Google   www kalachuvadu.com

 

திரை: பெரியார்

பொதுப் புத்தி சார்ந்த பதிவு

பழ. அதியமான்

பெரும் கலகக்காரராக விளங்கிய பெரியார் போன்ற தனித்துவம் மிக்க ஆளுமைகளின் வாழ்வைப் பல்வேறு வடிவங்களில் பதிவுசெய்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது வரலாற்றுக் கடமை. பெரியாரின் 1939 வரையிலான வாழ்க்கையைத் "தமிழர் தலைவர் பெரியார்" என்னும் நூலில் சாமி சிதம்பரனார் அளித்திருக்கிறார். அதற்குப் பிறகான அவரது வாழ்க்கையைப் பின்னால் வந்த அரசாங்கங்களும் தனிப்பட்ட சிலரும் எழுத முயன்று தோல்வியைப் பூரணமாகத் தழுவி நிற்கின்றனர். சிந்தனைகளைத் தொகுப்பதே பெரும் வேலையாகிவிட்டது. இதன் தொடர்பில் வே. ஆனைமுத்துவும் எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் தமிழ்நாட்டின் நன்றிக்குரியவர்கள். புத்தகத்துள் அடைபடாத வாழ்க்கையை ஞானராஜசேகரன், சினிமாவுக்குள் அடைத்துக்கொடுக்க முன்வந்தது பெரிய நம்பிக்கையைத் தருகிறது. அதற்கு அரசும் முன் உதாரணம் இன்றித் தாராளமாக நிதி உதவி செய்தது தமிழகத்தின் நல்லூழ்.

பின்புலத் தகவல்கள், ஆதாரங்கள், பணம், தொழில்நுட்பம் போன்றவை பெரியார் பட இயக்குநருக்குப் பிரச்சினை அல்ல. பெரியார் ஆயுள் முழுவதும் எதிர்த்த ஆதிக்கச் சாதியின் மன ஒதுக்கலுக்கு ஆளாக நேரிடலாம் என்பதைத் தவிரப் புறவயமாகப் பாதிக்கும் அம்சம் எதுவும் இல்லை. பின்வரும் அகவயமான சில பிரச்சினைகள் இருந்திருக்கலாம்.

1. பெரியாரின் வாழ்க்கை 94 ஆண்டுகள் என்னும் நீண்ட அளவினது. பெரியாரே சொன்னதுபோலச் சராசரி மனித ஆயுளின் இருமடங்கு.

2. நூல்களில் பதிவாகி, பரவலாக அறியப்பட்டு, சமூக மனத்தில் ஏற்கனவே பலவிதப் பார்வைகளுடன் ஆழமாகப் பதிவாகிவிட்டது பெரியாரின் வாழ்க்கை. அவரோடு தொடர்பும் அணுக்கமும் உடையவர்களின் பார்வையிலிருந்து அவரை முற்றாகப் பிரித்தெடுத்து, இயக்குநரின் பார்வையில் தர முடியாத, தவிர்க்க முடியாத சூழலின் பெருஞ்சுமை.

3. அதோடு, பெரியாரோடு தொடர்புடைய ஆளுமைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதும் பொதுப் புத்தி சார்ந்த பதிவுகளுடன் அவர்களைப் பதிவுசெய்ய வேண்டியதுமான நிர்ப்பந்தம்.

இவை போன்ற சிரமங்கள் தமிழ்ச் சூழலில், இப்படிப்பட்ட அரசியல் படத்தை எடுப்பதில் இருந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவை காலத்தைத் தாண்டி நிலைக்க வேண்டிய ஓர் அரசியல் வரலாற்றுப் படத்தைப் பாதிக்கக் கூடாது, ஆனால், பாதித்துவிட்டன.

பெரியாரின் தனித்துவம் மிக்க ஆளுமை, தமிழ்நாட்டு அரசியல், சமூகச் சூழல்களிலிருந்து உருவானது. பன்முக ஆற்றல் பெற்ற அந்த ஆளுமையின் வளர்ச்சியை இயல்பான சூழலில் இந்த அரசியல் வரலாற்றுப் படத்தில் பார்வையாளன் எதிர்பார்ப்பான்.

