Google   www kalachuvadu.com

 

பத்தி

அகவிழி திறந்து

கண்ணன்

உடன் டிக்கெட்

முந்தைய இதழ் (இதழ் 88) பத்தியில் நான் பயன்படுத்தியிருந்த 'உடன் டிக்கெட் பகுதி' என்ற தொடர் பற்றிச் சில நண்பர்கள் பேசினார்கள். 'தத்கால் டிக்கெட்டா?' என்று கேட்டார்கள். அது அவசர டிக்கெட். மேலும் 'உடன் டிக்கெட் பகுதியில் தொற்றிக்கொண்டு . . .' என்று வருவதால் தத்கால் டிக்கெட் என்று புரிந்துகொள்ள இடமில்லை. அதிகப் பணமும் கொடுத்துவிட்டு ஏன் தொற்றிக்கொள்ள வேண்டும்?

சுமார் பத்தாண்டுகள் இருக்கலாம். மதுரை செல்வதற்காக நாகர்கோவில் சந்திப்பில் ஜெனரல் கம்பார்ட்மெண்டில் அமர்ந்திருந்தேன். ரயில் இப்போது கிளம்பும் என்ற அறிவிப்பு மும்மொழிகளில் வந்துகொண்டிருந்தபோது நடுத்தர வயதுப் பெண் மணி ஒருவர் ஓடிவந்தார். நுழைவாயில் அருகே ஜன்னல் பக்கமாக இருந்த என்னிடம் 'இது உடன் டிக்கெட் கம்பார்ட்மெண்ட்தானே?' என்றார். ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டு, 'ஆமாம்' என்றேன்.

மக்கள் தமிழ் எனப்படுவதை அதன் ஜனனத்திலேயே கண்டுவிட்ட மனக்கிளர்ச்சி அப்போது ஏற்பட்டது. இருப்பினும் அத்தொடர் இப்பத்தாண்டுகளில் பொதுப் புழக்கத்தில் வந்திருப்பதாகத் தெரியவில்லை. இனி வருமா என்பதும் ஐயமே. ஜெனரல் கம்பார்ட்மெண்டை இப்போது சாதாரணப் பயணிகள் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

நெருக்கடி நிலை

அனைவருக்கும் வணக்கம்.

அம்பேத்கரியல் மையத்தில் அமைந்துள்ள கண்காட்சியைத் திறந்துவைத்து வாழ்த்துரை வழங்க என்னை அழைத்துள்ள பேரா. அ. ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்ச் மாதம் நான் பொதுவாகப் பல்கலைக்கழக நண்பர்களுடன் அதிகம் தொடர்புவைத்துக்கொள்வதில்லை. அவர்கள் எல்லோருமே இம்மாதம் ஒரு பெரும் நெருக்கடியில் இருப்பார்கள். பண நெருக்கடி. ஆனால் வழக்கமான பண நெருக்கடி அல்ல இது. கருத்தரங்கப் பணத்தை எப்படிச் செலவுசெய்து முடிப்பது என்ற புது நெருக்கடி அது. இன்னொரு நெருக்கடி, தேதிகள் தொடர்பானது. ஒரு பேராசிரியர் ஒரு நாளில் ஒரு பல்கலைக்கழகத் தில் மட்டுமே கட்டுரை படிக்க முடியும் என்பது இயற்கையின் கட்டுப்பாடு. இருப்பினும் குறைந்தது மூன்று பல்கலைக் கழகங்களிலிருந்தாவது ஒரே தேதியில் கட்டுரை படிக்க அழைப்பு இருக்கும். யார் மனமும் புண்படாமல் மார்ச் மாதத்தைத் தாண்டிவிடுவது என்பது பேராசிரியர்களுக்கு ஒரு சாதனைதான்.

