Google   www kalachuvadu.com

 

நேர்காணல்: தியடோர் பாஸ்கரன்

சினிமா பற்றிப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லை

சந்திப்பு: அம்ஷன் குமார், தேவிபாரதி
புகைப்படம்: புதுவை இளவேனில்

1940இல் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் பிறந்த தியடோர் பாஸ்கரன் அஞ்சல் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தார். தமிழ் வெகுஜனத் திரைப்படங்களைப் பற்றி ஆய்வு செய்து 1981இல் Message Bearers (Nationalist Politics and Entertainment Media in South India, 1880-1945) என்னும் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டார். தமிழ் சினிமா குறித்து அறிவுத் துறை சார்ந்த ஒருவரால் எழுதப்பட்ட முதல் நூல் என அதைச் சொல்லலாம். தொடர்ந்து திரைப்படக் கலையின் பல்வேறு கூறுகளையும் குறித்து ஆங்கிலத்தில் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1999இல் The Dance of the Sarus: Musings of Wandering Naturalist திரைப்படம் குறித்து மற்றுமொரு முக்கியமான ஆய்வு நூலை வெளியிட்டார். அதே ஆண்டு இவரது தமிழ் சினிமாவின் முகங்கள் என்னும் நூல் வெளிவந்தது. தமிழ்த் திரை பற்றிய காலப் பதிவுகள் அடங்கிய சித்திரம் பேசுதடி (2004, காலச்சுவடு) என்னும் நூலுக்குத் தொகுப்பாசிரியராக இருந்தார்.

கானுயிர் குறித்த பாஸ்கரனின் அக்கறை களும் பதிவுகளும் முக்கியமானவை. சூழிலியல் சார்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பல கட்டுரை களை எழுதி வருகிறார் பாஸ்கரன். மழைக் காலமும் குயிலோசையும் என்னும் மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகளுக்கான தொகுப்பாசிரியராக இருந்த பாஸ்கரன் இயற்கை வரலாறும் பராமரிப்பும் குறித்த பன்னாட்டளவில் முக்கியமான உயிரியலாளரான கே. உல்லாஸ் கரந்த்தின் The way of the Tiger என்னும் நூலினைக் கானுறை வேங்கை எனத் தமிழாக்கம் செய்துள்ளார் (2006, காலச்சுவடு). எம் தமிழர் செய்த படம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (உயிர்மை பதிப்பகம்) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார் மதிப்புறு காட்டுயிர்ப் பாதுகாவலராகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமாரும் தேவிபாரதியும் காலச்சுவடுக்காக அவருடன் நடத்திய உரையாடல் இது.

உங்கள் படைப்பாளுமை குறித்து அறியப்பட்டுள்ள அளவு உங்கள் வாழ்வு சார்ந்த பின்னணி அறியப்படவில்லை. அறிவுத் துறையில் செயல்படும் எந்தவொரு ஆளுமை குறித்தும் ஒரு முழுமையான புரிதலை எட்டுவதற்கு அது முக்கியமானது அல்லவா? நமது இந்த உரையாடலை உங்கள் இளமைக் காலத்திலிருந்து தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும்.

ஈரோடு மாவட்டத்தின் தென்கோடியிலிருக்கும் ஒரு சிற்றூரான தாராபுரத்தில் 1940ஆம் ஆண்டு பிறந்தேன். என்னுடைய பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஒரு அக்கா, ஒரு தங்கை. அங்கிருந்த போர்டு ஹை ஸ்கூலில்தான் நாங்கள் படித்தோம். எஸ்.வி. ராஜதுரை என் வகுப்புத் தோழர். எங்கள் பள்ளிக்கு அருகில் அமராவதி ஆறு. ஊருக்கு மேற்கில் விரிந்து பரந்த முட்காடு. பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களை நாங்கள் அந்த ஆற்றின் கரையில்தான் செலவிட்டோ ம். வளர்ந்ததற்குப் பின்புதான் அதன் தாக்கங்களைப் புரிந்துகொண்டேன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, இதை இதைத்தான் செய்ய வேண்டுமென்று என்னுடைய பெற்றோர் ஒருபோதும் கட்டாயப்படுத்தியதில்லை. மிகச் சுதந்திரமாக வளர்ந்தோம். விடுமுறைகளில், கரூர் அருகே காவிரிக் கரையில் உள்ள வாங்கல் கிராமத்திலிருந்த எங்கள் தாத்தா வீட்டிற்குப் போய்விடுவோம். தாத்தா தில்லைக்கண் தமிழார்வம் மிக்கவர். தமிழ்ச் செய்யுள்கள் சொல்லித்தருவார். வளமான கெட்ட வார்த்தைகளையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

உங்களுடைய பெற்றோர் பணிபுரிந்த அதே பள்ளியில்தான் படித்தீர்களா?

இல்லை. அப்பா கிறித்தவ உயர்நிலைப் பள்ளியிலும் அம்மா நகராட்சிப் பள்ளியிலும் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் 'போர்டு ஹை ஸ்கூ'லில் படித்தோம். பள்ளிப் பருவத்தில் இதைத்தான் படிக்க வேண்டுமென்றோ, இன்ன மாதிரியான வேலைக்குத்தான் போக வேண்டுமென்றோ எங்கள் அப்பா எதையும் வலியுறுத்தியதில்லை. பள்ளிப் படிப்பை முடித்ததற்குப் பின்னர்கூட உனக்கு என்ன படிக்க ஆசை என்றுதான் கேட்டார். எனக்குச் சரித்திரம் படிப்பதில் உள்ள ஆர்வத்தைப் பற்றிச் சொன்னவுடன் அதற்கான நல்ல கல்லூரி எது என விசாரித்துப் பாளையங்கோட்டையிலுள்ள தூய யோவான் (St. Johns) கல்லூரிக்கு அனுப்பினார். அப்பொழுது அந்தக் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் எம்.வி. சுப்ரமணியம் போன்ற பேராசியர்கள் இருந்தார்கள்.

பி.யூ.சி.தான் அந்தக் காலகட்டத்தில் இருந்தது இல்லையா?

இல்லை. அது பி.யூ.சி.க்கு முந்தைய காலம். இன்டர் மீடியட் என்ற இரண்டு வருடப் படிப்பு. நான் பயின்ற ஆண்டோ டு இன்டர் மீடியட் கல்வி முற்றுப்பெற்றுவிட்டது. பின்னர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் மேற்படிப்பு பயின்றேன்.

பள்ளியில் படித்த கட்டத்திலேயே சரித்திரம் படிக்க வேண்டுமென்று முடிவு செய்ததாகச் சொல்கிறீர்கள். அதற்கு ஏதாவது குறிப்பிடத்தக்க காரணம் இருந்ததா?

எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் பள்ளியில் படிக்கும்போதே வரலாறு என்னை ஈர்த்தது. எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கிற வேலையைப் பற்றியெல்லாம் நினைக்கவேயில்லை. அது படிப்பதற்குச் சுவையானதாக இருக்குமென்று நினைத்தேன். ஜான்ஸ் கல்லூரியில் படித்த இரண்டு வருடங்கள் சுவாரஸ்யமானவை. ரோம, கிரேக்க வரலாறு, இந்திய வரலாறு, பிரிட்டானிய வரலாறு எனப் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

சரித்திரத்தின் மீதான உங்களுடைய ஆர்வத்திற்குப் பாடம் தவிர்த்து வேறு ஏதாவது காரணங்கள் இருந்தனவா? வாசிப்பு சார்ந்து குறிப்பிட்ட நூல்கள் எவையேனும் உங்களுக்குச் சரித்திரத்தின் மீதான ஈடுபாட்டை உருவாக்கினவா?

இன்ன நூல் என எதையும் சொல்ல முடியாது. என்றாலும் பள்ளியில் வாசிக்கக் கிடைத்த சில புத்தகங்கள் எனக்குள் அப்படி ஆர்வத்தைத் தூண்டியிருக்கலாம். அப்பொழுது நான் வாசித்த 'ஏழை படும் பாடு' எனக்குள் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. நான் படித்த முதல் நாவலும்கூட அதுதானென்று நினைக்கிறேன். டேனியல் டிஃபோ எழுதிய 'ராபின்சன் குரூசோ'வின் தமிழாக்கமும் என்னுடைய மறக்க முடியாத வாசிப்பு. அண்ணாதுரை எழுதிய 'ரங்கோன் ராதா' படித்தது நினைவிருக்கிறது. தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களையும் மு.வ.வின் நாவல்களையும் அப்பொழுது ஈடுபாட்டோ டு வாசித்தேன்.

இந்த நூல்களை நீங்கள் எந்த வயதில் படிக்க ஆரம்பித்தீர்கள்?

13, 14 வயதிருக்குமென்று நினைக்கிறேன். 15 வயது நிறைவடைவதற்குள் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேன்.

கல்லூரிப் படிப்பின்போதும் வாசிப்பு தொடர்ந்து உங்களைப் பாதித்துக்கொண்டிருந்ததா?

ஜான்ஸ் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், அங்கே அந்த ஊர்க்காரர்கள் மட்டும்தான் படிப்பார்கள். மதுரையில் இருப்பவர்கள் அமெரிக்கன் கல்லூரிக்குப் போவார்கள். நாகர்கோவில் மாணவர்கள்கூட ஸ்காட் கிறித்தவக் கல்லூரிக்குச் செல்வார்கள். கல்லூரியில் எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. ஒரு நல்ல நூலகம் இருந்தது. தனிமையைப் போக்குவதற்கு நான் அதைப் பயன்படுத்திக்கொண்டேன். அந்தத் தருணத்தில்தான் ஆங்கில நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் பேசுவது சிரமமாய் இருந்தது. ஆனால் வாசிப்பு எளிமையாய்க் கைகூடியிருந்தது. வீட்டில் உருவாகியிருந்த வாசிப்புப் பழக்கமே அதற்குக் காரணம் எனச் சொல்லலாம். வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. ஏழ்மையான நிலையிலிருந்தபோதும்கூட ஓர் அறை முழுக்கப் புத்தகங்கள் வைத்திருந்தார் என் தந்தை. அதனால் சிறு வயதிலேயே எங்களுக்கு வாசிப்புப் பழக்கம் உருவாகியிருந்தது. கல்லூரிப் படிப்பின்போது என்னை அதிகம் பாதித்த புத்தகம் என J.B. ப்யூரி எழுதிய History of Greece என்னும் புத்தகத்தைச் சொல்லலாம். இரண்டு மூன்று முறை வாசித்திருக்கிறேன்.

உங்களுடைய தந்தை, பிள்ளைகளுடைய சுதந்திரத்தை மிகவும் மதிப்பவராக இருந்தார் எனச் சொன்னீர்கள் இல்லையா? அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

ஆமாம். எங்களுடைய பெற்றோர் சுந்தரராஜ், தனலட்சுமி, மிகவும் ஆச்சாரமான கிறித்தவர்கள்தான். ஆனால் அற்புதங்கள், அதிசயங்கள் மற்றும் இயற்கைக்கு முரண்பாடான விஷயங்கள் பற்றியெல்லாம் அவர்கள் பேசியதேயில்லை. நன்றாக ஜெபம் செய்தால் கடவுள் வேண்டியதைக் கொடுப்பார், நமது மதம்தான் உயர்ந்தது என்றெல்லாம் சொன்னதில்லை. ஆனாலும் நான் எனது பதின்வயதுகளில் மதத்திற்குள் பிணைக்கப்பட்ட ஒரு கைதிபோல் இருந்ததாக நினைவு இருக்கிறது.

நீங்கள் கிறித்தவ சமயத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்? சில பிரிவுகள் ஆச்சாரங்களையும் ஒழுங்குகளையும் தீவிரமாகக் கடைப்பிடிப்பதுண்டு. அதிலிருந்து விடுபடுவதற்குப் பெரிய அளவில் போராட வேண்டியிருந்திருக்கும் இல்லையா?

