Google   www kalachuvadu.com

 

சிறப்புப் பகுதி

குழந்தைகள் சுமங்கலிகள் லாபம்!

ப்ரேமா ரேவதி

"மூன்றாண்டுகளில் கைநிறையச் சம்பாதித்து

திருமணம் முடித்து நல்வாழ்வு வாழ ...

சுமங்கலித் திட்டத்தில் பணிக்குச் சேருங்கள்"

இது நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் காணக் கிடைக்கும் போஸ்டர். சுமங்கலியாவதற்குக் குறுக்கு வழி.

இதில் என்ன தவறு?

கௌசல்யாவிடம் கேளுங்கள்.

"ஆரம்பத்தில நல்ல வேலை மாதிரிதான் இருந்துச்சு. ஆனா அப்புறம்தான் கஷ்டம்னு புரிஞ்சுது. எத்தனை மணிக்குக் கூப்பிட்டாலும் வேலைக்குப் போகணும். தொடர்ந்து மூணு ஷிப்ட் (24 மணிநேரம்) பார்க்கணும்னு சொல்லிட்டாலும் செஞ்சுதான் ஆகணும். வெளியில போக முடியாது. ஊர்ல பெத்தவங்களுக்கு உடம்பு சுகமில்லைனாகூட லீவு சுலபத்தில கிடைக்காது. நிறையப் பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூணு வருஷ கெடு முடியாமலே நின்னுடுவாங்க. இன்னும் பல பேரை மூணு வருஷம் முடியறதுக்குக் கொஞ்சம் முன்னாடி நிர்வாகமே ஏதாவது குறை சொல்லி நிறுத்திடும். கல்யாணப் பணமே கிடைக்காது" எனக் கூறும் இவர், ஈரோட்டில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து சுமங்கலியாகும் முயற்சியில் இருந்தவர்.

இன்னும் ஏஜெண்டுகளின் பாலியல் தொல்லை, பல மில்களில் நடைபெறும் தற்கொலைகள், சுமங்கலித் திட்டத்தை விட்டு வெளியேற போலீஸை நாடிய சிறுமிகள் எனச் 'சுமங்கலித் திட்டம்' என்ற பெயருக்குள் கரிய உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.

சுமங்கலித் திட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் தொழிற்துறையில் இந்திய அரசின் பார்வை பற்றிய ஒரு ஃப்ளாஷ்பேக் அவசியமாகிறது.

குழந்தைகள், சுமங்கலிகள் லாபம்

18 வயதுவரை உள்ள அனைவரும் குழந்தைகளே என்று கூறுகிறது ஐ.நா. சபையின் குழந்தை உரிமைப் பிரகடனம். 1999இல் இதில் கையெழுத்திட்டிருக்கிறது இந்தியா. எனினும் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வேலை பார்ப்பதைத்தான் குற்றம் எனக் கூறுகிறது. சட்டத்தின் பார்வையில் மட்டுமின்றிச் சமூகத்தின், ஏன் குழந்தை உரிமைப் போராளிகளாலும்கூடப் போதிய அக்கறை காட்டப்படாதவர்கள் வளர் இளம் பருவத்தினர் (adolescents) எனப்படும் 14-18 வயதுக் குழந்தைகள்.

குழந்தை என்றவுடன் நம் மனதில் தோன்றம் பிம்பம் மென்மையான, பாதுகாக்கப்பட வேண்டிய இளைய குழந்தைகளுடையதுதான். வளர்ந்து, உடல் ரீதியான, உணர்வு ரீதியான, கலவையான தோற்றங்களால் கொந்தளிக்கும் பிராயமான வளர் இளம் பருவத்தை முதிர் குழந்தைப் பருவம் என நாம் நினைப்பதில்லை. தேவதைகள் கால் வைக்க அஞ்சும் இடங்களைப் பிசாசுகள் விட்டுவைப்பதில்லை. லாபம் என்ற ஒற்றைக் குறிக்கோளால் உந்தப்படும் நம்முடைய பொருளாதார அமைப்பு, தன்னுடைய போர்ப் படையின் முக்கியப் பகுதியாகக் கண்டெடுத்திருப்பது இந்த வளர் இளம் பருவத்தினரைத்தான். நன்மை எப்போதும் அரவமின்றிச் சாதாரணமாய் வரும். தீமை பல மாயப் பூச்சுகளோடு அலங்காரமாய் வந்தமரும். 14-18 வரையிலான வளர் இளம் பெண்களைக் குறிவைத்துத் தம் லாபவெறியைத் தீர்த்துக்கொள்ளப் பெருநிறுவனங்கள் போட்ட திட்டம் "ஒப்புதல் பெற்ற கொத்தடிமைத்தனம்". அதற்கு அணிவித்த முகமூடிதான் சுமங்கலிப் பட்டம்.

