Google   www kalachuvadu.com

 

கலை

திபெத்தின் முகங்கள்

வாஸந்தி

பெங்களூருக்குப் பொருத்தமில்லாத புழுக்கமான வெப்பம் மிகுந்த மார்ச் மாதத்தின் ஒரு மாலைப் பொழுது. ரேஸ் கோர்ஸ் சாலை போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது. அன்று குதிரைப் பந்தய தினம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாத ஜனக் கும்பல். ஆசை, பேராசை என்ற உந்துசக்திகள் மனிதனுக்குப் பொதுவானவை என்பதால். பந்தய மைதானத்துக்கு நேர் எதிராக இருந்த ஒரு சின்னக் கட்டிடத்தின் முகப்பில் ஏராளமான இளைஞர் கூட்டம். அவர்களிடையே இரண்டு மூன்று புத்த பிக்குகள். மங்கோலிய முகங்கள். ஆசையைத் துறப்பதே இன்பத்தை அடையும் வழி என்று போதித்த ஆசான் காட்டிய வழியில் வந்தவர்கள். ஆனால் இளைஞர்களின் முகத்தில் தீராத ஒரு ஏக்கம். அவர்களுக்கு இருப்பது ஒரே ஆசைதான். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தங்கள் பெற்றோர்கள் துறந்து ஓடிவந்த தாய்நாட்டைப் பார்க்க வேண்டும். இங்கு அகதிகளாக வாழும் எல்லோரும் அங்கு சுதந்திரப் பிரஜைகளாகத் திரும்பிச் செல்ல வாய்ப்பு ஏற்படவேண்டும்.

அன்று அவர்களது ஏக்கம் அதிகமாகியிருந்தது. மறந்துபோன வரலாற்றுச் சோகங்கள் கிளறிவிடப்பட்டிருந்தன. துக்கமும் ஆற்றாமையும் நெஞ்சை நிறைத்திருந்தன. கட்டிடத்தின் உள்ளே சற்று முன் திறக்கப்பட்ட நெஞ்சை அள்ளும் புகைப்படக் கண்காட்சியைப் பார்த்ததில் ஏற்பட்ட பரவசத்தைவிட எஞ்சிய கலக்கம்தான் அதிகம். பலர் திரும்பத் திரும்ப உள்ளே சென்று புகைப்படங்களை வலம் வந்தார்கள். கும்பல் கும்பலாக அவற்றை வெறித்துப் பார்த்துத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

எங்கள் நாட்டை இந்தப் புகைப்படங்கள் மூலம் தான் பார்க்கிறேன் என்றாள் ஒரு இளம் பெண். கூடத்தின் மையத்தில் தலாய் லாமாவின் படம் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தது. நான்கு சுவர்களையும் அடைத்து வண்ணப் படங்கள். அனைத்தும் திபெத்தின் சரித்திரத்தை, அதன் உன்னதங்களை, தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தை, அக்கலாச்சாரம் சீன ஆக்கிரமிப்பால் அழிந்துவரும் அநியாயத்தை, தெய்வமாகப் பூஜிக்கப்பட்ட தலாய் லாமாவே நாடு துறந்து அகதியாக வாழ நேர்ந்த துர்பாக்கியத்தை, மிகத் துல்லியமாக, கருப்பு-வெள்ளையிலும் கண் உறுத்தாத வண்ணங்களிலும் ஓவியக் கலைஞனின் துல்லிய அழகியலுடன் எடுத்துச் சொல்லும் புகைப் படங்கள்.

புகைப்படங்களை எடுத்தவர் விஜய் கிராந்தி என்ற பத்திரிக்கையாளர். முன்பு இந்தியா டுடே இந்திப் பதிப்பில் வேலை பார்த்தவர். திபெத்தைப் புகைப்படம் எடுப்பது கடந்த 35 ஆண்டுகளாக அவரது வாழ்வின் சித்தாந்தமாக இருந்துவருகிறது. திபெத்தின் இயற்கை எழில் முதலில் ஈர்த்தது. பிறகு அம்மக்களின் சோகம் ஆன்மாவைத் தொட்டது. அவர்களுக்கு எந்த வகையிலாவது தன்னால் உதவ முடியுமென்றால் அவர்களது இழப்பைத் தன் புகைப்படங்கள் மூலமாக உலக நாடுகளுக்குத் தெரிவிப்பதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்ததாக விஜய் கிராந்தி சொல்கிறார். பல நாடுகளில் தனது கண்காட்சி மூலம் திபெத்தின் உண்மை நிலவரத்தை முதல் முறையாக மக்கள் உணர்ந்துகொண்டார்கள் என்கிறார்.

