Google   www kalachuvadu.com

 

கவிதைகள்

அழகுநிலா

இந்த முறை . . .
ஆற்றில் விழுந்த இலை
மரத்தை விட்டு
வெகுதூரம் வந்தாயிற்று.
அடுத்து அருவி என்பது
இலைக்குத் தெரியாது.
அது இலை என்பது
ஆற்றுக்கும் தெரியாது.
இலைமீது தும்பியொன்று
பயணிக்கிறது.
அது பயணமன்று.
எங்கிருந்தும் யாரும் எங்கேயும்
போய்விட முடியாது என்பதாய்
ஓர் அமர்வு . . . வெறுமனே.
ஆறு தும்பி அருவி இலை
யாருக்கும் தெரியாது யார்
யாரென்பது.
அண்டத்தின் தீராத பேரிருட்டில்
ஓய்ந்து மிதக்கிறது இலை.
விருட்டெனப் பறக்கிறது தும்பி.
மரம் மீண்டும் உதிர்க்கிறது
மற்றுமோர் இலையை. அது
இந்த முறை காற்றில் அலைகிறது.

உள்ளடக்கம்

Google Ads.....


Google