|
அஞ்சலி:
நகுலன் (1921-2007)
ராஜமார்த்தாண்டன்
கோவைக்கு வந்திருந்த நான், யதேச்சையாகச் சந்தித்த குவளைக் கண்ணனுடன் விடுதி
அறையில் தங்கியிருந்தேன். உடனிருந்த செந்தில், அன்று (18.05.2007) காலை ஒன்பது
மணியளவில், 'நேற்றிரவு நகுலன் காலமாகிவிட்டாராம். சென்னையிலிருந்து தேவிபாரதி
மெசேஜ் அனுப்பியிருக்கிறார்' என்றார். அவருடன் தொடர்புகொண்டு விசாரித்தபோது, நகுலன்
உடல் நலமில்லாமல் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் முதல்
நாளிரவு மரணமடைந்ததாகவும் கண்ணன் தகவல் அனுப்பியதாக அவர் சொன்னார். ஒரு கன
அதிர்வைத் தொடர்ந்து, சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்
நிழல்போல் மனத்தில் அசைந்தன.
நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி. 1921இல் கும்பகோணத்தில் பிறந்து,
திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம்
பெற்றவர். 1959 முதல், தொடர்ந்து கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள்,
மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் செயல்பட்டவர். 1973இல் ஆய்வு மாணவனாக நான் கேரளப்
பல் கலைக்கழகத்தில் சேர்ந்து, திருவனந்தபுரம், பாளையத்தில் ஒரு விடுதியில்
மூன்றாண்டுகள் தங்கியிருந்தேன். அக்காலகட்டத்தில்தான் அவரை அடிக்கடிச் சந்தித்துப்
பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவர் ஒரு கல்லூரியில் ஆங்கில
விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். வாரத்தில் மூன்று, நான்கு நாள்களாவது
மாலை வேளையில் சந்தித்துப் பேசுவோம். நகுலனுடன் பெரும்பாலும் எம்.எஸ். ராமசாமி,
ஷண்முக சுப்பையா, காசியபன் மூவரும் வருவார்கள். எப்போதாவது நீல. பத்மநாபனும்
வருவார். பூங்காவிலோ விளையாட்டு மைதானத்திலோ அமர்ந்து நீண்ட நேரம்
பேசிக்கொண்டிருப்போம். முழுக்கவும் இலக்கியம் சார்ந்த பேச்சாகவோ விவாதமாகவோதான்
இருக்கும்.
மெலிந்து, சற்றே குனிந்த உருவம். எப்போதும் நான்கு முழ வேஷ்டி -சட்டைதான்
அணிந்திருப்பார். ஒரு பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டே வருவார் (ஓரிரு முறைதான் அவர்
சைக்கிளில் அமர்ந்து ஓட்டிச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன்). வாயில் எப்போதும்
வெற்றிலையைக் குதப்பிக்கொண்டிருப்பார். ஒரு பையிலும் வெற்றிலை வகையறாக்கள் தயாராக
இருக்கும். பேசிக்கொண்டிருக்கும்போதும் வெற்றிலையை மென்றுகொண்டுதானிருப்பார்.
பேச்சினிடையே காரணமில்லாமல் ஒரு வெடிச் சிரிப்பு தெறிக்கும். முதலில் அது பதற்றத்தை
ஏற்படுத்தினாலும், அவரது இயல்பே அதுதான் என்பதைப் போகப்போகப் புரிந்துகொண்டேன்.
ஓர் எழுத்தாளரைப் பற்றியோ படைப்பைப் பற்றியோ அவர் சொல்லும் அபிப்ராயங்கள்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைபோல் தோன்றும். ஆனால், கூர்ந்து கவனித்துவந்தால்,
அவற்றுக்குப் பின்னே மெல்லிய இழையொன்று நகர்ந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள
முடியும். அவரது எழுத்துக்களில் போலவே. அவரது பேச்சில் எப்போதும் ஒருவிதமான கிண்டல்
தொனி கலந்திருக்கும். ஆனால், அதில் சிறிதும் வக்கிரம் இருக்காது. வெளிப்படையாகப்
பேசுவார். நிறையவே படிப்பார். வலிந்து தனது புத்தக அறிவை வெளிப்படுத்தமாட்டார்.
பேச்சிலும் பழக்கத்திலும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.