பெரும்பாலான மார்ச் மாதப் பல்கலைக்கழகக் கருத்தரங்குகள், இவ்வாறு பெரும் நெருக்கடிகளோடு நடக்கின்றன. குறிப்பிட்ட தேதிக்குள் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டிய தாயின் அவஸ்தையோடு ஒப்பிடக் கூடிய நெருக்கடிகள் இவை.

என் பேராசிரிய நண்பர் ஒருவரிடம் மேற்படி கருத்தரங்கு ஒன்றிற்கு உங்களை ஏன் அழைத்தார்கள் என்று கேட்டேன். அவர் மிகவும் நல்லவர். வெகுளி. எனவே, மிக எளிமையான உண்மையான ஒரு பதிலைக் கூறினார். "கடந்த ஆண்டு, அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியரை எங்கள் கருத்தரங்கிற்கு அழைத்திருந்தோம் அல்லவா? அதனால்தான்" என்றார். மரியாதை செய்யப்படும்போது எதிர்மரியாதை செய்வது நியாயமாகத்தான் எனக்கும் தோன்றியது.

மார்ச் மாதம் பேராசிரியர்களின் குடும்பங்களிலும் நெருக்கடி ஏற்படுவதுண்டு. பிள்ளைகளுக்கு இறுதிப் பரிட்சை. பேராசிரியர்கள் உடன் இருந்து பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும் என்பது இல்லத் தரசிகளின் நியாயமான எதிர்பார்ப்பு. இந்த நியாயமான எதிர்பார்ப்பைக்கூட, மார்ச் மாதம், நிறைவேற்ற முடியாத நிலை பேராசிரியர்களுக்கு. பொருளாதார நெருக்கடி, கால அவகாச நெருக்கடி, குடும்ப நெருக்கடி, இவற்றில் பேராசிரியர்கள் சிக்கித் தவிக்கும் காலம் மார்ச் மாதம்.

எனவேதான், பெரும்பான்மையான மார்ச் மாதப் பல்கலைக்கழகக் கருத்தரங்குகள் வெற்றுச் சம்பிரதாயங்களாக முடிந்துவிடுகின்றன.

இவ்வருடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரியல் மையம், மார்ச் இறுதிவரை காத்திராமல், ஆறு தொடர் உரைகளை நடத்தியிருக்கிறது. இம் மையத்தின் செயல்பாடு, பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுவரும் ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமைந்திருக்கிறது. தமிழகத்தின் முன்னணித் தலித் எழுத்தாளர்கள் பற்றி ஆழமான ஆய்வுக் கட்டுரைகள், முனைவர் பட்டம் பெற்றவர்களாலும், பெறாதவர்களாலும் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன. ஒரு தகுதியான நூலாகத் தொகுக்கப்படும் தரத்தில் அவை அமைந்துள்ளன. இதை ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். நமது கல்வி முறை, ஆய்வு முறை, கல்வி நிறுவனங்கள் பற்றிய விமர்சனங்களுடன் காலச்சுவடு இயங்கினாலும், பல்கலைக்கழகங்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை அங்கீகரிக்க, அது தடையாக இருப்பதில்லை. எனவே, மேற்படி கட்டுரைகள் தொகுக்கப் பட்டுக் காலச்சுவடு வெளியீடாக வெளிவர உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு அறிவித்துக் கொள்கிறேன்.