கிராமப்புற வறுமையால் 14 வயதுக்கு மேல் இடைநிறுத்தம் செய்யும் குழந்தைகளைப் பற்றி எந்தக் கவலையும்படாத அரசு தமிழகக் கிராமங்களில் ஏராளமான வளர் இளம் பருவத்தினரை வெட்டியாக வைத்துள்ளது. ஆண்கள் ஹோட்டல், கட்டுமானப் பணி அல்லது கூலி வேலை எனச் செல்ல, பெண்கள் இது போன்ற திட்டங்களால் வலைவீசிப் பிடிக்கப்படுகிறார்கள். "வீட்டிலே சும்மாதானே கிடக்கிற" என்ற வசவுகள் வேறு.

மேற்பார்வைக்கு மிக நல்ல ஒரு விஷயமாகத் தெரியும் இத்திட்டம் உண்மையில் எப்படி இயங்குகிறது?

"ஒரு பெண்ணுக்கு ரூ. 500/-"

கட்டுரையின் முகப்பில் நாம் பார்த்தது போன்ற போஸ்டர்கள் ஒரு கிராமத்தில் ஒட்டப்படுவதில் துவங்குகிறது திட்டம். பெரும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் இளம் பெண்களைச் சேர்க்க ஏஜெண்டுகளை நியமிக்கின்றன. இந்த ஏஜெண்ட் ஒரு பெண்ணைப் பணியில் சேர்த்தால் அவருக்கு ரூ. 500 கமிஷன் கிடைக்கும். தென்மாவட்டங்களில் இருந்து பெருமளவில் புலம்பெயர்ந்து பஞ்சம் பிழைக்கத் திருப்பூர், கோவை, பெருந்துறைப் பகுதிகளுக்குச் சில வருடங்களுக்கு முன் சென்றவர்கள்தான் பெரும்பாலான ஏஜெண்டுகளும் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தம் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள இளம் பெண்களையும் அவர்களது பெற்றோர்களையும் வசப்படுத்தி வேலைக்குச் சேர்க்கிறார்கள். சொந்தக் கிராமப் பெண்களுக்குத் திருமணம் செய்துகொள்ள உதவும் பட்டணத்து நல்ல மனிதராகச் செயல்படும் இந்த ஏஜெண்ட் மாநகரை அடைந்தவுடன் தொழிற்சாலையின் மொத்தப் பிரதிநிதியாக உருமாறுவார்.

நாகை, தரங்கம்பாடி மற்றும் தேனி ஆகிய இடங்களில் உள்ள ஏஜெண்டுகள் தாங்கள் அழைத்துச் செல்லும் இளம் பெண்களைப் பாலியல் ரீதியில் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சேவ் என்ற தொண்டு நிறுவனம் நிகழ்த்திய ஆய்விலும் இதுபோன்ற பிரச்சினைகள் தெரியவந்துள்ளன. 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களைத்தான் சேர்ப்பதாக போஸ்டர்களில் கூறப்பட்டாலும் நடைமுறையில் 14 வயதிலிருந்து 20 வயது வரையுள்ள பெண்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

திருமணம்தான் பெண்களின் லட்சியம் என்று சொன்னால் நான் உட்படப் பலரும் இன்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் வறுமையும் சாதியும் ஒடுக்கி வைத்துள்ள கிராமப்புறங்களில் படிப்போ வேறு வாய்ப்புகளோ இல்லாத கோடிக்கணக்கான பெண்களுக்குத் திருமணம் ஒரு பெரும் எதிர்பார்ப்பாக இருப்பது நிதர்சனம். தங்கள் பெற்றோர்களை மேலும் கடனாளி ஆக்காமல் சொந்த உழைப்பில் திருமணம் செய்துகொள்வது மேலானது என நினைத்துதான் பல இளம் பெண்கள் இந்த வேலைக்குச் சேர்கிறார்கள்.