பெரியாரின் வெற்றி பெற்ற சமூக வாழ்க்கையின் அடிநாதம் படம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அதன் ஒளி படத்தின் எல்லாக் காட்சிகளிலும் நிரவிப் பரவ வேண்டும். புராணம், இதிகாசம், சாஸ்திரம், பார்ப்பனர், ஆண், சாதி, அன்னிய மொழி, பொருளாதாரம் இவற்றின் மேலாதிக்கத்தால் நசுக்குறாத பெரும்பான்மை மக்களின் இயல்பான சமத்துவ வாழ்வே பெரியாரின் வாழ்க்கை இலட்சியம். அவரது கட்டற்ற சுதந்திர உணர்வு, எந்தப்புறச் சார்பும் இன்றி எதையும் பார்க்கும் பார்வை, சுயநலம் என்பதன் காற்றுகூடப் படாத பொது நலம் . . . போன்ற இயல்புகளால் உருவானது அவரது பெருவாழ்வு.

இப்படிப்பட்ட ஒரு சித்திரத்தை எதிர்பார்த்துப் படத்தைப் பார்க்கப் போகும்போது, நமக்கு நேரும் உணர்வுகள் வருத்தம் சார்ந்தவை. பெரியாரின் வாழ்க்கையில் ஊடுருவி இருந்த அரசியல் பார்வை இப்படத்தில் தொடர்ச்சியாகப் பேணப்படாதது ஓரு பெருங்குறை.

ஜனரஞ்சகமான திரைப்படங்களில் வருவன போன்ற சம்பவங்களால் 1925 வரையிலான அவரது வாழ்க்கை காட்டப்படுகிறது. அதற்குப் பிறகு காட்சித் திணிப்புகளால் படம் திணறுகிறது. பின் திடுமென முடிகிறது.

பெரியாருடைய மனைவி நாகம்மாவைக் கோயிலில் கிண்டலும் ஏளனமும் செய்யும் ஒரு காட்சி படத்தில் வருகிறது. சாமியிடம் பாதுகாப்புக் கிடைக்காது, ஆசாமியிடமே சரணடைய வேண்டியிருக்கும் என்பதைப் பெரியார் போதிப்பதற்கு அக்காட்சியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குநர். மனைவியின் கோயிலுக்குச் செல்லும் பழக்கத்தை நிறுத்த எந்தக் கணவனும் எண்ணாத, நண்பர்களைவிட்டுக் கேலிசெய்யும் அந்த ஏற்பாட்டைச் செய்தவர் பெரியார்தான் என்பது படம் பார்ப்பவருக்குத் தெரியாது. கோயில் காமாந்தகர்களின் கூடாரமாகிவிட்டது. அதைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தன் மனைவி உணர வேண்டும் என்று பெரியார் தானே செய்த ஏற்பாடு அது என்பது படத்தில் பதிவாகவில்லை.

பெரியாரின் 'காசி யாத்திரை' குறித்த சாமி சிதம்பரனார் தரும் - பெரியாரே அங்கீகரித்த - புத்தகச் செய்தி பார்ப்பனர்களின் மனம் நோகாதிருக்க அரைகுறையாகப் படத்தில் வருகிறது.

மணியம்மை பெரியாரின் உடல் நலத்தில் காட்டும் அக்கறையும் கவனமும் மிக விரிவாகப் படத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அது இந்து மதம் வற்புறுத்தும் ஒரு இந்துப் பெண்ணின் பதிவிரதா அம்சத்தை, கணவருக்குச் செய்யவேண்டிய சிசுருஷையை நினைவுபடுத்துகிறது. உண்மையில் மணியம்மையார் சீர்திருத்த ஆர்வம் மிக்கவர். சமூகச் சீர்திருத்தங்களில் பெரியார் தொடர்ந்து செயல்பட உதவுவதே அவரது நோக்கம். மணியம்மையின் இவ்வகைச் செயற்பாடுகள் காட்சிப்படுத்தப்படவில்லை.

1924இல் சேரன்மாதேவி குருகுலம் தொடர்பான விவாதக் காட்சியில் இராஜாஜி, டி.எஸ்.எஸ். ராஜனோடும் க. சந்தானத்தோடும் வெளியேறும் போது, கூட்டத்தில் வ.வே.சு. ஐயர் அமர்ந்திருப்பதுபோலக் காட்டப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட நேர்வின் போது, ஐயர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

கிறீக்ஷீமீணீபீஹ் tஷீறீபீ என்பதை tஷீறீபீமீபீ என்று சொன்னால் என்ன எனக் கேட்பதில் மொழியின் செயல்பாடு குறித்த பெரியாரின் ஆழமான புரிதல் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஏன் அண்ணா மலங்க மலங்க விழிக்கிறார் எனத் தெரியவில்லை. இந்தப் படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இல்லாத குறையை அண்ணா வரும் காட்சிகள் போக்கிவிடுகின்றன.