நாங்கள் சீர்திருத்தக் கிறித்தவப் பிரிவில், தென்னிந்தியத் திருச்சபையைச் (C.S.I.) சார்ந்தவர்கள். ஜான்ஸ் கல்லூரியில் இருந்தபோது தனிமையாய் உணர்ந்தேன் என்று சொன்னேன் இல்லையா? அந்தச் சமயத்தில்கூட மதத் தாக்கத்திற்கு அடிமை மாதிரி இருந்தது நினைவில் இருக்கிறது. அதிலிருந்து விடுபடுவதென்பது பெரிய போராட்டமாகத்தான் இருந்தது. மதத்திலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்டு வருவதை என்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான ஒரு போராட்டமாகத்தான் உணர்ந்தேன். ஜான்ஸ் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கிறித்தவ மாணவர்களிடம் மதத்தைத் திணித்தார். தேவாலயத்திற்கும் மாலை வழிபாட்டுக்கும் போகவில்லையென்றால் கூப்பிட்டு மிரட்டுவார்கள். அது ஒரு விதமான கொடுமை. ஒருமுறை வெள்ளைக்கார போதகர் ஒருவரை, என்னிடம் பேச முதல்வர் அனுப்பியிருந்தார். போதகர் இரவில், படிப்பு நேரத்தில் பைபிளும் கையுமாக வந்து என்னை ஜெபம் பண்ண வேண்டும் என்று மொட்டை மாடிக்கு அழைத்துப் போனார். அவர் தமிழ் நன்றாகப் பேசுவார். முழங் காலிட்டு ஜெபம் செய்துகொண்டிருந்தபோது 'கிட்ட வந்து அண்ணாச்சியைக் கட்டிப் பிடித்துக்கொள்' என்றார். நான் அசையாமல் இருந்தேன். 'உன் சிசனம் எழும்பிவிட்டதா?' என்றார். எழுந்து, விட்டேன் ஓட்டம். பின் முதல்வரிடம் என்னைப் பற்றிச் சொல்லிப் பிரச்சினைகளை ஏற்படுத்தினார். நடந்ததைச் சொல்ல எனக்குத் துணிச்சல் இல்லை. அந்தப் போதகர் வேறு சில கல்லூரிகளிலும் இயங்கிக்கொண்டிருந்தார் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.

பாடங்கள் மிகச் சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறீர்கள். அதற்குக் காரணமாக இருந்த உங்களுடைய ஆசிரியர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

ஆமாம், அந்தக் கல்லூரியில் எம்.வி. சுப்ரமணியம் போல நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள். பேராசிரியர் ஜெபரத்தினம் அவர்களின் தமிழ் வகுப்புகள் மிகச் சிறப்பானவை. தர்க்க சாஸ்திரம் (logic) என்று ஒரு பாடம் உண்டு. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப் போதித்த சாலமோன் பேராசிரியர் நினைவில் நிற்கிறார். அங்கு எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார். அவர் ஜோப் தாமஸ். அவருடைய தந்தை மலேயாவில் இருந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்தே இருந்தோம். அந்த நட்பு இன்னும் தொடர்கிறது. அந்த நட்பு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தாக்கம் என்றுதான் சொல்வேன். இப்பொழுது அமெரிக்காவில் இந்தியக் கலை வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருக்கிறார். இவர் 'திருவாலங்காடு செப்புச் சிலைகள்' (Tiruvalangadu Bronzes) என்ற நூலை எழுதியுள்ளார்.

சென்னை கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தது எந்த வருடத்தில்?

1957ஆம் ஆண்டு வரலாற்றுத் துறையில் B.A. (Hons) முதுகலைப் படிப்பில் சேர்ந்தேன். அந்தக் கல்லூரியில் புது விதமான ஒரு சுதந்திரம் கிடைத்தது. எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை. கிறித்தவப் பையனாக இருப்பதால் கோயிலுக்குப் போக வேண்டும் என்றெல்லாம் எதுவும் இல்லை. வேறுபட்ட ஆசிரியர்கள், பல விதமான மாணவர்கள் இருந்தார்கள். அதைவிட முக்கியம், விடுதியிலிருக்கிற ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு தனி அறை. சிந்திப்பதற்கும் வாசிப்பதற்கும் அந்தச் சூழல் உகந்ததாக இருந்தது. பல முக்கியமான புத்தகங்களை நான் அங்கிருக்கும்பொழுதுதான் படித்தேன். குறிப்பாக வரலாறு பற்றிய புத்தகங்கள். சி.இ.எம். ஜோட், கே.எம். பணிக்கர், ஆர்.எஸ். முகர்ஜி போன்ற முக்கியமான வரலாற்று ஆசிரியர்களின் புத்தகங்கள். சாமர்செட் மாம் எழுதிய நாவல்களை விரும்பி வாசித்தேன். முக்கியமாக Of Human Bondage, The Razor's Edge ஆகிய நாவல்கள் என் மனதில் நிற்கின்றன. பெர்னாட் ஷா எழுதிய The Black Girl in Search of God என்ற நூல் என்னை மிகவும் பாதித்தது. நான் வெகு நாட்களாக வைத்திருந்த பிரதி தொலைந்துவிட்டது. அண்மையில், பெங்களூரில் ஒரு பழைய புத்தகக் கடையில் அதே பதிப்பை வாங்க முடிந்தது. பெர்ட்ரண்ட் ரஸலின் சில நூல்களைப் படித்தேன். Marriage and Morals மறக்க முடியாத தாக்கம் ஏற்படுத்தியது. சில வெளிநாட்டுப் பேராசிரியர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு அங்கே முதன்முதலாகக் கிடைத்தது. அவர்கள் மாணவர்களை அணுகுகிற முறை மிகவும் வித்தியாசமாக இருந்தது. கல்லூரியின் முதல்வராக இருந்தவர் ஸ்காட்லாந்தைச் சார்ந்த அருட் தந்தை மக்ஃபெயில். மிகச் சாதாரணமாக ஒரு நண்பரைப் போலவே பேசுவார். பேராசிரியர் கிஃப்ட் சிரோமணியுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் கல்லூரி வளாகமும் காடு நிறைந்து அழகாக இருக்கும். இங்குதான் முதன்முதலாக bird watching செய்யப் பழகியது. கிஃப்ட் எங்களைக் காட்டுக்குள் அழைத்துச் செல்வார்.

பலரும் படித்து முடித்த பிறகு, பணி நிமித்தம், படித்ததற்குத் தொடர்பே இல்லாத ஏதாவது ஒரு துறைக்குள் முடங்கிக் கொண்டுவிடுகிறார்கள். உங்கள் அனுபவம்?

என்னுடைய ஜான்ஸ் கல்லூரி நண்பர் ஜோப் தாமஸும் சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு வரலாறு படிக்க வந்தார். எங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருந்த துறை தொல்லியல். இந்த ஆர்வம் எப்படி உருவானது என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டும். மொகஞ்சதாரோவில் அகழ்வாய்வு செய்த மார்ட்டிமர் வீலர் சென்னைக்கு வந்தார். சென்னையில் தொல்பொருள் ஆராய்ச்சி குறித்த அமைப்பு ஒன்று இருந்தது. South Indian Archaeological Association என்ற அமைப்பு. அந்தக் கூட்டங்களில் நாங்கள் தவறாமல் கலந்துகொண்டோ ம். மயிலை சீனி. வேங்கடசாமியை நான் சந்தித்ததும் இங்குதான். ஒரு கூட்டத்தில் வீலர் பேசினார். அதன் பிறகு நாங்கள் அவரைச் சந்தித்துப் பேசினோம். நாமும் தொல்லியல் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எங்களுக்குத் தோன்றுவதற்கு அது தூண்டுதலாக இருந்தது. அந்த ஆர்வத்தின் காரணமாக M.A. முடித்த பிறகு அந்தத் துறைக்கு விண்ணப்பித்தோம். ஆனால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பயில வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு விதியாக அன்று இருந்தது. எங்களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. தாமஸ் சென்னை அருங்காட்சியகத்திலுள்ள Gallery of Modern Art இல் பணியேற்றுக்கொண்டார். நானும் அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தேன். இருவரும் ஒரே விடுதியில் தங்கியிருந்தோம். எங்களுடைய நட்பு மேலும் விரிந்தது. நான் ஆவணக் காப்பகத்தில் வேலை செய்தபோது மூல ஆதாரங்களைக்கொண்டு வரலாறு எழுதுவது பற்றிய அரிச்சுவடிப் பாடங்களைக் கற்றுக்கொண்டேன். இந்தியக் கலை வரலாற்றில் எனக்கு ஆர்வம் உண்டானதும் இந்தக் காலகட்டத்தில்தான். முக்கியமாக தாமஸ் மூலம். தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு அது ஆரம்பமாய் அமைந்தது. இரண்டாண்டுகளுக்குச் சென்னை அருங்காட்சியகம் எங்களிருவருக்கும் ஒரு கல்விச் சாலையாக இருந்தது. இங்கு நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம். பல முக்கிய ஆளுமைகளை இங்குச் சந்தித்ததுண்டு. மார்க்ரெட் மீட் அவர்களை இங்குச் சந்தித்திருக்கிறோம். பின்னர் தாமஸ் ஒரு அமெரிக்கக் கல்வி நிறுவனப் பணியில் சேர்ந்தார். நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர்ந்தேன்.

சிவில் சர்வீஸ் தேர்வு எப்போது எழுதினீர்கள்?

1964இல் எனக்கு சிவில் சர்வீஸ் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஏழ்மையிலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான் அப்போதைய எனது ஒரே குறிக்கோளாக இருந்தது. வேறு ஒரு லட்சியமும் இல்லை. அந்தக் காலகட்டத்தில் சிபாரிசு இல்லாமல், குடும்பத் தொடர்பு இல்லாமல், சாதிப் பின்புலம் இல்லாமல் நல்ல வேலை கிடைப்பது என்பது சிரமமான ஒன்று. ஒரு இந்தியக் குடிமகன், பட்டதாரி என்னும் இரு காரணங்களால் மட்டுமே என் முயற்சி மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு கிடைத்தது மன நிறைவாக இருந்தது. முசூரியில் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் பெற்ற ஆறு மாதப் பயிற்சி பயனுள்ளதாக இருந்தது. அங்கிருந்த பேராசிரியர் சதாசிவம், அம்பேத்கரின் The Annihilation of Caste System என்ற நூலைக் கொடுத்து ஒரு புதிய சாளரத்தைத் திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து Who Were The Shudras என்ற நூல். இந்திய வரலாறு பற்றிய எனது பார்வை மாறியது. இந்தியாவில் சிவில் சர்வீஸ் நிறைய ஆய்வாளர்களை உருவாக்கியிருக்கின்றது. வரலாறு, தொல்லியல் துறைகளுக்கும் இயற்கையியல் சார்ந்த துறைகளுக்கும் முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிற பலர் அரசுப் பணி புரிந்தவர்கள். ஐராவதம் மகாதேவன்போல. போதிய வருவாயும் நேரமும் கிடைப்பது ஒரு காரணம்.

காலனிய ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள் சிவில் சர்வீசில் பணி வாய்ப்புப் பெறுவது என்பது மிகச் சிரமமான ஒரு காரியம் இல்லையா? உயர் குடும்பப் பின்னணி அதற்கான முக்கியத் தகுதியாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் சிவில் சர்வீஸ் பணித் துறை பெருமளவு ஜனநாயகப் படுத்தப்பட்டிருக்கிறது அல்லவா?

