உ.பி. தேர்தல்
அரசியல் பெரும்பான்மையின் ஆட்சி?
ரவிக்குமார்
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், எல்லா யூகங்களையும்
தோற்கடித்துத் தனிப் பெரும்பான்மையோடு மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை
அமைத்துள்ளார். 'சர்வஜன் என்னும் புதுவிதமான பரிசோதனை முயற்சி ஒன்றை நீங்கள்
முன்வைத்திருக்கிறீர்களே, சமூக முரண்பாடுகளை இது தீர்த்துவிடுமா?' என்று அவரிடம்
பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'பகுஜன் மற்றும் உயர்சாதியினரின் நலன்களை ஒருசேரக்
கவனிப்பதில் பிரச்சினை எதுவுமில்லை. தலித்துகளின் வாக்குகளை உயர்சாதியினருக்கும்
அவர்களது வாக்குகளைத் தலித்துகளுக்கும் மாற்றுவதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்'
என்று மாயாவதி பதில் கூறியிருக்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பிராமணர்கள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர்
ஆகியோர் வாக்களித் திருக்கிறார்கள். பிராமணர் உள்ளிட்ட உயர்சாதிகளைச் சேர்ந்த 62
பேர் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களாகியுள்ளனர். மாயாவதி அறுபத்தொரு
முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். அதில் இருபத்து நான்கு பேர் வெற்றி
பெற்றிருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேசம் மிகவும் பின்தங்கிய ஒரு மாநிலம். அங்கே கல்வியறிவு பெற்றவர்களின்
சதவீதம், தேசிய சராசரியான 64.80 சதவீதத்தைவிட ஏழரைச் சதவீதம் குறைவு. தனிநபர்
வருமானமும்கூடத் தேசிய சராசரியில் பாதிதான். எனவே, உ.பி.யின் பொருளாதாரத்தைச்
சீர்படுத்த வேண்டிய மிகப் பெரிய சவால் மாயாவதியின் முன் நிற்கிறது. தன் உடனடி அக்கறை,
சட்டம் ஒழுங்கைச் சரிசெய்வது, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவது என்று
கூறியுள்ள அவர், 'சட்டம் ஒழுங்கைச் சரிசெய்யப் பணம் தேவையில்லை. ஆனால், வளர்ச்சித்
திட்டங்களுக்கு நிதி வேண்டும். அதை எப்படிப் பெறுவதென்று யோசித்துவருகிறேன்' எனவும்
குறிப்பிட்டுள்ளார்.
இருபத்தொரு சதவீதம் பேர் தலித்துகளாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் அவர்களிடையே
பகுஜன் சமாஜ் கட்சி வலுவான அடித்தளத்தைப் போட்டிருக்கிறது. அது 1984ஆம் ஆண்டு முதல்
சலிக்காமல் உழைத்ததன் பலனே இந்த வெற்றி எனக் கூறுவது முழுப் பரிமாணத்தையும்
புரிந்துகொண்டதாகாது. உத்தரப் பிரதேசத்தின் தாழ்த்தப்பட்டோ ர் அரசியலுக்கு நீண்ட
வரலாறு உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களைப் பற்றி எழுதிவைத்தவற்றை மறுத்துத்
தீண்டாத மக்கள் பல விதங்களில் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்திக்கொண்டனர். இந்தியா
முழுவதும் பல பகுதிகளில் அவர்களது அமைப்புகள் உருவெடுத்தன. பஞ்சாபில் ஆதிதர்மிகள்,
வால்மீகிகள்; சட்டீஸ்கரில் சத்நாமிகள்; மேற்கு வங்காளத்தில் நாமசூத்திரர்கள்;
மகாராஷ்டிராவில் மகர்கள் ஆகியோர் தங்களை அமைப்புகளாகத் திரட்டிக்கொண்டபோது, உத்தரப்
பிரதேசத்தில் இருந்த சமார்கள், பாஸி மற்றும் பங்கிகள் தம்மை ஆதி இந்து மகாசபா என்ற
அமைப்பின் மூலம் அரசியல் சக்தியாக வெளிப்படுத்திக்கொண்டனர். இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலிருந்தே அவர்களது அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன.