இத்தொடர் உரைகளின் தொடர்ச்சியாகவும் அம்பேத்கரியல் மையத்தின் இவ்வருட இறுதி நிகழ்வாகவும் இக்கருத்தரங்கு அமைகிறது. அக்கறையுடனும் முன்திட்டமிட்டும் இவற்றை நடத்தியிருக்கும் அம்பேத்கரியல் மைய இயக்குனர் அ. ராமசாமி அவர்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்பேத்கரிய சிந்தனைகளின் தொடர்ச்சியான தலித்தியம், கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழ் அறிவுலகில் ஏற்பட்ட மிக முக்கியமான தாக்கம். கடந்த நூற்றாண்டில் தமிழில் ஏற்பட்ட சமூக மற்றும் அறிவுத்துறை தாக்கங்களில் ஒன்று எனத் தலித்தியத்தைச் சொல்லலாம். அம்பேத்கரின் நூற்றாண்டை அடுத்துத் தமிழகத்தில் ஏற்பட்ட தலித்திய இயக்கம், ஏற்கெனவே உறுதிப்பட்டிருந்த சிந்தனைகளை ஆழமான மறுபரிசீலனைக்கு உள்ளாக்கியது. சந்தர்ப்பவசமாகக் காலச்சுவடின் இயக்கமும் இதே காலகட்டத்தில் நடந்துள்ளது என்பதால், தலித்தியத்தோடு முரண்பட்டும் உடன்பட்டும் விவாதப்பாங்கிலும் அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய நிலை எனக்கு இருந்தது. தமிழ் அறிவுத் துறையிலும் மாற்று இதழியலிலும் தீவிரப் பதிப்புப் பணிகளிலும் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கு தலித்தியம் ஒரு முக்கியக் காரணி என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துப்பூர்வமாகப் பதிவுசெய்திருக்கிறேன். (பார்க்க: 'இருளில் சுடரொளி', காலச்சுவடு 41, 2002)

மார்க்சிய இலக்கியத் தாக்கம் என்பது தமிழில் கடந்த 50 ஆண்டுகளாக 'முற்போக்கு இலக்கியம்' என்று பேசப்பட்டு இன்றும் தனித் தீவாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொது இலக்கியத் தளத்தில் வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப் பட்ட முற்போக்கு இலக்கியவாதிகளை விரல்விட்டு எண்ணினால், மடங்கிய விரல்களே அதிகமாக இருக்கும். மார்க்சிய இலக்கிய அமைப்புகளுக்குள் இயங்கும் படைப்பாளர்களில் கவனம் பெற்றிருப்பவர்கள் முற்போக்கு இலக்கியத்தின் வரையறைகளை உடைத்தெறிந்தவர்கள்தான்.

மாறாக, தலித் இலக்கியம் மிகக் குறுகிய காலத்தில் பொது இலக்கியத் தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல படைப்பாளிகளை உருவாக்கிவிட்டது. இம் மாதம் இப்பல்கலைக்கழகத்தில் விவாதிக்கப்பட்ட எந்தத் தலித் படைப்பாளியும் படைப்புத் தளத்தில் சலுகை கேட்டு நிற்பவரல்ல. அவர்கள் தமிழ் இலக்கியத்தில் புதிய தலைமுறையின் முன்னணிப் படைப்பாளர்கள். அம்பேத்கரியல் மையத்தால் விவாதத்திற்குத் தேர்வுசெய்யப்பட்ட தலித் படைப்பாளர்களில் இமையம், ஜே.பி. சாணக்யா, சுகிர்தராணி, சோ.தர்மன் ஆகியோரின் வளர்ச்சியில் காலச்சுவடின் பங்களிப்பும் உண்டு என்பது எனக்கு மிகுந்த பெருமிதம் தரும் செய்தி.

கடந்த சில வருடங்களாகக் காலச்சுவடு அறக்கட்டளையிலிருந்து இளம் படைப்பாளிகளுக்கான கவிதை, சிறுகதை, ஓவியப் போட்டிகள் நடத்தி வருகிறோம். எந்தப் பாரபட்சமுமின்றி, படைப்பாளியின் பெயர் மறைக்கப்பட்டு, பரந்துபட்ட நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்பாளர்களாக, ஒவ்வொரு ஆண்டும் சில தலித் கலைஞர்களும் உள்ளனர். இது தலித்தியத்தின் பண்பாட்டுத் தாக்கத்திற்குத் தக்க சான்று.

அதேபோல அறிவுத் துறையிலும் தலித் அறிஞர்களின் இடம் மையமானதாக, மறுக்க முடியாததாக உள்ளது.