பிரிட்டிஷ் காலத்தில் உயர் குடும்பப் பின்னணி என்பது முக்கியமானதாக இருந்தது உண்மைதான். ஆனால் அது மட்டுமே முக்கியமானதாக இருக்கவில்லை. ஐ.சி.எஸ். பணிக்குத் தேர்வு பெற்றவர்களில் பெரும்பாலோரும் சிறந்த கல்விப் பின்னணி கொண்டவர்கள். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக் கழகங்களில் பயின்றவர்கள். அதோடு இந்திய மக்களையும் வாழ்வையும் குறித்த புரிதல்களும் அவர்களுக்கு இருந்தன. காங்கிரசை ஆரம்பித்த ஏ.ஓ. ஹியூமின் தந்தை 1840களில் சென்னையின் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவர். அதேபோல் வால்டர் எலியட் போன்றவர்களும்கூட அந்த வகைப்பட்டவர்கள்தாம். இப்படி நிறையப் பேர் இருந்தார்கள். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு சிவில் சர்வீஸ் ஜனநாயகத் தன்மை உடையதாக மாறுகிறது. 1951ஆம் ஆண்டிற்குப் பிறகு இட ஒதுக்கீடு வருகிறது. அதனால் எளிமையான குடும்பத்திலிருந்தும் சிவில் சர்வீசுக்கு வருகிறார்கள். சுதந்திரம் நிகழ்த்திய பெரிய புரட்சி இது. அரசுப் பணிப் பயிற்சிக் காலத்தில் (probationer) நானும் என்போலவே எளிய குடும்பத்தில் பிறந்த எனது நண்பர் முத்துராமலிங்கமும் (இவர் பின்னர் தில்லியில் வருமான வரித் துறையில் உச்சப் பதவியை எட்டியவர்) ஊட்டியில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் (தமிழக அரசு விடுதி) தங்கியபோது இதை நினைத்து வியந்திருக்கிறோம்.

அஞ்சல் துறையில் பணி செய்தது பற்றி ...

அஞ்சல் துறையில் என் பணிக் காலத்தை நான் மிகுந்த மன நிறைவோடு திரும்பிப் பார்க்கிறேன். எனக்குப் பிடிக்காத எதையும் செய்ய வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதில்லை. திருப்தியான பணி. லஞ்சப் பேய் பிடித்து ஆட்டாத துறை. என்னுடைய பிற ஆர்வங்களில் ஈடுபாடு கொள்ள எனக்குத் தடையே இருந்ததில்லை. புதுப் பதவிக்கு மாற்றப்பட்டுப் போனால் இரண்டு மூன்று மாதங்கள் பணி சிரமமாக இருக்கும்.பின் எளிமையாகிவிடும். வேலை நிறுத்தம் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்போது அழுத்தம் இருக்கும். மற்றபடி அன்றாட வேலை பளுவாக இருந்ததில்லை. நாட்டின் பல மாநிலங்களில் பணி புரிந்தது சுவையான அனுபவங்களைக் கொடுத்தது. பல நாடுகளுக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அதில் ரஷியாவிற்குப் போனதும் கின்யாவில் ஐ.நா. சபையின் சார்பில், அந்த அரசுக்கு ஆலோசகராக (consultant) இரண்டு மாதம் போனதும் மறக்க முடியாத அனுபவங்கள்.

உங்கள் மனைவி பற்றி ...

அவருக்குச் சொந்த ஊர் திருச்சிக்கு அருகில் இரங்களூர். திலகாவை நான் 1963இல் வேலூரில் சந்தித்தேன். காலரா கபே என்றறியப்பட்டிருந்த அங்கு உள்ள கேரளா கபே என்ற உணவு விடுதியில் நாங்கள் நால்வர் மதிய உணவு சாப்பிட்டது துல்லியமாக இன்றுபோல் நினைவில் இருக்கின்றது. அவர் அப்போது படித்து முடித்திருந்த A.J. Cronin எழுதிய நாவலான Judas Tree பற்றிப் பேசினோம். நல்ல வேலை கிடைத்தால், திருமணம் செய்யத் தீர்மானித்தால், இவரைத்தான் மணக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். 1966இல் அவர் சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தபோது ஒரு மதியம், ஸ்பர் டேங்க் சாலை தெற்குக் கோடியிலிருந்த ஹேன்சாஸ் ஐஸ்கிரீம் பார்லருக்கு நாங்கள் இருவரும் சென்றோம். ஐஸ்கிரீம் சாப்பிடும்போது அந்தக் கேள்வியைக் கேட்டேன். 1967இல் எங்கள் திருமணம். சென்னைக் கல்லூரி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றி அண்மையில்தான் அவர் ஓய்வு பெற்றார்.

முதன்முதலில் எங்கே பணியேற்றுக்கொண்டீர்கள்?

நான் முதலில் திருச்சியில் இந்திய அஞ்சல் துறையில் கோட்ட மேலாளராகப் பணி அமர்த்தப்பட்டேன். திருச்சியில் இரண்டாண்டுகள். பின்பு வேலூருக்குப் போனோம். அங்கிருந்து மேகாலயா. அங்கிருந்தபோது வங்கதேசப் போர் மூண்டது. நாங்கள் ஷில்லாங் நகரில் இருந்தோம். தபால் தந்தித் துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் தனி அதிகாரியாக (Special Officer For War Efforts) நியமிக்கப்பட்டேன். எல்லையிலுள்ள பல படைத் தளங்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. பல சுவையான அனுபவங்கள். ஷில்லாங்கில் எங்கள் வீட்டிற்கு முன் பதுங்குக் குழிகள் வெட்டியிருந்தார்கள். குண்டு விழுந்தால் பதுங்கிக்கொள்ள. இருமுறை ஷில்லாங்கிற்கு மேலே பாகிஸ்தான் இந்தியப் போர் விமானங்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டதை (dog fight) பார்த்திருக்கிறோம். எல்லைக் கோட்டிலுள்ள அகர்த்தலாவில் அங்கு கலெக்டராக இருந்த லிங்தோ (பின்னர் தேர்தல் கமிஷனர்) வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மேலே 'உய்ங்ங்' என்ற பீரங்கி ஷெல் பறக்கும் ஒலிகேட்டது. "There goes another one" என்றார் சாப்பிட்டுக்கொண்டே. வீட்டைத் தாண்டி இருந்த அகர்த்தலா பஜாரைக் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருந்தார்கள் கிழக்குப் பாகிஸ்தான் படையினர்.

தமிழில் எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?

நான் ஷில்லாங்கிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டேன். முத்துராமலிங்கம் என்னைக் கசடதபற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ராஜதுரையுடன் நட்பைப் புதுப்பித்துக்கொண்டேன். கந்தசாமி, மகாகணபதி, ஞானக்கூத்தன், க்ரியா ராமகிருஷ்ணன் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது கசடதபற இதழ் துவங்கியிருந்தார்கள். சினிமா பற்றி ஒரு கட்டுரை எழுத என்னை ராமகிருஷ்ணன் ஊக்குவித்தார். ஆனந்த குமாரசாமி பற்றி சித்தானந்த தாஸ் குப்தா எடுத்த Teh Dance of Siva என்ற விவரணப்படத்தைப் பற்றிய ஒரு கட்டுரையைக் கசடதபறவில் எழுதினேன், 'சிவ தாண்டவம்' என்ற தலைப்பில். 1972இல் என்று நினைக்கிறேன். பிறகு வெகு நாட்களுக்கு எழுதவில்லை. 1980இல் என்னை மறுபடியும் எழுதத் தூண்டியவர் பாவைசந்திரன். முதலில் குங்குமத்தில், பின் புதிய பார்வையில் தொடர்ந்து எழுதினேன்.

இந்தத் தருணத்தில்தான் மனதில் ஒரு உளைச்சல் உருவாகத் தொடங்கியிருந்தது. அதற்கும் சினிமா தொடர்பான ஆராய்ச்சிக்கு நான் வந்ததற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிவில் சர்வீஸ் பணியேற்று ஆறேழு வருடங்கள் கழிந்திருந்தன. வசதியான வாழ்க்கை. இருந்தும் இரவுகளில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தேன். வேலை, குடும்பம் . . . இதுதானா வாழ்க்கை என்பது போன்ற கேள்விகளாலும் வாழ்வின் அர்த்தம் குறித்த சிந்தனைகளாலும் உருவான மன நெருக்கடி அது.

குறிப்பாக எந்த ஆண்டில் அத்தகைய மன நெருக்கடிகளுக்கு உள்ளானீர்கள்?

அநேகமாக அது எழுபதுகளின் தொடக்கம் என நினைக்கிறேன். எனக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறதென எனக்குத் தெரியவில்லை. என் மனம் தீராத அதிருப்திக்குட்பட்டதுபோல எதையோ தேட முற்பட்டிருந்தது. என்ன நடந்துகொண்டிருக்கிறது எனக்கு என்னும் விடை தெரியாத கேள்வி என்னை அலைக் கழித்துக்கொண்டிருந்தது. முடிவை அறிந்துகொண்டு ஒரு துப்பறியும் நாவலைப் படிப்பதுபோலவே வாழ்க்கை எனக்குத் தென்பட்டது. ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தேன். அப்பொழுது தமிழ்நாடு வரலாற்றுக் கழகம் தான் வழங்கும் நல்கை குறித்து ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது. எந்தப் பணியில் இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு அந்தப் பணிக்கான ஊதியத்தை நாங்கள் தருகிறோம், வரலாற்றுத் துறையில் உங்களுக்குப் பிடித்தமான எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்பதுதான் அந்த விளம்பரத்தின் உள்ளடக்கம். அக்கழகத்தின் தலைவர் சதுர்வேதி பத்ரிநாத்.

எந்தத் துறையில் எப்பொருள் பற்றி ஆய்வுசெய்வது என்பதைக் குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர இயலாத மனநிலை. அந்தக் காலகட்டத்தில் பர்ட்டன் ஸ்டெய்ன், ராபர்ட் ஹார்ட்கிரேவ், அர்ஜுன் அப்பாதுரை, யூஜின் இர்ஷிக் முதலிய ஆய்வாளர்கள் தமிழக வரலாற்றாய்வுகளில் தீவிர கவனம் செலுத்திவந்தார்கள். இவர்கள் நான் பழகிப் படித்திருந்த ஆய்வாளர்கள். ஒவ்வொருவரும் தமக்கென ஒவ்வொரு குறிப்பிட்ட பொருளைத் தேர்வுசெய்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஒருவர் தமிழக நாடார் இனம் பற்றி, மற்றொருவர் பிராமணரல்லாதோர் இயக்கம், மற்றுமொருவர் சோழர் கால விவசாயிகள் பற்றி எனப் பல்வேறு தளங்களில் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களுக்கிடையே ஆய்வு ரீதியில் என்ன தாக்கத்தை உண்டாக்கப் போகிறோமென எனக்குப் பெரும் தயக்கம் உருவானது. நான் முனைவர் பட்டம் பெற்றவனோ, ஆய்வுக் கோட்பாடுகளில் அனுபவமோ தேர்ச்சியோ பெற்றவனோ இல்லை. அந்தத் தருணத்தில்தான் எனது அமெரிக்க நண்பர் திரைப்படத் துறை குறித்த ஆய்வை மேற்கொள்ளுமாறு எனக்கு யோசனை கூறினார்.

கிறிஸ்டஃபர் பேக்கர்?

இல்லை. சார்லஸ் ரயர்சன். தமிழ்நாடு குறித்து Regionalism and Religion: The Tamil Renaissance and Popular Hinduism என்ற முக்கியமான நூலை எழுதியவர். ஆய்வுப் பொருள் குறித்து அவருடன் பேசினேன்.