உத்தரப் பிரதேசத்தில் இருந்த சமார் சாதியைச் சேர்ந்த மக்கள் சமார் மகாசபா என்ற
பெயரில் நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் முதலியவற்றை
நடத்தித் தமது அரசியலைப் பரப்பியுள்ளனர். மீரட், மொராதாபாத், புலந்ஷஹர், பதாவூன்,
பிஜ்னோர், பரேலி மற்றும் பிலிபட் மாவட்டங்களில் சமார்களின் போராட்டங்கள் நடந்தது
போலீஸ் ஆவணங்களில் பதிவாகியுள்ளன. அதன் எல்லாப் பகுதிகளிலும் சமார் மகாசபாக்கள்
தீவிரமாகச் செயல்பட்டுள்ளன. இந்துக்களிடமிருந்து வேறுபட்ட அடையாளம் ஒன்றைத்
தேர்ந்தெடுத்த உத்தரப் பிரதேசத்தின் தீண்டாத மக்கள் தமது உட்சாதிப் பிரிவுகளைக்
கடந்து 'அச்சுத்' என்னும் அடையாளத்தைத் தேர்ந்துகொண்டனர். சட்டசபைகளில் தமது மக்கள்
தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம், அரசாங்கப் பணிகளில் இட ஒதுக்கீடு, தமக்கான நில
உரிமையை உறுதிசெய்யக் குத்தகைச் சட்டங்களில் திருத்தம், விவசாயக் கூலிகளுக்கு
நியாயமான சம்பளம், செத்த விலங்குகளை அகற்றும் கட்டாயத்திலிருந்து விடுதலை, பொது
நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, மதம் மாறுவதற்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தித்
தமது மாநாடுகளில் தீர்மானங்களை நிறை வேற்றினார்கள். காந்தியின் கண்டுபிடிப்பான 'ஹரிஜன்'
என்னும் பெயரை அவர்கள் நிராகரித்தனர். 1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி
ஸ்டேச்சுட்டரி கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் ஆதி இந்து மகாசபாவைச்
சேர்ந்த நிர்வாகிகள் அளித்த மனுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.சி. ராஜாவைத் தங்கள்
தலைவராக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனென்றால், தற்போது கிடைக்கும் ஆதாரங்களின்படி
இந்திய அளவில் முதலில் நவீன அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாகத் தமிழ் நாட்டுத்
தலித்துகளே இருந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைவரையே தமது தலைவராக ஏற்றுக்கொண்டிருந்த அம்மாநிலத் தலித் மக்கள்,
அதன் பிறகு அம்பேத்கர் தொடங்கிய ஷெட்யூல்டு கேஸ்ட் ஃபெடரேஷனில் தம்மை
இணைத்துக்கொண்டனர். 1956இல் அவர் உருவாக்கிய இந்தியக் குடியரசுக் கட்சிக்கும்
உத்தரப் பிரதேசத்தில் நல்ல ஆதரவு இருந்தது. அம்பேத்கரின் அகால மரணம் தலித்துகளின்
அரசியல் இயக்கத்துக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து
உத்தரப் பிரதேச தலித் அரசியலில் ஒரு தொய்வு ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவர்களை ஒன்று
திரட்டி அரசியல்படுத்தி இயக்கமாக்கியவர் கான்ஷிராம். அவரது அரசியல் 'சாணக்கியம்'
1995இல் மாயாவதியை முதலமைச்சராக்கியது. அதன் பிறகு இரண்டுமுறை மாயாவதி முதல்வராக
இருந்திருக்கிறார். ஆனால், அப்போதெல்லாம் வேறு ஏதாவதொரு கட்சியின் தயவில்தான் அவர்
ஆட்சி நடத்த வேண்டியிருந்தது. இப்போதுதான் தன் சொந்தக் காலில் பகுஜன் யானை
நின்றிருக்கிறது.
நம்மூர் அம்மாவின் இந்திப் பிரச்சாரத்தின் ராசியோ என்னவோ இந்தத் தேர்தலில் முலாயம்
சிங் யாதவின் கட்சி நூறு இடங்களைக்கூடப் பெற முடிவில்லை. பா.ஜ.க.வின் தேய்மானம்
இன்னும் துலக்கம். காங்கிரசின் நிலையோ அதைவிட மோசம். 'காங்கிரசின் எதிர் காலம்' என
வர்ணிக்கப்பட்ட ராகுல் காந்தியின் பிரச்சாரமும் அங்கே எடுபடாமல் போய்விட்டது.
