Google   www kalachuvadu.com

 

வரலாறு

எல்லீசன் என்றொரு அறிஞன்

ஆ.இரா. வேங்கடாசலபதி

எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis, 1777-1819) என்ற அறிஞரின் பெயர் தமிழுலகம் பரவலாக அறிந்தது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி என்ற அளவிலேயே அவர் பெயர் நிலைபெற்றுள்ளது. புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்கலீலை முதலான நூல்களைக் கையாண்டு அவர் குறளுக்கு எழுதிய விளக்கவுரையினையும் தமிழுலகம் அறியும். சென்னை அரசாங்கத்தில் வருவாய் வாரியச் செயலாளர், நிலச்சுங்க அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல உயர் பதவிகளை வகித்ததால் எல்லிஸ் துரை என்றும் இவர் அறியப்படுவார். தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்க சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த நாணயங்களை வார்த்த பெருமைக்குரியவர் எல்லிஸ் என்ற செய்தியை ஐராவதம் மகாதேவன் கண்டு சொல்லியிருக்கிறார். தமிழக வரலாற்றில் ஆர்வமுடைய சிலர் 'மிராசு உரிமை' பற்றி எல்லிஸ் எழுதிய அரிய ஆய்வுரையினையும் மாடுகளைத் தாக்கும் அம்மை நோயைத் தடுப்பது பற்றிப் புராண வடிவில் எழுதிய படைப்பையும் அறிந்திருப்பர். செய்யுள் இயற்றும் அளவுக்கு இவருக்குத் தமிழில் பயிற்சி உண்டு. நமசிவாயம் என்ற ஐந்தெழுத்து மந்திரம் பற்றி இவர் ஐந்து பாடல்கள் இயற்றியுள்ளதாக ரா.பி. சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

சென்னை நகரில் நிலவிய குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்கப் பல கிணறுகளை வெட்டுவித்த எல்லிஸ் அவற்றில் பாடல் வடிவில் கல்வெட்டுகளைப் பதித்திருக்கிறார். இவற்றில் ஒன்று இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் வெட்டப்பட்டது. இதன் கைப்பிடிச் சுவரில் எல்லிஸ் 1818ஆம் ஆண்டில் ஒரு நீண்ட கல்வெட்டைப் பதித்தார் என்றும் அது இப்பொழுது தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது என்றும் குறிப்பிடும் ஐராவதம் மகா தேவன், அதில்

. . . சயங்கொண்ட தொண்டிய சாணூறு நாடெனும்
ஆழியி லிழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குடகட லளவு
நெடுநிலந் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத் தெல்லீச னென்பவன் யானே
பண்டார காரிய பாரஞ் சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்
திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய
'இருபுலனும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு'
என்பதின் பொருளை யென்னு ளாய்ந்து . . .

ஒரு குறளைப் பொருத்தமான மேற்கோளாகக் கையாண்டிருப்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

l

அயோத்திதாசப் பண்டிதரின் எழுத்துகள் அனைத்தும் அண்மையில் வெளிவந்துள்ள நிலையில் எல்லிஸ் பற்றிய தமிழுலகின் மதிப்பீடு குறித்து மேலும் சில பரிமாணங்கள் வெளிப்பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சிக்கு 'எலீஸ்' துரையே ஊற்றுக்கண் என்று முதன்முதலில் குறிப்பிடுபவர் அயோத்திதாசரே ஆவார். 'உலகோபகாரிகளாகும் சமண முனிவர்களின் புண்ணியவசத்தால் ஆங்கிலேயர் இவ்விடம் வந்து தோன்றி கனந்தங்கிய எலீசென்னும் துரைமகனால் தமிழ்ச் சங்கமொன்று ஏற்படுத்தி சிதலுண்டு கெட சமீபித்திருந்த ஓலைச்சுவடிகள் யாவையுங் தங்களிடங் கிடைத்தவரையில் அச்சிட்டு வெளிக் கொண்டு'வந்தார் என்றும் அவரைப் போற்றுகிறார் ('அயோத்திதாசர் சிந்தனைகள்', II, ப. 548).