யாரும் தொட்டிராத தளமாகத் தமிழ் சினிமா இருந்தது. ஏனென்றால் தமிழ் சினிமாவைப் பற்றிப் படிக்க வேண்டுமென்றால் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் ஆய்வாளர்கள் சினிமாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தமிழ்நாட்டைப் பற்றிய அரசியல் வரலாறு, இன வரைவியல் வரலாறு சார்ந்த விஷயங்கள் என எதுவாக இருந்தாலும் ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும். தமிழ் தெரியாமல் மொழிபெயர்ப்புகளின் வாயிலாகவும் படித்துவிடலாம். ஆனால் அதுவரை தமிழ் சினிமா அப்படியல்ல. 1963இல் கிருஷ்ணசாமி, எரிக் பார்னோவுடன் இணைந்து எழுதிய Indian Cinema என்ற நூலில்தான் முதன்முதலாகத் தமிழ் சினிமாவைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இதுவரை ஆய்வுக்குட்படுத்தப்படாத பரப்பாக இருந்ததால் முறையியல் (methodology) பற்றிய கேள்வி எழுந்தது. சினிமாவைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அந்தத் துறையில் என்னால் ஒரு தொடக்கப் புள்ளியை ஏற்படுத்த முடியும் என்று சார்லஸ் நம்பிக்கையூட்டினார்.

பிறகுதான் தமிழ் சினிமா குறித்த திட்ட முன்வரைவு ஒன்றைத் தயாரித்து பத்ரிநாத்திடம் அளித்தேன். பதினைந்து நாட்களுக்குள் ஆய்வுக்கான அனுமதி கிடைத்தது. அந்த ஆண்டு பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நல்கை அம்பைக்கும் பெரியாரின் அரசியல் வாழ்வு குறித்த நல்கை ஈ.சா. விஸ்வநாதனுக்கும் தமிழ் சினிமா பற்றிய நல்கை எனக்கும் கிடைத்தது.

நான் ஆய்வுக்கான திட்ட முன்வரைவை அளித்தபொழுது ஒரு பார்வையாளன் என்பதற்கு மேலாகத் திரைப்படத்தைப் பற்றி வெகுவாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை. இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டதற்காக நிறையப் பேருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவனானேன். நேர்காணல்களின் பொழுது நான் சந்தித்த போராசிரியர்கள்கூட இதென்ன ஆய்வு என்பதுபோல்தான் பார்த்தார்கள். மனச் சோர்வுக்குள்ளானதோடு தவறு செய்து விட்டோ மோ என்றும்கூட நினைக்கத் தொடங்கினேன். ஆனால் பத்ரிநாத் என்னை உற்சாகப்படுத்தினார்.

ஆய்வுக் காலம் முடிந்து மீண்டும் அஞ்சல் துறைக்குத் திரும்பியபோது தடம் புரண்டிருந்த என் உணர்வுகளை மறுபடியும் தண்டவாளத்திலேற்றியது போல் உணர்ந்தேன். பணியில் என் அணுகுமுறை முற்றாக மாறிவிட்டிருந்தது. பணியிலும் எனது மற்ற ஆர்வங்களிலும் தீவிர ஈடுபாட்டோ டு இயங்க முடியும் என்பது தெளிவானது. ஒரு புத்துயிர்ப்புடன் வேலையில் ஈடுபட முடிந்தது. பணியில் ஆயாசமும் சோர்வும் ஏற்படாமல் இருக்க ஒரு தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதுபோல் அமைந்தது அந்த இரு ஆண்டு விடுப்பு. செய்யும் வேலையில் முழுமூச்சுடன் ஈடுபடுவது மனநலத்திற்கு உகந்தது என்ற புரிதல் ஏற்பட்டது. இந்த உணர்வு ஒரு பெரிய மன அழுத்தத்திலிருந்து என்னை விடுவித்தது. அதன் பிறகு, பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை என் உற்சாகம் குறையவில்லை.

எந்த வருடத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டீர்கள்?

1974ஆம் ஆண்டில். திரைப்படத் துறையின் முன்னோடிகளான கலைஞர்கள் பலரையும் சந்தித்து உரையாடினேன். அந்தத் தருணத்தில் என்னிடம் ஒரு நல்ல ஒலிப்பதிவுக் கருவிகூட இல்லை. தாள்களில்தான் குறிப்புகளை எழுதினேன். சினிமாவைப் பற்றிய புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாசிக்கத் தொடங்கினேன். நான் படித்த முதல் நூல் பெனலோப் ஹூஸ்டன் எழுதிய The Contemporary Cinema (1963, Penguin) என்ற சிறிய நூல். எளிய நடை. சினிமா கோட்பாடுகளுடன், பிரெஞ்சு, ரஷிய, ஜப்பானிய சினிமா பற்றிய விவரங்கள் அடங்கிய இந்நூல் ஒரு சினிமா அரிச்சுவடி. சினிமாவில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்ற வியப்பு ஏற்பட்டது. சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்திய நூல் இது. திருச்சியில், கோட்டையருகே உள்ள புத்தகக் கடையில் ஐந்து ரூபாய்க்கு வாங்கிய இந்தப் பிரதியை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். நிறையப் புத்தகங்களை வாசித்த பிறகுதான் எனக்கு ஒரு புரிதல் ஏற்படத் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சினிமா என்பது அந்தச் சமூகத்தின் மொழியோடும் கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது என்னும் அந்தப் புரிதல் எனது ஆய்வுப் பயணத்தில் முக்கியமான கட்டம் எனச் சொல்லலாம்.

1975இல் Film Appreciation Course ஒன்றில் சேர்ந்தேன். அதை நடத்தியவர்கள் பேராசிரியர் சதீஷ் பகதூரும் பி.கே. நாயரும். அது ஒரு புதிய உலகை எனக்குத் திறந்தது. நாயர் என்னை தேசிய திரைப்பட ஆவணத்தின் மேலாண்மைக் குழுவில் நியமித்தார். அந்தக் குழுவில் மிருணாள் சென், பக்தவத்சலா போன்றோரோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. புனேவுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கிரிஷ் கர்னாட் திரைப் படக் கல்லூரியின் இயக்குநராக இருந்தார். நிறைய அறிமுகங்கள் கிடைத்தன. பல திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது. எந்தப் படமாக வேண்டுமானாலும் பார்க்கச் சொல்வார் நாயர். அப்பொழுது வி.சி.ஆர். எல்லாம் கிடையாது. ஸ்டீன்பெக் என்னும் ஒரு கருவியில் படச் சுருளைப் போட்டுத்தான் பார்க்க வேண்டும். அம்பிகாபதி, தியாகபூமி போன்ற பழைய படங்களையெல்லாம் பார்த்தேன். சினிமா ஓரளவுக்குப் பிடிபட ஆரம்பித்தது. இரண்டு வருடங்களில் குறிப்புகளும் கட்டுரைகளும் சில எழுதினேன். அப்பொழுதுதான் ஒரு முக்கியமான விஷயம் நடந்தது. எனது ஆய்வு விடுப்பு முடிந்தபின் 1976இல் கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டேன்.

அங்கு பருன் டே என்ற வரலாற்றறிஞர் என்னை ஊக்கப்படுத்தினார். திரைப்படத்தை ஆய்வுசெய்ய முனைந்ததற்காக என்னைப் பாராட்டவும் செய்தார். அவருடைய யோசனைப்படிதான் கல்கத்தா பிலிம் சொசைட்டியில் சேர்ந்தேன். இது சினிமா பற்றிய எனது புரிதலை வெகுவாக விரிவுபடுத்திக்கொள்வதற்கு உதவியது. அதற்கு அடுத்த ஆண்டு நடக்கவிருந்த Indian History Congressஇல் அதுவரையிலுமான எனது ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்டுரை வாசிக்கச் சொன்னார் பருன் டே. இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை குறித்து ஒரு கட்டுரை எழுதினேன்.

அதுதான் உங்களுடைய முதல் கட்டுரை இல்லையா?

ஆமாம். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் வாசிக்கப்பட்ட அதுதான் சினிமாவைப் பற்றிய என்னுடைய முதல் கட்டுரை. 1976 அவசர நிலைக் காலகட்டம். என் கட்டுரையின் தலைப்பு Film Censorship as an Instrument of Political Congrol in Brish India என்பதுதான். "Where the mind is without fear" என்ற தாகூரின் பாடலோடு தொடங்கிய அந்த அமர்விற்குத் தலைமை தாங்கியது இர்ஃபான் ஹபீப். என்னுடைய அமர்வு தொடங்கும்போது இர்ஃபான் எழுந்து, 'எமர்ஜென்சிக்குப் பொருத்தமான கட்டுரையை பாஸ்கரன் வாசிப்பார்' என்றார். எனக்கு அடி வயிறு கலங்கியது. ஏனென்றால் நான் அரசுப் பணியில் இருந்தேன். சினிமா சார்ந்த கட்டுரைதானே வாசிக்கப் போகிறோம் என்றிருந்தேன். பயத்தோடு வாசித்தேன்.

அன்று இரவு யாரிடமும் சொல்லாமல் அலிகார் ரயில் நிலையத்திற்கு என்னுடைய பையோடு சென்றுவிட்டேன். நான்கு நாட்களுக்குப் பிறகுதான் எனக்குப் பயணச் சீட்டுப் பதிவு. ஆனால் உடனடியாகக் கிளம்பிவிட்டேன். எனது துறையைச் சேர்ந்த RMS பெட்டிக்குப் போய் எனது அடையாள அட்டையைக் காண்பித்து அவர்களுடைய உதவியோடு வந்து சேர்ந்தேன். ஆனால் பயந்ததுபோல எதுவும் நடக்கவில்லை. அகில இந்திய அளவில் அந்தக் கருத்தரங்கில் கட்டுரை வாசித்ததுதான் தொடக்கம்.

Message Bearers நூல் உருவானதன் பின்புலத்தைப் பற்றிக் கூறுங்கள்.

இது போன்ற சில கட்டுரைகளின் தொகுப்பை விமீssணீரீமீ ஙிமீணீக்ஷீமீக்ஷீs என்ற தலைப்பில் நூலாக அமைத்தேன். இந்நூலின் நோக்கம் பற்றிக் கூற வேண்டும். ஆக்ஸ் ஃபோர்டிலிருந்த அனில் சீல் போன்ற வரலாற்றாசிரியர்கள், சென்னை மாகாணத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு வெகுமக்கள் ஆதரவு இருந்ததில்லையென்றும் அதனால்தான் அது benighted province என்றறியப்பட்டது என்றும் எழுதியிருந்தார்கள். அவர்களின் இந்நிலைப் பாட்டிற்குக் காரணம் அவர்கள் ஆங்கிலத் தரவுகளையும் அரசு ஆவணங்களையுமே ஆதாரமாகக் கொண்டிருந்ததுதான்.

மக்கள் இயக்கம், அவர்களது தீவிர அக்கறைகள் பற்றிய பதிவுகள் இவைகளில் இல்லாததால், சுதந்திரப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருக்கவில்லை என்றனர். ஆனால் 1919 ஜாலியன்வாலா பாக் படு கொலையில் தொடங்கி, தமிழ்ச் சிற்றிலக்கியங்களும் நாடகங்களும் சினிமாவும் அரசியல் கருத்துகளை உள்ளடக்கியே வந்தன. மேட்டுக்குடியினர் புறக்கணித்த நாடகங்கள்தாம் முதல் முதலாக அரசியல் சூழலைப் பிரதிபலித்தவை. தமிழ்நாட்டின் அரசியல் - சினிமாவின் பிணைப்பின் துவக்கமும் இதுதான். வெகுமக்கள் கலாச்சாரத்திற்கு நெருக்கமான நாடகம், சினிமா இவற்றைக் கவனித்து, சுதந்திரப் போராட்டம் எவ்வளவு ஆழமாக, மக்கள் இயக்கமாக இங்கு பரிணமித்திருந்தது என்பதை என் நூலில் சுட்டிக்காட்டினேன். இவையெல்லாம் தமிழ்ப் பதிவுகள்.

