Google   www kalachuvadu.com

 

கட்டுரை

பண்டிகைகள், விழாக்களில் சாதிச் சமன்பாடுகள்

ஸ்டாலின் ராஜாங்கம்

சிவா என்ற தலித் இளைஞர் புத்தாண்டு கொண்டாட்டத்தினை ஒட்டி ஆதிக்க வகுப்பினரால் கொல்லப்பட்டார். திருவிழாக்கள், பண்டிகைகள் பற்றித் தலித் மக்கள் நோக்கில் மறு விசாரணை செய்யப்பட வேண்டும். புத்தாண்டு மட்டுமல்ல; எந்த விழாவுமே இந்துச் சமூகத்தில் இங்கு நிலவிவரும் சமூக மரபுகளைக் கடந்துவிடக்கூடியதாய் அமைவதில்லை. ஐரோப்பிய மரபில் வந்த புத்தாண்டு, நம் சமூகத்தில் புதிய வடிவத்தில் அமையவில்லை என்பதை சிவாவின் சாவு சொல்கிறது. சமூகத்தின் கூட்டுணர்வை உருவாக்கவும் புதிதாக்கவும் திருவிழாக்களும் பண்டிகைகளும் நடத்தப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்துச் சமூகத்தின் திருவிழாக்களும் தெய்வங்களும் சாதிகளுக்குள்ளே கூடி ஒழுகுதலையே ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் இந்து மதத்தின் மீது வைத்த விமர்சனங்களுள் முக்கியமானது இது. சமயம் என்பது கூட்டுணர்வை உருவாக்கி வளர்க்கக்கூடியது என்று கருதிய அவர், இத்தகைய கூட்டுணர்வு இந்துச் சமூகத்தில் கிடையாது; சமூகங்களை நிரந்தரமாகப் பிரித்து வைப்பதே அம்மதத்தின் விதிமுறைகள் என்றும் குறிப்பிட்டார். இந்துச் சமூகத்தின் தீர்க்கப்படாத நிரந்தரமான இப்பிரச்சினையை அப்படியே பாதுகாத்துக்கொண்டு எல்லோருக்கும் பொதுவான எந்தவொன்றையும் உருவாக்கவோ பயன்படுத்தவோ முடியாது.

இந்துச் சமூகத்தில் வருடத்தின் 12 மாதங்களும் பகுதிகள் சார்ந்தும் தேசம் சார்ந்தும் பல்வேறு பண்டிகைகளும் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் சாதிமுறை பின்பற்றப்படுகிறது. இவைகளில் தலித் மக்களின் பணிகள் என்ன? அவர்கள் நிற்க வேண்டிய இடம், பெற வேண்டிய மரியாதை இப்படி ஒவ்வொன்றும் சாதியடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு திருவிழாவிலும் அடிநிலைப் பணிகள், சுகாதாரமற்ற வேலைகள் தலித்துகளுக்காக ஒதுக்கப்படுகின்றன. மிஞ்சி நிற்கும் உணவை அவர்கள் தூரமாய் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும். தேரிழுக்க முடியாது. ஆனால் தேருக்கு முன்னால் அவர்கள் மேளம் அடிக்க வேண்டும். உள்ளபடியே பார்த்தால் இந்த மரபான விழாக்கள் மூலம் ஆண்டு தோறும் சாதிமுறை புதுப்பிக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும்.

பண்பாட்டுத் தளத்திலான இந்த அடிமைப் போக்கினைத் தலித் மக்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர். 60 ஆண்டு காலப் பறை மேளம் ஒழிப்புப் போராட்டங்கள், 1995ஆம் ஆண்டு அய்யம்பாளையம் திருவிழாவில் பறையடிக்க மறுத்ததால் நடந்த கலவரம், தஞ்சை மாவட்டத்தில் பறையடிக்க மறுத்ததால் குருங்குளம் குருமூர்த்தியின் கட்டைவிரல் வெட்டப்பட்டமை, கண்டதேவி தேரிழுக்கும் போராட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பல வேளைகளில் பொதுச் சமூகத்தின் நலனுக்கு உகந்ததாகக் கருதப்படும் பல காரணிகளும் நுணுகி நோக்கும்போது தலித் மக்களுக்கு எதிரானதாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு விழாவினைத் தடைசெய்ய வேண்டியதில்லை என்று அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்புக்கு முன்பும் பின்பும் பாதுகாப்புக் காரணங்கள் பிரதானமாக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. இவ்வாதங்களுக்கு அப்பால் பேசப்பட வேண்டிய அம்சங்களும் உண்டு. ஜல்லிக் கட்டில் எல்லாச் சமூகத்தவரின் மாடுகளும் கலந்து கொள்ள முடியாது. சமூக மரியாதை தொடர்புடையதாக இருப்பதால் ஜல்லிக்கட்டில் மாடு விடுதல், முதல் மரியாதை அளித்தல் போன்றவையும் சாதிசார்ந்து அமைகின்றன. மாட்டை அழைத்துச் செல்லத் தொடங்குவது முதல் தொடர்ந்து வெறியூட்டி விரட்டுவதுவரை பறை மேளம் அடிக்க வேண்டும். அம்மேளம் அடிப்பவர் அவ்வூரின் தலித் சமூகத்தவராக இருப்பார். அவருக்குக் கூலியும் கிடையாது. அது சாமி கைங்கரியமாகிவிடும். ஜல்லிக்கட்டு விடப்படும் ஒவ்வொரு கிராமத்திலும் இந்நடைமுறை உயிரோடு இருக்கிறது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அவ்வழக்கு என்னவானது என்று தெரியவில்லை. எட்டு நாள், பத்து நாள் என்று நீளும் கிராமத் திருவிழாக்களில் சாதிசார்ந்த 'சேவைகளை' தலித் மக்கள்மீது திணித்துச் செயல்படுத்திவருகிறது இந்துச் சமூகம். பொது நலனுக்கு உகந்த நடவடிக்கைகளிலும் இது போன்ற கேள்விகளை எழுப்புவது பலருக்கு எரிச்சலானதாக இருக்கலாம். சாதி மனோபாவத்திற்கு எதிரான சிறு முழக்கங்களும்கூட இச்சமூகத்தைக் கலவரப்படுத்துவது வியப்பில்லை. உண்மையில் மேலும் கீழுமாக அமைக்கப்பெற்றுள்ள சமூகத்தில் ஒரு சமூகக் குழுவின் நலன் மற்றொரு சமூகக் குழுவின் நலனைப் பறித்துத்தான் உருவாக்கப்படும் என்பது மாறாத விதி.

ஓவியம்: செந்தில்

உள்ளடக்கம்

Google Ads.....


Google