இது மட்டுமல்லாமல் இப்பணியில் எல்லிஸுக்கு அயோத்திதாசரின் பாட்டனார் நேரிடையாகவும் உதவியிருக்கிறார் என்பது முக்கியமான செய்தியாகும். ஜார்ஜ் ஆரிங்டன் என்ற வெள்ளை அதிகாரியிடம் பரிசாரகராகப் (பட்லர்) பணியாற்றிய 'எனது பாட்டனார் ... கந்தப்பனென்பவர் ஓலைப்பிரதியிலிருந்து திரிக்குறளையும், நாலடி நாநூறையும் ஈஸ்ட் இன்டியா கம்பெனியார் காலத்தில் தமிழ்ச் சங்கங் கூட்டிவைத்த கனம் எலீஸ் துரையவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வெளிவந்திருக்கிறது' என்றும் குறிப்பிடுகின்றார். இதன் தொடர்பில் எல்லிஸ் நிறுவிய புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் தமிழ்த் தலைமையாசிரியராகப் பணியாற்றிய முத்துசாமிப் பிள்ளையினையும் பண்டிதர் குறிப்பிடுகிறார்.

ஆனால் இவ்வாறு வெளியான குறள் பதிப்பின் பாடங்கள் அயோத்திதாசருக்கு உவப்பளிக்கவில்லை.

கனந்தங்கிய எலீஸ் துரையவர்கள் சங்கத்திலேயே முதலாவது அச்சிட்ட குறளில் 'அருங்கேடனென்பதறிக' வென்பது பிழைப்பட்டுள்ளது கொண்டே உரையெழுதியோர் காலத்தும் பிழைபட்டும் பொருள்கெட்டும் வழங்கிவருகின்றது. அதன் திருத்த மொழியை 'அருங்கலைச் செப்பா'லறிந்துக்கொள்ளலாம். வீடு பேறு 'அருங்கோடர் சங்கமணுகி யறவுரை கேட்டிருமாந்திருப்பதே வீடு'.

எல்லிஸிடம் கொடுத்த குறள், நாலடியார் ஏட்டுப் பிரதிகள் அச்சில் வந்தபொழுது 'ஓலைப்பிரதிக்கு மாறுதலாக சாற்றுக்கவிகளில் சிலது அதிகரித்தும் அறத்துப்பாலிலுள்ள சில செய்யுட்களைப் பொருட்பாலிற் சேர்த்தும், இச்செய்யுளில் ஆரியாரென்று வந்த மொழியைப் பூரியாரென்றும் மற்றும் செய்யுட்களை மாற்றியுள்ளதை கந்தப்பனவர்கள் ... எழுதி கேட்டபொழுது மறுமொழி கிடைக்காமல் போய்விட்டது என்பது விவேகிகளறிந்த விடயங்களேயாம்' என்றும் பண்டிதர் குறிப்பிடுகின்றார். பண்டிதர் குறிப்பிடும் செய்திகள் விரிவான ஆய்வை வேண்டி நிற்கின்றன.

எல்லிஸின் பணியைத் தமிழுக்கு வளம் சேர்ப்பதாக மட்டுமன்றி பறையர் வரலாற்றை மறுவாசிப்பு செய்வதாகவும் அயோத்திதாசர் முன்வைக்கிறார்.

