"ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்த் துறை பற்றி நான் என்ன நினைக்கிறேனென்றால்,
பல தசாப்தங்களாக லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். அவர்கள்
கோயில்களிலும் இன்னும் கலை, கலாச்சாரத் துறைகளிலும் ஆர்வம் காட்டி நல் வாழ்க்கை
நடத்துகிறார்கள். ஆனால், தமிழ்ப் புலமைக்கு என்று பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
கிக்ஷ்tமீநீ கலாச்சாரம் பற்றி அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். ஸ்பானியர்கள்
எழுத்தறிவு உள்ள எல்லோரையும் கொன்றுபோட்டதுடன் அஸ்டெக் கலாச்சாரம் முற்றிலும்
அழிந்துவிட்டது. கனடாத் தமிழர்கள் தங்கள் மொழிக்கு ஆதரவுதரத் தவறினால் தமிழர்களின்
கலாச்சாரம் கனடாவில் அழிந்துவிடும். தமிழைக் கனடியக் கலாச் சாரத்துக்குள், போதிய
மரியாதையும் கனதியும் கொடுத்து நுழைக்க வேண்டும். அப்பொழுதுதான் அழிவிலிருந்து
தப்பலாம். . . ." (பக். 115)
முத்துலிங்கத்தின் கேள்வி ஒன்றுக்குப் பேராசிரியர் ஜோர்ஜ் எல். ஹார்ட் அளித்த
பதிலின் பகுதி இது. உலகெங்கும் சிதறிப் பிழைக்கும் புலம்பெயர்ந்த இலங்கைத்
தமிழர்கள் கடந்த இருப தாண்டுகளில் இதற்கு முன் எப்போதும் இல்லாதபடி செழுமையான
படைப்பிலக்கியத்தை உருவாக்கியிருக்கின்றனர். இனப் படுகொலைக்குப் பத்தாண்டுகள்
கழித்து எழுத்துக்கு மீண்டு வரும் யூதக் கவி ரோஸே அவுஸ்லாண்டர் எழுதுவதுபோல
'மொழியையே தாய் நிலமாக' ஒரு மாய வலைபோல விரித்துக்கொண்டிருக்கிறது வீடிழந்த
தமிழினம்.
இதன் ஒரு பகுதி, ஏன், பெரும் பகுதி, புகலிட வாழ்க்கையின் வாழ்வியல் சார்ந்த
பண்பாட்டு அதிர்வுகளை ஊடுபாவாக உள்வாங்கியும் நுட்பமாகத் தன்னிலைப்படுத்தியும்
எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறது. ஷோபாசக்தி, கலா மோகன், கருணா கரமூர்த்தி,
முத்துலிங்கம், திருமாவளவன், சேரன் போன்றோரின் எழுத்துக்கள் இதன் சாட்சி.
ஐரோப்பாவில் நான் நேரடியாக கண்டவரையில் கலை, இலக்கியம் சார்ந்த பெரிய ஆளுமைகளின்
உரைகளைக் கேட்கவோ நிகழ்வுகளைக் காணவோ புலம் பெயர்ந்த நண்பர்கள், அவர்களில்
கலைஞர்களும் எழுத்தாளர்களுமே கூட, பெரிய ஆர்வம் காட்டாதது எனக்கு
வியப்பளித்திருக்கிறது. புகலிட வாழ்களத்தின் அலையாடலில் வேர் பிடிக்கவும் குழு
அடையாளத்தைத் தக்கவைக்கவுமே நேரமில்லை என்று அவர்கள் சொல்லலாம். இந்தப்
பின்னணியில்தான் முத்துலிங்கத்தின் அலைச்சல்களும் தேடலும் வியப்பும் கூற்றுகளும்
சேர்ந்து புலம்பெயர்ந்த தமிழரின் ஒரு புதிய முகத்தை எனக்குக் காட்டுகின்றன. பாரதி
சொன்னது போல் செல்வங்கள் கொண்டு சேர்த்திருக்கிறார் என்று சொன்னாலும் மிகையல்ல.
