Google   www kalachuvadu.com

 

பதிவு: 'மீண்டும் காகங்கள்' (2.10.2007)

இயல்பை மாற்றும் வேடம்

அ.கா. பெருமாள்

காகங்களின் நான்காம் சந்திப்பு 2007 பிப்ரவரி 10ஆம் தேதி நாகர் கோவில் சுந்தர விலாஸ் மாடியில் நடந்தது. பெண் வேடம் நிகழ்த்துதல் பற்றிக் கவிஞர் பெருந்தேவி பேசினார். அ. ராஜ மார்த்தாண்டன் அவரை அறிமுகம் செய்தார். பெருந்தேவி பேசியதன் சாரம்:

தமிழகத்தில் செய்யாறு, வந்தவாசி, தர்மபுரி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய பகுதிகளில் 30 பெண் வேடக் கலைஞர்களிடம் தகவல்கள் சேகரித்தேன். இவர்களில் பத்துப் பேர் தெருக்கூத்துக் கலைஞர்கள். எஞ்சியவர்கள் ஸ்பெஷல் நாடகம், மேலட்டூர் பாகவத மேளா, பிரஹலாத நாடகம் ஆகியவற்றில் நடித்தவர்கள். இந்தக் கலைஞர்களுடன் நான் நடத்திய உரையாடலை முழுதும் பதிவுசெய்திருக்கிறேன். இவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் நான் பேசப்போகிறேன்.

தெருக்கூத்துக் கலைஞர்களில் பெண் வேடக்காரர்களை அவர்கள் ஒப்பனையுடன் இருக்கும்போது பெண்களாகவே நடத்துகின்றனர்; பார்க்கின்றனர். நடு இரவில் உறங்கிக்கொண்டிருக்கும் கூத்துக் கலைஞர்களில் பெண் வேடக் கலைஞர்களைத் தட்டி எழுப்பும் முறையில்கூட வித்தியாசமுண்டு. பெண் வேடமிட்ட கலைஞரிடம் சாதாரணப் பெண் இயல்பாகவே பழகுவாள். அவளுக்குப் பெண் வேடமிட்ட ஆண் என்ற உணர்வு வராது. அந்தப் பெண் வேடக் கலைஞருடன் பழகும்போது, அந்தப் பெண்ணின் கணவனும் சகோதரரும் பக்கத்தில் இருந்தாலும் அவளுக்குச் சங்கோஜம் வராது. பெண் வேடக்காரர்களைப் பெண்ணாகவே எடுத்துக்கொள்ளும் இந்தச் சூழல் திருவிழாக்களில் சகஜம்.

பொதுவாகக் கூத்துகளில் புராணமும் புனைவுகளும் வியாபித்து இருக்கும். கூத்தில் ஒரு கட்டமைப்பு உண்டு. கூத்து நிகழ்ச்சி கட்டமைக்கக்கூடிய தாய் இருக்கும். இத்துடன் கூத்து மாந்தர்களில் பெண் வேடக்காரர்கள் கட்டமைத்த நிலையில் இருக்க வேண்டியவர்களாய் உள்ளனர்.

பெண் வேடக்காரர்கள் பெண்ணாகவே நடிக்க எப்படிப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள், பாலியலை மேடையிலும் வெளியிலும் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள், மேடைக்கும் அவர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது, பெண் வேடக்காரர்களுக்கும் அவர்களது மனைவிக்குமான உறவு/சக ஆண் கலைஞர்களுடனான உறவு எத்தகையது, உள்ளரீதியாக அவர்கள் அடையும் மாற்றம், நடிக்காதபோது அவர்களின் பாவனை எத்தகையது எனும் கேள்விகளை முன்வைத்து என் பதில்களைப் பெற்றுக்கொண்டேன்.