திராவிட பௌத்தர்களாம் மேன்மக்களை பறையர்கள் என்றும், தாழ்ந்த சாதியோர் என்றும் கூறிவந்த பெயர்கள் மகமதியர்கள் ஆளுகைவரையில் கேழ்வியில்லாமல் இருந்தது. கருணையும் விவேகமும் மிகுந்த பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றியபோது இவர்களைத் தாழ்த்தி வரும் விஷயங்கள் சிலது விசாரணைக்கு வந்ததுடன் எலீஸ் துரை அவர்களால் கணித சாஸ்திரிகளாகும் உள்ளவர்கள் நூற்களையும் வித்துவ சாஸ்திரிகளாகும் பாணர்கள் நூற்களையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்துவிட்டார்.

l

இத்தகைய பெருமை உடைய எல்லிஸ் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை 1812இல் நிறுவினார். 'சென்னைக் கல்விச் சங்கம்' என்று தமிழில் அறியப்பட்ட இக்கல்லூரியே எல்லிஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியது. 1856இல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே, 1816இல் 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற புலமைக் கருத்தாக்கத்தைக் கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லிஸ். பரவலாக அறியப்படாத இவ்வுண்மையை, நெடுங்கால விரிந்த ஆராய்ச்சியின் வழியாக, ஏராளமான புதிய செய்திகளோடு எடுத்துரைக்கும் நூல் இது. காலனிய ஆவணங்களில் புதைந்து கிடக்கும் செய்திகளைத் திரட்டியுள்ளதோடு, ஏறத்தாழ இருநூறாண்டுகளாக எவருமே பார்த்திராத எல்லிஸின் கையெழுத்துப்படிகளை இலண்டனிலும் எடின்பரோவிலும் புதையலெனக் கண்டெடுத்துப் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன் இந்நூலை எழுதியுள்ளார். முற்றிலும் காணாமல் போய்விட்டதாகக் கருதப்பட்ட எல்லிஸ் எழுதிய தமிழ் யாப்பியல் பற்றிய ஆய்வுரைகளை இவர் கண்டெடுத்துள்ளது முக்கியமானதாகும். எல்லிஸின் அடித்தடங்களை இனங்கண்டு அவற்றை அடியொற்றி டிரவுட்மன் நிகழ்த்திய தேடல் ஒரு துப்பறியும் கதையைப் போல் சுவையும் விறுவிறுப்பும் கொண்டது.

நாற்பது வயது நிறையும் முன்னர் நூல்களை எழுதி வெளியிடுவதில்லை என்ற உறுதி பூண்டிருந்த எல்லிஸ் நாற்பத்தோரு வயதில் திடுமென மறைந்த தீயூழை என்னென்பது! 'திராவிட உறவுமுறை' என்ற புகழ்வாய்ந்த நூலை எழுதிய டிரவுட்மன் திராவிடச் சான்று பற்றி எழுதி எல்லிஸிற்குப் புத்துயிரளித்திருக்கிறார் என்று சொல்வது மிகையாகாது.

l

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த டிரவுட்மனுக்கு இந்தியாவைப் பற்றிய அறிமுகமும் ஆர்வமும் காந்தியின் மூலமாக ஏற்பட்டது. பெலாய்ட் கல்லூரியில் மானிடவியலைப் பயின்றபொழுது வெளியான ஏ.எல். பாஷம் எழுதிய The Wonder that was India என்ற புகழ்பெற்ற நூலின் அமெரிக்கப் பதிப்பைப் படித்து இந்தியா பற்றிய ஆர்வம் அதிகமானது. (இந்நூலின் தமிழாக்கமான 'வியத்தகு இந்தியா' இலங்கை அரசால் வெளியிடப்பட்டது.) இளங்கலையின் மூன்றாமாண்டை அப்பொழுது புதிதாக எம்.என். ஸ்ரீநிவாஸ் உருவாக்கியிருந்த தில்லிப் பல்கலைக்கழகச் சமூகவியல் துறையில் கழித்தார். இளங்கலைப் பட்டம் பெற்றபின் இலண்டன் பல்கலைக்கழகக் கீழைத்தேய, ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில் (School of Oriental and African Studies - SOAS) ஏ.எல். பாஷம் மேற்பார்வையில் அர்த்தசாஸ்திரம் பற்றிய ஆய்வை மேற்கொண்டு 1962இல் முனைவர் பட்டம் பெற்றார். இக்காலப்பகுதியில் ரொமிலா தாப்பர் போன்ற இந்திய அறிஞர்களோடு நட்பு கொண்டார். பட்டம் பெற்ற பின்பு சில ஆண்டுகள் அதே நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். அங்கே பணியாற்றிவந்த ஜான் மார் வழியாகத் தமிழை அறிமுகப்படுத்திக்கொண்டார். 1968 முதல் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் டிரவுட்மன் அங்கு வரலாறு மற்றும் மானிடவியல் பேராசிரியராக விளங்குகிறார். Comparative Studies in Society and History என்ற மதிப்பார்ந்த ஆய்விதழுக்கும் ஆசிரியராகத் திகழ்கிறார்.