சென்னையில் கிறிஸ்டஃபர் பேக்கர் என்ற ஆய்வாளர் இருந்தார். Non-cooperation Movement in Madras Presidency என்ற அவரது நூல் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருந்த சமயம். அவர் எனது நண்பர். அவரிடம் எனது நூலுக்கு ஒரு அறிமுக உரை கேட்கலா மென்று நினைத்தேன். எங்கள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில்தான் இருந்தார். கிறிஸ் இரண்டு பக்க அளவில் எனது புத்தகத்திற்கு அறிமுக உரை எழுதித் தந்தார். முழுவதும் படித்தீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார். முழுவதும் படித்துவிட்டு, பின்னர் எழுத விரும்பினால் எழுதுங்கள் என்றேன்.

முழுவதும் படித்துவிட்டு, ஒரு நீண்ட முன்னுரையை எழுதினார். அது அந்த நூலின் ஒரு முக்கியப் பகுதியாக அமைந்து நூலின் வரலாற்றுப் பின்புலத்தை விளக்குகிறது. கடைசியில் ஒரு வெள்ளைக்காரரிடம் போய் முன்னுரை கேட்டிருக்கிறாயே என்றனர் சில நண்பர்கள். அப்பொழுதுதான் கிறிஸ் ஒரு வெள்ளைக்காரர் என்பது என் மனதில் பட்டது. அவரை ஒரு சீரிய வரலாற்று ஆய்வாளராக மட்டுமே நான் பார்த்தேன். அவர் பின்னர் விளம்பர உலகிற்குச் சென்றுவிட்டார்

க்ரியா ராமகிருஷ்ணன் மிகுந்த அக்கறையுடன் இந்நூலைப் பதிப்பித்தார். சங்கரலிங்கம் பொருளடைவு தயாரித்தார். ஓவியர் ஆதிமூலம், பாஸ்கரதாஸ் போன்றோர் கோட்டோ வியங்கள் தீட்டிக் கொடுத்தார்கள். திருவனந்தபுரத்தில் 1981இல் South Indian History Congressஇல் எனது ஆசிரியர் சி.ஜே. நிர்மல் இந்நூலை வெளியிட்டார்.

Message Bearers பற்றி டாக்டர் குரோவ் பிரெஞ்சு நாளிதழான Le Monde இல் ஒரு மதிப்புரை எழுதினார். க.நா.சு., இந்துஸ்தான் டைம்ஸில் எழுதினார். இது போன்ற பல கவனிப்புகள். ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய அருண் கோப்கர் தவிர யாரும் சினிமா கண்ணோட்டத்தில் அணுகவில்லை. ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் போலவே அணுகினார்கள். அந்தப் புத்தகத்தின் முக்கியமான தன்மை என்னவென்றால், இதுவரை பயன்படுத்தப்படாத தரவுகளை (source materials) அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதுதான். கதைப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாடக வசனம், சினிமா பாட்டுப் புத்தகங்கள், சினிமா பத்திரிகைகள், திரைப் படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அந்நூலை எழுதியிருந்தேன். பல முறை கோட்டையூர் சென்று ரோஜா முத்தையா செட்டியார் வைத்திருந்த அச்சுப் பிரதிகளைப் பயன்படுத்தினேன். தமிழ்த் திரைப்படங்கள் தேசியப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது பற்றியும் எழுதியிருந்தேன். நாடக, திரை நடிகர்களும் நேரடியாக அரசியலில் ஈடுபட்டிருந்தனர். காங்கிரசைப் போற்றி சுந்தராம்பாள் பாடிய மேடையில் சத்யமூர்த்தி பேசினார்.

காங்கிரசாரைவிட திராவிட முன்னேற்றக் கழகத்தினர்தாம் சினிமாவை அதிகமாக அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்கள் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் காங்கிரசார்தாம் அதை முதலில் பயன்படுத்தினார்கள். திராவிட முன்னேற்றக் கழகச் சிந்தனையாளர்கள் எப்பொழுதும் வசனங்களை, பாத்திரப் பேச்சை அதிகமாகப் பயன்படுத்துவதைப் பாணியாகக் கொண்டார்கள். காங்கிரஸ் ஆதரவாளர்கள் தேசியப் பிரச்சாரப் படங்களில் கருத்துகளைக் காட்சிப்படுத்தினார்கள். தியாகபூமியில் வேறு சில சிக்கல்கள் இருந்தாலும் சத்தியாக்கிரகம் சார்ந்த பிம்பங்களைக் காட்டினார்கள். மாத்ருபூமி படத்தில் உருவகக் கதை உத்தியைப் பயன்படுத்தினார்கள். அதாவது இன்றைய அரசியல் நிலைமையை வேறு காலத்துப் பின்புலத்தில் காட்டுவது (பராசக்தியிலும் இதே உத்தி கையாளப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் நடக்கும் கதை அது). சத்தியமூர்த்தியின் மறைவுக்குப் பிறகு ராஜாஜி, காமராசர் போன்ற தலைவர்களுக்கு சினிமாவில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது.

மௌனப் படங்கள் குறித்து உங்களுடைய பதிவுகள் முக்கியமானவை. மௌனப் படங்களில் பணியாற்றிய கலைஞர்களைச் சந்தித்திருக்கிறீர்கள் அல்லவா? அவை குறித்த தங்களுடைய அனுபவங்களைச் சொல்லுங்கள்.

மௌனப் படக் கலைஞர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எஸ். கிருஷ்ணசாமி. அவர்களில் வெங்கட்ராமன், சீதாராமன் ஆகிய இருவர் மிக முக்கியமானவர்கள். ஏ. நாராயணணின் வலது கரத்தைப் போன்றவர்கள். ஏ. நாராயணன்தான் தமிழ் சினிமாவிற்கே அடித்தளமிட்டவர். தென்னிந்தியாவில் அதிக மௌனப் படங்கள் தயாரித்த General Pictures Corporation என்ற ஸ்டுடியோவை நிறுவியவர். ஒலி வந்தபின் சென்னையின் முதல் பேசும் படப்பிடிப்புக் கூடத்தை நிறுவியவரும் அவர்தான். ஆனால் அவருடைய உதவியாளர்கள் இருவரையும் நேர்காணல் செய்தபோது மௌனப் பட உருவாக்கம் குறித்த நிறையத் தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. எல்லப்பன் என்னும் ஒளிப்பதிவாளரையும் சந்தித்தேன். சலனப்பட காமிராவின் விசையைக் கையால்தான் சுற்ற வேண்டும். வினாடிக்கு 16 ஃப்ரேம்கள் என்ற வேகத்தில். இவர் வறிய நிலையில் சைதாப்பேட்டையில் இருந்தார். நாற்பதுகளில் வந்த ஜெமினி படங்களில்கூட அவர் பணியாற்றியிருக்கிறார். நந்தனாராக நடித்த, ஆலங்குடியைச் சேர்ந்த ஒரு கலைஞரைச் சந்தித்தேன். பிறகு மௌனப் படங்களில் நடித்த வள்ளிநாயகம் என்னும் ஒரு கதாநாயகனையும் சந்தித்தேன். சுசீலாதேவி, டி.பி. ராஜலட்சுமி, சி.வி.பி. பந்துலு, நரசிம்மபாரதி போன்றவர்களையும் சந்தித்தேன். நரசிம்மபாரதி மௌனப் படக் காலகட்டத்தில் கதை சொல்லியாக (explainer) இருந்தார். திரைக்குப் பக்கத்திலிருந்து கதை சொல்லிக்கொண்டிருப்பார். இந்த அனுபவங்களையெல்லாம் தொகுத்து ஜர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸில் 1977ஆம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினேன். The Birth of a New Medium என்னும் அக்கட்டுரையில் தமிழ் சினிமாவின் இன்றைய குறுவேர்கள் மௌனப் படங்களில் பதிந்திருக்கின்றன என்பதைச் சொன்னேன். இந்த மௌன சகாப்தம் தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதி. சென்னையில் தயாரிக்கப்பட்ட பேயும் பெண்ணும் (1930) போன்ற சலனப் படங்களில் விவரண அட்டைகள் (title cards) தமிழில் இருந்தன. அதனால்தான் அது தமிழ்ப் படமாகிறது.

பின்னர் பேசும் படங்களைக் கவனித்தீர்களா?

ஆம். சினிமா அழகியலைப் பற்றிப் பேசாமல் சினிமாவின் சமூக - அரசியல் தாக்கங்களை ஆய்வு செய்வது சிரமம் என்பதை அப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். ஏனென்றால், சினிமாவில் ஒரு இயக்குநர் என்ன சொல்கிறார் என்பதை, எப்படிச் சொல்கிறார் என்பதிலிருந்து பிரித்துப் பேச முடியாது. எப்படிச் சொல்கிறார் என்பதுதானே சினிமாவின் சாரம்? ஒரு திரைப்படத்தின் தாக்கமே அது எப்படிச் சொல்லப்படுகிறது என்பதில்தான் இருக்கிறது. ஆகவே சினிமாவைப் பற்றி அறிந்துகொள்ள சீரிய திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். சினிமா பற்றிய சில அடிப்படை நூல்களைப் படித்துப் புரிந்துகொள்ள முயன்றேன். அப்போதுதான் தமிழ் சினிமாவின் பல கூறுகள் பிடிபட ஆரம்பித்தன. இன்று இந்திய சினிமா அல்லது தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும்போது அழகியல் தேவையில்லை என்ற வாதம் நம் முன் வைக்கப்படுகிறது. அழகியல் பற்றிப் பேசாமல் இலக்கியத்தையோ இசையையோ நாம் ஆராய முடியுமா? ஏன் சினிமா என்று வரும்போது மட்டும் இந்நிலை எடுக்கப்படுகிறது? இதுவும் ஒரு வகை உதாசீனம்தான்.

தமிழ்த் திரைப்படங்களின் முக்கியக் கூறுகள் என்று எதைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

இரண்டு தன்மைகள். ஒன்று, அதீதப் பாத்திரப் பேச்சு. அதாவது பாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பது (orality). இது பிம்பங்களின், காட்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. உங்கள் வீட்டில் ஒரு பெரியவரிடம் கேட்டுப் பாருங்கள், அவருக்குப் பிடித்த படம் எதுவென்று; சொல்வார். ஏனென்று கேட்டால் அதில் ஒரு பாட்டைச் சொல்வார். பாட்டும் கேட்கப்படும் ஒன்றுதானே. காட்சிகளுக்கு முதலிடம் கொடுக்கப்படவில்லை. பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தாமல், பாத்திரப் பேச்சின் மூலம் நகர்த்தும் பழக்கம் வேரூன்றிவிட்டது போலிருக்கிறது. அடுத்த கூறு, முன்கோணப் பார்வை (frontality). பெருவாரியான காட்சிகள் முன்கோணத்தில் இருக்கும். சில புதிய, இளைய இயக்குநர்கள், இந்த இரண்டாவது தன்மையைத் தங்கள் படைப்புகளில் வெகுவாகக் குறைப்பது நல்ல அறிகுறி.

தற்போதைய திரைப்பட விமர்சனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? குறிப்பிட்ட ஒரு திரைப்படம் திரை மொழியை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறது என்பது பற்றியெல்லாம் சினிமா விமர்சகர்கள் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை அல்லவா?

