கடிதங்கள்
கண்ணன் எழுதியிருந்த 'ஞாநியின் அநீதியான ஒப்பீடு' படித்தேன். சமூகத்தில் மிகப்
பிரபலமாக இருப்பவர்களை விமர்சித்து எழுதினால்தான் தங்கள் பெயருக்கு நல்ல விளம்பரம்
கிடைக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கு முன்னோடிதான் ஞாநி. எழுத்தாளன்
என்பவன் பொதுவானவன். ஆனால், ஞாநி அரசியல் கட்சி நடத்துபவர்போல் ஆகிவிட்டார். அவரது
எழுத்தில் பழிவாங்கும் உள்நோக்கம் தொடர்ந்ததால் நான் 'ஆனந்த விகடன்' படிப்பதையே
விட்டுவிட்டேன். தாமதமாக இருந்தாலும், ஞாநியின் குறைபாட்டை நீங்களாவது
சுட்டிக்காட்டினீர்களே, அதுவரை மகிழ்ச்சி.
ப. ராமகிருஷ்ணன்
காயக்காடு
இந்த இதழில் 'தமிழ்ப் படங்களில் சாதி: கறை படிந்த நீதி' என்ற கட்டுரையில்
"மனிதர்களே நாம் உங்களை ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள்
ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும்,
கோத்திரங்களாகவும் அமைத்தோம் (திருமறை 49: 13) என்னும் நபிகளின் வாசகத் தோடு" என்று
எழுதியுள்ளீர்கள். நபிகளின் வாசகம் என்பது தவறு. அந்த வாசகம் அல் குர்ஆனின்
வசனமாகும். நபிகளின் வாசகம் வேறு, குர்ஆனின் வசனம் வேறு. குர்ஆனின் வசனம் என்றால்
அல்லாஹ்வால் அருளப்பட்டது. குர்ஆனுக்கு மற்ற பெயர்தான் திருமறை.
ஜெ. முஹமது இப்ராஹீம் மிஸ்பாஹி
மதுரை
"மேலும் சில நாட்டுடைமையாக்கம்..." கட்டுரை பற்றி: இலக்கியத்தை உயிர் மூச்சாக
நினைக்கும் / நினைத்த அறிஞர்களின் வறுமையில் வாடும் வாரிசுகளுக்குக் கலைஞர்
கருணாநிதி செய்த உதவி பெரிதுதான். உயிரோடு இருக்கும், பசியில் வாடும்
படைப்பாளிகளுக்கும் கலைஞர் இன்னும் செய்ய வேண்டியது ஏராளம்.
ஜே.எஸ். அனார்கலி
சென்னை - 37
ஏப்ரல் இதழில் அ. ராமசாமியின் "அழிபடும் அந்தரங்கம்" (ஊடக வெளி) படித்தேன். அவரது
கருத்துகள் சிறப்பானவை. இன்னொரு மனிதனின் அந்தரங்கம் எல்லா மனிதர்களுக்கும்
உவப்பானதுதான். மனிதர்களின் இந்தப் பலகீனத்தை ஊடகங்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு
லாபம் சம்பாதிக்கின்றன.
எத்தகைய நாகரிகமான மனிதனாக இருந்தாலும், அவனிடமும் ஒரு பச்சை மனம் இருக்கவே
செய்கிறது. பெரிய பெரிய பதவி வகிக்கும், உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்கள்கூட 'சரோஜா
தேவி' புத்தகங்கள் படிப்பது இதனால்தான். என்ன, சரோஜாதேவி புத்தகத்தைப் பகிரங்கமாகக்
கையில் வைத்திருக்க முடியாது. ஜூ.வி., நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர்
போன்றவைகளைச் சுருட்டிக் கையில் வைத்துக்கொள்ளலாம், வித்தியாசம் அவ்வளவே.
அசந்தர்ப்பமாக நடைபெறும் சில 'நெறிபிறழ்வு'க் கதைகளுக்கு ஆபாசப் படத்தோடு இவை
வியாக்கியானம் எழுதுகின்றன.
ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பென்றால், பத்திரிகைகள் பெரும்பாலும் கொலை, கொள்ளைச்
செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தன. வாசகர்களின் ஆர்வமும் அதில்தான் இருந்தது.
