பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆல்ஃபிரட் நோபலால் ஏற்படுத்தப்பட்டு,
1901ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் வழங்கப்படும் நோபல் பரிசே அகில உலக அளவிலான
விருதுகளில் பெருமதிப்பிற்குரியதாகக் கருதப்படுகிறது. தொடக்கத்தில் நோபல் பரிசு
இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், மற்றும் அமைதி ஆகிய ஐந்து
துறைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவற்றில் அமைதிக்கான பரிசு மட்டும் நார்வே
அரசால் வழங்கப்படுகிறது. கணிதத்திற்கென்று நோபல் தனியே ஒரு பரிசை ஏற்படுத்தவில்லை.
கணிதம் மக்கள் வாழ்வில் நேரடியாகப் பயன்படுவதில்லை என அவர் கருதியதாக ஒரு கருத்து
உண்டு. டைனமைட்டைக் கண்டுபிடித்தவரல்லவா நோபல்! அவர் நினைவாகப் பொருளாதாரத்
துறைக்கென்று
Sveriges Riksbank ஏற்படுத்திய பரிசு 1968ஆம்
ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. ஆனால், கணிதத்திற்கென்று நோபல் பரிசு இல்லாதது கணித
விற்பன்னர்களுக்கு ஒரு குறையாகவே இருந்துவந்தது. ஏபல் என்னும் கணிதமேதையின் பெயரால்
ஒரு பரிசை நிறுவும் யோசனையை 1902ஆம் ஆண்டிலேயே ஸ்வீடன் அரசர் இரண்டாம் ஆஸ்கார்
முன்வைத்தார். ஆனால், ஸ்வீடனும் நார்வேயும் ஒன்றாக இணைவது சாத்தியப்படாததால்,
அரசரின் யோசனை செயல்வடிவம் பெறவில்லை.
1924ஆம் ஆண்டு டொரொண்டோ வில் நடைபெற்ற உலகக் கணித மாநாட்டில், இளம் கணிதவியலாளர்களை
ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு விருதை நிறுவ முடிவெடுக்கப்பட்டது. அதை
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கணித மாநாட்டின்போது, இருவருக்கு
அளிக்கலாமெனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அவ்விருதை நிறுவுவதில் பெரிதும்
முன்னின்றவர் கனடாவைச் சேர்ந்த கணிதப் பேராசிரியர் ஜே. சி. ஃபீல்ட்ஸ். அவரே
அம்மாநாட்டின் பொதுச்செயலர். அடுத்த உலகக் கணித மாநாடு நடப்பதற்குள் பேராசிரியர்
ஃபீல்ட்ஸ் இறந்துவிட்டதாலும் வேறு சில காரணங்களாலும் 1932ஆம் ஆண்டு திட்டமிட்டபடி
அவ் விருதை வழங்க முடியவில்லை. ஆனால், பேராசிரியர் ஃபீல்ட்ஸைக் கௌரவிக்கும் விதமாக
அவ்விருது அவர் பெயராலேயே 1936ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கணித மாநாட்டின்போது,
முதல்முறையாக லார்ஸ் ஆல்ஃபார்ஸுக்கும் ஜெஸ்ஸி டக்ளஸுக்கும் வழங்கப்பட்டது. அதில்
ஒரு வேடிக்கை என்னவென்றால், எந்த ஒரு தனி நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டின்
பெயரால் அவ்விருது அமையக்கூடாதென்று பேராசிரியர் ஃபீல்ட்ஸ் கூறிவந்தார். கணித உலகம்
ஃபீல்ட்ஸ் விருதை நோபல் பரிசுக்கு இணையான கணிதத்திற்கான பரிசாகக் கருதத்
தொடங்கியது. நோபல் பரிசுக்கும் ஃபீல்ட்ஸ் விருதுக்கும் பல வேறுபாடுகள். நோபல் பரிசு
ஒருவரது வாழ்நாள் சாதனையைக் கருத்தில் கொண்டு வருடந்தோறும் வழங்கப்படுகிறது. ஆனால்,
இளம் கணித மேதைகளை ஊக்கப்படுத்த அளிக்கப்படுவதால் ஃபீல்ட்ஸ் விருது நாற்பது வயதைக்
கடந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. நோபல் பரிசு இலக்கியம் தவிர மற்ற துறைகளில் பல
ஆண்டுகள் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
1968ஆம் ஆண்டிலிருந்துதான், ஃபீல்ட்ஸ் விருதை அதிகபட்சம் நான்கு பேருக்கு வழங்கலாம்
என முடிவாயிற்று. அதாவது, ஃபீல்ட்ஸ் விருது சராசரியாக ஒரு நபருக்கும் குறைவாகவே
அளிக்கப்படுகிறது எனச் சொல்லலாம். இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், நோபல் பரிசுக்கு
நிகரான கணிதத்திற்கான விருதாகவே ஃபீல்ட்ஸ் விருது கருதப்பட்டு வந்தது.
