"கேரளாவுல இருக்கிற எங்க அண்ணனுக்கு ஒரே ஒரு போன் பண்ணிக்கலாமா அக்கா?"
ஏக்கத்துடனும் எதிர் பார்ப்புடனும் என் கையிலிருந்த செல்போனைப் பார்த்தபடியே
கேட்கிறது அந்தக் குழந்தை. அப்போதுதான் சில விளையாட்டுகளை விளையாடி முடித்துவிட்டு
நாகப்பட்டினத்தில் வானவில் பள்ளியின் அருகில் உள்ள மைதானத்தில் உட்கார்ந்திருந்தேன்.
என்னைச் சுற்றிப் பிள்ளைகள். மடியில், பக்கத்தில், தலைக்கு மேல் உட்கார்ந்து
பேசிக்கொண்டிருந்தார்கள். என் செல்போனில் இருந்த கேமராவைப் பார்த்து
ஆச்சரியப்படுகிறார்கள். என்னைப் பற்றி, சென்னையைப் பற்றி, சினிமாவைப் பற்றிக் கேள்வி
கேட்கிறார்கள். என் சாதாரணமான பதில்களில் இருந்த தகவல்கள் அவர்களுக்கு பிரமிப்பாய்
இருக்கின்றன. வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. பிள்ளைகளுக்கு அது ஒரு பொருட்டாகவே
இல்லை. "விளையாடலாமா அக்கா?" என்று சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்த என்னை
உற்சாகத்தோடு கேட்டு இழுக்கிறார்கள்.
குழந்தைமைக்கே உரிய உற்சாகம்.
சில மாதங்களுக்கு முன்புவரை அவர்களிடம் அந்த உற்சாகம் இருந்திருக்குமா என்று
தெரியவில்லை. ஏதோ ஒரு தெருவில் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் அடி வாங்கியபடியே
யாரிடமாவது கையேந்திக்கொண்டிருந்திருப்பார்கள். அழுக்குத் தலையும் முரட்டுக்
குணமுமாகத் திரிந்துகொண்டிருந்திருப்பார்கள்.
வானவில், உண்மையிலேயே இந்தப் பிள்ளைகளின் வாழ்க்கையில் வண்ணங்களைச்
சேர்த்திருக்கிறது. குழந்தைமையின் வண்ணங்களை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
அவர்கள் மீண்டும் குழந்தைகளாகியிருக்கிறார்கள்.
நாகப்பட்டினத்தில் நரிக்குறவர்கள் மற்றும் ஆதியன் சமூகத்தைச் சேர்ந்த
குழந்தைகளுக்காக இயங்கிவரும் பள்ளிதான் வானவில். இதைத் தொடங்கி நடத்திக்
கொண்டிருப்பவர் பத்திரிகையாளரும் களப்பணியாளருமான ரேவதி. இப்படியொரு பள்ளியைத்
தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் ரேவதிக்கு இருந்ததில்லை, லட்சுமியைச் சந்திக்கும்வரை.
லட்சுமி நான்கு மாதக் குழந்தை. அவள் எட்டு வயதுக் குழந்தையான முருகம்மாவின் கையில்
இருந்தாள்.
சுனாமிக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில்
ரேவதி நாகப்பட்டினம் சென்றார். சுனாமியின் வேலைகளுக்கு இடையில்தான் அவரும் அவரது
நண்பர்களும் ஒரு நாள் லட்சுமியைப் பார்த்தார்கள். டீக்கடையில் இருந்த அவர்களிடம்
குழந்தை முருகம்மா கை நீட்டியிருக்கிறாள். சுனாமி நிவாரணம் பொருட்டு சுமார் 300
தன்னார்வ அமைப்புகள் அப்போது நாகப்பட்டினத்தில் முகாமிட்டிருந்தன. உணவுப்
பொட்டலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாராளமாக வழங்கப்பட்டிருந்தன. ஆனால்
லட்சுமிக்கு அந்த உணவு போய்ச் சேரவில்லை. ரேவதியும் நண்பர்களும் நீண்டுகொண்டேபோன
கேள்விகளைத் தொடர்ந்து போனார்கள். லட்சுமியின் குடும்பம் - அவரது அம்மா மல்லிகாவும்
அப்பா காளியப்பனும் - பேருந்து நிலையத்துக்கு அருகில் வசித்துவந்தார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 43 ஆதியன் (பூம் பூம்
மாட்டுக்காரர்கள்) குடும்பங்களில் லட்சுமியின் குடும்பமும் ஒன்று. பிளாஸ்டிக்
பொருட்களும் வளையல்களும் விற்றுப் பிழைப்பு நடத்திவருபவர்கள். பிச்சையெடுக்கவும்
செய்வார்கள். சுனாமியில் அவர்களது பிளாஸ்டிக் பொருள்கள் அடித்துச்செல்லப்பட்டன.
மற்றவர்களோடு மண்டபங்களில் தங்கவும் அவர்களால் முடியவில்லை.
விரட்டியடிக்கப்பட்டார்கள். லட்சுமிக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் அவளுக்கு
மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு அந்த குடும்பங்களைச் சேர்ந்த மற்ற
குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க முயன்றபோதுதான் ரேவதிக்கும் நண்பர்களுக்கும்
உண்மையின் வலி உறைத்தது.