அப்போதும் இது போன்ற 'கன்னட பிரசாத்'கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களும்தான்
போலீசிடம் பிடிபட்டார்கள். அது போன்ற விஷயங்களை ஊதிப் பெருக்குவதில் அப்போது
ஊடகங்களுக்கு ஏதோ ஒரு சின்னத் தயக்கம் இருந்ததுபோலத் தெரிந்தது (ஆளவந்தார் கொலை
வழக்கு, விஷ ஊசி கொலை வழக்கு, ஜெயப்பிரகாஷ் 9 பேரைக் கொன்ற கொலை வழக்கு,
இவையெல்லாம் அப்போதைய மாஸ்டர்பீஸ்கள்) ஆட்டோ சங்கரின் கைதுக்குப் பிறகுதான்
ஊடகங்களின் போக்கும் மாறியது, வாசகர்களின் ரசனையும் மாறியது என்பது எனது கணிப்பு.
இப்போதெல்லாம் எந்த வாசகனும் கொலை, கொள்ளை, விபத்து போன்ற செய்திகளை ஒரு மேலோட்டப்
பார்வையுடன் ஒதுக்கிவிடுகிறான். "இவன்களுக்கு இதைவிட்டால் வேறு செய்தியே
கிடையாதுப்பா" என்று அலுத்துக்கொள்பவர்களும் உண்டு. இதே வாசகன் சினிமா நடிகர்களின்
அந்தரங்க விஷயங்கள், பாலியல் ரீதியான கிசுகிசுக்கள், பெரிய மனிதர்களின் உல்லாசக்
களியாட்டங்கள் போன்றவைகளை - அவை புனைவு என்று தெரிந்த பின்னும் - ஆர்வத்தோடு
படிக்கிறான்.
வெள்ளி விழா கொண்டாடும் ஜூ.வி. போன்ற இதழ்கள் எத்தனை உயர்ந்த 'பத்திரிகா தர்மம்'
பற்றிப் பேசினாலும் இதை ஒரு தொண்டாகவே செய்கின்றன. திண்டிவனம் அருகே மிகப் பெரிய
ஒரு வெடி விபத்து நடந்து, தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க, வழக்கமாக இது
போன்ற செய்திகளை 'கவர் ஸ்டோ ரி'யாகப் போட்டு செய்திகளைத் திரட்டும் ஜூ.வி., அதன்
ஏப்ரல் 15ஆம் தேதி இதழில் அந்த விபத்து குறித்த செய்தியைக் கடைசிக்குத்
தள்ளிவிட்டு, முன் அட்டையில் போட்ட செய்தி: "கட்டாந்தரையில் கண்ணயர்ந்த ரஜினி".
அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ் பிரயோகத்தைக் கண்டித்து எழுதும் ஜூ.வி. போன்ற
இதழ்கள் இது போன்ற 'தார்மீக வழுக்கல்'களுக்கு என்ன சமாதானம் கூறும்? 'சமூகத்தில்
நடப்பதைத்தான் நாங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம்' என்ற வழக்கமான நொண்டிச்
சமாதானத்தைவிட வாசகர்களின் தேர்ந்தெடுக்கும் மனோபாவமும் நல்லவைகளை இனங்காணும் கூரிய
மதிநுட்பமுமே இது போன்ற அசிங்கங்களைத் தடுத்து நிறுத்தும்.
கே.எஸ். முகம்மத் ஷுஐப்
தூத்துக்குடி
சென்ற இதழில் வெளியான மு. பிரசாதின் கடிதம் அயர்ச்சியூட்டியது.
பதிலிறுக்காதிருந்தால் கடிதம் கக்கும் காழ்ப்புக்கும் வன்முறைக்கும்
படிந்துபோவதாகக் கொள்ளப்படக்கூடும் என்பதால் மீண்டும், ஆனால், இறுதியான எதிர்வினை.
அர்த்தம் சார்ந்ததல்ல கலை; குறிப்பாக ஒற்றைப் பரிமாண அர்த்தம் சார்ந்ததல்ல.
விவரப்படுத்தலும் எடுத்துரைத்தலும் கலையல்ல. எஸ்.ஆர்.டி.யின் 'மல்லாரி' கேட்கும்
ஆனந்த் அதன் மற்ற களங்களைத் தேடிப் போவதும் கோர்வையின் இறுதியில் அவர் நினைவில்
ஒலியாகவும் காட்சியாகவும் சஞ்சயின் நினைவில் மல்லாரி விரிவதுவரை இறுக்கமான
கட்டமைப்புக்குள் படம் நகர்கிறது. அவற்றுள் மாளவிகாவின் மல்லாரி நடனமும் ஒன்று.
மாளவிகாவைப் பார்க்கும் ஆனந்த் யீக்ஷீணீனீமீஇனுள் இருப்பார். அது ஒரு ஷ்வீபீமீ
sலீஷீt. அகிலாவிடம் சினேகத்துடன் ஒலிநாடா தரும் ஆனந்த் என்னும் sலீஷீt மாறி அகிலா
நடனமாடும் அவரது கற்பனையாக னீவீஜ் ஆகத் திரை முழுவதும் பரவும். மீண்டும் உறுதியாகச்
சொல்வேன்: படத்தில் நீங்கள் நினைக்கும் உள்ளடக்கமும் வடிவமும்தான் சரியென்றால்
உங்கள் படத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் அதை நான் அப்படி எடுக்க
வேண்டும் என்ற வன்முறையை என்மீது செலுத்த வேண்டாம்.