ஒரு சிறுகதை அல்லது நாவலைக் குறித்த விமர்சனத்திற்கும் திரை விமர்சனத்திற்கும் இடையிலான வேறுபாடுகளைப் பல விமர்சகர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. சினிமாவைப் பற்றி எழுதுவது என்பது அதன் கதையைப் பற்றி எழுதுவது மட்டும் அல்ல. கதையை, நிகழ்வுகளை எவ்வாறு இயக்குனர் காட்டுகிறார் என்பதைப் பற்றி எழுத வேண்டும். ஒரு கருத்து திரையில் எவ்வாறு சினிமா ரீதியில் காட்டப்படுகிறது என்பதைப் பொறுத்ததுதான் அது மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஏற்படுத்தாததும்.

தொடக்க கால சினிமா விமர்சனங்கள் எப்படியிருந்தன? சினிமாவை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?

ஆரம்பகாலத் தமிழ் சினிமா பாட்டு நிறைந்ததாக இருந்ததால் மக்கள் சினிமாவைக் கேட்கத்தான் போனார்கள். 1939இல் அம்பிகாபதி திரைப்படத்தில் ஆதார மூலமே பாடல்கள்தான். சினிமா எப்படியிருந்ததென்று கேட்டால் பாடல்கள் அருமையாய் இருக்கின்றன என்றுதான் சொல்வார்கள். பாடலுக்காகப் படம் பார்த்தார்கள். கர்நாடக இசைப் பாடகர்கள் சினிமாவிற்கு வர ஆரம்பித்த பின்புதான் சினிமா விமர்சனமே உருவானது என்றுகூடச் சொல்லலாம். தண்டபாணி தேசிகர், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் போன்றோர் திரையுலகில் இடம்பெறத் தொடங்கியபோதுதான், அவர்களுடைய பாடல்களின் சிறப்பைப் பற்றி எழுதத் தொடங்கினார்கள். தமிழில் சினிமா விமர்சனம் உருவான விதமே இப்படித்தான் இருந்தது. மற்றபடி சினிமாவின் பிற கூறுகளைக் குறித்து விமர்சனம் செய்வது என்பது மிக அரிதான விஷயமாக இருந்தது.

ராமையாவுக்கு ஒரு விமர்சனப் பார்வை இருந்தது அல்லவா? தொடக்க காலத் தமிழ் சினிமா குறித்து அவர் நிறையவே எழுதியிருக்கிறார்.

அவருக்குச் சினிமா பற்றிய ஒரு புரிதல் இருந்தது. நான் அவரிடம் சினிமா பற்றிப் பேசியபோது இதைக் கவனித்திருக்கிறேன். நந்தனார் படத்திற்கு விமர்சனம் எழுதும்போது, நெற்பயிர் வளர்வதை வரிசையாக பீவீssஷீறீஸ்மீகளில் காட்டியிருக்கிறார் என்று எழுதியிருக்கிறார். ஆனால் அவர் படத்திற்குக் கதை-வசனம் எழுதியபோதும் இயக்கியபோதும் இந்தப் புரிதல் திரையில் வெளிப்படவேயில்லை.

சினிமா தமிழ்நாட்டில் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது?

கல்விச் சாலைகளோ ஆய்வு நிறுவனங்களோ அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. நான் ஒரு சில கல்லூரிகளின் மேலாண்மைக் குழுக்களில் இருக்கிறேன். ஒரு கல்லூரி முதல்வரிடம், 'இப்பொழுதெல்லாம் ஏராளமான குறுந்தகடுகள் வந்திருக்கின்றனவே, நூலகங்களில் அவற்றைச் சேகரித்துவைத்து மாணவர்களுக்குப் பயன்படச் செய்யலாம் அல்லவா?' என்று கேட்டேன். ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டதுபோல் அவர் அதிர்ச்சியடைந்தார். சினிமாவைப் பற்றிய நமது கல்வியாளர்களின் புரிதல் இப்படித்தான் இருக்கிறது. அந்தக் கல்லூரியின் மாணவர்கள்கூட சினிமாவை ஒரு மோசமான விஷயமாகத்தான் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆழமான கருத்துகளோ சிந்தனையைத் தூண்டும் கலை அனுபவங்களோ இல்லாத ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்று சினிமாவைப் பற்றிய பொதுப் புரிதலைக் கட்டமைத்திருக்கிறார்கள்.

தொடக்க காலத்திலிருந்தே சினிமாவைப் பற்றி இப்படிப்பட்டதொரு கருத்தாக்கம்தான் நிலவிவருகிறது இல்லையா? அதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு உபகரணமாகத் தமிழ்நாட்டில் தோன்றிய சமயத்தில்தான் தொழிலாளி வர்க்கம் என்ற ஒரு மக்கள் பகுதி உருவாகிக்கொண்டிருந்தது. துணி ஆலைகள், தொடர்வண்டிப் போக்குவரத்து முதலியவை தோன்றிய சமயம். மக்கள் திரள் சமுதாயம் தோன்ற ஆரம்பித்த காலகட்டம். இந்தப் புதிய தொழிலாளர் சமூகத்தை, ஜாதி, வர்க்க பேதமில்லாமல் எல்லோரும் கூட முடிந்த திரையரங்கு வசீகரித்தது. 1900ஆம் ஆண்டு முதல் திரையரங்கு சென்னையில் உருவானது. பல கூடாரக் கொட்டகைகளும் இருந்தன. சலனப் படம் யாவரும் பாகுபாடின்றிப் பார்த்து அனுபவிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகப் பரிணமித்தது. சமூகத்தின் எல்லா அடுக்குகளிலிருந்த மக்களும் கலாச்சார வரம்புகளை மீறி ஒருங்கே கூடக்கூடிய ஒரு ஜனநாயகப் பொது இடமாகப் பரிணமித்தது. வெள்ளையர்களும் இந்தியர்களும்கூட இங்கு ஒன்றாகக் கூடினார்கள். இம்மாதிரியாகக் கூடுகை தமிழ்ச் சமுதாயத்திற்கே ஒரு முற்றிலும் புதிய நிகழ்வு. ஒரு பெரிய புரட்சி. ஆகவே சினிமாவை மத்திய தர வர்க்கம், படித்தவர்கள், ஒரு கீழ்க் கலாச்சார வெளிப்பாடு என்றே கருதினார்கள். படித்தவர்களுக்கு சினிமா என்றாலே ஒரு இளக்காரம். அன்றைய எழுத்தாளர்களும் இந்த மேட்டுக்குடி நோக்கையே பின்பற்றினார்கள். இந்தப் புதிய கலை வடிவின் இயல்புகளைப் புரிந்துகொள்ள அவர்கள் எவ்வித முயற்சியும் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. சினிமா பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும் அதைப் பற்றி எழுதுவோர் யாருமில்லை. இதனால் அறிவார்ந்த ரசனை உருவாகாமல் புலனார்ந்த ரசனையே வளர்ந்தது. புறக்கணிக்கப்பட்ட ஒரு சாதனமாக சினிமா இருந்துவந்திருக்கிறது. இந்த வரலாறு முறையாகப் பரிசீலிக்கப்படவோ ஆவணப்படுத்தப்படவோ இல்லை.

முன்னர் பல நாடக அரங்குகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரை அனுமதிக்கவில்லை. விளம்பர நோட்டீஸ்களிலேயே பஞ்சமர்கள் வரக் கூடாதென்று போட்டிருக்கிறார்கள். ஆனால் திரைப்பட அரங்கு என்பது சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பொருட்படுத்தாத, சமத்துவ வெளியாக இருந்தது. இதற்கு ஒரு அடிப்படையான காரணமும் உண்டு. தொடக்க காலத் திரையரங்குகளைக் கட்டியவர்கள் வெள்ளைக்காரர்கள். தமது பார்வையாளர்களிடையே சாதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவது குறித்த சிந்தனை இல்லாதவர்கள். எல்லா இடங்களிலும் நிறைந்திருந்த சாதியப் பாகுபாடுகள் திரையரங்குகளில் காணப்படாததற்கு இது ஒரு முக்கியக் காரணமாயிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

இப்பொழுதும்கூடப் பல நுட்பமான வழிகளில் சினிமா உதாசீனப்படுத்தப்படுகிறது அல்லவா?

உலகம் முழுவதும் இது போன்ற சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் வேறு விதமான காரணங்கள் உண்டு. பல நாடுகளில் அதைக் கடந்து செல்ல முயற்சிக்கிறார்கள். பலர் கடந்து சென்றும் விட்டார்கள்.

நம் நாட்டில் சினிமாவைக் கீழான ரசனைக்குரிய ஒரு ஊடகமாகப் பார்க்கும் போக்கு மேலும் பல விதங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இது பற்றிப் பல்கலைக்கழகங்களில் போதிப்பது இல்லை. கல்லூரி நூலகங்களில் பார்த்தீர்களேயானால் 'சினிமா' என்று ஒரு பிரிவே இருக்காது. ஒரு ஆங்கில நாளிதழ் South Indian Music என்று இசை பற்றிய சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. திரையிசைக்கென்று சிறு இடமும் அதில் இல்லை. கேட்டால் அது ஒரு இசையா என்று பதிலளித்தார் ஆசிரியர். ஆனால் சினிமா ஒரு அசுர சக்தியாக அவதாரமெடுத்து அரசியல் ரீதியிலான பாதிப்புகளை உருவாக்கும்பொழுது மட்டும் நாம் கூச்சல் போடுகிறோம். சினிமா இப்படி இருப்பது பலருக்கு வேறு வழிகளில் ஆதாயம் தருவதாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது இப்பொழுது இருக்கும் தரத்திலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றுகூடக் கருதுபவர்கள் இருக்கிறார்கள்.

ஆரம்ப சினிமாவில் சுதந்திரப் போராட்டம், நாடு பற்றிய கருத்துகள் அதிகம் இடம்பெற்றிருந்தன. சுதந்திரத்திற்குப் பின்பு இந்த உள்ளடக்கம் மாறுகிறது. சுதந்திரம் தமிழ் சினிமாவின் போக்கில் எத்தகைய தாக்கங்களை நிகழ்த்தியது என்று கருதுகிறீர்கள்?.

சுதந்திரத்திற்கு முன்பு காந்தியச் சிந்தனையின் தாக்கம் இருந்தது. விடுதலைக்குப் பிறகு திரைப்படங்களின் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நவீன சிந்தனையென்று எதுவும் வந்துவிடவில்லை என்றாலும் கூடத் தமிழ், தமிழ் உணர்வு பற்றிய வெளிப்பாடுகள் வருகின்றன. திராவிட இயக்கச் சார்புள்ள கலைஞர்களின் வருகை, சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, பகுத்தறிவு போன்ற கருதுகோள்களைத் திரையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் காட்சிகளின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. ஒலி பற்றிய தமிழ் சினிமா இயக்குநர்களின் புரிதலும்கூட இன்னும் விரிவடையவில்லை. நடிப்பின் போதாமைகளை ஒலிகளைக் கொண்டு ஈடு செய்யும் போக்கு இன்னும் மாறவில்லை. பின்னணி இசை பல தருணங்களில் படத்தின் அழகியலுக்குத் தொடர்பில்லாத ஒன்றாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஒலி மற்றும் பின்னணி இசை ஆகியவற்றின் முக்கியத்துவம் தமிழ் சினிமாவில் இன்றும் சரியாக உணரப்படவில்லை என்று நினைக்கிறேன்.

எழுத்தாளர்கள் பலரும் அவ்வப்பொழுது தமிழ் சினிமாவில் பணிபுரிந்திருக்கிறார்கள். பிற மொழிகளில் எழுத்தாளர்களுடைய பங்களிப்பு சினிமாவைச் செழுமைப்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் அப்படிப்பட்ட தாக்கம் நிகழ்ந்ததற்கான வலுவான ஆதாரங்கள் தென்படவில்லை அல்லவா?

