|
சிறப்புப் பகுதிகுழந்தைகள் மீதான வன்முறை
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒர்
ஆய்வு குழந்தைகளின் மீதான வன்முறை குறித்த விவாதங்களைத் தொடங்கி வைத்துள்ளது.
உலகின் இரண்டாவதாகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட ஒரு தேசம் தன்
சந்ததிகள்மீதுகொண்டுள்ள அலட்சியம் திகைக்கவைக்கிறது. குழந்தைகள் தவழும் வெளிகள்
நம்ப முடியாத அளவுக்குப் பாதுகாப்பற்றும் வன்முறையால் சூழப்பட்டும் இருப்பதை
வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வறிக்கை.
குழலினும் யாழினும் இனிதாகப் போற்றப்பட்ட மழலைச் சொல் இப்பொழுது தேம்புதலாக
ஒலிக்கிறது. அன்பு, பரிவு, கருணை போன்ற நெகிழ்வூட்டும் சொற்களால் நிரப்பப்பட்ட நமது
குடும்ப அமைப்பு குழந்தைகளின் பாதுகாப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவ்வளவு
உகந்த இடம் அல்ல என அறிக்கையில் காணப்படும் தகவல் ஒரு மிகையான கற்பனையாக இருந்தால்
நல்லதுதான். ஆனால், யதார்த்தம் அதைவிடவும் மோசமானதாகவே இருக்கும் என்பதற்கான
தடயங்கள் இருக்கின்றன. பழம்பெருமைகளில் திளைத்துக் கிடக்கும் நம் சமூகத்திற்கு,
ஆய்வறிக்கையில் காணப்படும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியூட்டுபவையாக இருக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை.
விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஒரு சிறு தூண்டுதலாக அமைச்சகத்தின் இவ்வாய்வறிக்கை
இருக்கக்கூடும். ஊடகங்களும் சமூக நல ஆர்வலர்களும் சேவை அமைப்புகளும் இவை போன்ற
அறிக்கைகளின் மீது அக்கறை காட்டலாம். ஆனால், அது எந்த விதத்திலும் போதுமானதல்ல.
குழந்தைகள் எவருக்குமே தனிச் சொத்து அல்ல. அவை ஒரு சமூகத்தின் பொது
அக்கறைக்குரியவை. பெற்றோர், ஆசிரியர், கவிஞர் என எல்லோருடைய இருப்பையும்
அர்த்தமுடையவையாய் மாற்றுவது குழந்தைகளே. அவர்கள்மீதான நமது அக்கறைகள் விரிவடைய
வேண்டும். உணர்ச்சிபூர்வமான சொற்களுக்கும் அப்பால் அவர்களிடம் அர்த்தமுள்ள எதையாவது
நமக்குப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களை மதிப்பதற்கும்
புரிந்துகொள்வதற்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆய்வாளர்கள் தமிழகத்தின் எந்தவொரு ஊரையும் ஆய்வு மாதிரியாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், குழந்தை உழைப்பைச் சுரண்டுவதிலும் குழந்தைகள்மீது வன்முறையைச்
செலுத்துவதிலும் தமிழகம் நாட்டின் எப்பகுதிக்கும் குறைந்ததல்ல என்பதைப் புரிந்து
கொள்வதற்கு வெறும் பத்திரிகைச் செய்திகளேகூடப் போதுமானவை. இதை மறுப்பதற்கான
புள்ளிவிவரங்களையும் ஆதாரங்களையும் தேடிக்கொண்டிராமல் நாம் நம்மைச் சுயபரிசோதனை
செய்துகொள்ள வேண்டும். பயனளிக்கும் செயல்திட்டங்களைப் பற்றி அவசரமாகச் சிந்தித்தாக
வேண்டும். வாசகர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்னும் நம்பிக்கையுடன்,
விவாதத்திற்கான ஒரு தொடக்கப் புள்ளியை உருவாக்கும் மிக எளிய முயற்சியாகக்
காலச்சுவடு இச்சிறப்புப் பகுதியை வெளியிடுகிறது.
-
தேவிபாரதி
உள்ளடக்கம் |