இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமில் ஒரு கணக்காளரின் மகனாகப்
பிறந்தார் லாரி வில்ஃபிரட் பேக்கர். பள்ளிப் படிப்பில் கணக்கில் படுமோசமானவராக
இருந்தார். மகனையும் ஒரு கணக்காளனாக்க வேண்டும் என்று விரும்பிய தந்தை பேக்கரின் ஆசை
அதனால் பலிக்காமலேபோனது. பிள்ளை பேக்கர் கட்டடக் கலை கற்கப் போனார்.
பேக்கரின் குடும்பத்தினர் அதிகாரபூர்வமான மதத்துடன் உடன்படாத குவேக்கர் (Quaker) பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே, அரசுச் சலுகைகள் எதுவும் கிடைக்காது. அதற்கிடையில்
இரண்டாம் உலகப் போர் மூண்டது.
இளைஞர்கள் கட்டாய ராணுவச் சேவைக்காக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போரில் பங்கெடுக்க
விரும்பாத லாரி பேக்கர், அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். பிரிட்டிஷ்
ராணுவத்துக்குச் சேவைசெய்யத் தீர்மானித்தார். அதன் பொருட்டுச் சீனாவுக்குப் போனார்.
ராணுவச் சேவை முடிந்து பம்பாய் வழி நாடு திரும்ப இருந்தார். கப்பல் திரும்பி வர
மூன்று மாதங்கள் தாமதிக்கும் என்று தெரியவந்ததும் பம்பாயிலேயே தங்கிவிட நேர்ந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒருமுறை காந்திஜியின் சொற்பொழிவைக் கேட்கப் போனார் அவர்.
லாரி போட்டிருந்த காலணிகளைக் கவனித்தார் காந்திஜி. வீணானது என்று ஒதுக்கப்பட்ட
பொருட்களிருந்து தயாரிக்கப்பட்டவை அவை. பூமியில் ஒரு பொருளும் வீணாகப்போவதில்லை
என்றும் இந்தியாவின் வறுமையைமாற்றுவது இது போன்ற அணுகுமுறைகள்தான் என்றும்
குறிப்பிட்டார் காந்தி. அந்தச் சந்திப்பு லாரிக்குப் பெரும் உந்துதலாக இருந்தது.
இங்கிலாந்து திரும்பிய லாரி புதிய தீர்மானத்துடன் மீண்டும் இந்தியாவுக்கு வந்தார்.
தொழுநோயாளிகளுக்கிடையில் தொண்டாற்றும் மிஷனரி அமைப்புக்கு உதவுவதற்காக வந்தார்.
ஹைதராபாதில் நடத்திக்கொண்டிருந்த தொண்டுச் செயல்களுக்கிடையில்தான் அவர்
தொழுநோயாளிகள் தங்குவதற்காகக் குறைந்த செலவுள்ள வீடுகளைக் கட்ட ஆரம்பித்தார். ஆனால்
தொழுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதோடு அது போன்ற பிரத்தியேகமான
தங்குமிடங்களுக்குத் தேவையில்லாமல்
போனது. லாரியின் வாழ்க்கை வேறு திசைக்குத்
திரும்பியது. அந்தக் காலகட்டத்தில் நண்பராக இருந்த டாக்டர் பி.ஜே. சாண்டியின் மகள்
டாக்டர் எலிசபெத், தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். லாரியும் எலிசபெத்தும்
தம்பதி ஆயினர். நேபாள - திபெத் எல்லைப் பகுதியிலிருந்த பித்ரோகாட் என்ற கிராமத்தில்
அவர்கள் குடியேறினார்கள். ஆதரவற்ற கிராமவாசிகளுக்கு டாக்டர் எலிசபெத் மருத்துவ
உதவியளித்தார். லாரி அவர்களுக்காகக் கட்டடப் பணி ஆற்றினார். பதினாறு வருடங்கள்
தம்பதியரின் சேவை தொடர்ந்தது. பின்னர் கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்
பகுதியான வாகமண்ணில் மீண்டும் சேவையைத் தொடர்ந்தனர். அதன் பின்னர்
திருவனந்தபுரத்தில் நிரந்தர வாசம். நாற்பத்தாறு வருடங்கள் நீண்ட புகழ் பெற்றதும்
அர்த்தமுள்ளதுமான வாழ்க்கை அது.
