Google   www kalachuvadu.com

 

அறிவிப்பு

கடவு - களம்புதிது இணைந்து நடத்தும்
பெண்கள் இலக்கியச் சந்திப்பு - 2007

தமிழ் கலை இலக்கிய வெளியில் இன்று பெண்களின் பங்களிப்பு தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. முன்னெப்போதையும் விடப் பெண் எழுத்து முன்னோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது. தமிழ் இலக்கிய மைய நீரோட்டம் என்பது பெண்ணெழுத்தைப் புறமொதுக்கி அடையாளம் காண இயலாதவாறு அவர்களது பதிவுகள் வலிமை வாய்ந்ததாகத் திகழ்கின்றன. கலை, இலக்கியத் துறைக்குப் பெண் பங்கேற்பு வண்ணமும் வனப்பும் கூட்டியுள்ள அதே வேளையில் பெண் படைப்புகள் எதிர்கொண்டுள்ள விமர்சனத் தாக்குதல்களின் பின்புலத்தில் உள்ள அதிகார மனோபாவத்தை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

இச்சூழலில் பெண் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இவர்களிடையே பரஸ்பரப் புரிந்துணர்வும் தோழமையும் கனிவதற்கான வாய்ப்பை உருவாக்கவும் பெண் படைப்புகள் குறித்துத் திறந்த மனத்துடன் கூடிய காத்திரமான உரையாடலைத் தொடங்கவும் பாலின ஒடுக்குமுறை, பெண் கல்வி, சுற்றுச் சூழல், ஏகாதிபத்தியம், தனியார்மயமாதல், ஊடகச் செயல்பாடுகள் மற்றும் அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்த பெண்ணின் பார்வைகளை கூர்மைப்படுத்தவும் களம் அமைத்துத் தருகிறது பெண்கள் இலக்கியச் சந்திப்பு - 2007. இந்நிகழ்வை 06.05.2007 (ஞாயிறு) அன்று விருத்தாசலம் தமிழ் நூல் காப்பகத்தில் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்வில் கருத்தரங்கம், கவிதை வாசிப்பு, நூல் வெளியீடு, ஓவியக் கண்காட்சி, நாடகம் போன்ற நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்க வ. கீதா, அ. மங்கை, திலகவதி, சிவகாமி, பாமா, கனிமொழி, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, உமாமகேஸ்வரி, க்ருஷாங்கினி, தமிழச்சி, வெண்ணிலா, சுகிர்தராணி, இளம்பிறை, வைகைச் செல்வி, மெர்ஸி லதா, கீதாஞ்சலி, பிரியதர்ஷினி, சுபஸ்ரீ, செல்வராணி, கவிதா, சந்திரா இவர்களுடன் மலையாள எழுத்தாளர்கள் விஜயலெட்சுமி, ரோஸ்மேரி ஆகியோரும் இசைவளித்துள்ளனர்.

தொடர்ந்து பெண்ணிய விவாதங்களில் அக்கறையுடன் இயங்கிவரும் அ. மார்க்ஸ், வீ. அரசு, வெளி ரங்கராஜன், ரமேஷ்-பிரேம் போன்றோரும் இச்சந்திப்பில் பங்குபெற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற உங்களது ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் எதிர்நோக்குகிறோம்.

பங்கேற்போர் பட்டியல் விரிவடையக்கூடியது. தொடர்பின்மையின் காரணமாக விடுபட்டிருக்கும் பெண் படைப்பாளிகளுடன் தொடர்புகொள்ளும் முயற்சியை மேற் கொண்டுள்ளோம்.

நிகழ்வின் ஒத்துழைப்பாளர்கள்

தேவேந்திர பூபதி (கடவு)
கரிகாலன் (களம்புதிது)

அன்புடன்
சு. தமிழ்ச்செல்வி
ஒருங்கிணைப்பாளர்
பெண் இலக்கியச் சந்திப்பு - 2007
தொடர்பு முகவரி:
486-1, பாலாஜி நகர்,
பெரியார் நகர்-தெற்கு, விருத்தாசலம் - 606001.
அலைபேசி: 9360021681

உள்ளடக்கம்

Google Ads.....


Google