Google   www kalachuvadu.com

 

பதிவு: அம்பேத்கர் விருது

மனித உரிமைப் போராளிக்கு கௌரவம்

தேவிபாரதி

மனித உரிமைப் போராளி பேராசிரியர் கல்யாணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் 'அம்பேத்கர் விருது' வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இது போன்ற விருதை இந்தியாவிலேயே முதன்முறையாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புதான் வழங்குகிறது.

கல்யாணி என அழைக்கப்படும் பேராசிரியர் பிரபா கல்வி மணி, 1947ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சௌந்திர பாண்டியபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். 1969 தொடங்கி 28 ஆண்டுகள் அரசுக் கல்லூரிகளில் இயற்பியல் பேராசியராகப் பணியாற்றிய கல்யாணி 1997இல் அப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு முழுநேர மக்கள் பணியாளராகத் திகழ்கிறார். புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மக்கள் கல்வி இயக்கம், பழங்குடி இருளர் பாதுகாப்பு இயக்கம் ஆகிவற்றை நிறுவியவர். தற்போது திண்டி வனத்தில் தாய்த் தமிழ்ப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார்.

1980களில் மார்க்சிய லெனினிய இயக்கங்களில் ஒன்றான மக்கள் யுத்தக் குழு வெகுசனத் தளத்தில் செயல்பட முடிவு செய்தபொழுது அதன் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். பண்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகத் தொடங்கப்பட்ட புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக விளங்கி 'செந்தாரகை' என்னும் பண்பாட்டு இதழின் வெளியீட்டாளராகக் கல்யாணி செயல்பட்டார். இவருடைய முயற்சியால்தான் பேராசிரியர் கோ. கேசவன், கோச்சடை, ரவிக்குமார், அ. மார்க்ஸ், கவிஞர் பழமலய் போன்றோர் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர். மார்க்சிய லெனினிய அரசியல் வெகுசனத் தன்மை பெறுவதற்கு இவரது நடவடிக்கைகள் பெரும் உந்துதலாய் விளங்கின. 1980களின் பிற்பகுதியில் தத்துவார்த்த ரீதியில் ஏற்பட்ட வேறுபாடுகளின் காரணமாக அவர் இயக்கத்திலிருந்து விலகினார். பின்னர், மார்க்சிய இயக்கங்களுக்குள் நிலவும் அரசியல் திட்ட அடிப்படையிலான ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறியவும் மார்க்சியத் தத்துவம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை அறியவும் உருவாக்கப்பட்ட 'அதிர்வுகள்' என்னும் சிந்தனையாளர் குழுவில் கோ.கேசவன், ரவிக்குமார், அ.மார்க்ஸ் ஆகியோர்களுடன் ஒருவராக இருந்து கல்யாணி செயல்பட்டார். அந்தக் குழுவின் விவாதங்களிலிருந்து உருவானதே மக்கள் கல்வி இயக்கம்.

கல்வி முறையின் சீர்கேடுகளுக்கெதிரான பல்வேறு போராட்டங்களை நடத்தியது மக்கள் கல்வி இயக்கம். அதே நேரத்தில் மனித உரிமைகளுக்கான பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்ற பேராசியர் கல்யாணி பிறகு அதிர்வுகள் குழுவினருடனும் வழக்கறிஞர்கள் சிலருடனும் இணைந்து மனித உரிமை இயக்கம் என்னும் அமைப்பை நிறுவினார். அவ்வமைப்பு சரிவர இயங்காததால், மக்கள் சிவில் உரிமைக் கழகத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளில் முழு மூச்சாக ஈடுபட்டார். அண்ணாமலை நகர் பத்மினி (1992), அத்தியூர் விஜயா (1993) ஆகியோர் காவல் துறையின் பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளானதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த அத்தியூர் விஜயாவின் வழக்கு அந்த மக்களை அமைப்பாகத் திரட்டுவதற்குக் காரணமாய் அமைந்தது. பழங்குடி இருளர் சமுதாயத்தின் பாகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து கல்யாணி போராடி வருகிறார்.

தமிழ்ப் புத்தாண்டு தினமான 14.04.2007 அன்று மாலை சென்னைக் கோயம்பேடு சந்தைத் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விருது வழங்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், எழுத்தாளர் சூரியதீபன், கவிஞர் இன்குலாப், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வப் பெருந்தகை, ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். தலித்துகளுக்காகப் போராடும் தலித் அல்லாத ஒருவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரால் வழங்கப்படும் இவ்விருதினைப் பெறும் முதல் போராளி பேராசிரியர் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைச் சிறுத்தைகளும் பேராசிரியர் கல்யாணியும் பாராட்டுக்குரியவர்கள்.

 நவயானாவுக்கு சர்வதேச விருது

'இந்திய இளம் பதிப்பாளர் விருது 2007' பெற்ற நவயானா பதிப்பகத்தின் பதிப்பாளர் எஸ். ஆனந்துக்கு இந்த ஆண்டுக்கான சர்வதேச இளம் பதிப்பாளர் விருதும் கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட இவ்விருதை, ஓர் இந்தியர் வாங்குவது இதுவே முதல்முறை என்பது கூடுதல் சிறப்பு. இவ்விருதுக்கான போட்டியில் இந்தியா, எகிப்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் பதிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். விருதுடன் 7,500 பவுண்ட் (சுமார்
ரூ. 6,23,000) பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. விருதின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் நவயானா பதிப்பகம் இடம்பெறும். விருது பெற்ற ஆனந்துக்கு வாழ்த்துகள்.

- ஆசிரியர் குழு

உள்ளடக்கம்

Google Ads.....


Google