சமஸ்கிருதமும் பிரெஞ்சும் பழுதறக் கற்ற டிரவுட்மனுக்குத் தமிழ், பாலி, இலத்தீன், ஜெர்மன் மொழிகளில் பயிற்சி உண்டு. மானிடவியல், வரலாறு, மொழியியல் ஆகிய துறைகளில் நுட்பமான புலமைமிக்க டிரவுட்மனின் நாற்பதாண்டு இடையறாத ஆய்வின் மூலமாக இந்தியப் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாத நூல்கள் வெளிவந்துள்ளன.

டிரவுட்மனின் முதல் நூல் அர்த்தசாஸ்திரம் பற்றியது. அர்த்தசாஸ்திரம் கௌடில்யர் என்ற தனியொருவரின் படைப்பு அன்று; சில நூற்றாண்டுக்கால இடைவெளியில் பலருடைய பங்களிப்பால் உருவான பனுவல் என்பதை மொழியியல், புள்ளியியல் பகுப்பாய்வின் மூலமாக டிரவுட்மன் நிறுவியுள்ளார்.

1981இல் டிரவுட்மன் வெளியிட்ட 'திராவிட உறவுமுறை' (Dravidian Kinship) என்ற நூல் புலமை யுலகில் அவருக்கு ஒரு தனியிடத்தைத் தந்தது. இந்நூலில் அவர் திராவிட உறவுமுறை என்பது ஒரு வரலாற்றுக் கட்டமைவு என்பதை நிறுவும்முகமாக வரலாற்று மொழியியல் அணுகுமுறையைக் கைக்கொண்டு வரலாற்று முறையில் மீட்டுருவாக்கம் செய்து காட்டியுள்ளார். திராவிட உறவுமுறையின் சிறப்பியல்பான முறை மணத்தை (cross-cousin marriage) விரிவாக ஆராயும் டிரவுட்மன், முடியாட்சியைப் பேணிக் காப்பதில் அது ஆற்றிய பங்கைப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். உலக உறவுமுறைகளில் திராவிட உறவு முறை ஒரு தொல்வடிவம் என்பதையும் நிறுவுகிறார். பண்டைக் கால ஆவணங்களையும் சமகால இனவரைவியல் தரவுகளையும் பயன்படுத்தி அவர் செய்துள்ள ஆய்வு மானிடவியல் உறவுமுறை ஆய்வுகளுக்கு மட்டுமல்லாமல் இந்தியவியல் / திராவிடவியல் ஆய்வுகளுக்கும் முக்கியப் பங்களிப்பாகும்.