இதற்கிடையில், 2001ஆம் ஆண்டு நார்வே அரசு தன் நாட்டில் பிறந்த கணித மேதையான நீல்ஸ்
ஹென்றிக் ஏபலின் நினைவாக, அவர் பிறந்து இருநூற்றாண்டுக் கொண்டாட்டங்களின்
முகாந்திரமாகக் கணிதத்திற்கென ஒரு விருதை அறிவித்தது. அதற்கான அடிப்படை நிதியமாக
200 மில்லியன் நார்வே க்ரோனர்களை அளித்தது. இது 22 மில்லியன் அமெரிக்க
டாலர்களுக்குச் சமம். 1802ஆம் ஆண்டு பிறந்து 26 வயதிலேயே காசநோயால் காலமான ஏபல்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித மேதை. ஓர் ஐம்படிச் சமன்பாட்டின்
மூலங்களை அதன் குணகங்களைக் கொண்டே கண்டுபிடித்துவிட முடியாது என நிரூபித்தது அவரது
முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று. இது பிற்பாடு குலவியல் (Group
Theory) என்னும் கணிதப் பிரிவுக்கு அடித்தளமாக அமைந்தது. ஏபிலியச்
சார்பலன்கள், ஏபிலியக் குலம், ஏபிலதயத் தொகைமைகள் உள்ளாகக் கணிதக் கருத்தாக்கங்கள்
பல அவரது பெயரால் வழங்கப்படுகின்றன. ஃபீல்ட்ஸ் விருதைப் போலல்லாமல், ஏபல் பரிசு
ஆண்டுதோறும் ஒருவர் கணிதத் துறைக்காற்றிய வாழ்நாள் பங்களிப்பின் அடிப் படையில்
வழங்கப்படுகிறது. நோபல் பரிசைப் போலவே, இதுவும் உலக அளவிலான கணித நிபுணர்கள், கணித
மையங்கள் உள்ளடங்கிய தேர்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்
அளிக்கப்படுகிறது.
முதல் ஏபல் பரிசை 2003ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ழான் பியர் செர்
என்பவருக்கு
Norwegian Academy of Science and Letters அறிவித்தது. இக்காலக் கட்டத்தின் தலைசிறந்த கணித நிபுணர்களில்
ஒருவரான செர் பாரீஸிலுள்ள
College de France பல்கலைக்கழகத்தில்
Emiritus பேராசிரியர். எண்ணியல், இயல் வடிவ கணிதம், சிக்கல் எண்ணியல் எனக்
கணிதத்தின் உட்பிரிவுகள் பலவற்றிலும் பேராசிரியர் செர்ரின் ஆய்வுகள்
seminal எனக் கூறத்தக்கவை. ஏபல் பரிசு முதலாண்டிலேயே அவருக்குக் கிடைத்தது உலக அளவிலான கணித
விற்பன்னர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அதோடு, செர்ரின் ஆய்வுகள் பலவும்
ஏபலின் கண்டுபிடிப்புகளோடு தொடர்புடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏபல் பரிசின்
முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே, அதன் வரலாற்றைச் சற்று விரிவாகவே இங்குச்
சொல்ல நேர்ந்துவிட்டது.
