Google   www kalachuvadu.com

 

ஊடக வெளி

விளையாட்டல்ல; யுத்தம்

அ. ராமசாமி

என் கையிலிருக்கும் செல்போன் கருவிக்குத் தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்கும் முயற்சியை அநேகமாகக் கைவிட வேண்டியதுதான் என்று தோன்றுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் செல்போன் ஓன்றை வாங்கியவுடன் கைபேசி என மொழிபெயர்த்துப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். இந்த மொழிபெயர்ப்பு அந்தக் கருவியின் இருப்பிடத்தை வைத்துச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு. ஏற்கனவே இருந்த வீட்டுத் தொலைபேசியையும் கையில் வைத்துத்தான் பேச வேண்டும் என்றாலும், இருந்த இடத்தைவிட்டு வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் செல்போனைக் கையோடு எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதால் 'கைபேசி' என்ற பெயர்ப்பு சரியெனத் தோன்றியது.

நண்பர் ஒருவர் அலைபேசி எனத் தனது முகவரி அட்டையில் அச்சிட்டிருந்ததைப் பார்த்தேன். அலையும் இடங்களுக்கெல்லாம் தகவலைக் கொண்டுவந்து சேர்க்கிறது என்பதாலும் அங்கிருந்தபடியே தகவல்களை அனுப்ப முடிகிறது என்பதாலும் அலைபேசி என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், செல்போனின் பயன்பாடுகளைப் பார்த்தால் அந்த மொழிபெயர்ப்பும் போதாது என்றுதான் தோன்றுகிறது. தனது குறுஞ்செய்திகளின் வழியாகத் தந்தியின் வேலையையும் தனதாக்கிக்கொண்டுவிட்டது செல்போன். தந்தியின் இடத்தை மட்டும் அல்ல; வானொலி, கேமிரா, தொலைக்காட்சிப் பெட்டி என எல்லாக் கருவிகளின் இடத்தையும்கூட அது தனதாக்கிக்கொண்டுவிட்டது. இணைய தளமாகக்கூட ஆகிக்கொண்டிருக்கிறது. பல நோக்குப் பயனுடையதாக ஆகிவிட்ட செல்போனை இப்பொழுது எப்படி மொழிபெயர்ப்பது? ஒவ்வொரு அர்த்தமாக உருவாக்கி உருவாக்கி உடனுக்குடன் அழித்துக்கொண்டிருக்கும் அதனைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இப்போதைக்குச் செல்போன் என்றே சொல்லிவிட்டு, அதில் நடக்கும் விளையாட்டு ஒன்றுக்குள் நுழையலாம்.

இந்த விளையாட்டு அர்த்தங்களை உருவாக்கி அழிக்கும் விளையாட்டு அல்ல; கருத்துகளை உண்டாக்கி மடைமாற்றம் செய்யும் விளையாட்டு. விளையாட்டு சிறியது என்றாலும், எதிர்பார்ப்பு பெரியது என்றே நினைக்கிறேன். எனது செல்போனுக்கு வந்த அந்தக் குறுஞ்செய்தி ஆங்கில எழுத்துகளில் இருந்தது. அதனைத்஢ தமிழில் தருகிறேன்.

1. எஸ் மை லார்ட் - இன்னா நைனா

2. அப்ஜெக்ஷன் மை லார்ட் - அமிக்கி வாசி அண்ணாத்தே

3. கோர்ட் அட்ஜர்ண்ட் - இன்னொரு தபா பாக்கலாம்

4. அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்டு - கௌம்பு... காத்து வரட்டும்

