Google   www kalachuvadu.com

 

தலையங்கம்

வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான்

இந்தியாவில் பல்புகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை இப்போது கிரீன்பீஸ் இயக்கம் தொடங்கியுள்ளது. அப்படித் தடைசெய்யப்பட்டால் நமது நாட்டின் மின்சக்தி பெருமளவில் மிச்சமாகும் என்பதோடு பூமியின் சூடேற்றம் (global warming) எனப்படும் உலக அளவிலான வெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் நாம் உதவ முடியும் என கிரீன்பீஸ் கூறுகிறது. பிரபஞ்ச வெப்பத்தை அதிகரிக்கும் மாசுகளை ஏற்படுத்துகிற மோசமான ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகியவற்றோடு இந்தியாவும் அந்தப் பட்டியலில் இருக்கிறது. எதிர்வரும் ஆண்டுகளில் பிரபஞ்ச வெப்பம் சுமார் நான்கு டிகிரி செல்ஷியஸ்வரை அதிகரிக்கும் எனவும் அதனால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டுப் பலத்த சேதம் உண்டாகும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் ஜூன் 2006 கணக்குப்படி, நமது மின்சாரத் தேவை 8,500 மெகாவாட். ஆனால், நமது மாநிலம் உற்பத்திசெய்வது 10,098 மெகாவாட் மின்சாரம். அதாவது நமது தேவையைவிட அதிகமாகவே நாம் இப்போது மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகிறோம். நமது மாநிலத்தின் மின்சாரத் தேவை ஆண்டுதோறும் சுமார் 10 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துவருகிறது. இலவச கலர் டி.வி., சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றால் இது இன்னும் கொஞ்சம் கூடலாம். எதிர்கால மின் தேவைகளைச் சமாளிப்பதற்காகவே அணு உலைகளைக் கட்டுவதாக நமது அரசுகள் கூறிவருகின்றன.

தற்போது கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் கட்டப்படுகின்றன. புதிதாகப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தால் மேலும் நான்கு அணு உலைகள் அமையவுள்ளன. அவை எல்லாம் சேர்ந்து மொத்தம் 6,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவிருக்கின்றன. இதில் 3,000 மெகாவாட் தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வேக வேகமாக அமைக்கப்படுவதைப் பார்க்கும்போது வெகு விரைவிலேயே நாம் மின்சாரப் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக மாறிவிடுவோம் என்பது உறுதி. இப்போது கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு அணு உலைகளும் 2008இல் உற்பத்தியைத் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி உற்பத்தி தொடங்கப்பட்டாலும்கூட அது நமது மின்சாரத் தேவையை நிறைவுசெய்வது கடினம்.

இலவச கலர் டி.வி.யின் காரணமாக வீட்டு உபயோகத்துக்கான மின்சாரத் தேவையும் கணிசமாக அதிகரிக்கும். தற்போது மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 27 விழுக்காடு வீட்டு உபயோகத்துக்குப் போகிறது. தொழில் துறைக்கு 34% செலவாகிறது. விவசாயத் துறைக்கு 25% செலவிடப்படுகிறது. அடுத்து வரும் பதினோராம் ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத் துறைக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பது நடைமுறைக்கு வந்தால், அதற்கான மின்சாரச் செலவும் அதிகரிக்கும். ஆக, நமது மாநிலத்தின் மின்சாரத் தேவை ஆண்டுக்கு 10% என்ற விகிதத்தைவிடப் பல மடங்கு அதிகமாகும் என்பதே உண்மை. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைக்கப்படும் தொழிற்சாலைகள் தமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டிருந்தாலும், எல்லாத் தொழிற்சாலைகளும் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல. எனவே, நமது மாநிலம் கடுமையான மின் பற்றாக்குறையை எதிர்கொள்ளப்போவது நிதர்சன மாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டின் மின் உற்பத்தியில் தற்போது அணுமின் நிலையங்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவுதான். கல்பாக்கத்தில் உள்ள அணு மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் 460 மெகாவாட் மட்டுமே. ஆனால், காற்றாலைகள் மூலமாக உற்பத்திசெய்யப்படுவதோ 2,000 மெகாவாட். மிகவும் நீண்ட கடற்கரையைக் கொண்ட நமது மாநிலத்தில் காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரிப்பதற்கு மேலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. காற்றாலை மின் உற்பத்தி இரு மடங்காக மாறினால் அது கூடங்குளத்தில் அமையவிருக்கும் நான்கு அணு உலைகளுக்கு ஈடான மின்சாரத்தை அளித்துவிடும். ஆனால், இது பற்றி அதிகாரவர்க்கம் ஆர்வம் காட்டுவதில்லை.

தமிழ்நாட்டின் மின் உற்பத்தியில் மேலும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை ஓரிரு ஆண்டுகளில் அதிகரிப்பதற்கான திட்டத்தை மாநில மின்துறை தயாரித்துள்ளது. வட சென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தலா 500 மெகாவாட் மின்சாரத்தைக் கூடுதலாகத் தயாரிப்பதற்கும் எண்ணூரில் புதிதாக 500 மெகாவாட் நிலையம் அமைப்பதற்கும் அது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனையும் தமிழக மின்துறையின் பரிசீலனையில் உள்ளது. இப்படி மின் உற்பத்தியை அதிகரிக்கப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிவரும் அரசாங்கம் மின்சக்தியைச் சிக்கனப்படுத்தப் போதுமான கவனம் செலுத்துவதில்லை.

இந்திய அளவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் சுமார் இருபது சதவீதம், வீடுகளில் விளக்கெரிப்பதற்கே செலவாகிவிடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை மிச்சப்படுத்துவதற்கு பல்புகளைத் தடைசெய்துவிட்டு 'காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் லைட்டுகளை (compact fluorescent lights - CFL) பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வகை விளக்குகள் தற்போதுள்ள பல்புகளைவிட அதிக விலை கொண்டவை. என்றாலும் அவை பல்புகளைக் காட்டிலும் எண்பது சதவீதம் குறைவான மின்சாரத்தில் எரிவதோடு நீண்ட காலம் நீடிக்கக்கூடியவை, இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஆறரை கோடி பல்புகள் பயன்படுத்தப்படுவதாக கிரீன்பீஸ் கூறுகிறது.

மின்சாரத் தேவைக்காக அணு உலைகளைக் கட்டி மக்களின் உயிர்களைப் பணயம்வைப்பதைக்காட்டிலும் மின்சக்தியைச் சேமிக்கும் இத்தகைய முறைகளைக் கையாள அரசு முன்வர வேண்டும். வெள்ளம் வரும்போதும் வறட்சி ஏற்படும்போதும் கூப்பாடு போடுவதைக் காட்டிலும், அவற்றுக்குக் காரணமான பூமி சூடேற்றம் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க முனையும் அரசாங்கமே மக்கள் நல அரசாக இருக்கும்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google