 |
மூன்றாவது கண் :
த ஹிண்டு தலையங்கம்
பத்திரிகைச் சுதந்திரம் மீதான கொலைவெறித் தாக்குதல்
தமிழில்: திவாகர்
ரங்கநாதன்
முதல்வர் மு. கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கு விசுவாசமான ஆட்கள் கலாநிதி
மாறனின் சன் டி.வி. மற்றும் தமிழ் நாளேடு தினகரனின் மதுரை அலுவலகத்தில் தீவைத்து,
சூறையாடி, கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும்
பத்திரிகைச் சுதந்திரம் குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. ரவுடிகள் அந்த
அலுவலகங்களை நாசமாக்கி, பெட்ரோல் குண்டுகளை வீசி, நிராதரவான ஊழியர்களை
அடித்துக்கொண்டிருக்க, காவல் துறையினர் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இத்தாக்குதலுக்கான தூண்டுதல், தினகரன் வெளியிட்ட ஓர் ஆய்வின் முடிவுகளில்
கண்டிருந்த விஷயங்கள். 'கலைஞரின் அரசியல் வாரிசு யார்?' என்று அந்த ஆய்வில்
கேட்கப்பட்டிருந்தது. ஆய்வு முடிவுகளின்படி திரு. அழகிரி, அவர் தனது கோட்டையாகக்
கருதும் மதுரையில் ஆறு சதவீத ஆதரவும் மாநில அளவில் இரண்டு சதவீதமும் சென்னையில் மிக
அவமானகரமாக பூஜ்ய சதவீதமும் பெற்றிருந்தார். அவரது தம்பியும் திரு. அழகிரியின்
அரசியல் போட்டியாளருமான மு.க. ஸ்டாலின் மாநிலம் தழுவி 70 சதவீத ஆதரவும் சென்னையில்
68 சதவீதமும் மதுரையில் ஒரேயடியாக 67 சதவீதமும் பெற்றிருந்தார். பெயரிடப்படாத "பிற"
என்ற பிரி வினருக்கு மாநில அளவில் 20 சதவீதமும் சென்னையில் 31 சதவீதமும் இருப்பதாகக்
காட்டப்பட்டது.
சென்ற ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து திரு. அழகிரி மதுரை மாவட்டத்தில்
அரசியல் சாசனம் சாராத அதிகார மையமாக இயங்கிவருவதால், அழகிரி கோஷ்டியின்
உறுப்பினர்கள் என்று வெளிப்படையாக அறியப்பட்ட சிலரது தலைமையில் வந்த குண்டர்களுக்கு
எதிராகச் செயல்படக் காவல் துறையினர் தயங்கினர். தாக்குதலைத் தடுக்க
முடிவுசெய்வதற்கு முன் முதல்வரின் அலுவலகத்திலிருந்து "அரசியல் அனுமதி"
பெறுவதற்காகப் பெரிய காவல் துறை அதிகாரிகள் காத்திருந்தது அதிர்ச்சியூட்டுகிறது.