படங்கள் இரு தலைப்புகளில் பிரிக்கப்பட்டிருந்தன. 'திபெத்தின் மறு பிறவி' என்று முதல் பகுதி. 1959இல் சீன ஆக்கிரமிப்பு திபெத்தில் துவங்க, தலாய் லாமாவை அகற்றி வேறு ஒருவரைச் சீன மாவோ அரசு நியமிக்க, தலாய் லாமா இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தார். அவரைத் தொடர்ந்து 80,000 திபெத்திய அகதிகள் இந்தியாவுக்கு வந்தார்கள். பொருளிழந்து, மண் இழந்து, நவ உலகத்தின் ஆற்றல்கள், அறிவு இல்லாமல், அதன் அரசியல் பாணி அறியாமல் இந்திய மண்ணுக்கு வந்து சேர்ந்தவர்கள். அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களது நிலைமை புரிந்து அகதிகள் முகாம்கள் ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு ஏற்ற சூழல்கள் கொண்ட இடங்களை வட கிழக்கிலும் கர்நாடக மாநிலத்திலும் ஏற்படுத்திக் கொடுத்தார். தலாய் லாமாவின் தலைமையில் திபெத்துக்கு அடுத்தாற்போல் திபெத்தியக் கலாச்சாரம் தனித்தன்மையுடன் விளங்கும் இடங்களாக இன்று அந்த முகாம்கள் காட்சி அளிக்கின்றன. அகதிகளின் சந்ததிகள் இந்தியக் கல்விக் கூடங்களில் பயில்கிறார்கள். அவற்றையெல்லாம் படங்கள் கதைபோல் அனுதாபத்துடன், சொல் அலங்காரம் இல்லாமல் விவரிக்கின்றன.

'காலனிக்குள்' என்பது இரண்டாவது பகுதி. சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்திற்குள் சமீப காலங்களில் சென்று துணிச்சலுடன் எடுத்த படங்கள். திபெத்தியர்களின் வாழ்வில் 'முன்னேற்றங்களை' ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படும் பிம்பங்கள்; திபெத் தனி நாடு அல்ல, சீனாவின் ஒரு பகுதி என்று நிரூபிக்க மிக அதிகமாகத் திபெத்தில் குடியேறிவரும் சீனர்கள்; திபெத் மக்கள் இன்னும் உழைப்பாளிகளாக இருக்க, சீனர்கள் நடத்தும் சொகுசு வாழ்க்கை; திபெத் கலாச்சாரம் அழிந்துவருவதன் சான்றுகள் ...

அதிக அளவில் சீனர்கள் திபெத்தில் நுழைவது சாதாரண திபெத்தியனைக் கலங்கடித்தாலும், சமீபகாலமாகத் தலாய் லாமா அது தனக்குக் கவலை அளிக்கவில்லை என்கிறார். சீனர்கள் திபெத்தியர் களைப் புரிந்துகொள்ளக் கிடைக்கும் வாய்ப்பு அது என்றும் அதைத் தாம் ஆக்கபூர்வமாகப் பார்ப்பதாகவும் சொல்கிறார். திபெத்துக்குs சுதந்திரம் தேவை இல்லை; சீன அரசின் கீழ் ஓரளவுக்கு சுயாட்சி இருந்தால் போதும் என்கிறார். நவீன உலகத்தில் திபெத்தின் முன்னேற்றத்துக்குச் சீனா போன்ற ஒரு வல்லரசின் உதவி இருந்தால் எதிர்காலத்துக்கு நல்லது என்று முற்றும் துறந்த அந்தத் துறவி அறிவார். சுயாட்சி வேண்டுவது திபெத்தின் தனிப்பட்ட கலாச்சாரத்தைக் காப்பாற்ற.

உலக நாடுகளுக்கு வேறு முக்கியமான கவலைகள் இருப்பதால், சீனா ஒரு பொருளாதார வல்லரசாக மாறிவருவதால், திபெத்தின் பிரச்சினையை எடுத்துச் சொல்ல யாருக்கும் நேரமில்லை. விஜய் கிராந்தி போன்ற தன்னார்வத் தொண்டர்கள் புகைப்படங்களைத் தூக்கிக்கொண்டு உலகத்து வாசல்களைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google