திராவிட உறவுமுறை பற்றிய ஆய்வின்பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க மானிடவியலாளரான லூயிஸ் ஹென்ரி மார்கனின் உறவுமுறை பற்றிய ஆய்வின்மீது டிரவுட்மனின் கவனம் குவிந்தது. எங்கெல்சின் புகழ்பெற்ற 'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்' மார்கனின் 'பண்டைச் சமூகம்' என்ற நூலின் அடிப்படையிலேயே எழுதப்பட்டது என்பதை அறிவோம். மார்கன் பற்றியதொரு புலமை வாழ்க்கை வரலாறாகவே டிரவுட்மனின் Lewis Henry Morgan and the Invention of Kinship என்ற நூல் அமைந்துள்ளது. மொழியியலின் சொற்களஞ்சியம் சார்ந்த புரிதலையும் மானுடவியலின் பொருண்மை சார்ந்த புரிதலையும் வேறுபடுத்திக் காண்பதன் மூலம் திராவிட உறவுமுறையின் பெரும் இடப்பரவலை உறவுமுறைச் சொற்களின் வேறுபாட்டால் காணத் தவறுவதை மார்கனின் ஆய்வுகளைக் கொண்டே டிரவுட்மன் இனங்காண்கிறார் என்பதை இங்குச் சுட்டலாம். (மார்கன் பற்றிய ஆய்வார்வத்தின் இன்னொரு முகமாக, மார்கனின் நூலகத்திற்குச் சிறந்ததொரு அடைவையும் டிரவுட்மன் வெளியிட்டிருக்கிறார்.)

டிரவுட்மனின் அடுத்த இரண்டு ஆய்வு நூல்களும் திராவிடம், ஆரியம் என்ற இரு திணைகளை மையமாகக் கொண்டவை. இவற்றின் ஊற்றுக்கண்ணைப் பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தனையில் இனங்காணும் டிரவுட்மன், அக்காலப்பகுதியில் மொழியும் தேசமும் இணையானவையாகப் புரிந்துகொள்ளப்பட்டதை விளக்குகிறார். விவிலியக் கருத்தியல் பின்புலத்தில் மொழி, தேசம் ஆகியவற்றின் வரலாறுகள் குடிமரபின உறவுகளால் வரையறுக்கப்பட்டதையும், ஒன்றின் (தேசம்) வரலாற்றில் புலப்படாத பகுதிகளை மற்றொன்றின் (மொழி) வரலாற்றைக் கொண்டு நிரப்ப முற்பட்டதையும் காட்டுகிறார். இந்தப் புதிய புலமைக் கருவியின் மூலமாக 'மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கம் உருப் பெற்று, உலக மொழிகள் பல குடும்பங்களாக உறவு கொண்டுள்ளமை இனங்காணப்பட்டது. இந்தோ - ஐரோப்பியம், மலேய - பாலினேசியம், திராவிடம் ஆகிய மொழிக் குடும்பங்கள் இந்தப் புலமைப் பின்புலத்தில்தாம் வரையறுக்கப்பட்டன என்பதோடு இவ்வரையறை உருவான இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இவை ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக உள்ளது அதன் புலமை உண்மையைக் காட்டுகிறது என டிரவுட்மன் நிறுவுகிறார்.

இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பதை Aryans and British India என்ற நூலில் டிரவுட்மன் விரிவாக ஆராய்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் கல்கத்தாவில் நிறுவப்பட்ட ஆசியக் கழகம் (Asiatic Society) வழியாகக் கீழைத்தேயவியல் அறிஞர்கள் (Orientalists) இதில் முக்கியப் பங்காற்றினர். கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் குடும்ப உறவுடையன என்பதை ஒப்பீட்டு மொழியியல்வழி வில்லியம் ஜோன்ஸ் நிறுவினார். (மொழிக்கும் தேசத்திற்குமான உறவு வரையறுக்கப்பட்ட விதத்தில் 'ஆரிய இன மேன்மை' என்ற நச்சுப் போக்கும் துளிர்த்துக் கிளைத்தது. இது வேறு கதை. இதன் பின்புலத்தையும் இது தொடர்பான விவாதங்களையும் டிரவுட்மன் The Aryan Debate என்ற நூலில் பதிப்பித்துள்ளார்.) இந்தியாவைப் பற்றிய புதிய அறிவு உருவாவதற்கும் கட்டமைப்பதற்கும் இது அடிப்படையாக விளங்கியது. இந்தியாவைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதம் மையமானது என்ற கருத்தும் உருவானது. இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்தே கிளைத்தவை என்றும் கல்கத்தா கீழைத்தேயவியலார் கருதிக்கொண்டனர்.