திரு. கருணாநிதி அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு அனுமதி தருவதற்குள் சூழ்நிலை
கட்டுக்கு மீறிப் போய்விட்டிருந்தது. அந்த ஊடகக் குழுமத்தின் இரண்டு ஊழியர்களும்
ஒரு காவலரும் கொல்லப்பட்டிருந்தனர். சன் டி.வி. தன் செய்தி அறிக்கையில்,
குழுமத்தின் மதுரை அலுவலகத்தில் தனது குண்டர்களை ஏவியதாகத் திரு. அழகிரியை
நேரடியாகக் குற்றம்சாட்டியது. உறுதிமிக்க நிர்வாகி என்னும் தகுதியான புகழைச்
சம்பாதித்திருக்கும் முதல்வர் கருணா நிதி இந்த முக்கியத் தருணத்தில் என்ன செய்ய
வேண்டும் என்பது குறித்துத் தடுமாற்றம் கொள்ளக் கூடாது. அவர் சொந்த
விருப்பங்களையும் உணர்வுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுச் சட்டம் தனது வழியில் செயல்பட
வழிசெய்ய வேண்டும். அதாவது, தீவைப்பிலும் கொலையிலும் முடிந்த அந்த வன்முறைச்
சம்பவத்தில் திரு. அழகிரிக்கும் அவருக்கு நெருக்கமான அடியாட்களுக்கும் இருந்த பங்கு
குறித்து விசாரணை செய்ய வேண்டும். இந்தச் சம்பவங்களுக்குக் கீழ்மட்டத்
தொண்டர்கள்மீதோ சமூகவிரோத சக்திகள் மீதோ பழிபோட்டுவிடலாம் என்று கட்சிக்குத்
தோன்றலாம்; ஆனால் அது மக்களுக்குக் காவல் துறை மீதும் அரசுமீதும் உள்ள
நம்பிக்கையைப் பலவீனப்படுத்திவிடும். முன்பே ஒரு கொலை வழக்கில்
சம்பந்தப்பட்டிருக்கும் திரு. அழகிரிக்கு மோசமான ஒரு பின்புலம் இருக்கிறது: 2000இல்
திரு. கருணாநிதி அவரை அரசியல் ரீதியாகக் கைகழுவியபோது, அழகிரி வன்முறையைத் தூண்டி
வலுக்கட்டாயமாகக் குடும்பத்திற்குள் சமரசத்தை ஏற்படுத்தினார்.
சன் டி.வி.-தினகரன்மீதான தாக்குதல்கள், தமிழ் நாட்டில் ஊடகத்தின் பலவீன நிலையை
அம்பலப்படுத்துகின்றன. அதிகாரத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களால் விமர்சனத்தையும்
எதிர்ப்பையும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. சில சமயங்களில் அவர்கள் அவற்றுக்குக்
குரூரமான முறையில் எதிர் வினையாற்றுவதும் உண்டு. அரசுகள் மானநஷ்ட வழக்குகளையும்
சட்டமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானங்களையும் அரசு விளம்பரங்களைத் தருவதை
நிறுத்திவைப்பதையும் பத்திரிகைகளுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்துவது போக,
ஆளும் கட்சிகளுக்குள் இயங்கும் சக்திகள் ஊடகத்திற்கு எதிராக அச்சுறுத்தல், மிரட்டல்
மட்டுமின்றி ஆள் பலத்தைப் பிரயோகிப்பதிலும்கூட இறங்குவதை அதிகாரத்துடன் வரும்
கொசுறுகளில் ஒன்றாகப் பார்க்கின்றன. புதன் கிழமையன்று நடந்த அந்தத் துயரமான
சம்பவத்தில், கருத்துக் கணிப்பு ஒன்றில் கண்டறியப்பட்டவற்றை வெளியிட்டதற்காகத்
தினகரன் கொலைவெறியுடன் தாக்கப்பட்டது. அக்கருத்துக் கணிப்பின் நம்பகத் தன்மை எப்படி
இருந்தாலும் சாதகமான அம்சங்கள் என்னவாக இருந்தாலும் விநோதமான, அரசியல் நோக்கமுள்ள
கேள்விகளை அது எழுப்பியிருந்தாலும் திரு. அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்
வினையாற்றிய முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது - முதல் நிலை
ஆதாரத்தில் அது காவல் துறையின் கிரிமினல் மெத்தனமாகவே தெரிகிறது. ஜனநாயகத்திலும்
சட்டத்தின் ஆட்சியிலும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் சன் டி.வி.-தினகரன்மீதான
தாக்குதலைச் சில ஊடகக் கருத்தாளர்களும் அரசியல் சார்புள்ளவர்களும் கூறுவதுபோல்
குடும்பத் தகராறாகக் கருதாமல் ஊடகச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினையாகக் கருதிச்
செயல்பட வேண்டும். மதுரையில் அந்தத் தீவைப்புக்கும் கொலைக்கும் காரணமான
குண்டர்களையும் அவர்களது அரசியல் எஜமானர்களையும் தப்பிக்க விட்டால், அது
எதிர்காலத்தில் மற்றவர்கள் ஊடகத்தைக் குறிவைக்கத் துணிச்சலைத் தந்துவிடும்.