பழனி என்ற கலைஞரிடம், 'மென்மையான பெண்ணாகவே நடிக்கிறீர்கள். பொதுவாகப் பெண்கள் இப்படி மென்மையாக இருக்கிறார்களா' என்று கேட்டேன். அவர், 'பார்வையாளர்களின் கவனம் எங்கள் பக்கம் திரும்பவேண்டும். எங்களின் முந்திய கலைஞர்கள் இப்படிச் செய்தார்கள். அதையே நாங்களும் பின்பற்றுகிறோம்' என்றார்.

பொதுவாகப் பெண் வேடக் கலைஞர்கள் எல்லோருமே, 'எங்கள் நடிப்பைத் தீர்மானிப்பவர்கள் கூத்து வாத்தியார்களே' என்றனர். பெண் வேடம் தாங்கும் ஆண்களின் குரல் கீச்சுக் குரலாக இருக்க வேண்டும். அவர்களின் வடிவம் அழகாக, ஒல்லியாக இருக்க வேண்டும். கொஞ்சம் நடனமாடத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூத்து வாத்தியார்கள் தீர்மானித்துள்ளனர்.

குண்டான ஆண் நடிகர்கள் பெண் வேடம் தாங்கி மேடையில் வந்தாலே பார்வையாளர்கள் உள்ளே போ எனக் கூக்குரலிடுவார்கள். இப்படிப்பட்ட பெண் வேடக்காரர்கள் மாமியாராகவோ அம்மாவாகவோதான் நடிக்க வேண்டும். இந்த நிலை சினிமாவுக்கும் பொருந்தும்.

பொதுவாகப் பெண் வேடம் தாங்குபவருக்கு நீண்ட பயிற்சி ஒன்றும் கிடையாது. புகழ்பெற்ற தெருக்கூத்துக் கலைஞர் சம்பந்தம், "என்னிடம் பெண் வேடம் போட்ட ராகவன் என்பவர் ஒரு மாதம்தான் பயிற்சி பெற்றார்" என்று சொன்னார். பாகவத மேளாவில் நடித்த மணி இதற்கென்றே பரதநாட்டியம் பயின்றார்.

இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பெண் வேடக்காரர்கள் பெண்ணின் நடிப்பை ஆதாரபூர்வமாக எங்கிருந்து எடுத்துக்கொள்கிறார்கள்? இங்கே கூடும்/ கூடாது என்ற நியதி பின்பற்றப்படுகிறது. கூத்தில் நடிக்கும் பெண் மேடையில் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு நிற்க வேண்டும். காலை விரித்துக்கொண்டு நின்று பார்வையாளர்களைப் பார்க்கக் கூடாது. இடுப்புக்கு மேலே கையைத் தூக்கக் கூடாது. உரத்தோ வேகமாகவோ பேசக் கூடாது. மேடையில் நடக்கும்போது பாதங்களை மெல்ல எடுத்து வைத்து நடக்க வேண்டும். அப்படி நடக்கும் போது இடுப்பு வேகமாக அசையக் கூடாது. இந்த மேடை நியதிகளைப் பெண் வேடக்காரர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

பிரஹலாத நாடகத்தில் நடிக்கும் பெண் வேடக்காரர் இரணியகசிபு அருகில் வரும்போது மெதுவாகத்தான் எதிர்த் திசையில் நடக்க வேண்டும். கீசக வதத்தில் கீசகன் திரௌபதியைப் பலவந்தப்படுத்தும்போது, பெண் வேடத் திரௌபதி முரட்டுத்தனமாக நடிக்கக் கூடாது. மென்மையாக எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

ஒருமுறை நான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராமானுஜத் திடம் இது பற்றிக் கேட்டபோது, 'இதில் யதார்த்தம் பார்க்கக் கூடாது; கலை என்பது மிகைப்படுத்தல்; பார்வையாளர்களிடம் பாராட்டைப் பெற இந்த மிகைப்படுத்தல் அவசியமாகிறது. ஒரு வகையில் பெண் வேட நடிகர்களும் இதைத்தான் செய்கின்றனர்' என்று சொன்னார்.