நேரிலும் தொலைபேசியிலும் கடிதத்திலும் மின்னஞ்சலிலும் விவரமாகக் கருத்துக்
கூறியவர்களில் இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க இரண்டு இயக்குநர்களும் சினிமா
வல்லுநர்களும் எழுத்தாளர்களும் பங்குபெறும் உலகளாவிய
FIFRESI அமைப்பைச்
சார்ந்த ஓர் எழுத்தாளரும் உண்டு.
இந்த இசையினின்றும் கலாச்சாரத்தினின்றும் அந்நியப்பட்ட ஐரோப்பிய
FIFRESI எழுத்தாளர் (இருபதாண்டுகளாக உலக சினிமா பற்றி எழுதுபவர்; வானொலியிலும்
தொலைக்காட்சியிலும் சினிமா விமர்சகர்) எழுதுகிறார்:
"முதல் அமர்வில் படம் என்னை ஓர் உணர்வு அலைக்குள் கொண்டு போயிற்று - காட்சிகளும்
இசையும். மீண்டும் இருமுறை பார்க்க, படத்தில் பொதிந்துள்ள நுட்பமான கதையும்
(narrative of the discourse) அதனூடாக நகரும்
பாத்திரங்களும் தம்மை வெளிப்படுத்தி அனுபவத்தை முழுமையாக்கின. குறிப்பாக
evocative இல் படத்தை நகர்த்தியிருப்பதும் விளக்கங்கள் தராததும் ஒரு
பார்வையாளர் என்ற அளவில் என் அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் நிறைவுள்ளதாகவும்
மகிழ்ச்சி கூடியதாகவும் செய்தது."
இவர்களெல்லாம் படம் மட்டும்தான் பார்த்தார்கள். நான் எந்தக் காகிதமும் எழுதித்
தரவில்லை. ஐரோப்பாவில் பன்னாட்டுத் திரைவிழாக்கள் படத்திற்கு
அழைப்புவிடுத்திருக்கின்றன. அவர்களும் படம் பார்த்துத்தான்
தேர்வுசெய்திருக்கிறார்கள். இரண்டு கலாச்சார நிறுவனங்களும் கலைஞர்களும் படம்
செய்துதரச் சொல்லிக் கேட்கிறார்கள். படத்தை மட்டும் பார்த்த பின்னர் மட்டுமே.
மேலதிகமாக, என் நண்பர்கள் சிலரும் முதல் கட்டுரைக்கு எதிர்வினையாற்ற
விரும்பினார்கள். நானே எழுதுவதுதான் நியாயம் என்று நான் நினைத்தேன்!
ப்ரஸன்னா ராமஸ்வாமி
சென்னை
"பெரியார் திரைப்படத்திற்கு நிதி உதவி என்ற பெயரில் தமிழக அரசு கொடுத்துள்ள 95
லட்சத்திற்கு இலவசம் என்று இல்லாமல் ..." என்று எஸ்.ஆர். சந்திரன் கூறுகிறார்.
கடந்த முக்கால் நூற்றாண்டாக மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்த மாமேதை தந்தை
பெரியாரின் திரைப்படம் தயாராகிறது என்று தெரிந்த உடனே தமிழக அரசு, தனது கொள்கை
நிலைப்பாட்டுடனும் நன்றி அறிவித்தலுக்காகவும் தனது சொத்து சுகம் அனைத்தும்
மக்களுக்காகவே வாரி வழங்கிய அய்யாவின் அரும்பணிக்காக அவரது வாழ்நாள் அடையாளமாகிய 95
வயதைக் குறித்துத் தனது பங்களிப்பிற்கான மேற்கண்ட தொகையை வழங்கித் தனது 'நன்றி'யைத்
தெரிவித்துள்ளது. இந்த இடத்தில் இலவசத்தைப் போட்டுக்கொள்ளாமல், நன்றியை நன்கொடை
என்றே எழுத வேண்டும். அவர் குறிக்கும் 'இலவசம்' என்பது இவ்விடத்திற்குப்
பொருந்தாச்சொல்.