இந்தக் கோரச் சம்பவத்தால் தான் ஆடிப்போயிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட
முதல்வர் கருணாநிதி, தாக்குதலை மட்டுமின்றி அந்தக் கருத்துக் கணிப்பைப்
பிரசுரித்ததற்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்; தனது அரசியல் வாரிசு பற்றிய
பேச்சே எழக் கூடாது என்று கூறியிருக்கிறார்; தனது கட்சி ஒரு ஜனநாயக அமைப்பு என்றும்
இத்தகைய பேச்சுக்கு அதில் இடமில்லை என்றும் வலியுறுத்தியிருக்கிறார். இப்போது அவரது
அரசின் நற்பெயர் பலவீனமடையக் கூடாது என்றால், தவறு செய்யும் தனது மகனுக்கு அவர்
தகுந்த தண்டனை அளித்து மற்றவர்கள் அவரைப் பின்பற்றாத வகையில் தடுக்க வேண்டும்.
திறமையான நிர்வாகத்திற்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களைச் சிறிதும்
சார்ந்திராத வளர்ச்சிப் போக்கிற்கும் பேர்போன மாநிலமான தமிழகம், அரசியல் சாசனம்
சாராத அதிகார மையங்கள் அனைத்தையும் நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிமீதான
முறையற்ற குறுக்கீடுகளையும் உடனடியாக ஒழித்தாக வேண்டும். அரசியல் செல்வாக்கும் ஆள்
பலமும் கொண்டவர்களுக்கு எதிராகச் சட்டத்தைப் பின்பற்றிச் செயல்படுவதில் தனக்குள்ள
இயலாமையைத் தமிழகக் காவல் துறை மீண்டும் ஒரு முறை காட்டிக் கொண்டுவிட்டது. முதல்வர்
கருணாநிதி தனது நிர்வாகத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள மதுரைச் சம்பவம்
குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவது நல்லது. அரை நூற்றாண்டுக் காலம் சட்டமன்ற
உறுப்பினராக இருந்து குறிப்பிடத்தக்க ஒரு ஜனநாயக மைல்கல்லை எட்டியவர், இந்தத்
துயரச் சம்பவம் அந்தச் சாதனைக்குக் களங்கம் விளைவிக்கவோ அதைப் பாதிக்கவோ
அனுமதிக்கக் கூடாது.
நன்றி: த ஹிண்டு நாளிதழ், 10.05.2007
n n n
பத்திரிகையாளர் தீர்மானம்
சென்னை நிருபர்கள் சங்கம், சென்னைப் பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு
பத்திரிகையாளர் சங்கம், தேசியப் பத்திரிகையாளர் சங்கம், ஏஎம்ஜேஏ, தமிழ் நாடு
பத்திரிகை மற்றும் புகைப்படக் கலைஞர் சங்கம், சென்னை பிரஸ் கிளப் ஆகிய அமைப்புகளின்
தலைவர்களும் பொறுப்பாளர்களும் கையொப்பமிட்ட அறிக்கை. நாள்: 10.05.2007.
தமிழ்நாட்டின் பல இடங்களில், குறிப்பாக மே 9, 2007 அன்று மூன்று உயிர்கள்
பலியிடப்பட்டுப் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட மதுரையில்,
தினகரன் குழுமச் செய்தித்தாள்கள்மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலைத் தமிழகப்
பத்திரிகையாளர் அமைப்புகளான நாங்கள் கண்டிக்கிறோம்.