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணியில்லாமல் ஒற்றைக் கட்சி ஆட்சி உ.பியில்
உருவாகியிருக்கிறது. சிப்பாய்க் கலகத்தின் 150ஆம் ஆண்டு விழாவைவிட அதிக ஆரவாரத்தோடு
கொண்டாடப்படுகிறது மாயாவதியின் வெற்றி.
உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவு பல விதங்களில் முக்கியமானதாகும். பொன்விழாவின்போது
தன்னை வாழ்த்துவதற்காக வந்திருந்த சோனியா காந்தியைத் தேற்றக் கலைஞர் சொன்ன 'கைவேல்
களிற்றொடு போக்கிய' வீரனின் கதையைச் சோனியா காந்தி புரிந்துகொண்டாரோ என்னவோ, தீவுத்
திடலில் கூடியிருந்த மக்கள் விளங்கிக்கொண்டார்கள். ஆனால், உ.பி.யில் காங்கிரஸ்
சந்தித்திருப்பது பிரம்மாண்டமான தோல்வி. கைவேலை இழந்து நிற்கும் காங்கிரசிடம் 'மெய்வேல்'
எதுவும் இல்லை என்பது கலைஞருக்கும் தெரியும்.
உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவு 2009இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு
தொடக்கம். அடுத்தடுத்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றுக்கொண்டேவருவதைப்
பார்த்த அரசியல் நோக்கர்கள், 2009இல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என
யூகித்துவந்தார்கள். நம்மூர் அம்மாவோ, மூன்றாம் அணிக்கே அந்த வாய்ப்புக் கிடைக்கும்
என்னும் ஜோசியத்தை நம்பி முலாயமுக்குப் பிரச்சாரம் செய்தார். ஆனால், இப்போது எல்லாமே
கேள்விக்குறியாகிவிட்டது. பா.ஜ.க. கடந்த பதினாறு ஆண்டுகளில் கண்டிராத தோல்வியை
இப்போது சந்தித்திருக்கிறது. முலாயமின் தோல்வி மூன்றாம் அணியைக் கட்டுவதற்கான
முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. அவரிடம் முற்போக்கைத்
தரிசித்துக்கொண்டிருந்த மார்க்சிஸ்ட்டுகள் இப்போது திகைத்து நிற்கிறார்கள்.
அவர்களைப் பொருத்தமட்டில் மாயாவதி அரசியல் ரீதியாகவும் 'தீண்டத்தகாதவர்'. அவரை
வைத்து மூன்றாம் அணியை உருவாக்க அவர்கள் விரும்பமாட்டார்கள். இந்த விஷயத்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை வேறுபட்டதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. நம்மூர்
அம்மாவும் மாயாவதியை ஏற்றுக்கொள்ளமாட்டார். காங்கிரஸ் தன் கையிலிருந்த கடைசித்
தோட்டாவையும் இந்தத் தேர்தலில் பயன்படுத்திப் பார்த்துவிட்டது. இவற்றையெல்லாம்
தொகுத்துப் பார்த்தால், மாயாவதியின் வெற்றி பலரது கணக்குகளைக்
கலைத்துப்போட்டுவிட்டதை உணரலாம். இதன் உடனடித் தாக்கத்தை இன்னும் சில மாதங்களில்
நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பார்க்க முடியும்.
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் அமைந்துள்ள ஒற்றைக் கட்சி ஆட்சி மத்தியிலும்
அத்தகைய நிலையை உருவாக்குமா என்பது சிலரது சந்தேகம். உத்தரப் பிரதேசத்தில்
ஏற்பட்டிருப்பது ஒரு விதத்தில் கூட்டணி ஆட்சிதான். அது அரசியல் கூட்டணி அல்ல; சமூகக்
கூட்டணி. அதிலும் இதுவரை எதிரெதிராகப் பார்க்கப்பட்ட சமூகங்களின் கூட்டணி.
இந்தியாவின் சாதி அமைப்பில் எதிரெதிர்த் துருவங்களில் இருக்கும் தலித்துகளும்
பிராமணர்களும் ஓரணியில் சேர்ந்திருப்பது பலரையும் வியப்படையவைத்திருக்கிறது.
