06.02.01 செவ்வாய்க்கிழமை டெட்ராய்ட் "சு.ரா."வின் கவிதைகளை வாசித்து
முடித்ததும் 'எப்படி வந்து சேர்ந்தேன்? யாருடைய தீர்மானம்? எதற்கு?' என்னும் வரிகள்
அறுவைச் சிகிச்சைக்காகக் கட்டிலில் இருக்கும் எனக்கும் பொருத்தமாக இருப்பதாகத்
தோன்றுகிறது. இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் "கொரனா ஸ்கோப்" அறைக்கு
அழைத்துப் போய் விடுவார்கள்போலும். அவசரமாகத் துணைவியாரை அழைத்துத் தாள்கள்
வாங்கிவந்து எழுத நேரிட்டது.
"என் வரிகளுக்கு கவிதை இருக்கும் இடம் தெரிந்தால் சரி" என்னும் வரிகளில் இருப்பது
கவிதை. சு.ரா. சொன்னதுபோலக் கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று கவிதையைத் தொட இயலாது
போகிறது. "எழுதாமல் இருப்பதும் கவிதையே. நேசிப்பதுதான்" சரி.
எழுதுவதில் சு.ரா.வின் நொய்த்துப்போன இருதயச் சுவர்கள் விறைப்பாயிருப்பதில்
ஆச்சரியமில்லை. நாற்பதை நெருங்காத வயதில் இப்படிக் கட்டிலில்கிடப்பது
சம்மதமில்லைதானே. "இன்று இதுவரையிலும் என் மனநிலை சீராகவே இருக்கிறது." ஐந்தாம்
மாடியின் எனது அறை ஜன்னல் வழியே சு.ரா.வைப்போல நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
தூரத்தில் தெரியும் அடுக்குமாடிக் கட்டடங்களை, சாலையில் பறந்துகொண்டிருக்கும்
சகலவித வாகனங்களையும் "டிரிப்" ஏறிக்கொண்டிருக்கும் தருணத்தில் இலக்கிய மனத்துடன்
இப்படி வீம்பு பிடித்தது போல எழுதிக்கொண்டிருக்கும் இந்த மனநிலையை எதில் சேர்ப்பது?
செந்தில்
திருமங்கலம் - 625706
சக்கரியாவின் 'மாயாவித் திருடர்கள்' என்னும் கட்டுரை குறித்து: கேரளாவில்
மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி
மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள்
மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன. கெல்ட்ரான், ரேயன்ஸ் மில், புனலூர்
காகித ஆலை, அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ், அப்போலோ டயர் தொழிற்சாலை ஆகிய அனைத்தும்
மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று
கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும்
உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற
வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.
கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற
இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத்
தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில்
மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள்.
அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள். அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால்
மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும்
நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது
அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல்
மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து
மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4
டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்? ஒரு வேளை
மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட
இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில்
மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி.
வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது. எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை
எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப்
போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை
அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள்
முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது
தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம்
உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத்
தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள். கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர்
என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி
நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை
போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல
வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு
ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது.
அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில்
போட்டிருக்கிறார்கள். கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக
உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு
காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில்
துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14
நினைவுகூரத்தக்க தினம்தான். பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்
மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும்
சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.
கே. கணேசன்
கோயம்புத்தூர் - 27
"கொக்கோகோலாவும் கேரளாவும்" என்ற கட்டுரை குறித்து: கேரள அரசின் தொழிற்கொள்கைமீதான
தனது அதிருப்தியையும் சூழலியலாளர்களான மேதா பட்கர், வந்தனா சிவா போன்றவர்களின்
மீதான தனது எரிச்சலையும் வெளிப்படுத்தக் கட்டுரையைப் பயன்படுத்தியிருக்கிறாரே
அன்றி, பிளாச்சிமடை போராட்டத்தின் அடிப்படையை ஆராய மறுத்திருக்கிறார் சக்கரியா.
ஒரு சராசரிக் கிராமப்புறக் குடிமகனின் ஒரு நாள் தண்ணீர்த் தேவை 40 லிட்டர் என்று
திட்டக்கமிஷன் வரையறுத்து உள்ளது. பொதுமக்களின் குடிநீர் மற்றும் பாசனத்
தேவைகளுக்கு மட்டுமே போதுமானதான நிலத்தடி நீர் உடைய ஒரு கிராமப்பகுதியில் பல லட்சம்
லிட்டர் நீர்த் தேவை கொண்ட கொக்கோகோலா நிறுவனத்துக்கு உரிமம் அளித்தது அரசின் முதல்
தவறு.
