|
நிகழ்த்துகலை
காத்திருத்தலின் கலை அனுபவம்
அநிருத்தன்
வாசுதேவன்
சென்னையில் மார்ச் மாதம் ப்ரக்ருதி அமைப்பு ஒழுங்கு செய்திருந்த "பெண்களின்
பாலியல்" கருத்தரங்கின் பகுதியாக, அமெரிக்காவில்
Post Natyam குழுவைச்
சேர்ந்த சாண்ட்ரா சாட்டர்ஜீ இன்னமும் வடிவம் பெற்றுவரும் தன் நிகழ்த்துகலைப்
படைப்பான Waiting for Rasikaவை (ரசிகருக்காகக் காத்திருத்தல்)
வழங்கினார். அன்று காலை (16 மார்ச்), சென்னை சேமியர்ஸ் சாலையில் உள்ள அனோகி அரங்கில்
நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்கத்தில் கலந்துகொண்டவர்களுக்கு "ரசிகருக்காகக்
காத்திருத்தல்" என்ற இந்தத் தலைப்பு நிச்சயமாக ஒரு முக்கியமான பரிமாணத்தில் எதி
ரொலித்திருக்கும்! சமீபத்தில் மறைந்த சந்திரலேகாவின் கூற்றுகள் சிலவற்றை ஒலிநாடாவில்
அன்று காலை கேட்டோம்.
அதில் சந்திரலேகா வெகு தீர்க்கமாக இவ்வாறு கூறியிருந்தார்: "ஒரு
படைப்பாளியாக, கலைஞராக என்னால் பாதி தூரம்தான் வர முடியும். மீதியைக் கடப்பது
பார்வையாளரின், வாசகரின் முனைப்பில்தான் நடக்கும்." தன் ஒரு பகுதியை ஒரு வடிவத்தில்
மற்றவர் முன் வைத்து, அப்பொழுதில் எந்தவிதத் தற்காப்பும் இன்றி, நுண்ணுணர்வுகள்
கூர்மையாகி நிற்கும் கலைஞர் இவ்வாறு ஓர் உரையாடலை விழைவது சாதாரணமானது அல்ல என்பது
எந்தப் படைப்பாளியும் அறிந்ததுதான்.
நான்கு பிரிவுகளில் வழங்கப்பட்ட இந்தப் படைப்பில் பெண்மை-பெண்-பெண் பாலியல்
என்பவற்றின் வெளிப்பாடுகள், அவை பற்றிய நம்பிக்கைகள், கதைகள், கூற்றுகள், விதிகள்,
கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மிக நுட்பமாகத் தன் உடல்மொழியில் கையாண்டிருந்தார்
சாண்ட்ரா. ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய நடனமுறைகளிலும் மேற்கத்திய நவீன, பின்நவீன
நடனமுறைகளிலும் பயிற்சி பெற்றுள்ள இவரது உடல்மொழி துல்லியமான பதிவுகளை
உருவாக்கியது. பல பாணிகளின் தாக்கம், அமைதியற்ற கலப்பாக இல்லாமல் ஆழமான அசைவுகள்,
பதிவுகள் பற்றிய உள்ளறிவாகவும் உடலறிவாகவும் சாண்ட்ராவிடம் காணக் கிடைத்தது.
பெண்மை, பெண் பாலியல், பாலியல் வெளிப்பாடு இவற்றைச் சுற்றிப் பல கண்காணிப்பு
மற்றும் ஒழுக்கம், கட்டுப்பாடு, திருத்தம் என்னும் நிலைகளில் பல எண்ணங்களும்
பழக்கங்களும் கண்டிப்புகளும் எல்லா சமூகங்களிலுமே இருந்துவந்துள்ளன. இவற்றுள் சில
பெண்கள் நடக்கும், அமரும், மற்றும் நிற்கும் முறைகளைக் கண்காணித்து ஒழுக்கம் /
ஒழுக்கமின்மை என்ற கட்டமைப்புகளையும் ஏற்கப்படக்கூடிய பெண்மை, ஏற்கத்தகாத (அதனால்
பெண்மை அல்லாத) தன்மை போன்ற கருத்தாக்கங்களை நிறுவுகின்றன. கால்களை அகட்டி அமர்வதோ
நிற்பதோ பெண்மைக்கு எதிரானவையாகவும் எதிர்ப்பின் குறியீடாகவும் காணப்படுகின்றன.