மாயாவதியின் குருவான கான்ஷிராம் தனக்கான அரசியல் தத்துவத்தை அம்பேத்கரிடமிருந்தும்
ஜோதிராவ் புலேவிடமிருந்தும் பெற்றவர். பிராமணர்களுக்கு எதிராகப் பிராமணரல்லாதாரோடு
கூட்டணி என்பதே அவர் உருவாக்கிய சூத்திரம். ஆனால், அத்தகைய கூட்டணி நடைமுறையில்
என்னவாகும் என்பதை 1995இல் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் ஏற்பட்ட
கூட்டணியின் முடிவு எடுத்துக்காட்டிவிட்டது. அந்த அனுபவத்தைப் பாடமாகக் கற்ற மாயாவதி
இப்போது புதிய அணிச் சேர்க்கையை உருவாக்கியுள்ளார். இப்போது அவர் அமைத்துள்ள கூட்டணி
அரசியல், கடந்த நூறு ஆண்டுகளாக உ.பி.யில் தொடர்ந்துவந்த தனித்துவமான அடையாளம்கொண்ட
தாழ்த்தப்பட்டோ ர் அரசியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது அம்பேத்கர்
முன்வைத்த அரசியல் அல்ல என்பது பலர் குற்றச்சாட்டு. ஆனால், அது சரியல்ல. அம்பேத்கர்
தனது இறுதிக் காலத்தில் மிகவும் வலியுறுத்திய வகுப்பு வாதப் பெரும்பான்மை மற்றும்
அரசியல் பெரும்பான்மை என்னும் கருத்தாக்கத்தின் பின்னணியில் இதைப் புரிந்துகொள்ள
வேண்டும். எண்ணிக்கைப் பலம்கொண்ட சாதிகளின் ஆட்சி ஒருவிதத்தில் பாசிச ஆட்சியாகவே
இருக்கும் என்பதுதான் கடந்த அறுபது ஆண்டுகால இந்திய சுதந்திரம் நமக்கு வழங்கியுள்ள
படிப்பினை. அதை உத்தரப் பிரதேசத்து மக்கள் இப்போது புரிந்து கொண்டுவிட்டனர்.
மதத்தை அடிப்படையாகவைத்தே தமது அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருந்த பிராமணர்கள் அது
தந்த பெரும்பான்மை என்னும் பாதுகாப்பில் லயித்திருந்தனர். சாதி என்பது மதத்தின்
ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தாலும், அது மதம் இல்லாமலும் செயல்படக்கூடியது. சாதியின்
சுயேச்சையான இயக்கம் குறித்து இனிமேல்தான் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
சாதி இந்துக்கள் தமக்கான அதிகாரத்துக்காக மத இந்துக்களான பிராமணர்களின் தயவை எதிர்
பார்த்து ஏங்கிய காலம் மலையேறிவிட்டது. அவர்கள் தம்மிலும் கீழான மக்களை
மட்டுமின்றித் தமக்கும் மேலே இருந்தவர்களையும் மிதிக்கத் தொடங்கிவிட்டனர். எண்ணிக்கை
என்பதற்கு மதிப்பெதுவுமில்லை, மதம்தான் மதிப்பை வரையறுக்கிறது என்ற வருணக் கோட்பாடு,
'ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு, எல்லா வாக்குகளுக்கும் ஒரே மதிப்பு' என்னும் வாக்குச்
சீட்டு ஜனநாயகத்தால் மாறிப்போனது. இந்திய ஜனநாயகம் என்பதை எண்ணிக்கையின் ஜனநாயகம்
எனக் குறுக்கியதன் மூலம் சாதி இந்துக்கள் அதை இந்திய வகைப்பட்ட பாசிசமாக
மாற்றிவிட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி என்பது பல்வேறு சமூகப்
பிரிவினருக்கும் இளைப்பாறுதலைத் தந்த இடமாக இருந்தது. அத்தகைய ஒரு நிலை இப்போது
பகுஜன் சமாஜ் கட்சிக்கு வந்திருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் மாயாவதி
93 இடங்களில் தலித் வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் நான்கு இடங்கள் தவிர
மற்றவையாவும் தனித் தொகுதிகள். 89 தனித் தொகுதிகளில் வென்ற தலித்துகளால் பொதுத்