இத்தாக்கத்தின் பல்வேறு பரிமாணங்களை, இந்த இரண்டு நாட்களில் நாம் விவாதிக்கப்போகிறோம். இத்தகைய ஒரு விவாதத்திற்கு வழிகோலியிருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும் பேராசிரியர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சுந்தரனார் அரங்கில் 30.3.2007 அன்று ஆற்றிய உரை.)

l

அடிப்படைவாதங்களின் மோதல்

தாரிக் அலியின் 'The Clash of Fundamentalism (Crusades, Jihads, and Modernity) 'அடிப்படைவாதங்களின் மோதல்' என்னும் நூல் 2002இல், செப்டம்பர் 11 உருவாக்கிய சொல்லாடல்களுக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது. 2005இல் தாரிக் அலியின் புதிய முன்னுரையுடன் மறுபதிப்பு வெளிவந்துள்ளது.

தாரிக் அலி ஐரோப்பாவில் 1968இல் ஏற்பட்ட 'மாணவர் புரட்சி' என்று அழைக்கப்படும் இயக்கத்தால் கவனத்திற்கு வந்தவர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இன்று தனது சுதந்திரக் கருத்துகளுக்குத் தரும் விலையாக அங்கு வாழ முடியாது அயலில் வசிப்பவர். மதச் சார்பற்ற, மத நம்பிக்கையற்ற, கடவுள் நம்பிக்கையற்ற (பிறப்பால்) இஸ்லாமியர் என்ற அரிய பிரிவைச் சேர்ந்தவர். 'படைப்பு', 'ஆய்வு' என்ற இருதளங்களிலும் செயல்படுபவர் என்ற போதிலும் அவரது முக்கியத்துவம் ஆய்வுக்கட்டுரைகள் சார்ந்தே அதிகமும் உணரப்படுகிறது. நமது சந்தர்ப்பவாத செக்குலரிஸ்டுகள் மற்றும் தொழில் முற்போக்குவாதிகள்போல அல்லாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடனான கருத்து வேறுபாடுகளைப் புதைத்துக்கொண்டு கள்ள மௌன உறவை மேற்கொள்ளாதவர் (அடிப்படைவாதிகள் என்ற சொல்லை, ஒரு நூலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் எல்லாக் காலத்திற்கும் முழுமையாகப் பொருந்துபவை என்ற நம்பிக்கை கொண்டவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளேன்). அதே நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றிய வரலாற்றுபூர்வமான ஆழமான, வெறுப்பற்ற, விமர்சனங்களை முன் வைப்பவர். இஸ்லாமிய மற்றும் புஷ் வகை அடிப்படைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கி வருபவர்.

இஸ்லாம் x  மேற்கு என்று பார்க்கப்படும் இன்றைய மோதல்நிலை பற்றிய விரிவான ஆய்வு இந்நூல். துணிச்சலுடனும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் எழுதப்பட்டிருப்பதாக என் வாசிப்பில் தோன்றியது. இந்நூலில் இடம் பெற்றிருக்கும் 'இளம் இஸ்லாமியருக்கு ஒரு கடிதம்' என்ற பகுதியைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாம்.

l

சாதனையும் எதிர்வினையும்

'சென்னை சங்கமம்' எதிர்கொள்ளப்பட்ட சூழல் என்னில் 'தமிழ் இனி 2000' பற்றிய நினைவுகளைத் தூண்டியது. 'தமிழ் இனி 2000' இன்றுவரை நடந்திருக்கும் இலக்கிய அரங்குகளில் ஆகப்பெரியது. எனினும் அளவில், வீச்சில் 'சென்னை சங்கம'த்தோடு ஒப்பிடக் கூடியது அல்ல. தமிழ் இனி, சுமார் ஓராண்டுக் கால ஆலோசனைகளின் பின்புலமும் பல்வேறு தரப்பினரின் தன்னார்வப் பங்களிப்பும் கொண்டது. உலகத் தமிழர்களின் பங்கேற்பும் அதில் துலக்கமாக இருந்தது. தவிர, இரு நிகழ்வுகளுக்கும் பின்னால் இருந்த ஈடு பாடுகளின் தன்மைகளும் வேறானவை. 'தமிழ் இனி 2000'த்தில் அரசியல்வாதிகள், தமிழ் சினிமா நட்சத்திரங்கள், புரவலர்கள் ஆகியோரை அழைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தோம். பொது மக்களுக்கான நிகழ்வாக அல்லாமல் தமிழ்த் தீவிரச் செயல்பாடுகளின் களமாகவே அது உருவாக்கப்பட்டது.