2006ஆம் ஆண்டுக்கான ஏபல் பரிசு சென்னையில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும்
பேராசிரியர் ஸ்ரீனிவாச ஆர்.எஸ். வரதனுக்குக் கிடைத்துள்ளது. இது இந்தியாவுக்கே
பெருமை.
1940ஆம் ஆண்டு ஜனவரி 2இல் பிறந்த வரதன், சென்னை மாநிலக் கல்லூரியில் புள்ளியியலில்
பிஎஸ்சி (ஹானர்ஸ்), எம்எஸ்சி படித்துப் பின் கல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளியல்
கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாணவப் பருவத்திலேயே கணிதத்தில் மேதையாகத் தன்
சகமாணவர்களாலும் ஆசிரியர்களாலும் கருதப்பட்ட வரதன் இந்தியப் புள்ளியியல் கழகத்தின்
தொடக்கக் காலத்திலேயே முனைவர் பட்டம் பெற்றவர்களில் ஒருவர். அமெரிக்காவில்
குடியேறியதிலிருந்தே நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கோரண்ட் கணிதத் துறையில்
பணியாற்றுகிறவர். அத்துறையில் தலைவராகவும் பல ஆண்டுகள் இருந்தவர்.
அமெரிக்கா உண்மையிலேயே பெருமைப்படக்கூடிய, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய, கணித
மேதை என்று வரதன் புகழப்பட்டவர். அமெரிக்காவின் பெருமதிப்பிற்குரிய பிர்காஃப் பரிசு
உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள வரதன் பங்களிப்பாற்றியுள்ள கணிதத் துறையான
சாத்தியக்கூற்றியல் கோட்பாடு (Probability
Theory) புள்ளியியல்
துறைக்கே அடித்தளம்.
கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க அகாடமி, மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல்
அகாடமி, ராயல் அகாடமி உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளில் உறுப்பினாராயிருந்தவர்
வரதன். மேலே குறிப்பிட்ட ஃபீல்ட்ஸ் விருதுக் கமிட்டித் தேர்வுக்குழு உறுப்பினர்
கௌரவத்தையும் பெற்றவர் அவர்.
வரதனின் கண்டுபிடிப்புகளைச் சிறு குறிப்பு ஒன்றில் விளக்கிவிட முடியாது. அவரது
ஆய்வு முடிவுகள் சாத்தியக் கூற்றியலில் மட்டுமல்லாது, குவாண்டம் இயற்பியல், நிதிக்
கோட்பாட்டியல் போன்ற பல துறைகளில் பயன்படுவதோடு, அத்துறைகளின் பல்வேறு சிக்கல்களை
மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.
ஏபல் பரிசுக்காக வரதனைத் தேர்ந்த Norwegian Academy of Science and Lettersஇன்
குறிப்பு:
"Varadhan's theory of large deviations provides a unifying and efficient method
for clarifying a rich variety of phenomena arising in complex stochastic
systems, in fields as diverse as quantum field theory, statistical physics,
population dynamics, econometrics and finance, and traffic engineering. It has
also greatly expanded our ability to use computers to simulate and analyze the
occurrence of rare events. Over the last four decades, the theory of large
deviations has become a cornerstone of modern probability, both pure and
applied.
"Varadhan's work has great conceptual strength and ageless beauty. His ideas
have been hugely influential and will continue to stimulate further research for
a long time" என்கிறது. ஏபல் பரிசுத் தொகை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அமெரிக்க
டாலர்.
வரதனுடைய துணைவியார் வசுந்தரா நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியை. அவர்களுக்கு
இரண்டு மகன்கள்: அசோக், கோபால். துரதிருஷ்டவசமாகக் கோபால், 2001 செப்டம்பர் 11ஆம்
நாள் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் இறந்துவிட்டார்.
உள்ளடக்கம்