Google   www kalachuvadu.com

 

பத்தி

சங்க பரிவாரின் கலைத் தேடல்

திவாகர் ரங்கநாதன்

பரோடாவில் மே 9 அன்று மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகக் கலை மாணவர் சந்திரமோகன், இந்துக் கடவுளர்களை 'ஆபாசமாகவும் மத ரீதியான விரோதத்தைத் தூண்டும் வகையிலும்' சித்தரித்ததற்காகக் கைது செய்யப்பட்டார். சந்திரமோகனின் ஓவியங்கள் வருடாந்தரத் தேர்வின் ஒரு பகுதியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 2005-2006க்கான குஜராத் லலித் கலா அகாடமி விருது பெற்ற இந்த மாணவர், இந்துக் கடவுளர்களைப் பாரம்பரிய ஓவிய பாணியில் சித்தரித்திருந்தார்.

2002இல் குஜராத்தில் சங்க பரிவார் குண்டர்களால் சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நடத்தியவர்களில் ஒருவரான பா.ஜ.க. தலைவர் நீரஜ் ஜெயினின் தலைமையில் ஒரு கும்பல் அந்தக் கண்காட்சியில் புகுந்து படைப்புகளை நொறுக்கியது; ஆசிரியர்களையும் மாணவர்களையும் தாக்கியது. பெண்களிடம், அவர்களின் நிர்வாணப் படங்களையும் பார்க்க விரும்புவதாக அந்தக் கும்பல் சொன்னது.

சந்திரமோகனின் சக மாணவர்களும் நண்பர்களும் இணைந்து மே 11 அன்று பண்டைய இந்திய, மேற்கத்தியக் கலைப் படைப்புகளை வைத்துக் கண்காட்சி நடத்தினர். மே 12 அன்று இந்தக் கண்காட்சி மூடப்பட்டு பல்கலைக்கழகத்தின் கலைத் துறைக்கு சீல் வைக்கப்பட்டது. சந்திர மோகனுக்கு ஆதரவாக நின்ற கலைத் துறைத் தலைவர் ஷிவ்ஜி பணிக்கர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் சந்திரமோகன் மே 14 அன்று ஜாமீனில் விடப்பட்டார். ஆனால், அவர்மீதான வழக்கு தொடர்கிறது. சந்திரமோகன் கைதுக்குச் சென்னை உட்பட நாடெங்கும் கலைஞர்களும் ஆர்வலர்களும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

எம்.எஃப். ஹுசேனுக்குப் பிறகு சந்திரமோகன். ஆஃப்கனிஸ்தானில் கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாமியன் புத்தர் சிலையைச் சிதைத்த தாலிபான்களுக்கும் சங்க பரிவார் குண்டர்களுக்கும் இடையிலான அடிப்படை ஒற்றுமையை இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

இந்துத்வவாதிகளுக்கும் கலை ஒரு தேடல்தான். கலைப் படைப்புகளில் மனித உடலின் அல்லது குறிப்பிட்ட சில உறுப்புகளின் நிர்வாணத்தை அவர்கள் தேடுகிறார்கள். அவர்களது இயக்கத்தில் இந்த அதிமுக்கியக் கலாச்சாரச் சேவைக்கென்றே ஒரு குழு இருக்கக்கூடும்.

எதிரிகளை அழிக்க உதவுவதே கலையின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று ஃபாசிஸ்டுகள் நம்புகிறார்கள்போலும். கடல் அலைகள் உடலில் மோத, பரந்த வெண்மார்புடன் கவர்ச்சியாகவும் அம்பை வில்லில் பூட்டத் தயாரான நிலையில் வீரமாகவும் ராமபிரான் விஸ்வ இந்து பரிஷதின் போஸ்டர்களில் காட்சியளிக்கிறார். கலைஞர்கள் இதுபோல இந்துக் கலாச்சாரத்தைப் போற்றியும் அதன் 'எதிரிக'ளிடமிருந்து அதற்கு நேரக்கூடிய அபாயம் பற்றி எச்சரித்தும் கலைப் படைப்புகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இந்துத்வவாதிகள் எதிர்பார்க்கிறார்களா?

இன்று இந்துத்வவாதிகள் இந்துப் பண்பாட்டிற்கு விரோதமெனக் கருதக்கூடிய அத்தனை உடலுறவு வகைகளையும் பற்றிய மிக விரிவான சித்தரிப்புகளை இந்து வழிபாட்டுத் தலங்களின் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் பார்க்கலாம். காவிப் படையினர் இந்த அசுத்தமான கோவில்களை இடித்து பாரத/இந்துக் கலாச்சாரத்தைக் காப்பாற்றலாம்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google