|
பதிவு:
அமெரிக்க மிஷிகன் பல்கலைக்கழகத்தில்
'திராவிடச் சான்று' நூல் வெளியீடு
சலபதி
திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கத்தைக் கால்டுவெல்லுக்கு முன்பே
எடுத்துரைத்த எல்லிஸைப் பற்றிய தாமஸ் டிரவுட்மனின் 'திராவிடச் சான்று' என்ற அரிய
நூலைக் காலச்சுவடு பதிப்பகமும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும்
(எம்.ஐ.டி.எஸ்.) இணைந்து வெளியிட்டுள்ளன (தமிழாக்கம்: இராம. சுந்தரம்). இதன்
வெளியீட்டு விழா 11 மே 2007 அன்று அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக் கழகத்தில்
நடைபெற்றது.
தென்னிந்திய வரலாற்றுக்குப் பெரும் பங்காற்றிய மெக்கன்ஸி, எல்லிஸ் ஆகியோரை
மையமாகவைத்து 'சென்னைக் கீழைத்தேயவியல் பள்ளி' என்ற பொருளில் தாமஸ் டிரவுட்மன்
இருநாள் கருத்தரங்கினை ஒழுங்குசெய்திருந்தார். முதல் நாள் மாலையில் கொலம்பியா
பல்கலைக்கழகப் பேராசிரியர் நிக்கலஸ் டர்க்ஸ் 'திராவிடச் சான்று' நூலை வெளியிட,
மிஷிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர் மாதவ தேஷ்பாண்டே முதற்படியைப் பெற்றுக்
கொண்டார்.
1970களின் இடைப்பகுதியில் மெக்கன்ஸியைப் பற்றித் தாம் ஆராயத் தொடங்கியதை
நினைவுகூர்ந்த நிக்கலஸ் டர்க்ஸ், அதன் எல்லைகளை விரிவுபடுத்தி, எல்லிஸின்
பங்களிப்பை ஆழமாக எடுத்துரைக்கும் நூலை எழுதியமைக்காக நூலாசிரியரைப் பாராட்டினார்.
முதற்படியைப் பெற்றுக்கொண்ட மாதவ தேஷ்பாண்டே 'திராவிடச் சான்று' நூலில் இழையோடும்
மொழியியல் புலமையைக் கவனப்படுத்தினார். கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வாசித்த
ஆ.இரா. வேங்கடாசலபதி, நூலாசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து, தமிழ்ச் சூழலில்
நூலின் முக்கியத்துவம் பற்றிச் சில சொற்கள் கூறினார். தன்னடக்கம் மிகுந்த தாமஸ்
டிரவுட்மனின் ஏற்புரையுடன் வெளியீட்டு விழா நிறைவுற்றது.
உள்ளடக்கம் |