கனவுகள் கருகும் கொட்டடிகள்

கல்யாணக் கனவுகளோடு மாநகரங்களுக்குத் துணிப் பையோடும் விரிந்த விழிகளோடும் வந்திறங்கும் இவர்கள் முதலில் அதிர்வது தொழிற்சாலைக்குள்ளேயே அளிக்கப்படும் வசிப்பிடங்களைப் பார்த்துதான். "10 அடி வூ 10 அடி உள்ள இருண்ட அறையில் 12 பேர் தங்கள் பெட்டிகளோடு வசிக்கிறார்கள்" எனக் கூறுகிறது சுமங்கலித் திட்டம் குறித்து லேபர் ஃபைல் இதழில் சிந்து மேனன் எழுதியுள்ள நேரடி ஆய்வுக் கட்டுரை.

இது மட்டுமல்ல. டெக்ஸ்டைல் ஆலைகளில் மூன்று ஷிப்ட்களில் வேலை நடைபெறும். காலை 7.30 முதல் 4.30, 4.00 முதல் 11.00, 11.00 முதல் காலை 7.00 வரை. தேனீர் இடைவேளைகூடக் கிடையாது. பணிபுரியும் இடத்திற்கே தேனீர் கொண்டுவந்து தரப்படும். திருப்பூரில் பணிபுரியும் SUED என்ற தொண்டு நிறுவனம் நடத்திய விசாரணையில், "பெரும்பாலான நேரங்களில் தொடர்ச்சியாக இரண்டு ஷிப்ட்களில் பணிபுரிகிறார்கள். சில சமயம் மூன்று ஷிப்ட்களிலும்கூட" எனத் தெரியவருகிறது.

சொந்த மண்ணிலிருந்து தூரமாய், பல மணிநேரம் நின்று செய்யும் கடின உழைப்பைப் புரிந்து, நல்ல உணவோ வாழிடமோ அற்று பல்வேறு பாலியல் தொல்லைகளையும் சந்தித்து இந்தப் பெண்கள் எந்தக் கனவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்?

"நாங்கள் உள்ளே சென்றபோது பல பெண்கள் தங்கள் பெற்றோரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார்கள். களைத்து ஓய்ந்துபோய், தொங்கிய முகங்கள் பேசாமலே சொல்லும் மன உளைச்சல் மற்றும் அயர்ச்சியும் அந்த அமைப்பின் மீதான வெறுப்பும் கண்கூடாக இருந்தது. சொல்லிவைத்தாற்போல அனைவரும் ஒல்லியாக, வெளுத்துப் போயிருந்தார்கள். நீண்ட நேரக் கடினக் கட்டாய உழைப்பும் ஆரோக்கியமற்ற சூழலும்தான் இதற்குக் காரணம்" எனத் தன் ரகசியச் சந்திப்பைப் பதிவுசெய்கிறாகள். லேபர் ஃபைல் ஆய்வாளர் சிந்து மேனன் முடியாமல் பல பெண்கள் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்கள். காயங்களோடு ஓடி வந்த இரு பெண்களை மீட்டிருக்கிறார் சூலூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர்.

தப்பித்துப் போய் மீண்டும் வறிய பெற்றோருக்குச் சுமையாக வேண்டுமே என்ற வேதனையில் தங்கள் இளமையை, ஆரோக்கியத்தை, வாழ்க்கையைப் பணயம் வைத்துக் கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள் ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், சிறுமிகள்.

லாபத்தின் கோர முகம்

தங்களிடம் ஆறுமாதம் பயிற்சி எடுத்த பின் மூன்றாண்டுகள் பணிபுரியும் பெண்களுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகையாக அளிப்பதுதான் சுமங்கலித் திட்டம். இந்த மூண்றாண்டுகள் முடிக்காவிட்டால் இந்தத் தொகை கிடைக்காது. மேலும் வெற்றிகரமாக முடித்தாலும் முன்றாண்டுக்குப் பின் தொடர்ந்து வேலை கிடையாது.