தொகுதி ஒன்றிலும் வெற்றிபெற முடியவில்லை. இது கவனத்துக்குரியது. அதுபோலவே
மாயாவதியால் களமிறக்கப்பட்ட பிராமண வேட்பாளர்கள் பலர் தோற்றுள்ளனர். வாக்குகள் ஒரு
சமூகத்திடமிருந்து இன்னொரு சமூகத்துக்கு மாறுவதில் இப்போதும் பிரச்சினை உள்ளது
என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் பதினேழு சதவீதம் அளவுக்கு உள்ளனர் எனக்
கூறப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ்
அதைத் தடுக்கவில்லை என்பது உ.பி. முஸ்லிம்களின் மனக்குறை. எனவே, அவர்களில்
பெரும்பாலானோர் முலாயமின் சமாஜ்வாதி கட்சியை ஆதரித்துவந்தனர். பா.ஜ.க.வை வீழ்த்தும்
வலிமை எவருக்கு உள்ளது என்பதைப் பார்த்து அவர்களை முஸ்லிம்கள் ஆதரிப்பதால் தற்போது
அவர்களில் கணிசமானவர்கள் பகுஜன் சமாஜை ஆதரிக்க முன்வந்துள்ளனர். அப்படியான
நிர்ப்பந்தம் தமிழகத்தில் இல்லை. எதிரியைவைத்துத் தமது ஆதரவைத் தீர்மானிக்கும்
நிலைமை இல்லாததால், தமது நலன்களுக்கேற்ற கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கும் நல்ல
வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதை அவர்கள் இனியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உ.பி. தேர்தல் முடிவிலிருந்து தமிழக அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள்
நிறைய உள்ளன. தமிழ்நாட்டிலும் சமூகச் சக்திகள் பிளவுண்டு கிடக்கின்றன. அந்தப்
பிளவுகள் அதிகரித்தும்வருகின்றன. சிதறுண்டு கிடக்கும் சமூகச் சக்திகளின் சமூகக்
கூட்டணியே இனித் தமிழகத்தை ஆளக்கூடிய நிலை ஏற்படலாம். அதற்குத் தலைமை ஏற்கும்
வரலாற்றுப் பொறுப்பு தலித்துகளிடம் வந்துசேர்வது தவிர்க்க முடியாது. ஆனால்,
மந்திரத்தில் மாங்காய் விழும் எனக் கனவுகாணாமல் இதற்குத் தலித்துகள் தெளிவான
திட்டத்தோடு உழைக்க வேண்டும்.
ஒற்றைக் கட்சி ஆட்சி இனித் தமிழ்நாட்டில் ஏற்பட முடியாது. இந்த உண்மையை
எதிர்கொள்ளும் மனத் துணிவு தி.மு.க.வுக்கும் இல்லை, அ.தி.மு.க.வுக்கும் இல்லை.
எண்பதுகளின் பிற்பகுதியின் மத்தியில் நிலவியது போன்ற சூழல் இப்போது தமிழகத்தில்
நிலவுகிறது. அடிக்கடி தேர்தல் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு அதன் பிறகு கூட்டணி
ஆட்சி சகஜமானதைப் போலத் தமிழகத்திலும் அடிக்கடி தேர்தல்கள் வரக்கூடும். மத்தியில்
கூட்டணி ஆட்சி என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் தயங்கியதுபோலவே இப்போது
இங்கே தி.மு.க. தயங்கிக்கொண்டிருக்கிறது. வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத்
தவறினால் நட்டம் தி.மு.க.வுக்குத்தான்.
உ.பி. தேர்தலின் மாதிரியை இங்கே அப்படியே பொருத்திப்பார்க்க முடியாது என்பது
உண்மைதான். ஆனால், குறியீட்டு அளவில் மாயாவதியின் வெற்றி ஏற்படுத்தும் தன்னம்பிக்கை
இந்தியா முழுவதிலுமுள்ள தலித்துகளை எழுச்சிகொள்ளவைத்துள்ளது. அதற்குத் தமிழகமும்
விதிவிலக்கல்ல. இந்தத் தன்னம்பிக்கை தமிழகத்துக்கான சமூகக் கூட்டணி எது என்பதைக்
கண்டறிவதற்கான தூண்டுதலை அவர்களிடம் ஏற்படுத்தியுள்ளதா என்பது இனிமேல்தான்
தெரியவரும்.
உள்ளடக்கம்