தமிழக முதல்வர் இச்சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. புலனாய்வு நடத்த
உத்தரவிட்டிருப்பதையும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
வழங்கியிருப்பதையும் நாங்கள் (சென்னை நிருபர்கள் சங்கம், சென்னைப் பத்திரிகையாளர்
சங்கம், தேசியப் பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம், அனைத்து
ஊடகப் பத்திரிகையாளர் சங்கங்கள், சென்னை பிரஸ் கிளப், தமிழ்நாடு பத்திரிகை
புகைப்படக் கலைஞர்கள் சங்கம்) வரவேற்கிறோம். இருப்பினும், இந்நடவடிக்கைகள் போதாது
என்று நாங்கள் கருதுகிறோம். இச்சம்பவங்களின்போது சில காவல் துறை அதிகாரிகள்,
குறிப்பாக மதுரையில், அக்கறைகாட்டாமல் இருந்தார்கள் என்னும் குற்றச்சாட்டு குறித்து
முழுமூச்சிலான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
மதுரையிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஒரே சமயத்தில் நடந்த
காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், அவை சதியாளர்கள் குழு ஒன்றினால் முன்பே
திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இத்
தாக்குதல்களில் நேரடியாகப் பங்கேற்றுத் தாக்கியவர்கள்மீது மட்டும் நடவடிக்கை
எடுக்கப்பட்டால் போதாது. இச்சதிக்குப் பின்னணியில் இருந்தவர்களை, அவர்கள் எவ்வளவு
உயர்ந்த இடத்தில் இருந்தாலும், காவல் துறை அடையாளம் கண்டு, தேடிப் பிடித்து,
உடனடியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். பத்திரிகை சுதந்திரம்
பாதுகாக்கப்படுவதையும் சட்டம் மற்றும் நீதியின் ஆட்சி மீட்கப்படுவதையும்
உறுதிசெய்ய, மதுரையிலும் பிற இடங்களிலும் காவல் துறையின் மெத்தனத்திற்குப்
பொறுப்பான காவல் துறை அதிகாரிகள் உடனடியாகத் துறைவழி நடவடிக்கைகளுக்கு
உட்படுத்தப்பட வேண்டும். மதுரைச் சம்பவத்திற்குக் காரணமானவர்களைத் தெளிவாக அடையாளம்
காட்டிச் சதியாளர்களின் பெயர்களையும் தந்திருக்கும் தினகரன் செய்தி ஆசிரியர் திரு.
முத்துப்பாண்டியன் பதிவுசெய்த புகாரின் அடிப்படையில் மதுரையில் உள்ள ஒத்தக்கடை
காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப் பட வேண்டும் என்றும் நாங்கள்
வலியுறுத்துகிறோம். உதவி ஆய்வாளர் ஒருவர் தந்த தகவலின் அடிப்படையில் முதல் தகவல்
அறிக்கை ஒன்றைப் பதிவுசெய்வது நீதியை முடக்குவதாகும். திரு. முத்துப் பாண்டியன்
தந்த புகாரின் அடிப்படையில் புலனாய்வு நடத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிடப்பட
வேண்டும். தமிழகத்தில் சுதந்திரம் நிலைநிற்க, மதுரையில் அரசியல் சாசனம் சாராத
அதிகாரம் கொண்டவர் சட்டப்படி விசாரிக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படத் தமிழக முதல்
வரும் காவல் துறையும் வழிசெய்ய வேண்டும். சதியாளர்கள், தாக்குதல் நடத்தியவர்கள்,
அவர்களது தொடர்பாளர்கள் ஆகியோரின் செல் ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சதிக்குப்
பின்னணியில் இருந்தவர்களை அம்பலப்படுத்த அவற்றில் உள்ள தகவல்கள் குறித்து முழு
மூச்சிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இந்நடவடிக்கைகள்
அனைத்தும் இன்றிரவோ அல்லது 2007 மே 11 வாக்கிலோ மேற்கொள்ளப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தவும் சதியாளர்களிடமிருந்து தீவிர அபாயத்தை
எதிர்கொண்டிருக்கும் தினகரன் ஊழியர்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும் இதழியல்
அமைப்புகளாகிய நாங்கள் 2007 மே 12 (சனிக்கிழமை) அன்று மதியம் 3 மணியளவில்
மயிலாப்பூர் லஸ் அருகில் கச்சேரி சாலையில் அமைந்த தினகரன் அலுவலகத்திலிருந்து
தமிழகக் காவல் துறை இயக்குநரகம்வரை பேரணி செல்ல அழைப்பு விடுத்திருக்கிறோம்.