'தமிழ் இனி 2000' தனியார் நிறுவனங்களின் உதவியால்தான் நடந்து முடிந்தது. நாங்கள் அரசாங்க உதவியை நாடாமலில்லை. மத்திய, மாநில அரசுகளை உதவி கேட்டு விண்ணப்பித்தோம். மத்திய அரசின் பண்பாட்டுத் துறைச் செயலரைத் தில்லியில் சந்தித்து ஒரு விண்ணப்பம் அளித்தேன். தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி வேண்டி தமிழ்க்குடிமகனைச் சந்தித்து விண்ணப்பம் கொடுத்தேன். தலை நிமிர்த்தி என்னைப் பார்ப்பதை அவர் தவிர்த்தார். அதற்கு அகங்காரம் காரணம் என்று நான் நினைக்கவில்லை. தீண்டாமையை நான் உணர்ந்த சந்தர்ப்பம் அது. முதல்வருக்கும் விண்ணப்பித்தேன். அரசு உதவி எதுவும் கிடைக்கவில்லை. அன்று எனக்குப் பலவிதங்களிலும் உதவ ஆத்மார்த்தமாக முயன்றவர், இன்று நியாயமற்ற தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள்.

சன் டி.வி. 'தமிழ் இனி 2000'த்தைச் சென்னை சங்கமத்தைப் போலவே முழுமையாகப் புறக்கணித்தது. கனிமொழி 'தமிழ் இனி 2000'த்தில் பார்வையாளராகக் கலந்துகொண்டதுதான் இதற்குக் காரணம் என்று நான் நினைக்கவில்லை. (!)

அரசாங்க உதவி, GO பிரச்சினை, வாரிசுப் பிரச்சினை, அரசு துஷ்பிரயோகப் பிரச்சினை எதுவும் இல்லாத போதும் 'தமிழ் இனி' அரங்கில், தமிழ் இனியைக் கடுமையாக விமர்சித்தவர் ஞாநி. அஃது பெரிது என்பதே அவரது தாக்குதலின் அடிப்படை. சுமார் இரண்டாயிரம் ஆர்வலர்களின் பங்கேற்பு, பிற நாடுகளிலிருந்து சுமார் 250 இலக்கியவாதிகளின் வருகை, மூன்று நாட்கள் இரு அரங்குகளாகப் பற்பல அமர்வுகள், நாடகங்கள், புத்தகச் சந்தை, ஓவியக் கண்காட்சி . . . மொத்தச் செலவு பத்து இலட்சத்திற்குள் அடக்கம். அது பெரும் ஆடம்பரம் என்றார் ஞாநி.

நாங்கள் அழைத்துக் கலந்துகொள்ள முடியாது போனவர்கள், அச்சமயம் இந்தியாவிலேயே இல்லாதவர்கள் ஆகியோரின் பெயர்ப் பட்டியலைக் கொடுத்து, இவர்களையெல்லாம் ஏன் அழைக்கவில்லை என்று கேட்டுத் தாக்கித் துக்ளக் இதழ் எழுதியது. எழுதுவதற்கு முன்னர் 'இவர்களை அழைத்தீர்களா?' என்று என்னைக் கேட்கவில்லை. பின்னர் நான் அனுப்பிய மறுப்பையும் வெளியிடவில்லை. உயர்ந்த அரசியல் தர்மத்திற்காகப் போராடுபவரின் உயர்ந்த இதழியல் தர்மமாக இதைக் கொள்ளலாம்.