சில பள்ளிகள் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ள முன்வந்தாலும் அங்கிருந்த மற்ற
குழந்தைகள் அவர்களைச் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. நரிக்குறவர் மற்றும் ஆதியன்
சமூகக் குழந்தைகள் சக நண்பர்களாலேயே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.
இக்குழந்தைகளுக்காக, அவர்களைச் சமூகத்துடன் ஒன்றிணைக்கத் தயார்செய்வதற்காக,
முக்கியமாக அவர்கள் பிச்சையெடுக்காமல் இருப்பதற்காக ஒரு பிரத்யேகமான பள்ளியைத்
தொடங்க வேண்டும் என்று அப்போதுதான் ரேவதி முடிவுசெய்தார். வானவில் பிறந்தது.
வானவில் தொடங்கப்பட்டுவிட்டாலும் அதை ஒரு வெற்றிகரமான பள்ளிக்கூடமாகச்
செயல்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. நிதி திரட்டுவது ஒரு பெரிய
சவாலாக இருந்தது. நண்பர்களின் உதவியோடு அந்தச் சவாலை ரேவதி ஓரளவுக்குக் கடந்தார்.
ஆனால், குழந்தைகளைப் பிச்சையெடுக்கவைத்து அதில் தினமும் 100, 200 ரூபாய்
சம்பாதித்துப் பழக்கப்பட்ட பெற்றோர்களையே பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லிச்
சம்மதிக்கவைப்பதுதான் பெரிய சவாலாக இருந்தது. பெற்றோர்களுக்குச் சின்னச் சின்ன
சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன.
அழுக்குத் தலைகளும் முரட்டுக் குணமுமான பிள்ளைகள் தொடர்ந்து தரப்பட்ட
பயிற்சியினாலும் வானவில்லில் பணிசெய்பவர்கள் காட்டும் அக்கறையினாலும் கொஞ்சம்
கொஞ்சமாக மாறிவருகிறார்கள். ஆனால் இந்த முயற்சியில் ரேவதியும் அவரது நண்பர்களும்
சந்தித்த தடைகள் நிறைய. குறிப்பாகச் சமூகத்தின் எதிர்வினை. சமூகத்தின் பல
கேலிக்குரல்களை ரேவதி சந்திக்க வேண்டியிருந்தது. "நீங்க என்னதான் முயற்சி
செய்தாலும் இவங்க மாறமாட்டாங்க" என்று பலர் ரேவதியிடம் சொன்னார்கள். பள்ளி தொடங்கிய
புதிதில் ரேவதி ஒருங்கிணைத்திருந்த குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளில்
கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து. பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது
அங்கிருந்த ஒரு புகைப்படக்காரர், "பாருடா இந்தக் குழந்தைகளுக்கு
குளிக்கிறதுக்கெல்லாம் பரிசு கொடுக்கறாங்கடா" என்று தனது நண்பரிடம்
சொல்லிக்கொண்டிருந்தார். மேடையிலேயே அவருக்குப் பதிலளித்த ரேவதி, சமூகத்தால்
ஒதுக்கப்பட்ட அந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் அளவுக்குக்கூட
வசதிகளோ வாய்ப்புகளோ இல்லை என்று கொஞ்சம் கோபமாகவே சொன்னார். அதுதான் உண்மையும்கூட.
அவர்களே விரும்பினாலும் கூடச் சமூகம் அவர்கள் மாறுவதை விரும்புவதில்லை. அதனால்தான்
ரேவதி போன்றவர்கள் முயன்றாலும் அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
ஆனால் ரேவதியின் தொடர் முயற்சிகள் காரணமாக இன்று வானவில் பள்ளியில் சுமார் 100
பிள்ளைகள் படிக்கிறார்கள். பல திசைகளிலிருந்தும் உதவிகள் வருகின்றன.
பிள்ளைகள் மட்டுமன்றி அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்களும் பிச்சையெடுக்காமல்
வாழ வேண்டும் என்னும் தொலைநோக்கோடு மேலும் பல புது விஷயங்களை முயன்றுவருகிறார்
ரேவதி. ஒரு சமூகத்துக்கான ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு ஒரு சிலரின் துணையோடும்
ஆதரவோடும் ஒன்றிரண்டு பேர் மட்டும் போராடும்போது, அவர்கள் கடக்க வேண்டிய பாதை
கடினமானதாகவே இருந்திருக்கிறது. ரேவதிக்கும் அப்படித்தான். சமூகத்தின் பல
இடர்பாடுகளும் பல வடிவங்களில் வந்துகொண்டுதானிருக்கின்றன. அந்தச் சமூகத்தைச்
சேர்ந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வாங்குவது தொடங்கி அவர்களை மற்றவர்கள்
ஏற்றுக்கொள்ளச் செய்வதுவரை பல போராட்டங்கள். ரேவதி எதற்குமே சோர்வடைந்துவிடவில்லை.
தனது போராட்டங்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கும் அவரது நண்பர்களுக்கும்
வானவில் இலக்கு அல்ல. அது ஒரு நீள்பயணம். இந்தப் பயணத்தைச் சோர்வின்றிச்
சாத்தியப்படுத்தியிருப்பது போதிய உணவும் சுகாதாரமும் இல்லாததால் மரணமடைந்த குழந்தை
லட்சுமி.
குறிப்பு: பத்திரிகையாளரும் கவிஞருமான கவிதா வானவில் அறக்கட்டளையின் ஓர்
உறுப்பினர்.
உள்ளடக்கம்