சக்கரியாவின் புள்ளிவிவரப்படி பெருமாட்டிப் பகுதியில் உள்ள 508 ஆழ்துளைக்
கிணறுகளில் ஐந்துதான் கொக்கோகோலாவுக்கு உரிமையானவை என்றாலும் ராட்சத பம்புகளின்
மூலம் இருக்கும் நீரை உறிஞ்சி எடுத்து அப் பகுதியின் நிலத்தடி நீரை அருகவைத்த
பெருமை கொக்கோகோலாவையே சாரும்.
அது மட்டுமல்லாமல் ஆலைக் கழிவுகளின் வெளியேற்றத்தால் விவசாய நிலங்கள்
விளைச்சலுக்குப் பயனற்றகளர் நிலங்களாக மாறிவிட்டன. நல்ல தண்ணீர் ஊறும்
கிணறுகளில்கூடக் கோலா ஆலையின் கழிவு கலந்த, குடிக்க முடியாத, நோய் ஏற்படுத்தும்
நீரைச் சுரக்கின்றன.
கொக்கோகோலா ஆலை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இலவச இணைப்பாக இப்பிரச்சினைகள்
இருந்தே தீர்கின்றன.
கொக்கோகோலா தன் பிளாச்சிமடை ஆலையை மூடி ஒரு வருடம் ஆகியிருக்கலாம். ஆனால், நிலத்தடி
நீர் தன் பழைய அளவை அடையவும் ஆலைக் கழிவுகளால் மாசுபட்ட நிலமும் நீரும் மீண்டும்
தம் பழைய தன்மையை அடையவும் ஒரு வருடமல்ல, பல ஆண்டுகள் ஆகும்.
ஆதிவாசி மக்களின் ஒரே சொத்தான நிலமும் நீரும் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதும்
கெடுக்கப்படுவதும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, சக்கரியா போன்ற
எழுத்தாளர்களுக்கும் கிண்டலாகத்தான் தோன்றும்.
ஹேமா
சென்னை
மே 2007 'காலச்சுவடு' தலையங்கம் குறித்து: இங்கு நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ
யாருக்குக் கவலை? அணு உலையின் தீமை தெரிந்திருந்தும் அதில் மின்சாரம் தயாரிக்கக்
கூடுதலாகச் செலவாவது பற்றிக் கவலைப்படாமல் மாநில அரசுகளும் மத்திய அரசும் அணு உலை
அமைப்பதில் ஏன் இப்படித் தீவிரம் காட்டுகின்றன? வெப்பம் அதிகரித்துப் பூமி
சூடாவதால், வடதுருவப் பனிக்கட்டிகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து கடற்கரை
நகரங்களும் கடலோர நாடுகளும் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள்
தொடர்ந்து எச்சரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இருந்தும் அதிகமாக வெப்பம்
வெளிப்படும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழில்நுட்பங்களை மேலும் அதிகமாகப்
பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
ஜெஸி. ஜெனீ. அஸ்மியா
கோவை - 8
கடந்த இதழில் வெளியிடப்பட்ட தியடோ ர் பாஸ்கரனின் பேட்டி அவரது பின்புலத்தையும்
தமிழ் சினிமா மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் காட்டுவதாக இருந்தது. சுற்றுச்
சூழலியல் ஆர்வலராகவும அறியப்பட்ட பாஸ்கரனின் சுற்றுச்சூழல் குறித்த கருத்துகளும்
செயல்பாடுகளும் இந்த நேர்காணலில் பேசப்படவில்லையே! தொழில்நுட்பங்கள் புதிது புதிதாக
அறி முகமானாலும்கூட அவற்றுடன் அழகியல் சார்ந்த முயற்சிகளின் ஒருங்கிணைவு இல்லாததால்
பெரிதாகப் பேசப்படாத நிலையில்தான் இன்னும் தமிழ் சினிமா இருக்கிறது என்னும்
பாஸ்கரனின் கருத்து, தமிழ் சினிமாப் படைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய புதிய
முயற்சிகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. கல்வித் துறையால் கண்டுகொள்ளப்படாத
சினிமா, சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறது. மௌனப் படக் காலகட்டத்திலிருந்து
இதுவரையான தமிழ் சினிமாவின் மீதான அவரது கவனிப்பை வெளிக் காட்டியது இந்நேர்காணல்.
நர்மதா
புதுப்பட்டி
உள்ளடக்கம்