கருணாநிதி, எம்.ஜி.ஆர். . . . இவர்கள் போன்று வேறு சிலரும் இடம் பெறும் காட்சிகள் திணிக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன. அவை பெரியாரின் ஆளுமையைச் சிறிதேனும் உயர்த்துவதாகத் தெரியவில்லை. பெரியாரின் இறுதி ஊர்வலம் தொடர்பில் அரசு மரியாதை தரும் முடிவு, கலைஞரின் தைரியத்தைக் காட்டப் பயன்படுகிறதே தவிர மகாத்மாவோடு ஒப்பிடப்படும் பெரியாரின் ஆளுமையை உயர்த்த எவ்விதத்திலும் உதவவில்லை.

பெரியாரின் அரசியல், படத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. காட்சியாக வந்த சிலவும் வரலாற்றுப் பின்னணியில் தெளிவாகாமல் துண்டு, துக்காணிகளாக நிற்கின்றன. அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை அவர் ஆதரித்தது, உப்புச் சத்தியாகிரகத்தை எதிர்த்தது, கேதரைன் மேயோவின் நூலுக்குக் கோவை அய்யா முத்துவும் பெரியாரும் செய்த கடுமையான எதிர்வினைகள், சென்னை இராயப்பேட்டை லஷ்மிபுரம் யுவர் சங்கக் கூட்டப் பேச்சு . . . இப்படி அரசியல் அம்சம் உள்ள சமூகக் கருத்துகளும் படத்தில் முற்றாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன. அவரது இலங்கைப் பயணம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

பெரியார் என்றதும் பொதுப் புத்தியின் நினைவுக்குவரும் சம்பவங்கள், சொல்லாடல்கள் அனைத்தும் இடம் பெறுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். பெரியாரோடு தொடர்புகொண்ட எல்லாப் பெயர்களும் படத்தில் உச்சரிக்கப்பட்டுவிட்டன. குடியரசு இதழைப் பெரியார் தொடங்கியபோது, அவருடன் ஆசிரியராக இருந்த தங்கப்பெருமாள் பிள்ளையின் பெயரை எங்கும் காணோம். பெரியாரின் அண்ணன் பெயரும் வேண்டிய அளவு இல்லை.

பல இடங்களில் வசனங்கள் கருத்து நிலையில் முற்றுப் பெறவில்லை. பெரியாரின் பேச்சைக் கேட்போரின் எதிர்வினைகள் அநேகக் காட்சிகளில் காணக் கிடைப்பதே இல்லை. பெரியாரைப் பற்றிய படத்தில்கூட கிளப் டான்ஸைத் தவிர்க்கும் சூழல் தமிழ் சினிமாவில் இல்லை.

சத்யராஜுக்கு முன்பகுதியைவிடப் பின்பகுதியில் வேடம் பொருத்தமாக இருக்கிறது. அவர் பேசும் இடங்களைவிடப் பேசா இடங்கள் பிரமாதம். காங்கிரசில் பெரியாரைச் சேர்ப்பதற்காகப் பேச வரும் இராஜாஜியும் முப்பது வருடம் கழித்து கவர்னர் ஜெனரலாக வரும் இராஜாஜியும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். 1919இலேயே இராஜாஜி 'கூடிக் கிழப்பருவம்' எய்தியிருக்கிறார். படத்தில் வரதராஜுலு நாயுடு வரும் மூன்று காட்சிகளிலும் அவர் மாற்றமில்லாமல் இருக்கிறார், உடை உள்பட.

மதம் மாறியவர்களிடம் போதனை, வரலாறு தெரிந்தவர்களுக்கு நினைவூட்டல் என்கிற முறையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. புதிய பார்வையாளனுக்குள் 'பெரியார்' எந்த அளவுக்கு உள்ளே போயிருப்பார் எனத்தெரியவில்லை. சத்யராஜ் 'லொள்ளின்' நீட்சியாகவே பெரியார் பதிவாகிவிட்டிருப்பாரோ எனப்பயமாக இருக்கிறது. இது எவ்வளவு ஆபத்தானது!

உள்ளடக்கம்

Google Ads.....


Google