Google   www kalachuvadu.com

 

எதிர்வினை

இதுவும் ஒரு வகையில் பாராட்டு

பழனிவேள்

திரு. செ.ச. செந்தில்நாதன் பதிப்பாளர் என்ற முறையில் எனது விமர்சனத்தை எதிர்வினை என்னும் பெயரில் அவமானப்படுத்தியுள்ளார். இதனை முழுக்க ஏற்றுக்கொள்கிறேன். முதிர்ச்சியற்றவனும் பொறுப்பற்றவனும் முட்டாளும் அருவருப்பாக எழுதுபவனும் தனிநபர்த் தாக்குதலைத் தொடுப்பவனும் குரோத மனப்பாங்காளனும் அவதூறுகள் கிளப்பி விடுபவனும் என்ற ரீதியில், மேற்கூறிய வசவுகள் எனக்கு மட்டுமல்ல, சிறிது அழுத்தமாக எழுதும் அனைத்து விமர்சகர்களுக்கும் கிடைப்பதுதான். இதுவும் ஒரு வகையில் பாராட்டு எனவே கருதுகிறேன்.

பதிப்பாளர் ஏற்றுக்கொள்வதற்காக விமர்சனம் எழுதப்படுவதில்லை. மதிப்புரை என்பது வாசகருக்கும் இதழுக்குமான உறவு. அதை வாசகர்களும் முழுதாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதல்ல. ஒரு வகை வாசிப்பைத் தூண்டும்போது அப்புத்தகம் வாசகருக்குள் வேறு பரிணாமத்தில் வேறு பல வகை வாசிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மற்றபடி விமர்சகன் பதிப்பாளருக்கு சேல்ஸ் ரெப் அல்ல என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் விமர்சித்த எழுத்தாளர்களுடனோ பாராட்டிய எழுத்தாளர்களுடனோ எனக்கு ரத்த உறவோ பங்காளிச் சண்டையோ இல்லை. தமிழ்க்கொடி தொகுப்பில் எல்லாமே சிறப்பாக அமைந்துவிட்டதாக நீங்கள் நினைப்பது அந்நிகழ்வில் இருப்பவர்களுக்கு உண்டாகக்கூடியதே. வெளியே இருந்து வாசிக்கும்போது அதிலுள்ள பலகீனங்கள் புரியும். தமிழில் இது முதல் முயற்சி என்று நீங்களே தோளைத் தட்டிக்கொள்ளும் பக்குவத்தில் இதெல்லாம் புரியாது.

சுசி. திருஞானம் இயற்கை வேளாண்மையைப் பற்றி எழுதியுள்ளார். இந்தியாவின் ரொட்டிக் கூடை எப்படிப் பூசானம் பிடித்துவிட்டதோ அதே நிலைதான் தமிழகத்திலும். அங்கே ஹரிகிருஷ்ணபுரா விற்பனைக்கு உள்ளது. இங்கே பேட்டையும் பட்டியும் பாக்கமும் குப்பமும் புரமும் காலியாகி நகரின் கட்டிடத் தொழிலான உதிரிகளாகக் குவிகின்றன. சுசி. திருஞானத்தின் பட்டியலில், கணக்கில் நம்மாழ்வார் என்ற பெயருக்கு ஏதும் முக்கியமில்லையா? சங்கீதா ஸ்ரீராம் எழுதிய கட்டுரைகளும் மடகாஸ்கர் அறுவடை முறையும் குறித்து ஏதும் பேச வேண்டுமா? திரு. செ.ச.செ., இயற்கை வேளாண்மையில் குறிப்பிடப்படும் யாவும் அரசின் கண்டு பிடிப்பல்ல. பல்கலைத் துணைவேந்தர், விவசாயத்தின் குறியீடல்ல. ஒரு மான்யமும் விவசாயிக்கு ஒழுங்காகக் கிடைக்காத நிலையில் அரசு விவசாயியின் கொட்டையைப் பிடித்துக்கொண்டுதான் பேரம் பேசுகிறது என்பதை செ.ச.செ. புரிந்துகொள்ள வேண்டும். ஒரு லாரி உரிமையாளருக்கு உள்ள உரிமைகூட 10 ஏக்கர் விவசாயிக்கு இல்லை. விவசாயத் துறை சார்ந்த குறிப்பிடத்தகும் தன்னெழுச்சி கடந்த நாற்பதாண்டுகளாக கம்யூனிஸ்டுகள் ஆதரவில்லாமல் நடந்தனவா என்பதனை நெட்டில் அறியவும் செ.ச.செ.

சி. மோகன் நுண்கலை சார்ந்த தகவலறிவு மிகுந்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நிகழ்காலத்தை அவர் தேடி அறிந்ததைவிட அவரிடம் வந்தடைந்தவற்றை மட்டுமே அறிந்துள்ளார் என்பது அவருடைய கட்டுரையை வாசிக்கும்போது வெளிப்படையாகத் தெரியும்.

