மே. வங்க மாநிலத்தில் சிங்கூர் மற்றும்
நந்திகிராமம் ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மையங்களை உருவாக்க முனையும்
மார்க்சிஸ்ட் கட்சி அரசு தனது செயல்பாடுகள் மூலம் கணிசமான மக்களின் வெறுப்புணர்வை
எதிர்கொண்டுள்ளது என்பதைக் குடிமக்கள் குழுவின் இடைக்கால அறிக்கை வெளிக்கொண்டு
வந்துள்ளது.
இப்பிரச்சினையின் அடிப்படையான நிலம் கையகப்படுத்துதல் மூலம் எழுந்துள்ள
சிக்கல்களுக்குத் தெளிவான தீர்வு ஏதுமின்றித் தனது அடக்குமுறை நடவடிக்கைகளையே
நம்பியிருக்கும் மார்க்சிஸ்ட் அரசு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.
தொடர்ந்து தங்களை ஆட்சியில் அமர்த்திய தம்மாநில மக்களின் உண்மையான வாழ்வாதாரப்
போராட்டத்தையே இனங்கண்டு கொள்ளத் தவறி, அதை எதிர்க் கட்சிகளின் தூண்டுதல் என்று
குற்றம்சாட்டி, தனது கட்சித் தொண்டர்களையும் காவல் துறையையும் ஏவி அம்மக்களைத்
தாக்கி, ஒரு சீரழிந்த அரசியல் இயக்கமாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளது
மார்க்சிஸ்ட் கட்சி.
ஜனநாயக முறையில் போராட முயன்ற விவசாயிகளையும் சமூக ஆர்வலர்களையும் காவல் துறையின்
தடையுத்தரவு பெற்றுக் கைதுசெய்து, அந்தத் தடையுத்தரவினூடே தனியார் தொழில்
நிறுவனத்தின் வேலியமைக்கும் பணியையும் தொடங்கி, தான் யார் பக்கம் என்று
காட்டிவிட்டது மார்க்சிஸ்ட் அரசு.
தனது வறட்டுப் பிடிவாதமான போக்கைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் முழங்கிவரும்
மேற்கு வங்க முதல்வர் தனது மற்றும் தனது கட்சியின் நிலைப்பாட்டை இந்து நாளிதழுக்கு
அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெளிவாக்கியுள்ளார்.
"என்னால் நாட்டின் இந்தப் பகுதியில் சோஷலிசத்தைக் கட்டியமைக்க முடியாது. அது
சாத்தியமுமல்ல. எனவே தொழில் வளர்ச்சி வேண்டுமென்றால் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற
உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களையும் ஐபிஎம், மிட்சுபிஷி போன்ற பன்னாட்டு
நிறுவனங்களையும் நாட வேண்டும்." (ஆதாரம்: ஹிந்து நாளிதழ், 27.2.2007)
இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சிக்கு 30 ஆண்டுகள்
பிடித்துள்ளது. இதன் மூலம் தாங்கள் இதுகாறும் பேசி வந்த கொள்கைப் பிரகடனங்களைக்
குழி தோண்டிப் புதைத்துள்ளனர் மார்க்சிஸ்ட் கட்சியினர்.
அடக்குமுறைகளை எதிர்த்துத் தங்களது வாழ்வியல் ஆதாரங்களுக்காகப் போராடிவரும்
மக்களின் உறுதியைக் கண்டு கலங்கிய மே.வங்க அரசு, தனது கட்சியின் விவசாயிகள்
பேரணியைக் கடந்த மார்ச் 10ஆம் தேதி கொல்கத்தாவில் கூட்டித் தன்னைத்
திருப்திப்படுத்திக்கொண்டுள்ளது. அதில் உரையாற்றிய அம்மாநில முதல்வர் "நந்திகிராம
மக்கள் விரும்பவில்லை என்றால் நாங்கள் அங்கு சிறப்புப் பொருளாதார மையம்
அமைக்கமாட்டோ ம். வேறு இடங்களுக்குச் செல்வோம்" என்று இறங்கிவந்துள்ளார் (ஹிண்டு
நாளிதழ், 12.03.07). வாழ்வியல் ஆதாரத்திற்கான மக்களின் பிரச்சினைகளைத் தேசிய அளவில்
செயல்படும் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஒரு வருத்தமான விஷயம்.
