Google   www kalachuvadu.com

 

'விடுதலை வேர் 2007' விருது

மதுரை இறையியல் கல்லூரியில் உள்ள தலித் ஆதார மையம் ஆண்டுதோறும் தலித் கலை இரவு நடத்திவருகிறது. 14ஆம் ஆண்டு தலித் கலை விழாவில் எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தனுக்கு விடுதலை வேர் 2007 விருது கடந்த 17.03.2007 அன்று மதுரையில் வழங்கப்பட்டது. ஏற்கனவே ரவிக்குமார், எ.பி. வள்ளி நாயகம் உட்பட மூவர் இவ்விருதினைப் பெற்றிருக்கிறார்கள்.

இக்கலை விழாவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி, விருது வழங்குதல், உரைவீச்சு எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நாட்டுப்புறக் கலை வடிவங்களான கரகாட்டம், கொம்பிசை, நையாண்டி மேளம், சிலம்பாட்டம், சில்லாட்டம், சக்கைக் குச்சி ஆட்டம், ஜிக்காட்டம், பறையாட்டம் என அனைத்தும் நடந்தது.

விழி. பா. இதயவேந்தன், தந்தை டானியல் தலித் இலக்கிய விருது, கோவை லில்லி தேவசிகாமணி விருது, பாரதி பணிச்செல்வர் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, தமிழக அரசின் குறள் பீட விருது, மக்கள் படைப்பாளி விருது, சேலம் கே.ஆர்.ஜி.என்.ஆர். விருது, புதுடெல்லி பாரதிய தலித் சாகித்திய அகாடமியின் டாக்டர் அம்பேத்கர் பெலோஷிப் விருது, சிந்தனையாளர் விருது, சி.சு. செல்லப்பா விருது உட்படப் பல விருதுகள், பரிசுகள், பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

1981 முதல் எழுதிவரும் இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல்கள் எனப் பல நூல்கள் எழுதியுள்ளார். நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு, தாய்மண், சிநேகிதன், உயரிழை, மலரினும் மெல்லியது, இருள் தீ, தலித் இலக்கிய அரசியல், புதைந்து எழும் சுவடுகள் உள்ளிட்ட 20 நூல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் தென்பண்ணை கலை இலக்கியக் கூடலின் தலைவராகவும் உள்ளார்.

இவரது நூல்கள், பல்கலைக்கழகத்தில் பாடநூல்களாகவும் ஆய்வுக்குரியவையாகவும் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

விழுப்புரத்தைச் சார்ந்த இதயவேந்தனின் (44) இயற்பெயர் பா. அண்ணாதுரய். தற்போது கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் நகராட்சியில் வருவாய் ஆய்வராகப் பணிபுரிகிறார்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google