'தமிழ் இனி 2000'த்தைக் 'கும்பமேளா' என்று குறிப்பிட்டுத் தாக்கித் துண்டறிக்கை வெளியிட்டு ஒரு இயக்கமே நடத்திய அ. மார்க்ஸ் இன்று அசலான பண்பாட்டுக் 'கும்பமேளா' முன் மௌனக்கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார். 'புரட்சி'கரமாகப் பேசும் அரசு ஊழியர்களுக்கு எங்கு வாளை வீச வேண்டும் எங்குவாலைச் சுருட்டிக்கொள்ள வேண்டும் என்பது தெரியும்.

2001இல் நான் எழுதிய 'சாதனையும் எதிர்வினையும்' கட்டுரையில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

சுமார் பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல தீவிரமான முயற்சிகள் பெறும் எதிர்வினையைக் கவனித்துவருகிறேன். பல சாதனையாளர்களைச் சந்தித்து அவர்களுக்குக் கிடைத்த எதிர்வினை என்ன என்பதைக் கேட்டு அறிந்திருக்கிறேன். இந்த ஆக்கபூர்வமான பங்களிப்புகள் பலதரப்பட்டவை. எந்த ஒரு கோட்பாடு அல்லது இயக்கத்திற்குள்ளும் அடங்காதவை. இலக்கியம், ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு, களப்பணி என வெவ்வேறு இயல் சார்ந்தவை. ஆனாலும், இவர்களுக்குக் கிடைத்த எதிர்வினை பொதுத் தன்மை கொண்டது. அது எரிச்சல், கோபம், பொறாமை. காரணமற்ற எதிர்ப்பும் ஆதாரமற்ற மறுப்பும்தான். சூழலின் எதிர்மறை உணர்வுகள் வியூகம் அமைத்துத் தம்மைத் தாக்குவது போன்ற ஒரு உணர்வு.

பண்பாட்டு இடைவெளிகளை அர்த்த பாவனையோடு எதிர்கொள்ளும் எந்தத் தரமான பணியும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காக நேரிடுகிறது. இந்தத் தாக்குதல்களைக் கருத்தியலின் தளத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முடியாது. நம் ஆழ்மனத்தின் இருண்ட பிரதேசங்களில் இந்த மனோபாவத்திற்கு விடை கிடைக்கக்கூடும். சுருக்கமாகச் சொன்னால் சராசரித்தனம் தளும்பும் செயல்பாடுகள் பெரும் ஆதரவைப் பெறுகின்றன. சாதனைகள் சாகடிப்புக்கு உள்ளாகின்றன. தமிழ்ச் சூழலின் அசலான அவலம் இதுதான். அவலத்தைக் கலைக்க எத்தனிக்கும் ஆக்கங்களின் ஊற்றுக் கண்ணை அழிக்கும் அவலம் இது. நம் அவலம் பற்றிப் பேசும் அறிவுஜீவிகளால் உருவாக்கப்பட்ட அவலம் இது. நாம் ஒரு சாதனையாளருடைய பணியை அங்கீகரிக்க வேண்டுமென்றால், ஒன்று அவர் சிதிலமடைய வேண்டும் அல்லது மரணமடைய வேண்டும் என்ற நிலை தொடர்வது ஆரோக்கியமானதாகுமா? ஆக்கபூர்வமாக இயங்குபவர்களுக்கு நாம் எப்பொழுதும் அனுப்பும் சமிக்ஞை 'இயங்காதே' என்பதுதான். இந்த நிலையில் தமிழ்ச் சூழலின் அவலம் எப்படித் தீரும்?

'சென்னை சங்கமம்' இக்கருத்துகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

உள்ளடக்கம்

Google Ads.....


Google