இந்தப் பணத்தைப் பெற அடிமாட்டு ஊதியத்தில் மூன்றாண்டுகள் உழல வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு ஊதிய அளவுகளை வைத்துள்ளன. பொதுவாக ஒரு நாளைக்கு ரூ. 34 முதல் ஆறு மாதங்களுக்குப் பின் ஒவ்வொரு ஆறுமாதத்திற்குப் பின்னும் ரூ. 2 ஊதிய உயர்வும் அளிக்கப்படுகிறது. இந்த முறையில் கடைசி ஆறுமாத காலத்தில் ரூ. 45 ஊதியம் பெறலாம். ஆனால் நடைமுறையில் ரூ. 30ஐத் தாண்டி ஊதியம் எவரும் பெறுவதில்லை. இந்த ஊதியம்கூட முழுமையாக இவர்கள் கைக்குக் கிடைப்பதில்லை. காரணம், ரூ. 10லிருந்து 15 வரை உணவு மற்றும் உறைவிடத்திற்காக (!) பிடித்தம் செய்யப்படுகிறது.

மொத்தத்தில் மோசமான நிலைமையில் கடின உழைப்பை அளிக்கும் இப்பெண்கள் இந்த மூன்றாண்டுகளில் சம்பாதிக்கும் தொகை, ஆண்டிற்கு ரூ. 9000.

இவ்வளவும் சகித்துக் காத்திருந்தால் பலரை மூன்றாண்டுகள் முடிவதற்குள் சற்று முன்னர் நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிடும். ஒருவேளை மூன்றாண்டுகள் முடித்தாலும் பல பெண்களுக்கு முழுத்தொகை உடனடியாக அளிக்கப்படுவதில்லை.

இத்திட்டம் யாருடைய கண்டுபிடிப்பு? ஏன் கொண்டு வரப்பட்டது? இக்கேள்விகளுக்கான பதில்களில்தான் உறைந்திருக்கிறது இக்கொடூர முறையின் உள்நோக்கம்.

"இளம்பெண்களின் மெல்லிய விரல்கள் பணிபுரியும் நேர்த்தி மட்டும் எங்கள் நோக்கமல்ல. இவர்கள் கீழ்ப்படிதல் மிக்கவர்கள். எந்தத் தொழிலாளர் பிரச்சினையும் ஏற்படுத்த மாட்டார்கள்" என்று ஒரு தொழிலதிபர் சேவ் நிறுவனத்தின் ஆய்வில் கூறியிருக்கிறார்.

திருமணமாகாத பெண்களுக்கான திட்டமாக இதை உருவாக்கியதால் மூன்றாண்டுகள் கசக்கிப் பிழிந்து சக்கையாக்கிய பெண்களுக்குப் பணி உத்திரவாதம் அளிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது.

திருப்பூரின் 9 லட்ச மக்கள்தொகையில் 4-5 லட்சம் மக்கள் டெக்ஸ்டைல், ஆயத்த ஆடைத் துறைகளில் பணிபுரிகிறார்கள். இதில் கடந்த சில வருடங்களில் கட்டாய விருப்ப (!) ஓய்வுத் திட்டத்தின் மூலமாகவும் பெரும்பாலான நிரந்தர ஊழியர்கள் வீட்டிக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள. மேலும் பெரிய யூனிட்களை மூடிவிட்டு அதே முதலாளி வேறு இடங்களில் சிறு யூனிட்களை அமைப்பதன் மூலம் பல நிரந்தர ஊழியர்கள் வேலையற்றவர்களாகியிருக்கிறார்கள். இப்படிக் காலி செய்யப்படும் இடங்களை சுமங்கலித் திட்டம் மூலம் நிரப்பி தங்கள் தங்குதடையற்ற வளர்ச்சியை வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களின் கண்ணீரிலும் மாட்டு மந்தைகள் போல் கொட்டடிகளில் கரைந்துகொண்டிருக்கும் இளஞ்சிறுமிகளின் ரத்தத்திலும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் திருப்பூர் முதலாளிகள்.