நான் சந்தித்த 30 பெண் வேடக் கலைஞர்களில் 22 பேர், நளினத்துடன் நடிக்க வேண்டும் என்றனர். ஆண்களுக்குக் கம்பீரம்போல் பெண்களுக்கு நளினம் என்பது மரபு வழிப் பார்வையாக இருக்க வேண்டும்.

பெண் வேடதாரி ஒருவர் 'நிஜமான பெண் எங்களைப் பார்த்துப் படிக்க வேண்டும்; பார்வையாளர்கள் எங்கள் நடிப்பைப் பார்த்து, உண்மையான பெண்ணால்கூட இப்படி நடிக்க முடியாது என்பார்கள். இதுதான் எங்களுக்கு வெற்றி' என்றார்.

நாகராஜன் என்பவர் அரிச்சந்திர நாடகத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, ஒரிஜினல் சந்திரமதிகூட இப்படி நடித்திருப்பாளா என்று பார்வையாளர்கள் பேசியதைக் குறிப்பிட்டார்.

பெண் வேடக் கலைஞன் ஒப்பனை செய்யும்போதே, பெண்ணாக மாறும் நிகழ்வு ஆரம்பித்துவிடும். ந. முத்துசாமி 'அன்று பூட்டிய வண்டி' என்ற நூலில் 'பொதுவாகவே கலைஞர்கள் ஒப்பனை செய்யும்போது பாத்திரங்களாக மாறிவிடுவார்கள்; இது பெண் வேடக்காரர்களுக்கும் பொருந்தும்' என்கிறார்.

மேடையில் நடிக்கும் பெண் வேடக்காரரின் மனநிலை மேடையில் ஏறியதும் மாற்றமடைந்துவிடும். அதோடு மற்ற கலைஞர்களும் பெண் வேடப் பாத்திரக்காரர்களைப் பெண்ணாகவே பாவிப்பதால் பெண் வேட ஆண் கலைஞருக்குத் தான் ஆண் என்ற உணர்வுமங்க ஆரம்பித்துவிடும்.

பாலியல்ரீதியான உணர்வு பெண் வேடக் கலைஞருக்கு உண்டா என்று நான் கேட்டபோது, சிலர் மட்டுமே பதில் சொன்னார்கள். தன்னைப் பெண்ணாகவே நினைப்பதால் ஆண் கலைஞரிடம் தனக்கு ஈடுபாடு வந்திருக்கிறது. ஆனால், அதே பெண் வேடக் கலைஞர் தன் மனைவியிடம் நல்ல கணவனாகவே நடந்துகொள்வார். பெரும்பாலும் குடும்ப வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுவதில்லை.

பெண்ணாய் நடிப்பவருக்கு இயல்பாகவே கருணை, இரக்கம் வந்துவிடும். போராட்டக் குணம் போய்விடும் என்ற தகவலைப் பரவலாய்க் கேட்டேன். அதனால் பெண் வேடக்காரர்கள் சிறு ஆண் வேடங்களைக்கூடப் போடுவதைப் பார்வையாளர் விரும்புவதில்லை.

திருமணமாகாத பெண் வேடக் கலைஞன், தான் ஆண் என்பதைச் சமூகத்தில் நிலைநாட்ட வேண்டிய அவசியம் உண்டு. அதனால் அவர் மேடை தவிரப் பிற இடங்களில் கம்பீரத்தைச் செயற்கையாகக் காட்டிக் கொள்வார் என்று பழனி என்ற கலைஞர் என்னிடம் சொன்னார்.

* * *

பெருந்தேவியின் பேச்சு முடிந்த பின் ராஜாராம், பெர்னாட் சந்திரா, ராஜமார்த்தாண்டன், சுரேஷ்குமார இந்திரஜித், ஆறுமுகம் பிள்ளை, நெய்தல் கிருஷ்ணன் போன்றோர் கேட்ட கேள்விகளுக்குப் பெருந்தேவி விரிவாகப் பதில் கூறினார்.

கூட்டத்திற்குப் பல மாணவர்கள் உட்படச் சுமார் 35 பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google