"எழுத்தாளர்களை நான் தேடிப்போனதும் இதனாலேயே. வியக்கவைக்கும் ஏதோ ஓர் அம்சம்
அவர்களிடம் இருந்தது. சமிக்ஞை விளக்குச் சந்தியில் நிற்கும் குழந்தை போல, நான்
அவர்களால் கவரப்பட்டேன். அவர்களுடனான சந்திப்புகள் வெகு சுவாரஸ்யமாக இருந்தன.
அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் நம் மனத்தைச்
சட்டெனத் தொடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பும் என்னைப் புது மனிதனாக
மாற்றியது. . . ." (பக். 12)
தன்னனுபவம் சார்ந்த எந்தத் தேடலுக்கும் கலை வெளிப்பாட்டுக்கும் ஓர் அலாதியான
ஆகிருதி இருக்கும். அது இந்தச் செவ்விகளில் இருக்கிறது. ஒவ்வொரு பேட்டியையும்
மிகுந்த அலைச்சல்பட்டு இடைவிடாமல் முயன்று எடுத்திருக்கிறார். ஒரு சின்ன உதாரணம்:
"இந்த நேர்காணல் ஒரு நூதனமான முறையில், ஆறு மாத கால இடை வெளியில் நடந்தேறியது.
இவருக்கு மூன்று முகவரிகள் இருந்தன. லண்டன், பாரிஸ், நியூயோர்க் என்று. அத்துடன்
அவருக்கு ஈமெயில், தொலைநகல் முதலிய தொடர்புகள் இல்லை; அவற்றில் அப்படியொரு
வெறுப்பு. நல்ல காலமாக நியூயோர்க்கில் இருந்த அவருடைய பதிப்பக ஏஜண்டுக்கு
மின்னஞ்சல் இருந்தது. டேவிட் செடாரிஸோ ஐரோப்பாவில் புத்தக வாசிப்புச் சுற்றுலாவில்
ஓர் இடத்திலும் நிற்காமல் நகர்ந்த படியே இருந்தார். ஆகவே, நேர்காணல் என்பது
டெலிபோனிலும் அவருடைய ஏஜண்ட் வழியாக மின்னஞ்சலிலும் கடிதம் மூலமாகவும் நடந்தது.
கடிதம் என்றால் மூன்று நகல்கள் எடுத்து மூன்று முகவரிகளுக்கும் அனுப்ப வேண்டும்.
அவருடைய பதில் ரொறொன் ரோவுக்கு வரும். இப்படியே ஒருவாறாக நேர்காணல் ஒப்பேறியது. . .
." (பக். 47)
தான் ஆங்கிலத்தில் நடத்திய சம்பாஷணைகளை சுவாரஸ்யம் குன்றாமல்
மொழிமாற்றியிருக்கிறார். அந்தப் பேட்டி எடுத்தபோது நாம் கூடவே இருப்பதுபோல ஓர்
உணர்வு ஏற்படுகிற அனுபவத்தைச் சித்திக்கிற பாய்ச்சலுடன் கூடிய மொழிநடை அவருக்கு
வாய்த்திருக்கிறது. அவர் வியக்கும்போது நாமும் வியப்பின் எல்லைக்குப் போகிறோம்.
உணர்ந்து, பின்னால் நினைத்து அவர் உள்ளுக்குள் சிரிக்கும் ஒரு கணத்தின் இரண்டு
கணங்களும் நமக்கு உயிர்ப்புடன் கிடைக்கின்றன. என்ன ஒன்று, அவர் படித்த,
குறிப்பிடுகிற எல்லாப் புத்தகங்களையும் நாம் படித்திராதபடியே சில இடங்களை நாம்
அப்படியே படித்துக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது.