5. ஆர்டர்... ஆர்டர்... - அய்யே கம்முனு கெடம்மெ

இக்குறுஞ்செய்தியை உருவாக்கியவரின் நோக்கம் என்னவாக இருக்கும்? அதனைத் தனது செல்போனில் பார்த்தவுடனேயே நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் பரிமாறிக்கொள்பவர்களின் நோக்கங்கள் என்னவாக இருந்திருக்கும்? நீதிமன்ற விவாதங்கள் தமிழில் நடக்க வேண்டும் எனத் தமிழக அரசு விருப்பம் தெரிவித்தபோது, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. அந்த நேரத்தில்தான் இந்தக் குறுஞ்செய்தி உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டது. அப்படியானால் அதன் நோக்கம் அரசின் விருப்பத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா? இரண்டும் அல்ல. இரண்டிற்கும் நடுவில் விளையாட்டுத்தனமாகக் கேலிசெய்துவிட்டு ஒதுங்குவது மட்டும்தான் எனப் பலருக்கும் தோன்றலாம். எனக்கும்கூட அப்படித்தான் முதலில் தோன்றியது. ஆனால் அப்படி மட்டும் நினைத்துக்கொள்வது சரியான புரிதல் அல்ல என்றும் எனக்குப் பட்டது.

பொதுவாகக் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொள்பவர்களின் அடிப்படை மனோபாவம் தகவலைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் அல்ல. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கிணங்க, தான் வாசித்த ஒரு குறுஞ்செய்தி தரும் நகைச்சுவை உணர்வைத் தனது நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அளித்திட வேண்டும் என்ற பெரு விருப்பம் அதில் உண்டு. தனிமனிதர்களின் அந்தரங்கத்திற்குள் நுழைவது, பொது வெளியில் இயங்குபவர்கள்மீது கோபத்தை வெளிப்படுத்துவது, விமரிசனம் செய்வது என்ற நோக்கங்களும் அவர்களுக்கு உண்டு.

நீதிமன்றத்தில் நடக்கும் ஆங்கில விவாதத்தைச் சேரித் தமிழ் எனச் சொல்லப்படும் வட்டார மொழியில் பெயர்த்துத் தந்து உருவாக்கப்பட்டுள்ள குறுஞ்செய்தி, தகவல் பரிமாற்றம் அல்ல என்பதை உறுதியாகச் சொல்லலாம். நீதிமன்ற மொழியாகத் தமிழை ஆக்கும் முயற்சி எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுபவர்களின் மறைமுக எதிர்ப்பின் வெளிப்பாடும்கூட என்று சொன்னால் பலர் மறுக்கலாம். ஆனால் பொதுப் புத்தியின் உளவியலைக் கட்டமைத்துச் செயல்படும் ஊடக வெளியாகச் செல்போனின் குறுஞ்செய்திகளும் இருக்கின்றன என்பதை அண்மைக் கால நிகழ்வுகள் வலுவாக நிரூபித்து வருகின்றன. இந்தியாவின் குடியரசுத் தலைவராக மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்களே தொடர வேண்டும் என்ற கருத்து உருவாக்கப்பட்டது குறுஞ்செய்திகள் வழியாகத்தான். அதே குறுஞ்செய்திகள்தான் இப்பொழுது இன்போசிஸ் நாராயண மூர்த்திக்காக வாக்குகளை அளித்துக்கொண்டிருக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி பற்றியும் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் தோற்றுத் திரும்பிய இந்திய அணி பற்றியும் உருவாக்கப்பட்ட குறுஞ்செய்திகள் அனைத்தும் எரிச்சலுடன் புன்னகைத்துக்கொள்வதற்கானவை என்பதை நினைவுபடுத்திக்கொண்டால் போதும். இந்தியாவில் கிரிக்கெட் ஜுரத்தின் ஆரம்பம் ஆங்கிலப் பத்திரிகைகளின் விளையாட்டுப் பக்கங்களாகத்தான் இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம். சுதந்திரப் போராட்டக் காலத்துத் தினசரிகளை ஓர் ஆய்வுக்காகப் பார்த்தபோது அன்றைய விளையாட்டுப் பக்கங்களையும் கிரிக்கெட்தான் பிடித்துக்கொண்டிருந்துள்ளது என்பது தெரியவந்தது. போட்டிகளைப் பற்றியும் வீரர்களைப் பற்றியும் எழுதப்படும் செய்திகள் ஆங்கிலப் பத்திரிகைகளின் வாசகர்களுக்கு எப்பொழுதும் அலுப்பூட்டுவதே இல்லை; திகட்டத் திகட்டப் புள்ளிவிவரங்கள்; பெரிய பெரிய புகைப்படங்கள், விரிவான அலசல்கள் என கிரிக்கெட்டுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளைக் காணாமல் ஆக்கிவிட்டது. தேசிய விளையாட்டான ஹாக்கியைப் பற்றிய செய்திகளைப் போட்டிகள் நடக்கும்போது மட்டும்தான் தருகின்றன. ஆனால் கிரிக்கெட்டிற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் எல்லாக் காலங்களிலும் இடம் உண்டு. இந்தியாவில் கிரிக்கெட் மட்டையைப் பிடித்துக்கூடப் பார்க்காதவர்களும் கிரிக்கெட் பற்றிய புள்ளிவிவரங்களை அள்ளி விடுகிறார்கள் என்றால் காரணம் ஆங்கிலத் தினசரிகள்தான்.