'நாட்டுடைமை' சம்பந்தமாக, "நூல்களின் காப்புரிமையைத் தனியார் வசம் விட்டுவிடாமல்
பொதுவாக ஆக்கி அதன் மூலம் அடக்க விலைக்கோ அதிக விலைக்கோ யாரும் அச்சடித்து விற்க
முடியும்..." என்று அவரது வரிகளிலேயே பெரியாரின் நூல்களை நாட்டுடமை ஆக்கக் கூடாததன்
அவசியத்தை, ஆக்குவதன் ஆபத்தை உணர வேண்டும்.
தனியார் வசம் பற்றிப் பெரியாரைப் பேசாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள் இங்கே?
அய்யாவைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களே அதிகம் எனும்போது, அவர்கள் கையில் நூல்களின்
நாட்டுடைமையாக்கத்தைக் கொடுத்தால் பெரியார் கடைசியில் 'கடவுள் உண்டு' என்ற
கொள்கையிலேயே முடிவு பெறுவார்.
ஓர் அரசு ஒரு நெறியைக் காப்பாற்றுவது குறித்து அரசு உதவியுடன் பெரியார் திரைப்படம்
எடுப்பதைப் பற்றிக் கேட்டுள்ளார். நெறி என்பது வேறு, உதவி என்பது வேறு. இரண்டையும்
போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. குப்பன், சுப்பன் எல்லாம் சேர்த்துக் கொடுத்த
காசில்தான் படம் தயாராகிறது. ஆனால் அவரது நெறியை அவரும் அவருக்குப் பின் அவரது
இயக்கமும்தான் சொல்ல வேண்டும். ஆளாளுக்குச் சொன்னால் கூத்தாடிக்
கதையாகிப்போய்விடும்.
அடுத்து அ.தி.மு.க. கொடுத்த 5 லட்சம். பெரியார் நிறுவனம் ஒர் அறக் கட்டளையாகச்
செயல்படுகிறது. அ.தி.மு.க. என்ன, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பணம் கொடுத்தாலும்
வாங்கிக்கொள்வோம். உ.பி.யில் மாயாவதி கொடுத்தாரே பத்து லட்சம், பா.ஜ.க.வோடு
கூட்டணியிலிருந்தபோதுதானே கொடுக்கப்பட்டது?
69 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட வரைவைத் தயாரித்த, ஆசிரியர் வீர மணியின் ஆலோசனைப்படி
ஒரு சட்டத்தையே இயற்றி அதனை 31சி பிரிவில் பாதுகாப்பாக வைக்க உதவிய அம்மையாருக்கு
இயக்கம் 'சமூக நீதி காத்த வீராங்கனை' பட்டம் கொடுத்து நன்றியை
வெளிப்படுத்திக்கொண்டது உங்கள் கண்களுக்குச் சரணாகதியாகத் தோன்றுகிறதுபோலும்.
பொருளை எந்த இடத்தில் தொலைத்தோமோ அவ்விடத்தில் தேடுவதே வழி என்பதாகும் பெரியாரியல்.
சினிமா மக்களைப் பாழ்படுத்துகிறது என்பதற்காக சினிமாவை மாற்றுக் கருவியாய்,
பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தக் கூடாது என்கிறாரா சந்திரன்?
நீங்கள் கூறும் நாட்டுடைமையாக்கம் என்பது படைப்புச் சூழலிலும் வாழ்வியல் நெறியிலும்
அடிப்படையில் வேற்றுமைகொள்கிறது. சும்மா சில லட்சங்களை இலவசமாகவோ நன்கொடையாகவோ
படைப்பாளிக்கு வழங்கிவிட்டு அதோடு கணக்கு மூடும் அறுந்தசொல் அல்ல பெரியாரியல்.
வரலாற்றைத் திரித்து எழுதும் கருங்காலிக் கூட்டம் இந்த அரசியல் கூட்டத்தில்
நிறமற்றுக் கலந்திருப்பதால்தான் பெரியார் காப்பாற்றப்பட வேண்டும். வெறும் சிலையையே
விட்டுவைக்க இந்தக் காலிகள் கைவரிசை காட்டும்போது, அவரது தத்துவத்தை அழிக்க எத்தனை
புல்லுருவிகள் காத்துக்கொண்டிருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
பாலமுருகன்
திண்டுக்கல்
இரண்டாம் உலகப் போரில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள்
ஆற்று நீரைப் பங்கிட்டுக்கொள்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் பங்களாதேஷும்
சிந்து, பிரம்மபுத்திரா ஆறுகளின் நீரைப் பங்கிட்டுக்கொள்கின்றன. ஆனால் இந்திய
மாநிலங்கள் தீபகற்பத்தில் ஓடும் நதிகளுக்கு ஏன் சண்டை போட்டுக்கொள்கின்றன?
கே. கணேசன்
கோயம்புத்தூர் - 27