அடிப்படையிலேயே பிழையான இக்கருத்தாக்கத்தைச் சென்னையை மையமாகக் கொண்டிருந்த எல்லிஸ் தலைமையிலான அறிஞர்கள் புலமை ரீதியாக மறுத்தனர். இளநிலை ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் நிர்வாகப் பணிகளை நிறைவேற்றுவதற்கு - தம் ஆளுகைக்குட்பட்ட மக்களை நிர்வகிப்பதற்கு - சுதேச மொழிப் பயிற்சி இன்றியமையாதது என்பதை உணர்ந்த காலனிய பிரிட்டிஷ் அரசு அப்பயிற்சியை வழங்க முன்வந்தது. கல்கத்தா புனித வில்லியம் கோட்டைக் கல்லூரியை முன்மாதிரியாகக் கொண்டு சென்னையில் உருவாக்கப்பட்டதே புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பாரசீகம், அரபு, இந்துஸ்தானி, மராட்டி ஆகிய மொழிகள் இங்குப் பயிற்றுவிக்கப்பட்டன. இதற்கென 'வாத்தியார்கள்' அல்லது 'முன்ஷிக்கள்' அமர்த்தப்பட்டனர். முத்துசாமிப் பிள்ளை, 'சென்னைக் கல்விச் சங்கத்துத் தலைமைப் புலமை நடாத்தும்' தாண்டவராய முதலியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலான தமிழறிஞர்கள் இங்குப் பணியாற்றினர். கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றறிந்திருந்தனர். தம் பணியின் பகுதியாக - மொழி பயிற்றுவிப்பதற்கென - புதிய இலக்கண நூல் களையும் அகராதிகளையும் உரைநடை நூல்களையும் இவர்கள் உருவாக்க வேண்டியிருந்தது. தாண்டவராய முதலியார் 'இலக்கண வினா விடை' எழுதினார்; பஞ்ச தந்திரக் கதைகளை மொழிபெயர்த்தார். வீரமாமுனிவரின் செந்தமிழ் - கொடுந்தமிழ் இலக்கணங்களும் சதுரகராதியும் முதன்முறையாக அச்சேறின. ராட்லர் அகராதியும் உருவானது. இதனையொத்த பணிகள் பிற மொழிகளுக்கும் நடைபெற்றன. முக்கியமாகத் தெலுங்கு மொழியில் இலக்கணங்களும் அகராதிகளும் எழுதப்பட்டன. தமிழ் / இந்திய மற்றும் ஐரோப்பிய மொழி ஆய்வு மரபுகளின் சந்திப்பைக் கவனப்படுத்தும் டிரவுட்மன், எட்வர்டு சைதின் 'கீழைத்தேயவிய'த்தைச் செழுமைப்படுத்துகிறார்.

விரைவும் பரபரப்புமான இந்தக் களத்தில்தான் எல்லிஸின் 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கம் நிறுவப்பட்டது. 1814இலேயே தெலுங்கைத் தமிழின் 'சகோதரி மொழி' (sister language) என்று எல்லிஸ் குறிப்பிட்டிருக்கிறார் (Madras Public Consultations, 8 July 1814, p. 3697). 1816இல் காம்பெலின் தெலுங்கு இலக்கண நூலுக்கு முகப்பாக எழுதிய விரிவான ஆய்வுரையில் தெலுங்குக்கும் சமஸ்கிருதத்திற்கும் குடி உறவில்லை என்பதையும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலானவை திராவிட மொழிக் குடும்பம் என்றும், சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் உண்டு என்பதையும் எல்லிஸ் நிறுவிக்காட்டினார். இதைத்தான் டிரவுட்மன் 'திராவிடச் சான்று' என்று குறிப்பிடுகின்றார்.