ஆங்கிலத் தினசரிகளின் விளையாட்டு இன்று இந்திய தேசத்தின் விளையாட்டாக மாறிவிட்டது. இந்திய விளையாட்டுத் துறையின் முகத்தை மாற்றியதில் மட்டுமல்ல, இந்தியாவின் முகத்தை மாற்றுவதிலேயே ஆங்கில ஊடகங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய மொழிகளின் ஊடகங்கள் பொதுவாக அதில் கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை. அவற்றின் ஒற்றை நோக்கம் வாசகர் எண்ணிக்கைப் பெருக்கம், வியாபார வளர்ச்சி என்பதாக இருப்பதால் தேசிய எல்லைகளை விட்டு வட்டார எல்லைகளையே தங்கள் பரப்பளவாகக்கொள்கின்றன. வட்டார எல்லையின் அடையாளம் மாநிலமாக இருந்த நிலை மாறி, மாவட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஆங்கில ஊடகங்களின் இயல்பே தேசிய எல்லையாகவும் சர்வ தேச அடையாளமாகவும் இருப்பதால் அவை தொடர்ந்து தேசத்திற்கான, உலகத்திற்கான கருத்தை உருவாக்குவதிலும் கலை, பண்பாடு, விளையாட்டு போன்றவற்றின் அடையாளங்களை மாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆங்கில ஊடகங்களின் ஆதிக்கப் பின்னணியில் இந்தியர்களின் கைகளில் இருக்கும் செல் போன்கள் செய்யும் மாயங்கள் ஆச்சரியமூட்டுவன வாக ஆகிக்கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வங்கதேச அணியிடம் தோற்ற உடனே கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பார்வையாளர்கள் அனுப்பிய குறுஞ்செய்தி வாசகங்களை வாசித்தவர்களுக்கும் அவற்றில் வெளிப்பட்ட ஆத்திரத்தைக் கவனித்தவர்களுக்கும் நான் சொல்வதன் அர்த்தம் புரியக்கூடும்.

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் இயல்பானவை என்பதும் திறமையான வீரர்களைக் கொண்ட அணி வெற்றி பெறும் என்பதும் அடிப்படையான உண்மை. ஆனால் இந்தியர்களைப் பொருத்தவரை இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று கருதுவது வாடிக்கையாக ஆகிவிட்டது; ஆகிவிட்டது என்பதைவிட ஆக்கப்பட்டுவிட்டது. ஆக்குவதில் ஊடகங்களின் பங்கு முதன்மையானது. அதிலும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின் பங்கு முன்னோடியானது. ஆங்கிலச் செய்தி அலை வரிசைகளின் பின்னணியில் கிரிக்கெட் விளையாட்டை நேரடி ஒளிபரப்பாக வழங்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வியாபார நோக்கமும் லாப வெறியும் இருக்கின்றன என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. இந்திய அணி தோற்றுத் திரும்பிய பின்னும் உலகக் கோப்பையை வாங்கப்போகும் அணியைப் பற்றி விவாதிப்பதைப் போல அணியை மறுசீரமைப்புச் செய்வதைப் பற்றி ஆங்கில ஊடகங்களும் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி அனுப்புபவர்களும் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அதில் செயல்படும் மனோபாவம் என்ன என்பது தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டியதுதானே?