அப்போது 'சதங்கை' இதழில் கவிதைத் தொகுப்புகளுக்கு நான் எழுதி வந்த மதிப்புரைகளில்
சில கடுமையான தொனியில் இருந்தன. ஒரு சந்தர்ப்பத்தில், 'நீங்கள் உங்களுக்குப்
பிடித்தமானவற்றைப் பற்றி மட்டும் எழுதுங்களேன். பிடிக்காதவற்றைக் கண்டு
கொள்ளாதீர்கள். இலக்கியத்தைவிடவும் மனித உறவுகள்தானே முக்கியம்' என்று நகுலன்
என்னிடம் அன்று சொன்னது, இன்றும் மனத்தில் எதிரொலிக்கிறது. கோகயம், கொல்லிப்பாவை
இதழ்களுக்குக் கவிதைகள், கட்டுரைகள் கேட்டபோதெல்லாம், மறுப்பு சொல்லாமல், எந்தப்
பிகுவும் பண்ணாமல் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அவரது பேச்சைப் போலவே அவரது கட்டுரைகளிலும் கிண்டலும் (இருண்மைத்தன்மையும்
தெளிவின்மையும் என்றும் சொல்லலாம்) இருக்கும். தன்னைக் கடுமையாக
விமர்சித்தவர்களுக்குப் பதில் எழுதியபோதும், அவர் வார்த்தைகளைத் தவறவிட்டதில்லை.
மனத்துக்குள் வருத்தம் இருந்தபோதிலும் எழுத்தில் நிதானத்தை இழந்ததில்லை. அத்தகைய
விமர்சனங்கள் குறித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட, நானறிந்தவரை,
கடுமையான வார்த்தைகளை அவர் உபயோகித்ததில்லை.
நகுலனுக்கு வெளிப் பழக்கமும் நண்பர்களும் மிகவும் குறைவு. இதனை அவருடன் பழகியவர்கள்
மட்டுமல்லாமல், அவரது சிறுகதைகள், நாவல்களை மட்டும் படித்தவர்கள்கூட அறிந்துகொள்ள
முடியும் (நகுலனின் நாவல்களில் அவரது எழுத்தாள நண்பர்கள் சிலரே மீண்டும் மீண்டும்
கதாபாத்திரங்களாக வருவதைக் காணலாம்). ஒரு சில எழுத்தாளர்களும் வீட்டில்
குவிந்திருக்கும் புத்தகங்களுமே அவருக்கு நண்பர்கள். எல்லாவற்றையும்விட அவர்
மிகவும் நேசித்தது அவரது தாயாரைத்தான். நகுலன் வெளியே கிளம்பும் போதெல்லாம் தனது
தாயாரிடம், அவர் எங்கே போகிறார், யாரைச் சந்திக்கச் செல்கிறார், எப்போது திரும்பி
வருவார் என்ற விவரங்களையெல்லாம், ஒரு குழந்தை தன் தாயிடம் அனுமதி கேட்பதுபோலச்
சொல்வதைப் பல முறை பார்த்திருக்கிறேன்.
n n n
நகுலன் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள போதிலும்,
முதன்மையாக அவர் ஒரு கவிஞர். 'எழுத்து' இதழின் தொடக்கத்திலிருந்தே கவிதை எழுதத்
தொடங்கியவர், பல்வேறு சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதிவந்தார். 'எழுத்து' காலக்
கவிஞர்களுள் அவரது கவிதைகள் வித்தியாசமாக ஒலித்தன. எளிமையான தோற்றம் கொண்ட
அக்கவிதைகளுக்குப் பின்னிருக்கும் கவித்துவச் செறிவு வியப்பூட்டக்கூடியது.
கவிதையின் வடிவத்திலும் வெளிப்பாட்டிலும் பல சோதனைகளைச் செய்து பார்த்தவர். இன்று
உரைநடை அமைப்பில் சிலர் கவிதை எழுதுகிறார்கள். இதை 'எழுத்து' காலத்திலேயே செய்தவர்
நகுலன். மூன்று கவிதைத் தொகுப்பில் வரும் உரைநடைப் பகுதி இன்று பலர் எழுதிவரும்
கவிதைகளைவிடவும் கவித்துவமானது. மரபு சார்ந்த கருத்தாக்கங்களை நவீன வடிவத்தில்,
புதிய கோணத்தில் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் நகுலன். ஆங்கிலத்திலும்
எழுதும் ஆற்றல் பெற்றவர்.
நகுலன் பதிப்பித்த பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் அடங்கிய
'குருக்ஷேத்திரம்' தொகுப்பு, இன்றும் முக்கியமானதொன்றாகவே விமர்சகர்களாலும்
வாசகர்களாலும் கருதப்படுகிறது.
'எழுத்தாளர்களின் எழுத்தாளர்' என்றும் 'தனக்கும் புரியாமல் வாசகர்களுக்கும்
புரியாமல் எழுதுகிறவர்' என்றும் இருவேறு விமர்சனங்கள் நகுலனின் படைப்புகள்மீது
வைக்கப்பட்டதுண்டு. அவரது நினைவுப் பாதை நாவல், கவிதைகள் மற்றும் சில சிறுகதைகள்
அவரைத் தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக இனம் காட்டுகின்றன என்பது என்
மதிப்பீடு.
உள்ளடக்கம் |