எல்லிஸ் முன்மொழிந்த 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற இந்தக் கருத்தாக்கமே கால்டுவெல்லின் நூலில் முழு மலர்ச்சியும் புலமை விரிவும் கொள்கின்றது. எல்லிஸின் முன்னோடிப் பங்களிப்பைக் கால்டுவெல் குறைத்துக் காட்டுகிறார் என்பது முழு நிலவின் களங்கம் போன்றது.

எல்லிஸின் அகால திடீர் மறைவும் அவருடைய கையெழுத்துப்படிகளும் நூல்களும் சிதைந்தும் அழிந்தும் சிதறியும் போனதும் அவருடைய பங்களிப்பை அறிவதற்குத் தடையாகிவிட்டன. எல்லிஸ் இறந்த பின் பல மாதங்களுக்கு அவருடைய அரிய நூல் தொகுப்புகள் 'அடுப்பெரிக்கவும் கோழி வறுக்கவும்' பயன்படுத்தப்பட்டதை நினைத்தால் இன்றும் நெஞ்சு பதைக்கிறது.

திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கம் புலமையுலக நிலைபேற்றோடு அரசியல் முக்கியத்துவமும் பெற்றுவிட்டது. திராவிட இயக்கத்தின் அறிவுலக வேர்கள் இதில் ஊன்றியுள்ளன. 'ஆரியம் போல் உலக வழக் கழிந்து ஒழியா'த் தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்து மனோன்மணியத்திற்குத் தமிழ்த் தெய்வ வணக்கம் இயற்றிய பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை, 'கன்னடமும் களி தெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்று எழுதுவதில் இப்புலமைக் கருத்தாக் கத்தின் அழகியல்/அரசியல் வெளிப்பாட்டைக் காணலாம்.

திராவிடம் இன்று புலமை உலகில் நிலைபேறடைந்துவிட்டது. ஆயினும் திராவிட இயக்க அரசியலைக் கண்டு முகஞ்சுளிப்பவர்களுக்கு இன்றும் திராவிட ஒவ்வாமை உள்ளது. திராவிட மொழியியல் பள்ளி அரசுடைமையாவதற்குப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனமாகப் பெயர் மாற்றம் பெறவேண்டியிருந்தது. 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்குப் பின்னர் 'அனைத்திந்திய' என்ற முன்னொட்டு அமைந்தது. திராவிடப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் உருவாக்கம் இப்பின்னணியில் நல்ல அறிகுறியாகும்.

மொழியியல் சார்ந்து திராவிடம் என்ற கருத்தாக்கம் உலக அளவில் நிறுவப்பட்டுவிட்டாலும் சமூக அறிவியல் துறைகளில் இந்நிலை ஏற்பட்டுவிடவில்லை. தமிழ்ப் புலமை உலகில் க. கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்.

'திராவிட மொழிகள்' என்ற கருத்தாக்கத்தின் வரலாறு மறுக்க முடியாத, இதுவரை யாரும் பார்த்தறியாத ஆவணங்களின் அடிப்படையில் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. புலமை உலகம் போற்றும் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன் அமைதியாகவும் நிதானமாகவும் புலமை நெறிகளிலிருந்து சிறிதும் வழுவாமலும், கோட்பாட்டுத் தெளிவு, விரிந்து பரந்த தரவுகள், மயக்கம் தராத மொழி, பிறழாத வாதமுறை ஆகிய தன்மைகளுடனும் இந்நூலை வரைந்துள்ளார்.

l

காலச்சுவடு பதிப்பகம் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வெளியீடாக வெளிவர உள்ள 'திராவிடச் சான்று: எல்லீஸும் திராவிட மொழிகளும்' நூலின் முன்னுரையிலிருந்து.

நூலாசிரியர்: தாமஸ் டிரவுட்மன்
தமிழாக்கம்: இராம. சுந்தரம்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google