எழுத்தாளர்களின் ஈடுபாடு இரண்டு வகையில் அமைகிறது. முதலாவது, சினிமாவைப் பற்றி எழுதுவது; இரண்டாவது, சினிமாவிற்காக எழுதுவது. இவர்களில் பலர் சினிமா பற்றிக் கட்டுரைகள் எழுதிய பின் கதை, வசனம் எழுத ஆரம்பித்தனர். இவர்களுக்குப் பின்னால் வந்த புதுமைப்பித்தன் ஒரு படி மேலேபோய் சினிமா தயாரிப்பு முயற்சியிலும் ஈடுபட்டார்.

நல்ல எழுத்தாளர்கள்கூட சினிமாவிற்கு வந்ததும் நீர்த்துப்போகிறார்கள். அந்தப் பெரு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறார்கள். மணிக்கொடியின் பி.எஸ். ராமையாவாக இருந்தாலும் அவரும் திரைக்கதை எழுதும் இன்னொரு நபராகப் பரிண மித்தார், அவ்வளவுதான். ஒரு எழுத்தாளருக்குரிய தனித்த அடையாளத்தோடு இயங்கியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? எழுத்தாளர்கள் சினிமாவிற்கு வந்ததும் அதன் போக்குகளோடு இணைந்து செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள். தமிழ் சினிமாவில் வெகுசில எழுத்தாளர்களே ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளனர். என் மனதில் முதலில் தோன்றுவது ஜெயகாந்தன். அவர் இயக்கிய இரு படங்கள், உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான் நல்ல சினிமாவிற்கு எடுத்துக்காட்டு. அவள் அப்படித்தான் படத்தில் வண்ணநிலவனின் பங்களிப்பு முக்கியமானது. இந்த எழுத்தாளர்களுக்கு வார்த்தைகளை, வாக்கியங்களை, பிம்பங்களாக மாற்றும் கலை புரிந்திருந்தது.

ஒரு திரைப்படத்தின் தாக்கம் அதன் திரைக்கதையில் இருக்கிறது. திரைக்கதை எழுத விரும்பும் ஒரு எழுத்தாளருக்கு எதையெல்லாம் காட்சியாக்க வேண்டும், எதையெல்லாம் வசனமாக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அவருக்குச் சினிமாவின் இயல்பு தெரிந்திருக்க வேண்டும். அதில் தான் என்ன செய்ய முடியும் என்பதும் புரிந்திருக்க வேண்டும். அதேபோல, அதைப் படமாக்கும் இயக்குநருக்கு இலக்கியத்தைப் பற்றிய சுரணை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு எழுத்தாளரால் தான் பங்கேற்கும் திரைப்படத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்க முடியும்.

உலக இலக்கியத்தோடு தமிழ் இலக்கியத்தை ஒப்பிட்டுப் பேசுவதற்கு நமக்குச் சில வாய்ப்புகள் இருக்கின்றன. அசோகமித்திரன், அம்பை, பெருமாள் முருகன் போன்றோரது சில படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுப் பரந்த அளவில் பேசப்படுகின்றன. ஆனால் தமிழ் சினிமாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல முடியும்?

தொழில்நுட்ப ரீதியில் தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது அல்லவா?

அதில் சந்தேகமேயில்லை. முக்கியமாக மோஷன் கன்ட்ரோல் (தனித்தனியாகப் படம் பிடிக்கப்பட்ட இரு காட்சிகளை ஒரு காட்சியாக மாற்றும் உத்தி), அகிலா கிரேன் (காமிராவைப் பள்ளத்தாக்கின் மேலேகூட எடுத்துச் செல்லும் உபகரணம்), வெப்பமில்லா மின்விளக்குகள், கணினி மூலம் செய்யக்கூடிய offline editing, எடுத்த காட்சியை உடனே பார்க்கக்கூடிய வசதியான வீடியோ அஸிஸ்ட் முதலியன படமெடுக்கும் முறையையே மாற்றிவிட்டன. ஆனால் தொழில் நுட்பத்தை மட்டுமே வைத்து உன்னத சினிமாவை உருவாக்கிவிட முடியாது. சிறந்த இலக்கியத்தைப் படைக்க நல்ல பேனா மட்டும் போதுமா? உலகின் சிறந்த திரைப்படங்கள் பல, மிகவும் எளிய உபகரணங்களை வைத்து உருவாக்கப்பட்டவை. தொழில் நுட்பமும் அழகியலும் ஒன்றுசேர வேண்டும். இந்தியாவில் வங்காள, கன்னட, மலையாளப் படங்களில் இது நடந்த அளவுக்குத் தமிழில் நடக்கவில்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரண்டு கதாநாயகர்கள் நீண்ட காலம் திரைத் துறையில் இருந்ததுதான் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட பெரிய தேக்கத்திற்குக் காரணம் என்று சொல்ல முடியுமா?

அழகியலிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தமிழ் சினிமா ஐம்பது-அறுபதுகளில் இருந்த தேக்க நிலைக்கு இரு பெரும் நட்சத்திரங்களின் கோலோச்சு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. அந்த இரண்டு அல்லது மூன்று பத்தாண்டுகளில் அலுப்புத்தட்டும் படியான ஒரே மாதிரியான படங்களே வெளிவந்து கொண்டிருந்தன. நட்சத்திரங்களுக்கேற்பக் கதைகள் படமாக்கப்பட்டன. அந்தக் காலத்தில், ஒரு தயாரிப்பாளர் நட்சத்திரத்தை ஒப்பந்தம் செய்வது, அவர் எடுக்கும் படத்திற்கு ஒரு இன்ஷ்யூரன்ஸ் போல. திரைப்பட உலகில் அவர்களது மேலாதிக்கம் தளர்ந்தபோதுதான் தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவாக்கக்கூடிய இயக்குநர்கள் தோன்றினார்கள். பாரதிராஜா, பாலு மகேந்திரா, ருத்ரையா, துரை மற்றும் மகேந்திரன் போன்ற படைப்பாளிகள் தோன்றி, ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்றினார்கள். பல கோணங்களில் சமரசம் செய்துகொண்டாலும் இந்த இயக்குநர்கள் நட்சத்திரங்களைச் சாராமல், புதிய அல்லது வளர்ந்துவரும் நடிகர்களைக் கொண்டு தங்களது படைப்புத் திறமையில் மட்டுமே நம்பிக்கை வைத்துச் செயல்பட்டார்கள். நட்சத்திரத்தின் ஆளுமை அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. வெற்றிப் படங்கள் எடுப்பதற்கு அவர்கள் தேவையில்லை என்பதை நிரூபித்தார்கள். அந்த இயக்குநர்கள், வளரும் நடிகர்களுடன் வேலை செய்ததால் தங்கள் எண்ணங்களுக்குத் திரையுருவம் கொடுக்க முடிந்தது. இயக்குநரின் முதன்மை நிலைநாட்டப்பட்டது. என்றாலும் அதைத் தொடர்ந்து பெரிய திசைதிருப்பம் ஒன்றும் ஏற்படவில்லை என்பதும் அழகியல் ரீதியில் தமிழ் சினிமா பெரிதாக ஒன்றும் வளர்ந்துவிடவில்லை என்பதும் வேறு விஷயம்.

பாடல்களுக்குத் தமிழ் சினிமாவில் இருக்கும் இடம் என்ன?

தமிழ் சினிமாவின் ஆரம்ப ஆண்டுகளில், கம்பெனி நாடகங்களை நடத்தி அப்படியே படமாக்கினார்கள். அதிலிருந்த பாட்டும் சினிமாவில் குடியேறி, நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டது. பாடல்கள் மிகுந்திருந்ததாலும் மக்களுக்கு தெரிந்த கதைகளே (சீதா கல்யாணம், நல்லதங்காள்) திரைப்படமாக எடுக்கப்பட்டதாலும் காட்சிப்படுத்துதல் பற்றிய இலக்கணம் உருவாக வாய்ப்பு குறைந்தது. அதனால் பாடல்களுக்குப் பெரிய இடம் கொடுத்தார்கள். பாடல்கள் நன்றாக இருக்கின்றன என்பதற்காகப் படம் பார்க்கப் போனவர்களே அதிகம். அந்தப் போக்கு விமர்சனமில்லாமல் வளர்ந்து பாடல்கள் தமிழ் சினிமாவின் மைய அடையாளமாக உருவாகியிருக்கிறது. திரையிசை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகத் தனியே வளர்ந்திருக்கிறது.

ஆனால் நாம் மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால், சினிமாவிற்குப் பாடல் இன்றியமையாதது அல்ல. இந்தியாவின் சிறந்த பத்துப் படங்களை எடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். பி. லெனினுக்கு இயக்குநராக தேசிய விருது பெற்றுத் தந்த ஊருக்கு நூறுபேர் படம் ஒரு எடுத்துக்காட்டு. பாடல் வந்தால், அது திரைக்கதையுடன் ஒன்றி இருக்க வேண்டும். அதாவது, அந்தப் பாட்டுக் காட்சியை எடுத்துவிட்டால் கதை நகராது. சேரனின் ஆட்டோ கிராப் படத்தில் வரும் 'ஞாபகம் வருதே' என்ற பாடல் இவ்வாறு இணைந்த பாடல். மணிரத்னத்தின் தளபதி படத்தில் வரும் 'சின்னத் தாயவள்' பாடலும் அவ்வாறே. ஆனால் பெருவாரியான பாடல்கள் கதையோட்டத்திற்கு ஒரு தடையாகவே வருகின்றன. திரையிசை என்பது பிம்பங்களுக்குத் துணைபோக வேண்டிய ஒன்று, ஒளியூட்டம்போல. அது ஒரு applied music. திரையும் இசையும் அல்ல. திரையிசை தனியாக நிற்கக்கூடியது அல்ல. தமிழ் சினிமாவைப் பொழுது போக்குத் தளத்திலேயே நிறுத்திவைத்ததற்குப் பாடல்கள், ஆட்டபாட்டம் முக்கியக் காரணங்கள் என்று நினைக்கிறேன். பொழுதுபோக்கு சினிமா கூடாது என்று சொல்லவில்லை. அதற்கு மேலும் பன்மடங்கு அதிகமான சாத்தியக்கூறுகள் உடையது சினிமா. நான் திரைப் பாடல்களைக் குறை கூறவில்லை என்பதையும் அழுத்திக் கூற விரும்புகிறேன்.

சமூகப் பொறுப்புள்ள ஒருவருக்குத் தமிழ் சினிமாவோடு உரையாடுவதற்குப் பொருட்படுத்தத்தக்க காரணங்கள் இருக்கின்றனவா? எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் சினிமாவுடனான உரையாடலைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவின் மீது நீங்கள் நிறையக் குற்றச் சாட்டுகளைச் சுமத்த முடியும். ஆனால் பொதுச் சமூகத்தின் மீதான அதன் தாக்கங்கள் மிக வலிமையானவை. அது முன்னிறுத்தும் லட்சியவாதத்தின் பாதிப்புக்குட்படாதவர்கள் குறைவு. தவிர, சாதாரண மனிதனுக்கு எப்படி வாழ வேண்டும் எனக் கற்றுக் கொடுக்கவும் முற்படுகிறது. ஒருவகையான பிரச்சாரத் தன்மையுடன் அது முன்னிறுத்தும் சில விஷயங்கள் மக்களுக்கு லட்சியமாகக்கூடத் தென்படுகின்றன. குடிக்கக் கூடாது, சிக்கனமாக வாழ வேண்டும் என்று அது சொல்கிற விஷயங்களைத் தமது வாழ்வுக்கான வழிகாட்டும் நெறிகளாகக்கூடப் பார்க்கிறார்கள்.

