ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப்
பல்கலைக்கழகத்தில் மார்ச் 30, 31 ஆகிய நாட்களில், அதன் தமிழ் மொழி மற்றும்
மொழிபெயர்ப்புத் துறையும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து 'புதுக்கவிதையில் பெண்
கவிஞர்கள்' எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கு நடத்தின. இந்நிகழ்வை
அப்பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறைத் தலைவரும் எழுத்தாளருமான தமிழவன் மற்றும்
பேராசிரியர்கள் பத்மநாபன், விஷ்ணுகுமார், பூலோக ரம்பை, முனுசாமி போன்றோரும்
ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர்.
முதல் நாள் கருத்தரங்கத் தொடக்க விழா, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. ஜி.
இலட்சுமி நாராயணா அவர்கள் தலைமையில் காலை 10 மணிக்குத் தொடங்கியது. தமிழவன்
வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கைத் தொடங்கிவைத்த துணைவேந்தர் தம் உரையில்
இந்தியச் சூழலில் எத்தகைய பின்புலத்தில் பெண்ணியம், தலித்தியம், விளிம்பு நிலைக்
கருத்துகள் போன்றவை முன்னுக்கு வந்தன என்று விரிவாகப் பேசினார். அதன் பிறகு
கருத்தரங்கத்தின் முதல் அமர்வு தொடங்கியது.
முதல் நாள் அமர்வுகளுக்கு நோயல் இருதயராஜ் தலைமை வகித்தார். முதல் கட்டுரையாகப்
'பெண் கவிதைப் புலன்நெறி' எனும் தலைப்பில் துரை. சீனிச்சாமி கட்டுரை வாசித்தார்.
பெண் கவிதையில் பாலியல்சார் செய்திகள் புதியதன்று; ஔவையார், வெள்ளிவீதியார்,
ஆண்டாள் போன்றோரிடமே அவை உள்ளன; ஆணின் கவிதையில் கருத்தியல் என்று ஏதோ ஒன்று
மாட்டிக்கொண்டுள்ளது; பெண்களிடம் அப்படியில்லை; கவிதை இயல்பாக வெளிப்படுகிறது என்று
தொடர்ந்தது அவரது கட்டுரை. கட்டுரையைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில், பெண் கவிதை
எல்லாம் பெண்ணியக் கவிதை என்றும் பெண் கவிஞர்கள் எல்லாம் பெண்ணிய வாதிகளென்றும்
சொல்ல முடியாது என்ற கருத்தை பெங்களூர் ஜி.கே. ராமசாமி முன்வைத்தார். பெண் எழுத்து
என்பது வேதகாலம் முதலே உள்ளது என்றார் பத்மாவதி.
அடுத்து, 'பெண் கவிதைகளில் வாழ்வியல் சிக்கல்களின் பதிவு' என்னும் தலைப்பில்
வெண்ணிலா கட்டுரை வாசித்தார். மேல் - கீழ், இடது - வலது, அகம் - புறம், இப்படியான
எல்லாம் ஆண் பார்வையில் ஒருதலைப்பட்சமாக, பெண்ணை அடிமைப்படுத்தும் மனநிலையிலேயே
உருவாக்கப்பட்டவை; தாய்மையைக் கொண்டாடுதல்கூட ஒருதலைப்பட்சமாகத் தான் உள்ளது
என்பதாக அவரது கட்டுரை அமைந்தது.
மதிய உணவுக்குப் பிறகு 2:30 மணிக்கு இரண்டாம் அமர்வில் பத்மாவதி 'கனிமொழி கவிதைகள்:
ஒரு பார்வை' என்னும் தலைப்பில் கட்டுரை வாசித்தார். கனிமொழியின் கவிதைகள்
மையம்கொள்ளும் தன்மையை விளக்கியது அவரது கட்டுரை. விவாதத்திற்குப் பிறகு தேவேந்திர
பூபதி 'இன்றைய பெண் எழுத்துகள் மாற்றுகளின் விளைநிலமாகுமா?' எனும் தலைப்பில்
கட்டுரை வாசித்தார்.