இப்பேரணி அமைதியாக நடக்கும். சென்னையில் உள்ள அனைத்து இதழியலாளர்களும் இதில்
பங்கேற்பார்கள்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை ஆதரவு நடவடிக்கைகள் தொடரும் என இன்று சென்னை
நிருபர்கள் சங்கத்தின் அலுவலகக் கட்டடத்தில் நடந்த கூட்டத்தில்
முடிவுசெய்யப்பட்டது.
n n n
மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன், மனித உரிமைக்கான
குடிமக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சே. இராசன் சேர்ந்து அளித்த,
10.05.2007 நாளிட்ட கண்டன அறிக்கையின் சில பகுதிகள்.
'தினகரன்' நாளிதழில் 'கலைஞரின் அரசியல் வாரிசு யார்?' என்ற கருத்துக் கணிப்பு
09.05.07இல் வெளியிடப்பட்டது. அமைச்சர் ஸ்டாலின் 70 சதவிகிதமும் மு.க. அழகிரி 2
சதவிகிதமும் பெற்றுள்ளதாக வெளியிடப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மு.க. அழகிரி
ஆதரவாளர்கள் மதுரை நகரில் வன்முறையில் இறங்கி அரசு பேருந்துகளை அடித்து நொறுக்கி,
'தினகரன்' நாளிதழ்களை எரித்தனர்.
தொடர்ந்து, கடைகளை அடைக்கக் கூறி ரவுடிகள் களத்தில் இறங்கிக் கடைகளை மூடியுள்ளனர்.
பொது மக்களை அடித்து விரட்டி நடமாட முடியாது செய்துள்ளனர். மதுரை மக்களை அடித்து
விரட்டிக்கொண்டிருந்த ரவுடிகள் 'தினகரன்' அலுவலகம் சென்றனர். அங்கு ஊமச்சிக்குளம்
டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் பாதுகாப்பில் 25 போலீசார் ஈடுபட்டிருந்தனர். காவல்
துறையினர் இருப்பதை அறிந்து அவர்களது துணையோடு தினகரன் அலுவலகம்மீது பெட்ரோல்
குண்டுகள் வீசித் தீயிட்டு அடித்து நொறுக்கியது ரவுடிகள் கும்பல்.
இதில் 'தினகரன்' நாளிதழில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள் கோபிநாத், வினோத்குமார்,
முத்துராமலிங்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். மதுரை நகரில் மிகவும் பதட்டமான
சூழ்நிலையும் பாதுகாப்பற்ற நிலையும் கடந்த இரு நாட்களாக நிலவிவருகின்றன. மக்கள்
நடமாட முடியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பத்திரிகைச் சுதந்திரம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதை இச்சம்பவம்
உணர்த்துகிறது. ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது. பத்திரிகையாளர்கள்மீது நடந்த
தாக்குதல் மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும்.
காவல் துறையினர் ஒத்துழைப் போடுதான் இச்சம்பவம் நிறைவேறியுள்ளது. மதுரை நகர்
மற்றும் மாவட்டக் காவல் துறை செயல்படாத நிலையில் கடந்த இரு நாட்களாக உள்ளன.
மாவட்ட நிர்வாகமும் செயல்படாத நிலையில் உள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி ரவுடிகள்
கையில் உள்ள மதுரை மாநகரை மீட்டு சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்து
நடவடிக்கை எடுக்க மக்கள் கண்காணிப்பகமும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கமும்
தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
சட்டத்தின் ஆட்சியை நடத்த உடனடியாகத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவுடியிசத்தை ஒழித்து, மக்கள் அச்சமின்றி பணிபுரிய உரிய சூழ் நிலையை உருவாக்க
வேண்டுமென மக்கள் கண்காணிப்பகமும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கமும்
கேட்டுக்கொள்கின்றன.
உள்ளடக்கம் |
|