செய்திகள், தகவல்கள் என்ற தளத்துக்குள் இறங்காமல் உணர்வும் உயிர்ப்புமாக அனுபவம்
சார்ந்து பல்வேறு உலகங்களைத் திறந்து நம்மை அழைத்துப் போகிறார். ஒரு புனைகதையின்
சுவாரஸ்யத்தோடு சிறு சிறு விவரங்களால் அடர்த்திகூட்டி எழுப்பும் சித்திரம்போல
ஒவ்வொரு எழுத்தாளரின் உருவம், வாழ்க்கை, அரசியல், படைப்புலகம், அவை சார்ந்த
அவர்களது கருத்துகள் என்று சரசரவென்று பரவுகிறது புத்தகம். அவர் பேட்டி எடுக்கும்
சூழல் குறித்த விசாரணைகள் விவரணப் படம்போலப் பரவுவதும் விவரிக்கும் சொற்கள்
கொண்டுதரும் உடனடித் தன்மையும் நம்மை அந்த இடத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
முத்துலிங்கம், புனைவிலக்கியம் கட்டும் கலையிலும் ஈடுபடுபவராதலால் இது
சாத்தியமாகிறது போலும் (பக். 138, 140, 141, 152, 66, 67). ஒரு சூழலில் நடக்கும்
விவரம் பதிவாகும் போதே இணைநிகழ்வாக முத்துலிங்கத்தின் கற்பனை, குளம்பெடுத்துப்
பாய்கிறது. ஒரு களத்திலிருந்து சில கணங்கள் ஒரு மாய உலகத்தில் நுழைந்து அடுத்த
களத்துக்கு நகரும் போது பேட்டி நடைபெற்ற கால தேசவர்த்தமானங்கள், அதன் முற்றான
ஓசைகள், வண்ணங்கள் வடிவத்துடன் பதிவாகின்றன (பக். 221).
பேட்டிகளைக் கட்டமைப்பதிலோ பேச்சின் போக்கை வடிவமைப் பதிலோ எந்த ஒரு சீரான வடிவத்தை
நோக்கியோ அர்த்தம் சார்ந்த ஒழுங்குகளை உத்தேசம் கொண்டோ பிரதிகளைக்
கட்டாயப்படுத்தாமல் ஓர் இயல்புத்தன்மையை முத்துலிங்கம் புத்தகம் பூராவும்
வாரியிறைத்திருக்கிறார். ஏதோ ஒரு நதியோட்டத்தில் கரைக் கலாச்சாரத்தைக்
கண்டுணர்ந்தபடி நாம் மிதந்துபோகிற மாதிரி அனுபவம் கிடைக்கிறது. இது கண் கட்டு
வித்தைதான். வடிவ நேர்த்தியிலும் அமைப்பிலும் இயல்பெனத் தோன்றும்படி இது பொதிந்து
கிடக்கிறது. மார்கிரட் அட்வுடின் மிக முக்கியமான படைப்பு றிமீஸீமீறீஷீஜீவீணீபீ.
கிரேக்கத் தொன்மத்தில் ஒரு பாத்திரத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து மறுவாசிப்பு
செய்யும் நாவல். கனடிய இலக்கியத்துக்கு நோபல் பரிசு ஏன் கிடைக்கவில்லை என்ற
கேள்வியைப் பொதிவதற்கான சட்டமாகக் கிரேக்கத் தொன்மத்தின் பிறிதொரு சம்பவத்தோடு
அட்வுடின் நேர்காணலைத் தொடங்குகிறார் முத்துலிங்கம். கிரேக்கத் தொன்மங்களை
அறிந்திராத வாசகருக்கு இந்தப் பகுதியைப் படித்துவிட்டு றிமீஸீமீறீஷீஜீவீணீபீ
குறித்த முத்துலிங்கம்-அட்வுட் சம்பாஷணைக்குள்ளே நுழைவது நிச்சயம் ரஸமாக இருக்கும்.
அட்வுட்டின் எழுத்தோடு கிரேக்கத் தொன்மங்களையும் அறியும் ஆர்வமும் நிச்சயம்
ஏற்படும்.