தொடர்ந்து நடந்த விவாதத்தில், தமிழவன் மார்க்சிய அறிஞரான ஃப்ரெடரிக் ஜேம்சனின்
"கவிதை சாதிய, பாலிய அடையாளத்தை உள்வாங்கிச் செரித்துவிட்டது" என்ற மேற்கோளைச்
சொல்லிக் கவிதை, அடையாளங்களை, சமூக உணர்வுகளை உள்வாங்கிக்கொள்கிறது என்றார்.
இரண்டாம் நாள் அமர்வுகளுக்கு துரை. சீனிச்சாமி தலைமையேற்றார். முதல் அமர்வில்
முதலாவதாக குவளைக் கண்ணன் 'சில கவிதைகளும் ஒரு கேள்வியும்' எனும் தலைப்பில் கட்டுரை
வாசித்தார். பெண் கவிதையில் உள்ள நுட்பங்கள், பாலியல்சார் உணர்வுச் சிக்கல்கள், ஆண்
மனத்தை நிராகரிக்கும் எதிர் அழகியல் தன்மை போன்றவற்றை விவாதித்தது அவர் கட்டுரை.
தொடர்ந்து அழகியல், எதிர் அழகியல் குறித்த விவாதமும் நிகழ்ந்தது.
அடுத்ததாகப் பஞ்சாங்கம் 'நவீனப் பெண் கவிஞர்களின் பெண் எழுத்து' எனும் தலைப்பில்
கட்டுரை வாசித்தார். 'சமகாலச் சூழலில் ஆண் கவிஞர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள்'
என்ற வாசகத்தோடு தொடங்கிய அவரது கட்டுரை புதிய பெண்ணியக் கோட்பாட்டாளரான எலேன்
சிக்சூவின் கருத்தை மையமாகவைத்துப் பெண் எழுத்தை அணுகியது. அடுத்து நோயல் இருதயராஜ்
'பெண்ணியம், தன்னிலை, தன்வெளி, தன்மொழி' எனும் தலைப்பில் கட்டுரை வாசித்தார். பெண்
கவிதையில் வரும் புனைவுகள், படிமங்கள் யாவும் மேஜிகல் ரியலிசத் தன்மை கொண்டவையாக,
அறிவைப் புறக்கணிப்பவையாக மட்டுமே உள்ளன என்றார் பஞ்சாங்கம்.
அடுத்தபடியாக க்ருஷாங்கினி 'நானும் என் கவிதையும்' என்று கட்டுரை வாசித்தார். 'நான்
எல்லாவற்றிலிருந்தும் விடுபட விரும்புகிறேன். உடம்பை, பண்பாட்டை நான் சுமந்து செல்ல
இயலாது' என்பதாக அமைந்த அவரது கட்டுரை அவரது கவிதைகளோடு கலந்து சென்றது.
அமர்வுகள் முடிந்த பிறகு பல்கலைக்கழகப் பதிவாளர் உரையோடும் தமிழவனின் உரையோடும்
பத்மநாபனின் நன்றியுரையோடும் நிகழ்வுகள் நிறைவுற்றன.
பொதுவாகப் பெண் கவிதைகளை வரவேற்கும் போக்கு அல்லது எதிர்க்கும் போக்கு என்றுதான்
உள்ளது. இதற்கிடையில் உள்ள சரியான திறனாய்வு நோக்கு என்பது இன்னும் கூர்மை
பெறவில்லை, அந்த வகையில் இக்கருத்தரங்கு பயணிக்கத் தொடங்கியிருக்கிறது என்று சொல்ல
முடியும். கருத்தரங்கில் கட்டுரையாளர் தவிர பெங்களூர் ஜி.கே.ராமசாமி, பேராசிரியர்
ரவிக்குமார் போன்றோரும் காலச்சுவடு அறக்கட்டளை சார்பாக நெய்தல் கிருஷ்ணனும்
கலந்துகொண்டனர். பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களும்
கலந்துகொண்டனர்.
உள்ளடக்கம்