Google   www kalachuvadu.com

 

தலையங்கம்

நிஜத் துப்பாக்கியுடன் போலி நாயகர்கள்

போலி என்கவுன்டர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் சட்ட விரோதப் போக்கை மற்றுமொருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கஸுரிபாய் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டது தொடர்பாக வௌதவந்திருக்கும் தகவல்கள் இந்தி அடிதடி மசாலாப் படங்களையும் மிஞ்சுபவை. தேர்தல்களில் அவருக்குக் கிடைத்துவரும் வெற்றி, மோடி தனது வகுப்புவாதக் கொள்கைகளுக்கான அங்கீகாரமாக மட்டுமல்லாமல் தன்னைச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நாயகனாகக் கற்பனை செய்துகொள்ளவும் துணைபுரிந்திருக்கிறது.

மோடியின் காவல் துறை அதிகாரிகள் அவரது வகுப்புவாத அரசியல் திட்டங்களைச் செயல்படுத்தும் ஏவலர்களாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தொடக்கக் கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மோடி தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்குக் கட்சித் தொண்டர்களைவிடவும் காவல் துறை அதிகாரிகளையே நம்பியிருந்திருக்கிறார். நடைபெற்ற போலி மோதல் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய காவல் துறை அதிகாரியும் போலி மோதல் கொலைகளில் புகழ்பெற்றவருமான வன்ஜராவையும் அவரோடு சேர்த்துக் கைதுசெய்யப்பட்டுள்ள மற்ற இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் காப்பாற்றுவதற்கு மாநிலக் காவல் துறைத் தலைவர் பி.சி. பாண்டே தொடர்ந்து முயன்றுவந்திருக்கிறார். வன்ஜராவையும் அவரது கூட்டாளிகளையும் கைதுசெய்த டி.ஐ.ஜி. ரஜ்னீஷ் ராயை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்தது பாண்டேதான். அவருக்குப் பதிலாக விசாரணை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஐ.ஜி.பி. கீதா ஜோக்ரிக்கும்கூடப் பல நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறார் பாண்டே.

ஆனால், உச்ச நீதிமன்றம் கீதா ஜோக்ரியை மாநிலக் காவல் துறைத் தலைமையிடமிருந்தும் அரசிடமிருந்தும் விடுவித்து விசாரணையைச் சுதந்திரமாக மேற்கொள்ள வழிசெய்திருக்கிறது. ஜோக்ரி தனது விசாரணையின் முடிவுகளை அம்மாநில உள்துறை அமைச்சகத்திடம்கூடத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை எனச் சொல்லியிருக்கிறது. இது குறித்து ஜனநாயகத்தின் மீது மரியாதையுள்ள எந்த ஓர் அமைப்பும் வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு வன்ஜராவுக்கு ஆதரவாகத் தனது கட்சியின் ரவுடிகளைத் தூண்டி விட்டிருக்கிறது. வன்ஜரா குஜராத் மத வெறியர்களின் கதாநாயகனாகியிருக்கிறார்.

குண்டர்களையும் சமூக விரோதிகளையும் ஒழித்துக்கட்டும் அதிகாரத்தைக் காவல் துறை அதிகாரிகள் தம் கைகளில் எடுத்துக் கொள்வதை வரவேற்கும் மனோபாவம் சினிமா முதலான வெகுஜன ஊடகங்களாலும் சில அரசியல் இயக்கங்களாலும் கட்டமைக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. என்கவுன்டர்கள் காவல் துறை அதிகாரிகளின் சாகசங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. குற்றவாளிகளைச் சட்டத்தின் வழியில் தண்டிக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளின் மீதான அவநம்பிக்கை பல்வேறு வழிகளில் உருவாக்கப்படுகிறது. நாட்டின் பல காவல் துறை அதிகாரிகளுக்கு என்கவுன்டர்களின் மீது ஒருவித போதை உருவாகியிருக்கிறது. போலி மோதல் சாவுகளை நிகழ்த்துவதில் சாதனைகள் புரிந்துவரும் காவல் துறை அதிகாரிகளைப் பற்றிக் கடந்த சில வாரங்களுக்கு முந்தைய அவுட்லுக் இதழில் வெளிவந்த ஒரு செய்தியறிக்கை அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. மும்பையின் காவல் துறை ஆய்வாளர் பிரதீப் சர்மா தன்னைக் கண்டால் மும்பையின் சமூக விரோதக் கும்பல்கள் ஓடி ஒளிவதாகப் பெருமைப்பட்டுக்கொள்கிறார். என்கவுன்டர்களை நிகழ்த்துவதற்கு வாய்ப்பில்லாத ஞாயிற்றுக்கிழமைகள் தனக்குச் சலிப்பூட்டுவதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறாராம் அவர்.

என்கவுன்டர்களின்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டு நெறிகள் பின்பற்றப்பட்டனவா என்பதைக் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மாநில அரசுகள் பின்பற்றுவதே இல்லை. அதற்குப் பதில் அரசுகளும் அரசியல்வாதிகளும் இந்த 'சாகச வீரர்'களுக்குப் பல விருதுகளையும் பதவி உயர்வுகளையும் பரிசாக அளித்துக் கௌரவித்துவருகின்றன. தமிழகத்தில் வீரப்பனைச் சுட்டுக் கொன்ற காவல் துறை அதிகாரி விஜயகுமாருக்கும் தயா நாயக்குக்குச் சற்றும் குறையாத தேவாரம் போன்ற காவல் துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு அளித்துள்ள சலுகைகளையும் கௌரவங்களையும் யாரும் மறந்திருக்க முடியாது. வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய மனித உரிமை ஆர்வலர்களின் கேள்விகளை யாரும் பொருட்படுத்தவில்லை. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிப் பழங்குடி மக்களைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை.

பல என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள் தமது நிழல் உலகத் தொடர்புகளுக்காகத் துறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நடத்திய பல என்கவுன்டர்கள், சம்பந்தப்பட்ட 'குற்றவாளி'களின் எதிரிகளுடனான ஒப்பந்தங்களின்படி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சில அதிகாரிகள் கூலிப்படைகளைப் போல் செயல்பட்டிருக்கிறார்கள். காவல் துறை அதிகாரிகள் போலி மோதல்கள் மூலம் சமூக விரோத சக்திகளிடமிருந்து ஏராளமாகப் பணம் பெற்றுக்கொள்வது பற்றிய தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. உத்தரப் பிரதேசத்தின் ராஜேஸ்வர் சிங் என்னும் இளம் காவல் துறை அதிகாரி தன் மிகக் குறுகிய பணிக் காலத்தில் 23 மோதல் சாவுகளை நிகழ்த்தியுள்ளாராம். அவரது கதை நேராக இந்தி சினிமாவிலிருந்து இறக்குமதியாகியிருக்கிறது என வர்ணித்திருக்கிறது அவுட்லுக். திரைப்படக் கதாநாயகர்கள் அரசியல் நாயகர்களாகும்போது காவல் துறை அதிகாரிகளுக்குத் திரைப்பட நாயகர்களாகும் ஆசை துளிர்த்திருப்பது விசித்திரமானதல்ல. ஆனால் இந்த 'நாயகர்'கள் நிஜத் துப்பாக்கியுடன் சட்டத்தைப் பாதுகாக்கும் பணியில் இருப்பதுதான் கவலையளிக்கிறது. உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் காட்டிவரும் அக்கறையும் இது தொடர்பாக உருவாகியிருக்கும் விவாதங்களும்தான் இச்சூழலின் ஆறுதலான அம்சங்கள்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google