அ. ராமசாமியின் முனைவர் பட்ட ஆய்வேட்டு அறிக்கை (தொலைக் காட்சித் தொடர்கள் குறித்து) பலவீனமானது. இந்தக் கட்டுரையின் தவறையே ஸ்ரீநேசனது கட்டுரையும் செய்துள்ளது. சீரியல்கள் பேணிவரும் பிராமணமயமாக்க அறம், நீதி, ஒழுக்கம், ஆச்சாரங்கள் சினிமாவைவிடக் கடுமையான தணிக்கையில் இருக்கும் கருப்பு விரோதம். பிரைம் டைமில் அனைத்து சீரியல்களிலும் இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை விலாவரியாக சிலாகிக்கப்படுகிறது. பெண்கள் விரும்புகிறார்களா, திணிக்கப்படுகிறதா? சீரியலில் பெண் உடல் வெளிப்பாடு நாகரீகமாகத்தான் இருக்கிறதா? 'சீரியல்களில் வரும் நிலம்?' கட்டுரை என்ன சீரியல் சிறப்பு மலருக்காக எழுதப்படுகிறதா செ.ச. செ.? பதிவுகளுக்குப் பின்னே படைப்பாளியின் நோக்கு அமையும்போதுதான் அது செறிவு பெறும். இத்தகைய பதிவினை வாசகன் ஏதேனும் நாளிதழ் இணைப்பு மலரில் படித்துவிட முடியும். இதுவே ஜெயந்தி சங்கருக்கும் மணி மணிவண்ணனுக்கும் பொருந்தும்.

அதோடு, கடைசியாக, இது போன்ற விமரிசனங்கள் வெளியிடாதிருக்கக் காலச்சுவடுக்குச் சிறிய மிரட்டல் விடப்பட்டுள்ளது. இது இதழ்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பதிப்பாளர்கள் எதிர்பார்ப்பின் விளைவே. முதன்முதலாகப் பதிப்பாள விருப்பினை வெளிப்படுத்திய வகையில் திரு. செ.ச.செ. பாராட்டுக்குரியவர்.

மற்றபடி உண்மைகள் லேசாக இருந்தாலும் பத்திரப்படுத்தவும் பொய்கள் எவ்வளவு கனமாக இருந்தாலும் கிழித்து எறியவும் வாசகனுக்கு உரிமை உண்டு.

 


 

திருவள்ளுவம் நூலின் நோக்கம்

க.ப. அறவாணன்
சென்னை 600 029

தங்கள் அண்மை இதழில் என்னுடைய திருவள்ளுவம் எனும் நூல் பற்றித் தவறான தகவல் வெளிவந்திருக்கிறது.

திருவள்ளுவம் எனும் 792 பக்கங்களை உடைய என் நூல் திருக்குறளுக்கு வரையப்பட்ட உரை நூல் அன்று; திருக்குறள் பதிப்பும் அன்று. தங்கள் இதழில் வெளிவந்துள்ள குறிப்பு திருக்குறள் உரைநூல் என்றும், பதிப்பு என்றும் பிழைபடக் குறிக்கப்பெற்றுள்ளது. இந்நூல் திருக்குறளைப் பற்றிய ஆராய்ச்சி நூல். இச்செய்திகள் தங்கள் இதழில் வந்த குறிப்பில் மறைக்கப் பெற்றுள்ளன. ஐந்நூற்று ஆறு பக்கங்களில் முதற் பகுதியாகத் திருக்குறள் பற்றிய பதினான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளும் (முதல் 188 பக்கங்கள்), எஞ்சிய 318 பக்கங்களில் திருக்குறள் கருத்தடைவும் பொருளடைவும் அகர வரிசைத் திருக்குறள் பாக்களும் வழங்கப் பெற்றுள்ளன.

இரண்டாம் பகுதி, திருக்குறளைக் கருத்தடைவு (tலீமீனீணீtவீநீ வீஸீபீமீஜ்) அடிப்படையில் பகுத்து உரை கூறுகிறது. இவ்வுரைப் பகுதியும் 286 பக்கங்கள் மட்டுமே. காமத்துப் பாலில் அதிகார வரிசை முறையோ திருக்குறள் வரிசை முறையோ எதுவும் மாற்றப்பெறவில்லை. எஞ்சிய அறத்துப் பால், பொருட்பால் பகுதியிலும், பரிமேலழகர் மேற்கொண்ட எண் வரிசை முறை திருக்குறள் எனப் பெயரிடப்பட்டு ஒவ்வொரு திருக்குறளை அடுத்தும் நிரல் பட நல்கப்பெற்றுள்ளது. அந்த எண்கள் மாற்றப்பெறவில்லை. நூலினுடைய நோக்கம் இதுதான். உரை எழுதுவது நோக்கம் அன்று, பதிப்பதும் நோக்கம் அன்று.

உள்நோக்கம் கொண்ட சிலர், இந்நூலைப் பற்றித் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றனர். மிகச் சிறப்பாகவும் கவனத்துடனும் சரிபார்ப்புடனும் வெளிவரும் தங்கள் புகழ்பெற்ற ஏட்டில் பொய்க் கருத்து இடம்பெற்றது என் போன்ற தொடர் வாசகனுக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

உள்ளடக்கம்

Google Ads.....


Google