இந்தக் கருத்துச் சூழல்களை உறுதியாகக் கையாண்டு தகர்க்கும் முயற்சி சாண்ட்ராவின்
படைப் பின் நான்கு பிரிவுகளிலுமே தெளிவாகத் தெரிந்தது. பரத நாட்டியத்தில் 'சமபாதம்'
என்றழைக்கப்படும் பாதங்களை நேராக வைத்து நிற்கும் நிலை, சிற்பக் கலை மற்றும்
நடனத்தில் மூன்று உடல் வளைவுகள் கொண்ட 'த்ரிபங்கம்' என்னும் நிலை, மற்றும் பெண்மை,
நளினம் இவற்றிற்குப் புறம்பாகக் கருதப்படும் பல உடலமைப்புகளையும் தன் கால்களின்
மிகத்துல்லியமான பயன்பாட்டின் மூலம் சாண்ட்ரா வெளிப்படுத்தினார். பெண்மையின் பால்
சார்ந்த, உடல் சார்ந்த இன்ப நுகர்வுகளில் கால்கள் முக்கிய பங்குவகிப்பதை அவர் மிக
நுட்பமாகச் சித்தரித்தார்.
சாண்ட்ராவின் நடனத்தின் இன்னொரு முக்கிய அங்கம் அவரது முக அபிநயங்கள். இந்திய மரபு
நடனக் கலைகளின் தேர்ச்சி பெற்ற நவீன / தற்கால நடனக் கலைஞர்கள் பலரது ஆரம்பப்
படைப்புகளிலும், சிலரது பின் நாளைய படைப்புகளிலும் முகபாவங்களைக்
கட்டுப்படுத்துவதும் சில நேரங்களில் முற்றிலும் (காரணத்தோடு) நிராகரிப்பதும்
நமக்குக் காணக்கிடைக்கின்றன. பரதநாட்டியத்தில் வழங்கிவந்துள்ள அபிநயங்கள் முகத்தைப்
பிரதானமாக்கி, உடலின் மற்ற அங்கங்களைப் பின்னுக்குத் தள்ளவும் நிராகரிக்கவும்
செய்கின்றன என்பதும், இதில் திரைப்பட
close-upகளின் தாக்கம் தெரிகிறது என்றும்
ஆடல் கலைஞர்களும் விமர்சகர்களும் கருத்துத் தெரிவிப்பதும் உண்டு. இன்று சமகால நடன-
நாடக நிகழ்த்துக் கலைச் சூழலில் முக அபிநயம் மீண்டும் முக்கிய இடம் பெற்றுவருகிறது.
இத்தகைய சூழலில், பல ஆண்டுகள் இந்திய மரபு நடனங்களில் பயிற்சி பெற்றுள்ள இளம்
கலைஞரான சாண்ட்ராவின் தற்காலத்திய நடனத்தில் தெளிவான, வரையறுக்கப்பட்ட முகபாவங்கள்
பார்க்கக் கிடைத்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. பழக்கப்பட்ட பல
விவாதங்களையும் எண்ணங்களையும் புரட்டிப் போடும் நேரத்திலும் அதனை ஒரு பிரகடன
அரசியல் கூற்றாகச் செய்யாமல், எதேச்சையாக நிகழும் கவிழ்த்தல்போல் தென்படச்செய்தது
பாராட்டுக்குரியதாய் இருந்தது.
Post Natyam அமைப்பைச் சேர்ந்த அஞ்சலி பார்கவா எடுத்த புகைப்படங்கள் பின்
திரையில் தோன்றி சாண்ட்ராவின் நடனப் பதிவுகளுக்குச் சமயங்களில் உதவி அழுத்தம்
தந்தன. வேறு சமயங்களில், நம் கண்முன் அசைந்துகொண்டிருக்கும் சாண்ட்ராவுக்கும்
திரையில் தோன்றிய முகம், கழுத்து, கால், பாதம் என்று பிரித்துக் காட்டப்பட்ட
துண்டுகளுக்கும் மத்தியில் நம் கவனத்தை ஊசலாடச் செய்தன. முழுமை, பகுதி, புலன்கள்
நுகரும் வகையில் பொருளாக்கல் (objectification), நம் கண்கள் பரவலாகச்
செய்யும் - தேர்ந்தெடுத்து, மற்றவை 'அகற்றி', கவனித்தல், நுகர்தல், உணர்தல் -
என்பவை (selective attention) நிறைந்த அரசியல் பொதிந்த தருணங்களை
அஞ்சலி பார்கவாவின் புகைப்படங்களும் சங்கீதா ஷ்ரெஷ்டோ வாவின் ஒளிப்பதிவும் வழங்கின.
இந்த இசை-நடன உரையாடலைக் கூர்ந்து கவனிக்க நான் "ரசிகருக்காகக் காத்திருத்த"லை
இன்னொருமுறை பார்க்கவேண்டும். கலைஞர்களுக்காகக் காத்திருக்கும் ரசிகர்களும்
உண்டல்லவா!
உள்ளடக்கம் |