எழுத்தாளர்களைத் தவிர, ஓர் ஓட்டப் பந்தய வீராங்கனை, நாடக இயக்குநர், பறவையியலாளர்
இவர்களின் உலகமும் பேட்டிகளின் வழிகிடைக்கிறது. பாலியல் கதை எழுதும் மேரி ஆன்
பேட்டியும் ஷேக்ஸ்பியரின் சமகால எழுத்தாளர் கேரி பற்றியும் அவரது படைப்புலகம்
குறித்தும் முத்துலிங்கம் முன்வைக்கும் கருத்துக்கள், அவை சொல்லப்படும் த்வனி
ஆகியவை பெண்ணுலகம், ஆண்-பெண் சமத்துவம் குறித்த அவருடைய நிலைப்பாட்டைத்
தெளிவுப்படுத்துகின்றன.
ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரைப் பற்றி, "அவர் ரொம்பப் பெரிய எழுத்தாளர்" என்று ஒரு
குழந்தைபோல வெள்ளந்தியாகச் சொல்வார். இன்னொருவரைப் பற்றி ஆழமான விவரங்களுக்குள்
நம்மைக் கொண்டுபோவார்.
மெல்லியதும் அழுத்தமானதுமான நகைச்சுவையுணர்வு விவரங்களிலும் பேட்டிக் கேள்விகளிலும்
விரவிக்கிடக்கிறது (பக். 199, 155). போகிற போக்கில் இலகுவாகச் சொல்கிற மாதிரி
படைப்பாளிகளின் எழுத்தின் நுட்பமான அம்சங்களைச் சொல்லிக் கொண்டு போவார் (பக். 184,
34, 64). இவர் பேட்டி கண்டுள்ளவர்களில் மூன்று எழுத்தாளர்களைப் படித்திருக்கிறேன்.
ஜிஷீதீவீணீs கீஷீறீயீயீ பற்றி இதைவிடச் செறிவாக, சிக்கனமாகச் சொல்ல முடியுமா என்று
யோசிக்கிறேன். முடியாது என்று ஒப்புக்கொள்வதில் எனக்குக் கூச்சமில்லை. அட்வுடின்
எழுத்தில் எனக்கு இருக்கும் கவர்ச்சி பற்றி விவரப்படுத்த முயன்றபோதெல்லாம்
தோற்றிருக்கிறேன். "நட்டு நட்டு வைத்ததுபோல . . ." என்று முத்துலிங்கம் எழுதும்போது
"அட. . . ஆமாம் இல்ல . . ." என்று உரக்கச் சொல்லாமலிருக்க இயலவில்லை. சம்பாஷணைகளில்
சரேல் சரேலென்று தமிழிலக்கியப் பரப்பிலிருந்து உதாரணங்களைப் பேட்டிக் களத்தில்
உதறுவதும் "அதில் சர்மா காட்டுவது ஒன்றும் அசலான இந்தியா இல்லை யாக்கும் . . ."
என்று அழுத்தமாகச் சொல்வதும் "இந்தியாவின் வறுமையைப் பார்க்கவா வருவீர்கள்?" என்று
பொருமுவதுமாக, தன்னுடைய மொழிப்பரப்பின், வேர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும்
விதம், முத்துலிங்கத்தின் ஆளுமையும்கூட நேர்காணல்கள் வழி அவர் கொண்டுசேர்க்கும்
ஆளுமைகளோடு ஒப்பிடக்கூடிய சுவாரஸ்யம் கொண்டதாகவே இருக்கிறது.
(சென்னைப் புத்தகக் காட்சியில் காலச்சுவடு
விற்பனை அரங்கில்
அ. முத்துலிங்கத்தின்
"வியத்தலும் இலமே" நூலை வெளியிட்டு
ப்ரஸன்னா ராமஸ்வாமி ஆற்றிய
உரையின் விரிவான வடிவம்)
உள்ளடக்கம்