மரபு சார்ந்ததும் நவீனமானதுமான கட்டுமானக் கலைப் பாணிகளைக் கேரளத்தவர்கள்
பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருந்த காலம். அந்தச் சூழலில்தான் லாரி முற்றிலும்
வேறுபட்ட அணுகுமுறையுடன் ஆர்ப்பாட்டமில்லாமல் பிரவேசித்தார். பணமில்லாத
நண்பர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் மிகவும் குறைந்த செலவில் - மூவாயிரம் ரூபாய்
அளவில் - வீடுகள் கட்டிக்கொடுத்தார். அதன் மூலம் விளம்பரமில்லாமலே புகழ் பெற்றார்.
1970-80களில் வளைகுடாப் பணம், டாம்பீகம் மூலமாகவும் கான்கிரீட் காடாக
மாறிக்கொண்டிருந்த கேரளத்தில் அது ஒரு மாற்றுக் கட்டடக் கலையின் பயன்பாடாக
இருந்தது. எல்லா மாற்றுச் செயல்பாடுகளையும்போல அதுவும் சமூகத்தின் விளிம்பில்தான்
முளைவிட்டது. சி. அச்சுத மேனோன் முதல்வராக இருந்தபோது அரசாங்கத் தளத்தில் லாரி
பேக்கரின் சேவையைப் பயன்படுத்தத் தீர்மானித்தார். அவ்வாறாகத் திருவனந்தபுரம்
நகரத்தில் பல அரசு நிறுவனங்களின் கட்டடங்களுக்கு பேக்கர் வடிவம் கொடுத்தார்.
சென்டர் ஃபார் டெவலப்மென்டல் ஸ்டடீஸ், சித்ராஞ்சலி ஸ்டூடியோ, இந்தியன் காபி ஹவுஸ்,
நாகர் கோவிலிலுள்ள மீனவர் குடியிருப்பு ஆகியவை பேக்கரின் கற்பனையிலிருந்து எழும்பிய
கட்டடங்களில் சில. குறைந்த செலவில் வீடுகளைக் கட்டுவதற்கான காஸ்ட்ஃபோர்ட்
(Costford) என்ற நிறுவனத்தையும் மாநில அரசு தொடங்கியது. திருச்சூரைத்
தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் திருவனந்தபுரம் பிரிவுக்கு பேக்கரே
முக்கியச் சிற்பியாக மரணம் வரையும் இருந்தார்.
கேரளத்தில் பேக்கர்
'ஏழைகளின் பெருந்தச்சன்' என்ற அடைமொழியால் அறியப்படுகிறார்.
செலவு குறைந்த வீடுகள் என்ற பொருளாதார ஈர்ப்பு வியாபகமானதோடு பல கட்டடக்
கலைஞர்களும் பேக்கர் மாதிரிகளாக மாறத் தொடங்கினர். உண்மையில் இது அபத்தமும்
பேக்கருக்குச் செய்யும் அநியாயமும்கூட. ஏனெனில், பேக்கர் நிர்மாணம் செய்த ஒரு
வீடும் அவரே உருவாக்கிய இன்னொரு வீட்டைப் போல இருந்ததில்லை. ஒரு பாணியையோ
மாதிரியையோ அவர் முன்வைக்கவும் இல்லை. பேக்கர் தனது கட்டுமானங்களுக்கு
அடிப்படையாகக் கொண்டிருந்த வசிப்பிடம் பற்றிய பார்வை அப்படி ஒரு பாணிக்குள்
அடக்கக்கூடியதல்ல.