ஒரு நாளில் ஒன்பது மணி நேரம் நடக்கும் ஒரு விளையாட்டை நேரடியாக ஒளிபரப்புவதும் அவ்வொளிபரப்பிற்கெனச் சிறப்பு வர்ணனையாளர்களையும் மந்திரா பேடி உள்ளிட்ட விளையாட்டு நிபுணர்களையும் நியமித்துக் கூடுதல் இன்னிங்ஸாகப் பேசிக்கொண்டே இருப்பதும் ஒருவித ஆக்கம் என்றால், செய்தி அலைவரிசைகள் ஓட விடும் உருள் செய்திகள் (sநீக்ஷீஷீறீறீ ஸீமீஷ்s) இன்னொரு வகையான ஆக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி ஆக்குவது ஆபத்தானது என்பதை ஊடகங்களில் செயல்படுபவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தேசப் பற்று என்பதாகவும் தேசிய உணர்வை உண்டாக்குதல் என்பதாகவும் முன்னிறுத்தப்படும் செயல்களில்தான் வெறியூட்டப்படும் பின்னணிகளும் மறைந்஢து கிடக்கின்றன.

செய்தி அலைவரிசைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் செய்திகளை உருட்டிக்கொண்டும் மின்னல் வெளிச்சம் எனத் தலைப்புச் செய்திகளைத் தந்துகொண்டும் இருக்கும் ஆங்கில அலைவரிசைகளுடன் இணைந்து செல்போனின் குறுஞ்செய்திகள் மைய நீரோட்டத்தின் பொதுப் புத்தியைத் தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. இத்தகவமைப்பு பல நேரங்களில் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கெதிராகவே இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இட ஒதுக்கீடு என்பதை மையப்படுத்தி ஆங்கிலத் தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகள் நடத்தும் விவாதங்கள், வாக்கெடுப்புகள், விளக்கங்கள் என எல்லாவற்றிற்கும் செல்போனிலிருந்து வரும் குரல்களும் குறுஞ்செய்திகளும்தான் ஆதாரங்கள். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற தகைசால் நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு அளிக்கப்பட இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பெரும் கலவரங்களும் அசம்பாவிதங்களும் நடக்கின்றன என்பதாகக் காட்ட விரும்பும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின் விருப்பம் பெரும்பான்மை இந்தியர்களின் கருத்து அல்ல. ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் யோசித்து, ஆங்கிலேயர்களாகவும் ஆங்கிலேயர்களுக்காகவும் வாழ விரும்பும் மிகச் சிறிய எண்ணிக்கை கொண்ட இந்தியர்களின் மனோபாவம் அது.

ஆங்கிலத்தில் நடந்துகொண்டிருக்கும் நீதிமன்ற விவாதங்கள் மிகுந்த கண்ணியத்தோடு நடந்துகொண்டிருக்கிறது; ஏனென்றால் ஆங்கிலம் கனவான்களின் மொழி. அம்மொழியின் இயல்பே கண்ணியத்துடனும் நாகரிகத்துடனும் நடந்துகொள்ளும்படி தூண்டுவதுதான்; அதற்கு மாறாகத் தமிழ் போன்ற மாநில மொழிகளில் பேசத் தொடங்கினால், தரமும் கண்ணியமும் நாகரிகமும் காணாமல் போய்விடும். இப்படியொரு நம்பிக்கை தமிழ்/இந்திய நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பிரிவினருக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒருவர்தான் இந்தக் குறுஞ்செய்தியை உருவாக்கியிருக்க வேண்டும். அடிப்படையில் தமிழ் விரோதிகளாக இருக்கும் அந்தப் பிரிவினர் தங்கள் கருத்துகளை, எதிர்ப்புணர்வை நேரடியாகச் சொல்லும் தைரியமும் இல்லாதவர்கள். தெருவில் இறங்கிப் போராடும் ஆற்றல் அற்றவர்கள். ஆனால் மூளை மட்டும் வீங்கிக் கிடப்பதாக நம்புபவர்கள்.

அங்கதமும் கேலியும் உடல் வலிமை அற்றவர்களின் வலிமையான ஆயுதமாக இருந்தன. இப்போது அவர்கள் அதைச் சாணையில் தீட்டிக் குறுஞ்செய்திகளாகப் பயன்படுத்துகிறார்கள். ஆக, நடப்பது விளையாட்டு அல்ல; யுத்தம்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google