உலக சினிமா குறித்துத் தமிழில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகம்கூட வரவில்லை. இது குறித்து நீங்கள் எந்த அளவு யோசித்திருக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவைக் குறித்துப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லையே. ஒரு துறை சார்ந்து ஆழமான பரிசீலனைகள் நிகழ வேண்டுமானால் அதற்கான வளமான சொல்லாடல்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும். இலக்கியம் குறித்து நடந்துவரும் விவாதங்களிலிருந்து உருப்பெற்றிருக்கும் சொற்கள்தாம் அது குறித்த ஆழமான விவாதங்களுக்குப் பாதை அமைத்துக்கொடுத்திருக்கின்றன. தமிழ் சினிமா குறித்துப் பேசுபவர்கள் கதை, பாட்டு என்று மிக மேலோட்டமான விஷயங்களுடன் தேங்கிவிடுகிறார்கள். தமிழ் சினிமா குறித்து விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்னும் மனோபாவம் அறிவுத் துறையினரிடம் இருக்கிறது. ஆழமான விவாதங்களை உருவாக்காமல் செறிவான சொல்லாடல்களை உருவாக்க முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயம்.

தமிழ் சினிமா பற்றிப் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. முக்கியமான ஆங்கில நூல் ஒன்று சிட்னியில் இலங்கைத் தமிழர் வேலாயுதத்தைத் தொகுப்பாசிரியராகக்கொண்டு உருவாகிக்கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற ரௌட்லெட்ஜ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இதில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ராஜன் குறை போன்ற ஆய்வாளர்கள் இடம்பெறுகிறார்கள். வாஷிங்டனில் சினிமா போதிக்கும் லலிதா கோபாலன் இந்திய சினிமா பற்றி 24 Frames என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். 24 இயல்கள் கொண்ட இந்த நூலில் மூன்று இயல்கள் தமிழ் சினிமா பற்றியன. எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு இயல் எழுதியுள்ளார். தமிழ் சினிமா பற்றிய நூல்கள் தமிழில் குறைவுதான். அறந்தை நாராயணன், புலவர் கோவிந்தன் இவர்களுடைய நூல்கள் முக்கியமானவை. இங்கு தமிழில் ஒரு சொல்லாடலே உருவாகவில்லை. அதற்கு அடிப்படையான கலைச் சொற்களும் உருவாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, develop (the film) என்ற சொல்லுக்கு என்ன தமிழ்ச் சொல்? அரசு விளம்பரங்களில் 'பதனிடுதல்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தோலைத்தான் பதனிடுவார்கள். பழைய பத்திரிகைகளில், நிழற்படம் பற்றிய கட்டுரைகளில் 'உருத்துலக்கல்' என்கிறார்கள். பொருத்தமான சொல்.

தமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. ஆகவே நாம் துறைச் சொற்களை உருவாக்க முடியும். ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சினையை, பிரெஞ்சு சொற்களை அப்படியே பயன்படுத்திச் சமாளித்தார்கள், montage, mise en scene, film noir, cinema verite என. ஏன் பிரெஞ்சு மொழி? சினிமா பிறந்த பிரான்ஸில் தொடக்கத்திலேயே சினிமா ஒரு கலை வடிவமாகப் படித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது குறித்த துறைச் சொற்கள் உருவாயின. சீரிய சொல்லாடல் மௌன சகாப்தத்திலேயே உருவானது. வரலாற்றில் இடம்பெற்ற Abel Gance இயக்கிய Napoleon  (1927) போன்ற படங்கள் மௌனப் படங்கள்தாம்.

தமிழில் சினிமா பற்றிய கலைச் சொற்கள், சினிமா சார்ந்த கருதுகோள்களைக் குறிக்கும் சொற்றொடர்கள் இல்லாதது இதைப் பற்றிய சீரிய சொல்லாடல் உருவாகாததற்கும் நூல்கள் வெளிவராததற்கும் முக்கியக் காரணம். சில பத்திரிகைகளில் சினிமா பற்றிய கட்டுரைகள் இப்போது வர ஆரம்பித்துள்ளது நல்ல அறிகுறி. ஆயினும் துறைச் சொற்கள் புழக்கத்தில் வராதது பெரும் குறை. துறைச் சொற்கள் இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தோடு சிலம்பமாடுவது போன்றது.

தமிழ் சினிமா பற்றிப் பல M.Phil., Ph.D. ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'திரைப்பாடல்களில் ஜாதி', 'தமிழ் சினிமாவில் பெண்ணியம்' என. இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது. இந்த ஆய்வுகளும் தமிழ்த் துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பாட்டுப் புத்தகத்தையும் வசனத்தையும் வைத்துச் செய்யப்படும் ஆய்வுகள் இவை.

இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் நிலவுகின்றன. அது படைப்பாளியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது; பண்பாட்டுச் சீர்குலைவை அது தடுக்க முயற்சிக்கிறது என்பன போன்ற எதிரெதிரான விமர்சனங்கள் இருக்கின்றன. இதைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய முக்கியமான துறைமுக நகரங்களில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டுப் படங்களைத் தணிக்கை செய்வதற்காக அதிகாரிகளின் குழுக்களை அமைத்தது வெள்ளையர் அரசு. தமது அரசுக்கு எதிரான பிரச்சார சாதனமாக சினிமா உருவெடுத்துவிடக் கூடாது என ஆங்கிலேயர்கள் எச்சரிக்கையாயிருந்தார்கள். காந்தியக் கொள்கைகள், பொதுவுடமைக் கருத்தியல்கள், தொழிலாளர் பிரச்சினை, இந்து முஸ்லிம் பிரச்சினை குறித்துத் திரைப்படங்களில் விவாதிப்பதைத் தடைசெய்தனர். பிறகு எந்தவொரு சமூகப் பிரச்சினையையும் கையாள்வதாகத் திரைப்படம் இருக்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு பிரிட்டிஷ் அரசு தணிக்கை முறையை இறுக்கமாக்கியது. எந்தச் சமூகப் பிரச்சினையைப் பற்றிப் பேசினாலும் அது காந்தியுடனோ காங்கிரசுடனோ தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டுத் தணிக்கைக்குட்படுத்தப்பட்டன. ராட்டையைக்கூடக் காட்ட முடியாது.

இத்தகையதொரு தணிக்கை முறை அப்போதைய திரைப்படங்களின் உள்ளடக்கத்தைப் பெரிய அளவில் பாதித்திருக்க வாய்ப்புண்டு.

ஆமாம். ஆங்கில அரசின் இத்தகைய போக்குதான் இந்திய சினிமாவை வெறும் பொழுதுபோக்குச் சாதனமாக உருவாக்கியது எனலாம். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, சந்திரலேகா போன்ற கற்பனைகளுக்குள் தஞ்சம் புகத் தொடங்கியது இந்திய சினிமா. திரைப்படத் தயாரிப்பாளர்களிடையே ஒரு வகையான தப்பித்தல்வாதம் உருவாவதற்கு அப்போதைய தணிக்கை முறை ஒரு முக்கியக் காரணம். பிறகு இதுதான் சினிமா என்பதுபோல ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. நேரம் கொல்லிப் படங்கள் நிறைய வர ஆரம்பித்தன.

சுதந்திரத்திற்குப் பிறகு தணிக்கைக் கோட்பாடுகளில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன.

ஆமாம். அமைப்பு ரீதியில் பல மாற்றங்கள் வந்துள்ளன. இப்பொழுது சுயேச்சைத் தன்மை கொண்ட அரசு சார்பு அமைப்பாகத் தணிக்கைக் குழு செயல்படுகிறது. இந்தியத் தணிக்கை முறையின் ஒரு நோக்கம் சினிமாவின் தரத்தை உயர்த்துவது. ஆனால் அந்தக் குழுக்களில் இடம்பெற்றுவரும் உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு சினிமாவோடு பரிச்சயம் உண்டு, எத்தனை பேருக்கு அது சார்ந்த புரிதல் இருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பாலியல் தொடர்பான காட்சிகளை மட்டுமே தணிக்கைக்குட்படுத்துவதில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறது அக்குழு. எனினும் ஆரம்பமுதலே, சினிமா பற்றிப் பரிச்சயம் ஏதும் இல்லாதவர்களே பெருவாரியாகத் தணிக்கைக் குழுவில் இடம் பெற்றனர். அவரவரது கரிசனங்களின் அடிப்படையில் திரைப்படத்தைப் பார்த்தனர். பெண்களை இழிவுபடுத்தும் வசனக் காட்சிகள், மனைவியைக் கணவன் அடிப்பது நியாயப்படுத்தப்படுவது (சம்சாரம் அது மின்சாரம்), சிறுபான்மையினரைத் தாக்கும் வசனம், காட்சிகள், எல்லாவற்றிகும் மேலாக வன்முறைக் காட்சிகள் ஆகியவற்றை வளரவிட்டார்கள். தற்போதைய திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகள் மிகவும் அபாயகரமானவை என்று நான் நினைக்கிறேன்.

தீபா மேத்தாவின் ஃபயர் படம் சில அடிப்படைவாதிகளின் எதிர்ப்புக்குள்ளானது. அரசின் அதிகாரபூர்வத் தணிக்கை முறை தவிர வேறு பல வகைப்பட்ட தணிக்கை முறைகளும் செயல்படுகின்றன.

இது போன்ற அரசு சாரா தணிக்கை முறை நீண்ட காலமாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஒன்றுதான். சிறை, அக்ரஹாரத்தில் கழுதை, விருமாண்டி, பம்பாய், ஒரே ஒரு கிராமத்தில் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். சினிமாவை ஒரு கலையாக அணுகுவதற்கும் அது குறித்த விவாதங்களை எதிர்கொள்வதற்கும் மாற்றுக் கருத்துகளைப் பேசுவதற்கும் நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. ஒரு கலை தன்னளவிலேயே மாற்றுக் கருத்துகளுக்கான பரப்பையும் விவாதங்களுக்கான வாய்ப்பையும் கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொண்டால் பதற்றமடைவதற்கு எந்த அவசியமும் உருவாகாது அல்லவா?

தமிழில் குறும்படங்களின் நிலைமை எவ்வாறு உள்ளது?

குறும்படம், விவரணப் படம், இவை தமிழில் தயாரிக்கப்படுவது மகிழ்ச்சியானதுதான். இப்போது விலை குறைந்த காமிராக்கள் வந்துவிட்டன. வாடகைக்கும் எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய குறும்படங்கள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். குறும்பட இயக்கமொன்று உருவானது போன்ற பிரமை ஏற்படுகிறது. ஆனால் பெருவாரியான படங்கள் எவ்வாறு இருக்கின்றன? ஆளுமைகளைப் பற்றிய படங்களில், அந்த மனிதரை உட்காரவைத்துப் பேசச் சொல்லிப் படமாக்கிவிடுகிறார்கள். இது குறும்படம் என்ற பெயரில் காட்டப்படுகிறது. குறும்படத்திற்கென ஒரு இலக்கணம், இயல்புகள், வடிவமைப்பு உண்டு. பின்புல ஆய்வு செய்வது முக்கியம். பறவைகள் பற்றிக் குறும்படமொன்று எடுக்க நல்கை கிடைத்துவிட்டது என்றும் ஒரு நேர்காணல் வேண்டும் என்றும் ஒருவர் வீட்டிற்கு வந்தார். காமிராவை நகர்த்தி, விளக்கையும் போட்டுவிட்டு, "சார்... இந்தத் தண்ணீரையும் பாலையும் பிரிக்குமே ... அந்தப் பறவையைப் பற்றிப் பேசுங்கள். Roll" என்றாரே பார்க்கலாம். தமிழ்நாட்டில் ரமணி, சௌதாமினி, செந்தமிழன், ரவி சுப்ரமணியம், அம்ஷன் குமார், காஞ்சனை சீனிவாசன் போன்றோர் குறும்படத் தளத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தொகுப்பு: ந. கவிதா
உதவி: பாலசுப்பிரமணியன்

உள்ளடக்கம்

Google Ads.....


Google