சுமங்கலித் திட்டம் கொத்தடிமை முறைதான்! "அடிமை முறை அழிந்துவிடவில்லை. பல்வேறு முறைகளில் வாழ்கிறது" என சர்வதேச தொழிலாளர் நிறுவனமான ILO கூறுகிறது. தமிழகக் கிராமப்புறங்களில் கொத்தடிமை முறை சாதி ரீதியாகப் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. இதற்கெதிரான போராட்டங்கள், நடவடிக்கைகள் காரணமாக இது பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் இன்னொரு வடிவமான 'கடனுக்கு உழைப்பது,' 'கடன் கொத்தடிமை முறை' இன்று மிகப் பரவலாகக் காணப்படுகின்றன. செங்கல் சூளைகளிலும் கார்ப்பரேட் பண்ணைகளிலும் அரிசி அரவை நிலையங்களிலும் ரூ. 5000 முதல் 10,000 வரையான கடனை அடைக்கக் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பங்கள் புலம்பெயர்ந்து 2-3 வருடங்கள் (ஊதியமின்றி) கொத்தடிமைகளாக உழைத்துவருகிறார்கள். சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் தேசிய மனித உரிமை ஆணையம் நடத்திய நேரடிச் சோதனையே இதற்குச் சான்று.

இந்தக் கடன் கொத்தடிமை முறையே இப்போதுதான் சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அதனிலும் ஒரு படி அதிகமாய்ச் சுரண்டும் சுமங்கலித் திட்டத்தைச் சட்டவிரோதமான கொத்தடிமை முறை என நிறுவுவதில் ஒரு சட்டச் சிக்கல் உள்ளது.

"கடன் உழைப்பு முறையிலோ, பழைய கொத்தடிமை முறையிலோ தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேற முடியாது. ஆனால் சுமங்கலித் திட்டத்தில் பணிபுரிபவர்கள் வேலையை விட்டுச் செல்ல வெளிப்படையான தடையேதுமில்லை. ஆனால் எந்த 30,000 ரூபாய்க்காகக் கொடூரமான வேலைச் சூழலைச் சகித்துக்கொண்டு பணிபுரிந்தார்களோ அந்தத் தொகை கிடைக்காமல் போய்விடும். இப்படி ஒரு சூழ்ச்சியான திட்டம் கொத்தடிமை முறை என்றுதான் நாங்கள் பார்க்கிறோம்" என்கிறார் AITUCஇன் மாநிலச் செயலாளர் எல்.எஸ். தியாகராஜன்.

இவர்கள் தொழிலாளர்கள் என்றால், நியாயமான சங்கமாகும் உரிமை, முத்தரப்பு அல்லது இரு தரப்புப் பேச்சுவார்த்தை அடிப்படையிலான நியாயமான வாழ்வூதியம், சேம நல நிதி (PF). பணிக்கொடை (gratuity), வீட்டு வாடகை போன்ற தொழிலாளர் உரிமைகள் ஏன் இவர்களுக்கு வழங்கப்படவில்லை? ஏன் அரசு இத்தனை ஆயிரம் சிறுமிகளின் இளம்பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை?

இவர்கள் தொழிலாளர்கள் இல்லையென்றால் இவர்களை அரசு எப்படிப் பார்க்கிறது? அடிமைகளாகவா? சுமங்கலியாக இந்த ஒரு வழியைத்தான் ஒரு நல்வாழ்வு நாடு (Welfare State) தன்னுடைய புதல்விகளுக்கு அளிக்கப்போகிறதா?

பிறந்ததிலிருந்து மகள், கன்னி, சுமங்கலி, மலடி, விதவை, தாய், மாமியார் என ஆணோடு உறவு சார்ந்த குறியீடுகளாகவே பெண்களின் வாழ்க்கை கழிகிறது. இத்தகையதொரு குறியீட்டை இத்திட்டத்திற்குப் பெயராக வைத்திருப்பது உலகமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றங்களைக்கூடப் பல சமயங்களில் நடை முறைகளில் நிலவும் சமூகப் படிநிலைகள்தான் நன்மை எனவோ தீமை எனவோ மாற்றுவதைக் காட்டுகிறது. உலகமயமாக்கலால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஒட்டு மொத்த மிகத் தீவிரமான பொருளாதாரப் பின்னடைவுகளோடு தாங்கள் பெண்களாகச் சமூகத்தின் கீழ்ப்படியில் இருக்கும் நிலையால் எற்படும் அதிகமான பாதிப்புகளையும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதையே ஒற்றை வரியில் "உலகமயமாக்கல் ஒரு ஆண் (Globalisation is a man)" என்று R Went உலகமயமாக்கல் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google