இந்தப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அந்த மாநிலத்திற்கு
மட்டுமா அல்லது அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும் தேசியக் கொள்கையா என்பது
விளங்கவில்லை. ஏனெனில் ஆந்திராவில் போலாவரம் அணையின் கட்டுமானப் பணிநிமித்தம்
இடம்பெயர நேரிட்ட மக்களின் சார்பாக மார்க்சிஸ்ட் கட்சி போராடியது நினைவிருக்கலாம்.
இவ்வாறான தனது வேறுபட்ட நிலைப்பாடுகளாலும் போராடும் மக்களுக்கெதிராகக் கட்சித்
தொண்டர்களையும் காவல் துறையையும் ஏவிவிடுவதாலும் தனியார் துறையின் நேரடி முகவர்
போன்று செயல்படும் விதத்தாலும் மே. வங்க மாநில முதல்வரின் கொள்கை மறுப்பு ஒப்புதல்
வாக்கு மூலங்களாலும் தனது அரசியல் நிலைப்பாட்டின் நிஜ முகத்தைக் காட்டியுள்ளது
மார்க்சிஸ்ட் கட்சி.
இது ஒருபுறமிருக்க, மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் நமக்குச் சில ஐயங்களையும்
வினாக்களையும் எழுப்பியுள்ளன.
1) சமூகத்தின் சிறிய விழுக்காடான ஒரு பிரிவினரின் நலனுக்காக உயிர்நாடியான,
பெரும்பான்மையான விவசாயிகளின் நலன்களைப் புறக்கணிப்பது ஜனநாயக நெறியா?
2) இவ்வாறு அமைய இருக்கும் சிறப்புப் பொருளாதார மையங்கள், அரசும் வல்லுநர்களும்
விளம்புவதைப் போல் பொருளாதாரத்தில் 'அதிவேகப் பாய்ச்சலை' ஏற்படுத்துமா?
3) இத்தகைய மையங்கள் அமைவதற்கான வழிகாட்டு நெறிகள், செயல்பாட்டு முறைகள், இழப்பீடு
வழங்கல், விவசாயிகள் மறுகுடியமர்த்தல், வேலை வாய்ப்பு உரிமை மற்றும் வாழ்வு
பறிக்கப்பட்ட பங்கு விவசாயிகள் (share
croppers) மற்றும் கூலித்
தொழிலாளர்களின் வாழ்வுரிமை, ஆகியவை குறித்துத் தெளிவான நிலைப்பாடு அல்லது விவாதம்
ஆகியவை தேசிய அளவில் நடத்தப்பட்டுள்ளது.
4) இத்தகைய சிறப்புப் பொருளாதார மையங்களினால் பெறப்படும் தொழில் வளர்ச்சியின் பலன்
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையுமா?
5) நிலம் கையகப்படுத்தல் மற்றும் அதற்கான இழப்பீடு, கருணைத் தொகை மற்றும்
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதனைப் பெறவிருக்கும் தனியார் நிறுவனம் அரசிற்கு
வழங்கும் தொகை ஆகியவை பற்றி "ஒளிவு மறைவற்ற போக்கு" கையாளப்படுமா?
6) சிங்கூரில் தனியார் தொழில் நிறுவனத்திற்குத் தேவைப்படும் 387 ஏக்கருக்காக
எதற்காக 991 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
7) பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளபோது அவை மறுக்கப்பட்டு விலை நிலங்கள்
கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதை மே.வங்க அரசின் தொழிற்துறை அமைச்சரே
ஒப்புக்கொண்டுள்ளார் (ஃப்ரண்ட்லைன், 29.12.2006). தேர்ந்தெடுக்கும் உரிமை
தனியாருக்கானது மட்டுமே என்றால் ஏழை விவசாயிகளுக்குத் தங்கள் ஒரே வாழ்வியல்
ஆதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள உரிமையும் இல்லையா?
8) ஏற்கனவே இத்தகைய 'வளர்ச்சித் திட்ட'ங்களுக்காக இடம்பெயர்க்கப்பட்ட (எ-டு: நர்மதை
அணை) மக்களின் அவல வாழ்விலிருந்து நாம் பெறும் பாடம்தான் என்ன?
உள்ளடக்கம்