Google   www kalachuvadu.com

 

சு. ரா. பக்கங்கள்

காலத்தின் கானல் - 2

06.02.2001 செவ்வாய்க்கிழமை டெட்ராய்ட்

கவிதையில் நாட்குறிப்பு

இங்கு எப்படி வந்து சேர்ந்தேன்?
யாருடைய தீர்மானம்? எதற்கு?
கண்ணாடிக் கதவு வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சாத்தியங்களில் இது முக்கியமானது
கொட்டுகிறது பனி.
எதிர்வீட்டுக் கூரைகள், கார்கள் நிற்கும் வெட்ட வெளி
வீட்டு வாசல், நடைபாதை
எங்கும் உறைந்து கிடக்கிறது.
ஓட்ஸ் தானியம் போல்
வெள்ளைப் பூக்களின் இதழ்கள்போல்
வெள்ளைப் புறாக்கள் உதிர்க்கும் இறக்கைகள்போல்
சதா கொட்டிக்கொண்டிருக்கிறது பனி
நான் கண்ணாடிக் கதவு வழியாகப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒரு கவிதை

ஒரு கவிதை எழுதி முடித்ததும்
மற்றொரு கவிதை எழுதலாமா?
வரிகள் வந்தால்கூட
உடனடியாக எழுதுவது
கவிதைக்குரிய தனிப் பெருமையை
குறைப்பதாகிவிடுமா?
இன்று வரும் கவிதையை
நாளைதான் எழுதப்போகிறேன்.
அப்போது அது வேறு மாதிரி
உருமாறிவிடலாம்.
உருமாறட்டும்
என் வரிகளுக்குக் கவிதை
இருக்கும் இடம்
தெரிந்தால் சரி.

l

கவிதை எழுதுவதை நிறுத்திவிடலாம்
என்று நினைக்கிறேன்.
புதிய கவிதையின் வாசலைத் திறக்கத்
தெரியவில்லை என்றால்
பழைய கவிதை விட்டுப் பிரிந்துவிடுவது
நல்லது.
இந்தப் பிரிவு தரும் தனிமை
துக்கம்
அவமானம்
சுயமதிப்பை இழந்து நிற்பது
எழுதாமல் கவிதைக்கு வாழ்வளிக்க
நேர்ந்தால்
எழுதாமல் இருப்பதும்
கவிதையை நேசிப்பதுதான்.

l

என் இருதயம் துடித்துக்கொண்டிருக்கிறது
தொய்ந்துபோயிருந்த அதன் மாம்சச் சுவர்கள்
விறைப்பேறியிருக்கின்றன.
இதயத் தமனிகள் எனக்குத் தெரியாமல்
நெருங்கி வந்துகொண்டிருந்தவை
கருணையுடன் விலகியிருக்கின்றன
வேகமாக நடந்து செல்
முடிந்தால் சிறிது ஓடு
விரும்பினால் மேட்டில் ஏறு
நான் பொறுப்புடன்தான் இருக்கிறேன்
என்கிறது என் இருதயம்
இருதயம் மகிழ்ச்சியுடன் துடித்துக்கொண்டிருக்கிறது
காலத்தைக் காரியமாக்க எனக்குத் தெரிய வேண்டும்.

ஆரோக்கியமாகத்தான் வாழ வேண்டும். இதில் சந்தேகமில்லை. ஆனால் மனிதனால் நோயை முற்றாகத் தவிர்க்க முடியாது. எனக்கு வயது 70. இந்த வயதில் எனக்குச் சில நோய்கள் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நோயைக் குணப்படுத்திக் கொள்ளச் சில வசதிகள் தேவை. பின்னணி, ஆதரவு, ஊக்கம், பொருளாதாரப் பின்னணி தேவை. அவையெல்லாம் அதிக அளவிலேயே எனக்கு இருக்கின்றன. எண்ணற்ற சாதகமான சூழ்நிலைகள் எனக்கு இருக்கின்றன. இவற்றை எனக்கு உணரத் தெரிய வேண்டும். இவற்றின் மதிப்பு என் மனத்தில் இருக்க வேண்டும். மிகத் தரமான சிகிச்சையில் இன்று நான் இருந்துகொண்டிருக்கிறேன். என் சௌகரியத்தைக் கவனிக்கவும் என் ஆரோக்கியத்தைப் பேணவும் என் குடும்பம் முழுக்கத் தயாராக இருக்கிறது. தைலாவின் ஒத்துழைப்பும் கவனமும் அக்கறையும் அபூர்வமானது. அசட்டுப் பயம் சார்ந்த வேதனை எனக்கு வேண்டவே வேண்டாம். அது எனக்குத் தேவையே இல்லை.

இன்று இதுவரையிலும் என் மனநிலை சீராகவே இருக்கிறது.

மனச்சோர்வு

என் மனச்சோர்வின் ஆணிவேர் எங்கிருக்கிறது?
அதன் நுனியை நான் ஸ்பரிசிக்க விரும்புகிறேன்.
எனக்கு என்னைத் தெரிய வேண்டும்
மிச்சமில்லாமல்
பச்சையாக
அவமானத்தை அறவே துறந்து
அங்குதான் என் மனச்சோர்வின்
நுனி நெளிந்துகொண்டிருக்கிறது

l

என் பார்வை தெளிவாக இருக்கிறது
என் சிந்தனையில் குழப்பமில்லை
கேட்கும் சக்தி துல்லியமாக இயங்குகிறது.
என் பேச்சு குளுமையாக இருக்கிறது.
எந்த முகங்களையும் நான் மறக்கவில்லை
எவருடனும் கைகுலுக்கத் தயக்கம் எதுவுமில்லை
மனம் கலங்கலாக இருக்கிறது
அது தெளிய வேண்டும்
அப்போதுதான் என்னால் சிரிக்க முடியும்.

06.02.2001 செவ்வாய் மாலை 6.45 மணி

நானும் தங்குவும் னீணீறீறீக்குப் போனோம். சிறிய னீணீறீறீதான். முடிந்தளவு நடந்தேன். இன்று மனநிலை மோசம்தான். பிற்பகலுக்குப் பின். இன்று சமச்சீரான மனநிலை அடையக் கடுமையான முயற்சி எடுத்துக்கொண்டேன். அதில் போதிய வெற்றி பெறவில்லை. இருந்தாலும் நம்பிக்கையைக் கடுகளவுகூட இழக்கவில்லை. காலம் என்னை ஆற்றும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. Negative imaginationஉம் rationalஆகத் தவிர்க்க முடியாமல் இருப்பதுதான் பிரச்னை.

உள்ளடக்கம்

Google Ads.....


Google