம் தேவையில்லாமல் போய்விடும் என்றும் சட்டப்படியாக அவர்களுக்குக் கிடைக்கும் பல சலுகைகள் மறுக்கப்பட்டுவிடும் என்றும் கூறுகிறார்.

முதலாளிகள் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களைத்தான் வேலையில் சேர்த்துக்கொள்கிறார்கள் என்பதில் உண்மையுண்டு. ஆனால், இது தொழிலாளிகளைத் தொழிற்சங்கத்தில் சேர்வதிலிருந்து தடுக்கவும் அவர்களுக்குச் சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய சலுகைகளைக் கோராமல் இருப்பதற்கு மான வழி என்பதும் சரியல்ல. வன்னியர் சாதியைச் சேர்ந்த ஒரு முதலாளி விருத்தாசலத்தில் ஒரு தொழிற்சாலையை அமைக்கும்போது அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தத் தொழிற்சாலையில் வன்னியர்கள் நிறைய பேர் வேலை பார்க்கத்தான் செய்வார்கள்.

கட்டுரையில் குறிப்பிடுவதுபோல முதலாளியும் தொழிலாளர்களும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையிலும் சொந்தச் சாதி ஜனங்களை வேலைக்கு அமர்த்துவது ஏதோ உள்நோக்கத்துடன் செய்வதாகாது. நமது சமூகத்தில் பெரும்பாலான பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். மேலும், ஓரளவு வசதியுள்ள முதலாளி தம்மைவிட வசதி குறைந்த உறவினருக்கு உதவுவார் என்று எதிர்பார்ப்பதில் தவறு என்ன?

தங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு முதலாளியைச் சிலர் வேலைக்காக அணுகுவதற்குக் காரணம் தங்களுக்கோ தங்கள் பிள்ளைகளுக்கோ போதுமான தகுதியோ திறமையோ இல்லாததால் பிறரிடம் வேலை பார்க்க முடியாது என்பதால்தான் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

சொந்தச் சாதி மக்கள் நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவது அவர் சாதி வெறிகொண்டவர் என்பதற்கோ அல்லது ஆசிரியர் கூறும் கொள்கைக்கோ நிரூபணம் ஆகாது.

பிஹார், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் கோயமுத்தூரை அடுத்த கிராமப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில்கூட வேலை பார்க்கிறார்கள். காலச்சுவடின் அதே இதழில் வெளியாகியிருக்கும் இன்னொரு கட்டுரையில் நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து நிறைய இளம்பெண்கள் வேலைக்கு எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கேயும் சாதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கருதுகிறேன். முதலாளியின் சாதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார் என்ற குறிப்பும் காணப்படுகிறது. எனக்குத் தெரிந்தமட்டில், கோயமுத்தூர் தொழிற்சங்க இயக்கத்தை வைத்து இதை நிரூபிக்க முடியாது. முதலாளியின் சாதியைச் சேர்ந்த தொழிலாளிகள் தங்கள் உரிமையைப் பற்றிய அறிவு இல்லாதவர்களோ அதைப் பெறப்போராட இயலாதவர்களோ அல்ல. இங்குள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் நிறைய பேர் தங்கள் முதலாளிகளின் சாதியைச் சேர்ந்தவர்களே.

தமிழ்நாட்டு முதலாளிகளின் முதல் விசுவாசம் அவர்கள் சாதியின் மேல்தான்; அதன் பிறகுதான் திறமைக்கும் கடின உழைப்புக்கும் மதிப்பளிக்கும் முதலாளித்துவ, பொருளாதாரக் கருத்துகளுக்கு என்கிறார் கட்டுரையாளர் - அல்ல, அவரது நண்பர். தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகள் இருக்கின்றன. சாதி அடிப்படையிலான தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அரசு அலுவலகங்களிலும் அரசியல் அலுவலகங்களிலும் சாதி அடிப்படையிலேயே நியமனங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தனியார் நிறுவனங்களில் கடின உழைப்புக்கு மதிப்பளிக்கும் முதலாளித்துவக் கொள்கை அடிப்படையில் மட்டும் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்று கட்டுரையாளர் - அல்ல, அவரது நண்பர் - எதிர்பார்க்கிறார். இதுவும் முதலாளித்துவத்துக்கு அளிக்கப்படும் ஒரு பாராட்டுதானே?

டி. பாலசுந்தரம்
கோவை

உள்ளடக்கம்

Google Ads.....

Google